"மானமும் அறிவும் மனிதருக்கு அழகு" என்னும் பெரியாரியச் சிந்தனைகள் விதைக்கப்பட்ட மண்ணில் மனிதநேயத்தையும், பொது சுகாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கும் ஒரு தீர்ப்பை நீதிபதி திரு.ஜீ.ஆர்.சுவாமிநாதன் வழங்கியுள்ளார்.

120 வருட பழக்கம் என்றும், நம்பிக்கை என்றும் எச்சில் இலையில் மனிதன் அங்கப்பிரதட்சணம் (படுத்து உருளலாம்) என்று சட்டம் வாயிலாக அநாகரிகச் செயலுக்கு அனுமதியளிக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளார். கரூர் மாவட்டம் மணிமங்கலம் அருகே நெரூர் அக்ரஹாரத்தில் சத்குரு சதாசிவ பிரமேந்திரரின் ஜீவசமாதியில் நடந்துள்ள இச்சம்பவம் மனித‌ சமூகத்தின் மீது படிந்த இழிவு.brahmins leafநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கை விசாரித்து 2015-ல் கொடுத்த தீர்ப்பில் அனைத்துத் தரப்பும் விசாரிக்கப் படவில்லை என்றும், மேலும் இது போன்ற மதச் சடங்குகளுக்கு அதிகாரிகளிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்றும் தனது 39 பக்கத் தீர்ப்பை 17.05.2024 அன்று அளித்துள்ளார். இந்த இழிவான சடங்கின் தொன்மையைக் கூறுவதாக மகாபாரதத்தில் இதுபோன்ற ஒரு சடங்கு உள்ளதாக இந்தச் சடங்கிற்கு நியாயம் கற்பித்துள்ளார்.

சபரிமலையில் மேற்கொள்ளப்படும் அங்கப் பிரதட்சணம் பற்றியும் மேற்கோள் காட்டி இந்தச் சடங்கிற்கு அனுமதியளித்துள்ளார் அவர். 17ம் நூற்றாண்டில் மராத்திய சாம்ராஜ்யத்தில் தாழ்த்தப் பட்டோரின் எச்சில் தரையில் பட்டால் தீட்டு எனக்கூறி கழுத்தில் மண்கலயத்தை சுமந்துவரச் செய்த இதே சனாதன பிராமணவாதிகள் இன்றும் மனித நேயத்தை அடியோடு மறுக்கும் இச்செயலை தனிமனித உரிமை (இந்திய அரசியலமைப்பில் பிரிவு 21) எனக்கூறி அடிப்படை உரிமைகளுக்கு ஆன்மிக நோக்கு உள்ளது எனக்கூறி தீர்ப்பும் பெற்று இந்த நாகரிகமற்ற செயலை நடத்தியுள்ளனர். இந்தத் தீர்ப்பை படிக்கும் நமக்குச் சில கேள்விகள் மனதில் எழலாம்

1) இந்த இழிசெயல் மனிதத்தன்மையோடு உள்ளதா? இதனை சுயமரியாதையோடு உள்ள மனிதன் ஏற்பானா?

2) உணவுப் பந்திகளில் இலை எடுப்பதை ஒரு தயக்கத்தோடும், தாழ்வோடும் அணுகும் இச்சமூகம் இந்த இழிசெயலை மதம் என்னும் பெயரில் அங்கீகரிக்குமா?

3) கொரோனா போன்று பல விசக்கிருமிகள் எச்சில் மூலம் காற்றில் பரவக்கூடிய பயம் இருக்கும் இக்காலத்தில் பொதுச்சுகாதாரத்திற்கு எதிரான இச்செயலை மனிதசமூகம் ஏற்குமா?

4) நம்பிக்கை என்றும் தனிமனித அடிப்படை உரிமை என்றும் எழுதப்பட்டிருக்கும் இச்சட்டம் மேலும் தீண்டாமை,குழந்தை திருமணம், சதிவழக்கம்,விதவை மறுமணம் ஆகிய சமூக தீமைகளை மீண்டும் சமூகத்தில் நிலைப்பெறச் செய்துவிடாதா?

பெரியார் தொலைநோக்குப் பார்வை உடையவர். அதனால் தான் மதம், சாதி காப்பாற்றப்படும் சட்டப்பிரிவுகளை அப்போதே கண்டறிந்து திருத்தம் வேண்டும் என்றார்.

இந்திய அரசியலமைப்பு உட்பிரிவுகளான 13(2), 25(1), 26, 29(1), (2), 368 மதத்தை, சாதியைப் பாதுகாக்கின்ற முறையில் பயன்படுத்தக் கூடும்.எனவே தீண்டாமை ஒழிப்பு போன்று சாதி ஒழிப்பை பிரதானமாக கொண்டு அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும், இல்லையேல் இந்திய அரசியலமைப்புச் சட்ட நகல் எரிக்கப்படும் என்று 1957 நவம்பர் மாதம் இந்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஆதிக்க இந்துக்களால் ஆன இந்திய அமைச்சரவையில் பெரியாரின் கோரிக்கையை பிரதானமாக்காமல் சட்ட எரிப்புக்கான தண்டனையை அப்போதுதான் வடிவமைத்தனர்.

இருப்பினும் நவம்பர் 26, 1957 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பெரியார் மற்றும் திராவிடர் கழக தோழர்களால் கொளுத்தப்பட்டது.

இன்று அதே அரசியலமைப்புக்கு உட்பட்டு மனிதநேயம் இழிவாக்கப் பட்டுள்ளது. ஆன்மிகம், இந்துமதம் என்று "எச்சில் இலையில் உருண்டால் தோல் நோய் தீரும்" என்னும் மூட நம்பிக்கைகளைச் சடங்குகளின் மூலம் மக்களைப் பகுத்தறிவின்றி வாழச் செய்கிறார்கள்.

எப்போதெல்லாம் மதமும் அதன் மூட நம்பிக்கைகளும் சமூகத்தை இழிநிலைக்குத் தள்ள முற்படுகிறதோ அப்போது நாம் சுயமரியாதை, பகுத்தறிவு என்னும் மனிதநேய மாண்புகளை எதிர்திசையில் நிறுத்தி சமூகத்தின் மாண்பைக் காக்க வேண்டும்.

1784ல் "அறிவொளி என்றால் என்ன" என்ற கட்டுரையில் கேள்விகள் கேட்டு, தர்க்கம் செய்து பிறரின் தூண்டுதல் இல்லாமல் தன்னிச்சையான தெளிவான முடிவுகளைப் பகுத்தறிவோடு எடுப்பது தான் அறிவொளி என இம்மானுவேல் கன்ட் குறிப்பிடுகிறார்.

அறிவொளி பெற்ற சமூகமாய் இந்த மனிதத் தன்மையற்ற செயலை பண்பாட்டுத் தளத்திலும்,அரசியல் தளத்திலும் வெகுஜனப் போராட்டமாக மாற்றி இனிவரும்

நாட்களில் இதே போன்ற மனிதத் தன்மையற்ற செயல்களைத் தலைதூக்காமல் செய்வது நம் கடமை.

வெ.க.பரமேஸ்வரன் (திராவிடப் பள்ளி மாணவர்)

Pin It