நவம்.13-ல் சென்னையில் - பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டாக்கச்சியேந்தல் - பஞ்சாயத்துகளின் ‘தலித்’ தலைவர்களுக்கு தமிழக அரசு எடுத்த பாராட்டு - சமத்துவப் பெருவிழாவில் முதல்வர் கலைஞர் ஆற்றிய உரை:

திருமாவளவன் ஒரு பட்டயத்தை எனக்கு அளித்து சமத்துவ பெரியார் என்ற பட்டமும் சூட்டி, உங்கள் கை தட்டல் மூலம் அதை நீங்கள் ஆமோதிக்க வைத்திருக்கிறார். இது தலித் மக்கள் சார்பாக தரப்பட்ட பட்டம் என்ற முறையில் அதை பெரிய விருதாக நான் கருதிக் கொண்டாலும் கூட, அப்படி என்னை அழைத்துக் கொள்ள கடுகளவும் அருகதை உடையவனாக கருதவில்லை.

பெரியாருக்கு பேரன், மாணவன். அண்ணாவைப் போல் எழுத வேண்டும் என்றும், பாரதிதாசன் போல் கவிதை எழுத வேண்டும் என்றும் நான் முயற்சித்து எவ்வளவு எழுதினாலும், அத்தனையும் பெரியார் கொச்சைத் தமிழுக்கு முன்பாக என்றைக்கும் நின்றதில்லை. அந்த கொச்சைத் தமிழ் தான் மனமாச்சரியங்களால் ஏற்படுகின்ற மடமைகளை கொளுத்துவதற்கு உபயோகப்பட்டிருக்கிறது.

எஸ்.சி. - எஸ்.டி.க்கு கிரீமிலேயரா?

இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை (உயர் வருவாய் பிரிவினர்) நீக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அக்டோபர் 19 இல் பிறப்பித்த உத்தரவால் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசித்தது. இந்த உத்தரவை எதிர்த்து 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் அப்பீல் செய்வதா?

இடஒதுக்கீட்டுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வந்து அரசியல் சாசன சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்ப்பதா? என்பது குறித்து அட்டர்னி ஜெனரலிடம் மத்திய ஊழியர் நலத் துறை அமைச்சகம் கருத்து கேட்டு இருந்தது.

இது தொடர்பாக தனது கருத்தை அட்டர்னி ஜெனரல் மிலன் கே. பானர்ஜி மத்திய அரசிடம் தெரிவித்து உள்ளார். இது பற்றி மத்திய ஊழியர் நலத்துறை அமைச்சர் சுரேஷ் பச்சூரி டெல்லியில் கூறியதாவது:-

“கிரிமிலேயர் பற்றி உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பானது அல்ல. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரில் இட ஒதுக்கீட்டில் இருந்து கிரீமிலேயரை நீக்க வேண்டும்” என்று நாகராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தனது கருத்தாகவே அவ்வாறு கூறியிருக்கிறது; அந்தக் கருத்துக்கு சட்ட ரீதியான முக்கியத்துவம் இல்லை. இதை மண்டல் கமிஷன் பரிந்துரை தொடர்பாக இந்திரா சகானி தொடர்ந்த வழக்குடன் இணைக்கக் கூடாது” - என்று அட்டர்னி ஜெனரல் கருத்து தெரிவித்து இருப்பதாக மத்திய அமைச்சர் சுரேஷ் பச்சூரி கூறியுள்ளார்.

Pin It