இவனும் தமிழன் அவனும் தமிழன்
ஏண்டா இரண்டு குவளை?
அவலம்! அவலம்! தமிழன் அழிந்தான்!
அழிந்தான் கிணற்றுத் தவளை!
தாழ்வும் உயர்வும் காட்டவோ நீ
தந்தாய் இரண்டு குவளை?
சூழும் சாவில் இரண்டு நெருப்பால்
சுடுவாயோ சொல் உடலை?
வெறுக்க வாழ்ந்தாய்! வெட்கம்! வெட்கம்!
விதித்தாய் இரண்டு குவளை!
கிறுக்குத் தமிழா! கீழ் ஆனாயடா!
கெடுத்தாய் மகனை மகளை!
பெருமைத் திமிர் வாய் அடக்கு தமிழா!
பிறகேன் இரண்டு குவளை?
இருபத் தோராம் நூற்றாண்டில் நீ
இருந்தாய்! அதுதான் கவலை!
வெடிப்போம்! நெருப்பு மலையாய் வெடிப்போம்!
வேண்டாம் இரண்டு குவளை!
இடிப்போம்! வானின் முழக்காய் இடிப்போம்!
எழுப்புவோம் பார் புயலை!
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
எழுப்புவோம் புயலை!
- விவரங்கள்
- காசி ஆனந்தன்
- பிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2007