எச்சில் இலையில் அங்கபிரதிஷ்டம் செய்வது குற்றமல்ல, அது 500 ஆண்டுகால சடங்கு, மகாபாரதத்திலேயே இதுகுறித்து சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இதை யாரும் தடைசெய்யமுடியாது என்று புரட்சிகரமான தீர்ப்பை வழங்கியிருக்கிறார் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன். நாம் வணங்கும் கடவுள் கூட பிராமண எச்சில் இலை என்று சொன்னால் அதை உடனே ஏற்றுக் கொண்டு பக்தனின் கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்து விடுவார்கள். ஆனால் சூத்திரன் எச்சில் இலை என்றால் மட்டும் அது தெய்வ குத்தம் ஆகிவிடும். இப்படி பிராமணர்களே ஒரு சடங்கை உருவாக்கி விட்டார்கள். அதற்கு இப்போது சட்டமும் துணையாக வந்து நிற்கிறது.

பிராமணர்களுக்கும் போஜனத்திற்கும் உள்ள தொடர்புக்கு ஏராளமான வரலாறுகள் இருக்கின்றன.women rolling on leafsபிராமண போஜன விருந்து போட்டால் அடுத்த ஜென்மத்தில் புண்ணியம் கிடைக்கும் என்று அந்த காலத்தில் பிராமண போஜனங்கள் நடந்தன. பெரியாரின் தந்தை கூட அப்படி பிராமண போஜனம் நடத்தியவர் தான். அந்த போஜன விருந்திற்கு ஒரு மோசடி பார்ப்பான் வந்தான். ஊரை ஏமாற்றிய அந்த பார்ப்பானை பெரியாரும் அந்த விருந்துக்குள் சென்று கையும் களவுமாக பிடித்தார். உடனே பிராமணர்கள், பிராமண போஜனத்தில் சூத்திரன் நுழைந்து புனிதத்தை கெடுத்துவிட்டான் என்று பெரியாரின் தந்தையிடம் சென்று முறையிட்டனர். பதறிப்போன பெரியாரின் தந்தை, அந்த பார்ப்பனர்களுக்கு முன்பே பெரியாரை கடுமையான வார்த்தைகளால் திட்டி அவமமானப்படுத்தினார்.

குடிஅரசு பத்திரிகையில் ஏராளமான கட்டுரைகளை எழுதிவந்த கைவல்ய சாமியார் ஒரு விருந்தில் சாப்பிடும் போது, அவரை பார்த்து ஒரு பார்ப்பான் சூத்திரன் என்று கூறிய போது எச்சில் கையுடன் எழுந்து கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார் கைவல்யசாமிகள். “சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி” என்ற கல்வெட்டு சாசன மொழி அப்போதுதான் உதயமானது.

வடநாட்டு புண்ணிய தலங்களில் பிராமணர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய சத்திரங்கள் இருந்தன. பெரியார் தனது வீட்டை விட்டு வெளியேறி வடநாடு சென்ற போது அந்த சத்திரத்துக்குள் சாப்பிட சென்றார். இங்கு பிராமணர்களுக்கு மட்டுமே அனுமதி என்று கூறி பெரியாரை வெளியே அனுப்பிவிட்டனர்.

நீடாமங்கலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டு பந்தியில் இரண்டு தலித் தோழர்கள் சாப்பிட்டார்கள் என்பதற்காக அவர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்தார்கள். பெரியாரின் குடிஅரசு இதை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியது.

கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற பிராமண பிரமுகர்களுக்காக, அவர்கள் போஜனம் செய்வது பிற ஜாதியினருக்கு அதாவது (சூத்திர காந்தி சீடர்களுக்கு) தெரிந்துவிடக்கூடாது அல்லது பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு தனிக் கூடாரம் அமைக்கப்பட்டது. பிராமணர்களுக்கு தனி போஜன வழிபாட்டு வசதி என்று மாநாட்டுக் குழு விளம்பரமே செய்தது. காந்தி கூட இதைக் கண்டித்து எழுதியிருக்கிறார்.

பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது தான் சந்தித்த பிராமண போஜனம் பற்றி கூறியிருக்கிறார். திண்டுக்கல், பெரியகுளம் பகுதிகளுக்கு கட்சி வேலைகளுக்காக சென்ற போது அங்கு சாப்பாடு போட்ட பார்ப்பனர்கள் வீட்டில் என்ன நடந்தது? காலை சாப்பாடு சாப்பிட்ட எச்சில் இலை, மதியம் சாப்பிடும் போதும் அந்த இலை எடுக்கப்படாமல் அப்படியே ஈ மொய்த்துக் கொண்டிருந்தது என்று பெரியார் பதிவு செய்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி நிதியில் வ.வே.சு அய்யர் நடத்தி வந்த சேரன்மாதேவி குருகுலத்தில் நடந்த போஜனத்தில் பிராமணர்களுக்கு தனி இடத்திலும், சூத்திரர்களுக்கு தனி இடத்திலும் நடந்த போது பெரியார் அதை எதிர்த்து கேள்விக் கேட்டார்.

இப்போதும் கோயில்களில் சூத்திரர்களுக்கு சுபமுகூர்த்தம் நடத்திவைக்கும் புரோகிதர்கள், அரிசி,பருப்பு, தேங்காய், நெய் ஆகியவற்றை மூட்டை கட்டுவார்களே தவிர அந்த விவாஹ விருந்தில் போஜனம் செய்வதை தவிர்த்து விடுவார்கள்.

பிரபல ஹோட்டல்களில் அண்மைக் காலமாக சர்வர்கள் எல்லாம் அவாள்கள். எச்சில் இலைகளை எடுத்து, பெஞ்சை சுத்தப்படுத்துவது எல்லாம் சூத்திரர்கள்.

1941ம் ஆண்டுவரை அன்றைய ரயில்நிலைய உணவு விடுதிகளில் பார்ப்பனர்கள் சாப்பிடுவதற்கென்று தனி அறை இருந்தது. பெரியார்தான் இதை எதிர்த்து இந்த தீண்டாமைக்கு முடிவு கட்டினார்.

நமது பெருமைமிகு சனாதன கலாச்சாரத்தில் பிராமண போஜனத்துக்கு பெருமை இருந்தாலும் கழிப்பறை திறந்தவெளியாகவே இருந்தது. பூணூல் போட்டுக்கொண்டு போஜனம் செய்யும் பிராமணர்கள் கழிவு வேலை செய்யும் போது முதுகு பூணூலை காதுக்கு கொண்டு வந்து சூத்திரராகி கடமை முடிந்த பிறகு பூணூலை முதுகுக்கு மாற்றி பிராமணராகி விடுவார்கள்.

இப்படி பிராமண போஜனத்துக்கு என்று பல வரலாற்றுத் தடங்கள் பதிந்து கிடக்கின்றன. நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் தன்னுடைய தீர்ப்பில் இவைகளை எல்லாம் சுட்டிக்காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இப்போதெல்லாம் பிராமணர்கள் மாறிவிட்டனர், அவர்கள் சமபந்திக்கு தயாராகிவிட்டனர். இன்னும் கடந்த காலங்களையே பேசிக்கொண்டு இருக்கலாமா? என்று கேட்கலாம். கேள்வி நியாயமானது தான். ”விமானத்தில் பயணம் செய்கின்ற பிராமணர்கள் சிக்கன் கறியை கேட்பதற்கு முன்பு ரெட் ஒயின் அல்லது விஸ்கி தீர்த்தம் கொண்டுவரச் சொல்லி அதை அருந்திய பின்புதான் சாப்பிடவே தொடங்குகிறார்கள். Multi Cusine – இல் இத்தாலி, தாய்லாந்து நாட்டு உணவுகளில் எது சுவை மிகுந்தது என்பதெல்லாம் அவர்களுக்கு அத்துப்படி. சீன உணவுகளுக்கு சுவிகி, சுமோட்டோவில் ஆர்டர் செய்கிறார்கள். ஆனாலும் கூட பிராமணன் சாப்பிட்ட எச்சில் இலையின் மகத்துவத்தை எவரும் பறித்துவிட முடியாது. காலம் காலத்திற்கும் அந்த எச்சில் இலை அந்த புனிதம் சனாதனம் என்ற பெயரில் நீடித்துக்கொண்டே இருக்கும். இதைத்தான் நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் கூறியிருக்கிறார்.

உச்சநீதிமன்றம் இதற்கு தடை போட்டால் என்ன? அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. சட்டத்தோடு வைதீகத்தையும் சேர்த்துக் கரைத்துக் குடித்தவன் நான். சட்டம் ஏற்றாலும், எனது சனாதனக் கொள்கை நிச்சயம் ஏற்காது. எனவே எனது தீர்ப்புகள் இப்படித்தான் இருக்கும் என்று அடித்து கூறுகிறார் நீதிபதி. பெரியார் திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. “நீங்கள் மட்டும் நீங்கள் மட்டும் விந்துக்கு பிறந்தவரா? நாங்கள் மட்டும் நாங்கள் மட்டும் எச்சிலுக்கு பிறந்தோமா?” சட்டம் படித்த மனுநீதிக் காவலர்களே! பதில் சொல்லுங்கள்!

- கோடங்குடி மாரிமுத்து