வந்துவிட்டது தீர்ப்பு. காவிரியில் தண்ணீர் வாங்குவதைவிடச் சவாலாக அமைந்தது உச்சநீதிமன்றத்திலிருந்து ஒரு தீர்ப்பை வாங்குவது. கொடுக்க வேண்டிய அளவைக் குறைப்பது பின்னர் அதையும் கொடுக்காமல் தமிழர்களை அலைக்கழிப்பது. எந்த ஒரு நாட்டிலும் மக்கள் இந்த அளவிற்குத் துரோகங்களைச் சந்தித்திருக்கமாட்டார்கள்.

1901ஆம் ஆண்டில் தமிழ்நாடு 16 இலட்சம் ஏக்கர்களும், அன்றைய மைசூர் சமஸ்தானம் 3 இலட்சம் ஏக்கர்களும் நீர்ப்பாசனப் பரப்பைக் கொண்டிருந்தன. தற்போது 2010ஆம் ஆண்டில் தமிழ்நாடு 24 இலட்சம் ஏக்கர்களும், கர்நாடகம் 21.71 இலட்சம் ஏக்கர்களும் நீர்ப்பாசனப் பரப்பை கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் நீர்ப்பாசனப் பரப்பு இடையில் 1971 இல் 28 இலட்சம் ஏக்கர்களாக இருந்தது இப்போது 4 இலட்சம் ஏக்கர்கள் குறைந்துவிட்டது. ஆனால் கர்நாடகத்தின் நீர்ப்பாசனப் பரப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுதான் கர்நாடகம், இந்தியா என்னும் அமைப்பால் அடைந்திருக்கும் வளர்ச்சி.

2007இல் காவிரி நடுவர் நீதிமன்றம் தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீர் வழங்க உத்தரவிட்டிருந்தது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து 4 மாநிலங்கள் மேல்முறையீடு செய்திருந்தன. 192 டி.எம்.சி. நீர் ஒதுக்கியது போதாது எனத் தமிழகம் மேல்முறையீடு செய்திருந்தது. தமிழகத்திற்கான காவிரி நீரை 132 டி.எம்.சி-.யாகக் குறைக்க கர்நாடகம் மேல்முறையீடு செய்திருந்தது.

தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் 192 டி.எம்.சி.-யிலிருந்து 177.25 டிஎம்சி-யாகக் குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்துக்கு 284.75 டிஎம்சி நீரும், கேரளாவுக்கு 30 டி.எம்.சி. நீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரும் வழங்க வேண்டும். இந்தத் தீர்ப்பை செயல்படுத்த ஸ்கீம் எனச் சொல்லப்படும் வரைவு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்து இருந்தது. இத்தீர்ப்பு தமிழர்களுக்கு இடியாய் அமைந்தது. ஆனால் இத்தீர்ப்பையும் கர்நாடகமும் செயல்படுத்தவில்லை, மத்திய அரசும் செயல்படுத்தவில்லை.

எத்தனை நாடகங்களை இந்த மூன்று மாதங்களில் நடத்தினார்கள். உச்சநீதிமன்றத்திற்கு மத்திய அரசின் மீதும், கர்நாடகத்தின் மீதும் எவ்வளவு கரிசனம். தமிழக மக்கள் எத்தனை போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று பசப்பினார்கள்.

உலக வரலாற்றில் முதன் முறையாக “Scheme” என்றால் என்ன என்று ஒரு அரசாங்கம் உச்ச நீதிமன்றம் சென்ற பெருமையும் இந்தியாவையே சாரும். இந்த அரசாங்கம்தான் தகுதித்தேர்வுகளை நடத்துகிறது. வீட்டுப் பாடம் எழுதாமல் பலகாரணங்களைச் சொல்லும் பள்ளி மாணவன் தோற்றுப்போகும் அளவிற்கு உச்சநீதிமன்றத்தில் ஓர் அரசு காரணங்களைச் சொன்னது. இப்படி இரு முறை அவகாசம் கேட்டநிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் கடந்த 14-ம் தேதி 14 பக்க வரைவுச் செயல் திட்டத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையைப் படித்து 4 மாநிலங்களும் அதில் பல்வேறு திருத்தங்கள் செய்யக் கோரி இருந்தன.

குறிப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற அம்சத்தைத் திருத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதைத் திருத்தி நீர்வளத்துறை செயலாளர் தாக்கல் செய்தார்.

இறுதியாக மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் இனி காவிரி மேலாண்மை ஆணையத்தையே அணுக வேண்டும், மத்திய அரசை அணுகத் தேவையில்லை எனத் தீர்ப்பளித்திருக்கிறது.பருவகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

இவற்றையெல்லாம் மத்திய அரசு சரியாகச் செயல்படுத்தும் என்று நாம் நம்புவோம். கர்நாடகமும் தீர்ப்பின் சொல் பிறழாது நடக்கும் என்றும் நம்புவோம். ஏனெனில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த தாமதம் செய்த மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்திருந்த அவமதிப்பு வழக்கை மிக அமைதியாக முடித்து வைத்து, மத்திய அரசின் மீதும் உச்சநீதிமன்றத்தின் மீதும் எவ்வளவு பெரிய நம்பிக்கையை நமக்கு உச்சநீதிமன்றம் ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தமிழ்நாட்டிற்கு நன்மையைத் தவிர வேறொன்றையும் கனவிலும் நினைக்காத மத்திய அரசையும் உச்சநீதிமன்றத்தையும் நாம் நன்கு நம்புவோம்!

Pin It