‘கோயில் நிதி கோயிலுக்கு; மக்களுக்கு அல்ல’ - இப்படி ஒரு புதிய முழக்கம் கேட்கிறது. மக்களுக்கு நெருக்கடி வரும்போது கோயில் நிதியைப் பயன் படுத்துவதை ‘தெய்வக் குற்றம்’; அப்படி மக்களுக்குக் கொடுப்பவர்கள் இந்து விரோதிகள் என்கிறார்கள், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்பு களை நடத்தும் கூட்டத்தினர்.

கொரானா காலத்தில் அன்றாட வாழ்க்கைக்கே திணறிக் கொண்டிருந் தனர் மக்கள். அவர்களுக்கு உதவிட குருவாயூர் கிருஷ்ணன் கோயில் நிதி ரூ. 10 கோடியை கேரள அரசு எடுத்து செலவிட்டது. அதைத் திருப்பித் தர வேண்டும் என்று இப்போது கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, கொரானா காலத்தில் மக்களுக்கு உதவிட ரூ.50 கோடி கோயில் நிதியை எடுக்கத் திட்டமிட்டது. ‘கூடாது; வழக்கு தொடர்வோம்’ என்று மிரட்டியது இந்து முன்னணி. உடனே ‘கோயில் நிதியை எடுக்க மாட்டோம்’ என்று சரணடைந்து விட்டார் எடப்பாடி!

கோயில் நிதியை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயிலில் வசதிகளை செய்து தரவே செலவிட வேண்டும் என்கிறது, கேரள உயர்நீதிமன்றம். ‘குருவாயூர் கிருஷ்ணன்’ தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மட்டும்தான் உரியவர் என்பது, ‘கிருஷ்ணனுக்கே’ அவமானம் இல்லையா?

இந்து காவலர்கள் கோயிலின் அசையும் அசையா சொத்துகள் அனைத் தும் குருவாயூரப்பனுக்கே சொந்தம் என்கிறது, உயர்நீதிமன்றம்.

குருவாயூரப்பன், சொத்துகளை வாங்கச் சொன்னானா? அதைத் தனக்கு எழுதித் தர வேண்டுமென கேட்டானா? உலகத்தையே படைத்ததாகக் கூறப்படும் கடவுளுக்கு நிலங்களும் கடைகளும் நகைகளும் சொத்துகளாக இருக்க வேண்டுமா? இந்த சொத்துகளை யாருக்கு எப்படி செலவிடவேண்டும் என்று கிருஷ்ணன் உயில் எழுதி அது பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவாகியிருக்கிறதா? நீதிபதிகள் என்ற இருக்கை யில் அமர்ந்து விட்டால் அவர்களே கடவுள்களாக மாறி உத்தரவுகளைப் பிறப்பிக்கலாமா? இப்படி கேட்டால் கடவுள் விரோதி; இந்து விரோதி என்று கூவத் தொடங்கி விடுவார்கள்.

கோயில்களை பார்ப்பனர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் கோயில் சொத்துகளை வெகுமக்களுக்குப் பயன்பட்டுவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

‘கொரானா’ எனும் கொடிய நோய்த் தொற்றை குருவாயூர் கிருஷ்ணன் உள்பட எந்தக் கடவுளும் தடுக்காதது ஏன்? பக்தர்களைக் காப்பாற்ற முன் வராதது ஏன்? எவ்வளவோ பக்தர்கள் தங்களை நோய்களிலிருந்தும் குடும்பப் பிரச்சினை யிலிருந்தும் காப்பாற்ற இந்தக் கடவுள்களை நாடி வருகிறார்களே! அவர்களுக்கு நெருக்கடி வந்தால் கோயில் பணத்தைப் பயன்படுத்தக் கூடாதா?

கடவுள் சொத்தை மக்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்றால், அந்தக் கடவுள் யாருக்கானவர்?

- விடுதலை இராசேந்திரன்