அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையானது தமிழர் விரோதப் போக்கை கடைபிடிக்கிறது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தமிழக முதல்வர் கருணாநிதி கவிதை எழுதியது காங்கிரசாரின் உணர்வுகளை காயப்படுத்துவதாகும் என்று அகில இந்திய காங்கிரஸ் குழு நிறைவேற்றிய தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதே காங்கிரசாரின் உணர்வுகளை புண்படுத்துவதாகும் என்று சொன்னால் இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை படுகொலை செய்த நிகழ்ச்சி ஆறு கோடி தமிழ் மக்களின் உள்ளங்களில் என்றும் நீங்காத வடுவாகப் பதிந்துள்ளது என்பதைக் காங்கிரஸ் கட்சி இன்னமும் உணரவில்லை.
பொற்கோவில் மீது இந்திய இராணுவ நடவடிக்கையின் போதும் இந்திரா காந்தி மறைவிற்குப் பிறகு தில்லியிலும் பிற இடங்களிலும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன்சிங்கும் காலம் கடந்தேனும் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தார்கள்.
ஆனால் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இதுவரை வருத்தம் தெரிவிக்க இருவரும் முன்வராததோடு திட்டமிட்டு ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்து வரும் சிங்கள அரசுக்கு கொலை ஆயுதங்களை இந்திய அரசு அளித்து வருகிறது.
இதெல்லாம் தமிழர்களின் உள்ளங்களை எந்த அளவுக்குப் புண்படுத்தும் என்பதை காங்கிரசுத் தலைமை கொஞ்சமும் உணரவில்லை.
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல மேலும் மேலும் தமிழர்களைப் புண்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன் எனறார் பழ.நெடுமாறன்