பேராசிரியர் நன்னன் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது நூற்றாண்டு நிறைவு விழாவில் வெளியிட்டுள்ள அறிவிப்பு பாராட்டி வரவேற்கத் தக்கதாகும். அவரது குடும்பத்தார் வேண்டுகோள் ஏதும் முன் வைக்காமலேயே முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது மேலும் சிறப்பு. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவராக பயிலும் போதே பேராசிரியர் க.அன்பழகன் போன்றவர்களுடன் தன்னை திராவிட இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர் பேராசிரியர் நன்னன்.

பெரியார் அழைப்பை ஏற்று ஈரோட்டில் இருந்து வெளிவந்த குடிஅரசு பத்திரிகையில் பணியாற்றினார். அந்த காலக் கட்டங்களில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நடந்த சுயமரியாதை கொள்கைப் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்று பேசினார். பிறகு கல்வித் துறையில் ஆசிரியராக, பேராசிரியராக உயர்ந்தார்.nannan 535முழுமையான கடவுள், மத, ஜாதி மறுப்பாளராக பெரியாரின் பாதையில் வாழ்ந்து காட்டிய பெருமை அவருக்கு உண்டு. அவரது விரிவான திராவிடர் சுயமரியாதை இயக்கப் பயணங்கள் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாத இதழான நிமிர்வோம் இதழில் அவர் அளித்த பேட்டியில் அவர் பதிவு செய்துள்ளார். (2017 ஏப்ரல்) உண்மை பெரியாரிஸ்ட்கள் தங்களைப் பற்றிய தன் வரலாறுகளை பதிவு செய்வதில் தயக்கம் காட்டுவார்கள், பேராசிரியரும் அவ்வழி வந்தவர் தான். ஆனாலும் அளித்த உளம் திறந்து அளித்த பேட்டியாக அது அமைந்தது.

பெரியார் குறித்தும், தமிழில் பிழையின்றி எழுதுவது குறித்தும் 124 நூல்களை அவர் எழுதியுள்ளார். பெரியார், சுயமரியாதை, பெரியாரின் பார்வையில் மதம், ஜாதி, கடவுள், தொழிலாளர்கள், கலை. இலக்கியங்கள், பெண்ணுரிமை, பெரியார் நடத்திய போராட்டங்கள், பெரியாரின் சுயமரியாதை இயக்கம். பெரியாரின் உவமைகள், பெரியாரின் குட்டிக் கதைகள், பெரியார் கருத்துகளை உள்ளடக்கிய இரண்டு தொகுதிகளான பெரியார் கணிணி உள்ளிட்ட ஏராளமான நூல்களை தமிழர்களுக்கு வரலாற்றுக் கருவூலமாக அவர் வழங்கிச் சென்றிருக்கிறார்.

கேட்பவர்களில் உள்ளத்தில் பெரியாரிய சிந்தனைகளை ஆழமாக பதிய வைக்கும் பேச்சுத்திறமை அவரிடம் உண்டு. சிங்கப்பூர் தொலைக்காட்சியில் அவர் நடத்திய தமிழ் பாடம் உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்கிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. திராவிடர் கழகம் உருவாக்கிய மூதறிஞர் குழுவில் இடம் பெற்று உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் தமிழை எளிதாக கற்க பாடங்களை உருவாக்கினார். திராவிடர் கழகப் பயிற்சி முகாம்களில் பங்கேற்று பெரியாரியல் வகுப்புகளை எடுத்தார். அருப்புக்கோட்டை டி.கே. சுப்பிரமணியம் நினைவு அறக்கட்டளை சார்பில் திராவிடர் கழகம் பெரியார் குறித்து நடத்திய பெரியார் அறக்கட்டளை சொற்பொழிவில் மூன்று நாட்கள் பெரியாரியல் குறித்து மூன்று நாட்கள் பெரியார் பேருரையாற்றினார்.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து 1996 இல் பெரியார் திராவிடர் கழகம் உருவாகிய போது அதன் தொடக்க விழாவில் பங்கேற்று பேசியவர்களில் ஒருவர் பேராசிரியர் நன்னன், அவர் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனராக இருந்த காலத்தில் தான் பெரியார் நூற்றாண்டு விழா நடந்தது. தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அமலாக்க முன்வந்த போது அதற்கான செயல் திட்டங்களை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனராக இருந்த அவர் உருவாக்கினார். சுயமரியாதை திருமணங்களில் அவரது உரை மனவிழாவுக்கு வந்திருக்கும் கொள்கை ஈடுபாடு இல்லாத பெண்களையும் கவர்ந்திழுத்து சிந்திக்க வைக்கக் கூடியது

மிகச் சிறந்த மருத்துவ ஆய்வாளராக உருவாகி வந்த அவரது மகன் அண்ணலின் திடீர் மறைவு அவருக்கு பேரிடியாக அமைந்து விட்டது. மனம் தளராது அண்ணல் நினைவு அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி ஆண்டுதோறும் பகுத்தறிவு கொள்கைகளை பரப்பும் நாளாக கடைபிடித்து வந்தார்.

விடுதலை இராசேந்திரன்

Pin It