10% EWS இட ஒதுக்கீடு என்று பிரபலமாக அறியப்படும் 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா 2019 இந்தியாவின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது; வரலாற்று ரீதியாக இழிவுபடுத்தப்பட்டு, விளிம்பு நிலையில் வாழும் மக்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் இந்த இட ஒதுக்கீடு இருக்கும் என்பதற்காக அல்ல. மாறாக இதுவரை வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டின் உண்மையான நோக்கத்தையும் தர்க்கத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது என்பதற்காக இந்த புதிய இட ஒதுக்கீடு முக்கியத்துவம் பெறுகிறது.

சாதி அடிப்படையிலான தீண்டாமை, வரலாற்றுரீதியாக கடைபிடிக்கப்படும் ஏற்றத்தாழ்வு, சாதிய இழிவு ஆகியவற்றின் காரணமாக தற்காலத்தில் எதிர்கொள்ளும் இடையூறுகளைப் போக்கும் பரிகாரமாக, சமூக அநிதிகளை நிவர்த்தி செய்யும் கொள்கை முடிவாக ஒடுக்கப்பட்டக் குழுக்களுக்கான இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் சுழிவுநெளிவுகளை விவாதித்த அரசியலமைப்பு நிர்ணய சபையில் பேசிய அண்ணல் அம்பேத்கர், தன்னுடைய உரைகளில் சுட்டிக்காட்டியபடி நாடு புதிய முரண்பாடுகளுக்குள் அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தது. உண்மையான சமத்துவம் இல்லாத சமூகத்தில் முறையான சமத்துவ லட்சியத்தை கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதி எடுத்துக் கொண்டு, சமத்துவத்தை நிச்சயமாக்கும் கொள்கையைத் தழுவி அதன் வழியில் நாடு நடை போட்டுக் கொண்டிருந்தது. பெரும்பான்மை மக்களுக்கு இழிவை ஏற்படுத்தும் சாதித் தீண்டாமையை ஒழிப்பது சாதி குழுக்களுக்கிடையில் சமத்துவத்தை உருவாக்கும் ஒரு கூறாகும். சுதந்திர இந்தியாவில் இப்படிப்பட்ட முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அல்லது இன்னும் சரியாக சொன்னால், சட்டரீதியாக தீண்டாமையை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்படும் நடவடிக்கைகள், சாதித் தீண்டாமையின் காரணமாக இழிவுபடுத்தப்பட்ட மக்கள் மீதான ஏற்றத்தாழ்வையும், ஒடுக்குமுறையையும் தானாகவே முடிவுக்குக் கொண்டுவராது என்று அம்பேத்கர் தீர்க்கமாகக் கருதியபடியால், சாதி அடைப்படையில் திட்டமிட்டு இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது.

சமத்துவ அடிப்படையை அல்லது சட்டப்படி அனைத்து சாதிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக் கொள்கை மீறுகிறது எனப் புரிந்து கொள்ளக் கூடும் என்றாலும் இந்தியாவில் சட்டப்படியான கொள்கை ரீதியான சமத்துவத்தை உண்மையான நடைமுறை ரீதியிலான சமத்துவமாக மாற்ற ஒரு பாலம் தேவைப்படுகிறது. அந்த பாலம் தான் இட ஒதுக்கீடு.Dalits womenதீவிரமான சமூகப் பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படும் மக்களை கண்டறிந்து, அவர்களுக்கு ஏற்படும் பாகுபாடுகளை களையும் விதத்தில் இட ஒதுக்கீடு என்ற கொள்கை வடிவமைக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டோருக்கான ஆதரவு என்ற வகையில், அவர்களுக்கு ஆதரவாக நிவாரணமாக தரப்படுகிறது. அண்ணல் அம்பேத்கர் சுட்டிக் காட்டியபடி, நாட்டின் முகத்தில் காறி உமிழும் சாதிய முரண்பாடுகளை களைய இட ஒதுக்கீடு தேவையாக இருந்தது. சாதியமைப்பின் அடித்தளத்தில் இருந்தவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டதின் விளைவாக ஏற்பட்ட சமூக, பொருளாதார சமத்துவமின்மைக்கு முரணாக, சமூகப் பாகுபாட்டை நீக்கி கண்ணியமிக்க வாழ்வை உறுதிபடுத்த ”ஒருவருக்கு ஒரு வாக்கு” என்ற அரசியல் சமத்துவம் உருவாக்கப்பட்டது.

இந்தப் பிண்ணனியில், பட்டியலின, பழங்குடியின மக்களைத் தவிர்த்துவிட்டு, பொருளாதார அடிப்படையில் EWS இட ஒதுக்கீடு என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டுச் திருத்தச் சட்டம் ஒடுக்கப்பட்டோருக்கான ஆதரவுக் கொள்கையிலிருந்து இரண்டு வகையில் விலகிச் செல்கிறது. ஒன்று, சாதி என்பது சமூகரீதியாக பிற்பட்ட நிலையைக் குறிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இரண்டு, இட ஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையிலான பாகுபாட்டைக் குறிவைத்துக் களைவதற்கானதல்ல. கூடுதலாக, புதிய EWS இட ஒதுக்கீடு மேம்போக்கில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழுவினருக்கு (Economically Weaker Section) என்றாலும், உண்மையில் அரசாங்கம் ஆண்டிற்கு ரூ. 8,00,000 வருமான வரம்பை விதித்து அதற்குக் குறைவான வருவாய் உள்ள குடும்பங்கள் EWS பிரிவைச் சார்ந்தவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் இந்தக் கொள்கையும் வரைமுறையும் எவ்வளவு தூரம் சரியானது? அரசாங்கம் முன்மொழிந்துள்ள வருமான உச்சவரம்பு உள்ளபடியே பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களின் நிலையை பிரதிபலிக்கிறதா?

இரண்டு கட்டங்களாக வெளிவந்த இந்திய மனித மேம்பாட்டுக் கணக்கெடுப்புகளின் (India Human Development Survey or IHDS) தரவுகளைப் பயன்படுத்தி மேற்சொன்ன கேள்விகளுக்கான பதில்கள் விவாதிக்கப்படுகின்றன. முதலில், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழைகள் என்று அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்ட சாதிகளுக்கிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளுக்கான ஆதாரமும், அவ்வகையான ஏற்றத்தாழ்வுகள் 2005 ஆம் ஆண்டிற்கும் 2012 ஆம் ஆண்டிற்கும் இடையில் எப்படி மாறியிருக்கிறது என்பதும் விவாதிக்கப்படுகிறது. வறுமைக்கோட்டை வைத்து EWS ஐப் பிரிக்காவிட்டாலும், முதல் கேள்விக்கான பதிலைத் தேட இந்த ஆதாரம் தேவைப்படுகிறது. சாதி பின்தங்கிய நிலையின் குறியீடாக இல்லாமல் போய்விட்டதா? இந்தியாவில் இந்தக் கேள்வி விவாதிக்கப்படுவது முதல் முறையல்ல. இந்தப் பிரச்சினையின் மீது, கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் முன்பு தேசாய்க்கும் (1984) ஷாவிற்கும் (1985) இடையே நடந்த செறிந்த விவாதம் உட்பட, பல தீவிரமான, ஈர்ப்புமிக்க விவாதங்களை Economic & Political Weekly இதழில் வெளிவந்திருக்கிறது. பெட்டீல் (Bétielle, 2012) சாதிக்கு அளிக்கப்படும் சிறப்பு முக்கியத்துவம் தற்கால இந்தியாவில் எவ்வளவு தூரம் உண்மையானது என்று கேள்வி எழுப்பினார். இந்த கட்டுரையாளர்கள் அஷ்விணி தேஷ்பாண்டே, ராஜேஷ் ராமச்சந்திரன் (2019) இருவரும் இணைந்து எழுதிய கட்டுரையில், கல்வி, வேலைவாய்ப்பு, ஊதியம் முதலிய பொருளாதாரக் குறியீடுகளில் சாதி செலுத்தும் ஒட்டுமொத்த ஆதிக்கத்திற்கு ஆதாரம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஆதாரங்களின் படி சாதிகளுக்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வு, இன்னும் குறையாமலோ அல்லது அதிகமாகியோ இருப்பது விளக்கிக் காட்டப்பட்டுள்ளது. புதிய EWS இட ஒதுக்கீடு குறிப்பிட்ட சாதிக் குழுவிற்கு என வெளிப்படையாக வழங்கப்படாமல், EWS என்று சொல்லப்படுபவர்களைக் குறிவைத்து வழங்கப்படுவதால், ஏழைகளுக்கு இடையே சாதி வேறுபாடுகள் இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

EWS இட ஒதுக்கீட்டிற்கான வருமான உச்சவரம்பான ஆண்டு வருமானம் 8 லட்சத்தை விட குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இடையே உள்ள சாதி வேறுபாடுகளும் இங்கே விவாதிக்கப்படுகிறது. இறுதியாக, மக்களுக்கு இடையே உள்ள பாகுபாட்டை நீக்க, இட ஒதுக்கீட்டுக் கொள்கை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதால், சமூகப் பாகுபாட்டை எதிர்கொள்ளும் சாதிகளுக்காக இட ஒதுக்கீடு மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்படுவதால், இட ஒதுக்கீடு ஒரு விதிவிலக்கான நடவடிக்கையா என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், பொருளாதார பின்தங்கிய நிலையை சரிசெய்யும் மருந்தாக இட ஒதுக்கீட்டைக் கருதுவது உண்மையான பிரச்சினையை மறைக்கிறது. தனிநபர்கள், அவர்கள் எந்த சாதிகளைச் சேர்ந்தவர்களாயினும், அவர்களுக்கு நியாயமான வாழ்வாதார வாய்ப்புகள் கிடைக்காவிட்டால் அரசு அவர்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டுமா அல்லது பொதுக்கல்வி கட்டமைப்பையும், சுகாதார கட்டமைப்பையும் மேம்படுத்தி, சமூகப் பாதுகாப்புடனும் கூடிய தகுந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சூழலை அரசு ஏற்படுத்த வேண்டுமா? மேற்சொன்ன கேள்விகளுக்கு விடைகாணும் பொருட்டு, கீழ்க்கண்ட மூன்று சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஒப்பிடப்படுகிறார்கள். வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள பார்ப்பன ஏழைகள், பார்ப்பனரல்லாத ஏனைய உயர்சாதி ஏழைகள், பட்டியலின ஏழைகள். இவர்களுடன் அனைத்துப் பட்டியலின மக்களின் தரவுகளும் ஒப்பிடப்படுகிறது.

ஏழைகளிடையே சாதி பொருட்டில்லையா?

டெண்டுல்கர் குழு அறிக்கையின்படி, வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ளவர்கள் என அதிகாரப்பூர்வமாக ஏழைகளாக வகைப்படுத்தப்பட்டவர்களின் மீது கவனம் செலுத்தி, அவர்களை பார்ப்பன ஏழைகள், உயர்சாதி ஏழைகள், பட்டியலின ஏழைகள் என்று சாதி ரீதியாக வகைப்படுத்தி, அவர்களைப் பற்றிய 2005 மற்றும் 2012 ஆண்டுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்கள் அட்டவணை 1 இல் குறிப்பிடப்பட்டுள்ளன

அட்டவணை 1: இந்திய ஏழைகள் 2005 மற்றும் 2012 ஆண்டுத் தகவல்கள்

 

2005

ஏழைப் பார்ப்பனர்கள்

ஏழை உயர்சாதியினர்

ஏழைப் பட்டியலினத்தவர்

அனைத்து பட்டியலினத்தவர்

வருமானமும் செல்வமும்

குடும்பத்தின் சராசரி ஆண்டு வருமானம்

36,372.94

49,496.05

27,870.67

36,505.19

சொந்த அல்லது பயிரிடும் நிலம் (%)

59

39

35

37

வீட்டு உபயோகப் பொருட்கள் (0-33)

9.31

9.57

7.18

9.27

தன்னைப் பற்றிய உணர்வு: ஏழை

கிடைக்கவில்லை

 நடுத்தர வர்க்கம்

 வசதியானவர்

கல்வி

அனைத்து வயது வந்தவர்களின் சராசரி கல்வி ஆண்டுகள்

3.46

3.22

2.36

3.15

உயர்ந்தபட்ச கல்வி பெற்ற வயது வந்தவரின் கல்வி ஆண்டுகள்

8.38

6.05

5.16

5.92

12 ஆண்டுகளுக்கு மேல் கல்வி கற்ற ஒருவராவது உள்ள குடும்பங்கள் (%)

22.81

0

0

14.04

ஒரு பாரா/கதை படிக்க முடிந்தவர் (%)

35

43

33

42

வகுக்க/கழிக்க முடிந்தவர் (%)

44

37

26

36

வேலைவாய்ப்பு

சாதாரணத் தொழிலாளர் (%)

85

96

97

92

அரசுப் பணி (%)

1

1

1

2

கணக்கிடப்பட்டவர்கள்

743

5495

9388

31,462

 

 

2012

ஏழைப் பார்ப்பனர்கள்

ஏழை உயர்சாதியினர்

ஏழைப் பட்டியலினத்தவர்

அனைத்து பட்டியலினத்தவர்

வருமானமும் செல்வமும்

குடும்பத்தின் சராசரி ஆண்டு வருமானம்

88,069.54

89,011.75

64,652.74

96,567.90

சொந்த அல்லது பயிரிடும் நிலம் (%)

91

75

48

56

வீட்டு உபயோகப் பொருட்கள் (0-33)

11.94

11.44

9.68

12.98

தன்னைப் பற்றிய உணர்வு: ஏழை

40.44

66.13

76.92

57.85

 நடுத்தர வர்க்கம்

58.21

31.87

22.2

39.2

 வசதியானவர்

1.34

2

0.88

2.88

கல்வி

அனைத்து வயது வந்தவர்களின் சராசரி கல்வி ஆண்டுகள்

5.55

4.21

3.61

4.78

உயர்ந்தபட்ச கல்வி பெற்ற வயது வந்தவரின் கல்வி ஆண்டுகள்

9.72

6.66

5.61

6.99

12 ஆண்டுகளுக்கு மேல் கல்வி கற்ற ஒருவராவது உள்ள குடும்பங்கள் (%)

39.73

16.48

11.71

20.58

ஒரு பாரா/கதை படிக்க முடிந்தவர் (%)

70

47

34

45

வகுக்க/கழிக்க முடிந்தவர் (%)

51

75

48

38

வேலைவாய்ப்பு

சாதாரணத் தொழிலாளர் (%)

71

89

92

83

அரசுப் பணி (%)

1

0

1

3

கணக்கிடப்பட்டவர்கள்

674

3,955

7,785

31,655

மூல ஆதாரம்: 2005 & 2012 ஆண்டுகளுக்கான IHDS இன் குடும்பத் தரவுகள் அடிப்படையில் கட்டுரையாசிரியர்களின் கணக்கீடுகள்

வருமானமும், செல்வமும்: மேற்கண்ட புள்ளிவிவரங்களின் படி, 2005 இல், ஏழைப் பட்டியலின மக்களின் சராசரி குடும்ப வருமானம் ரூ. 27,870.67 (2019 விலைவாசியில் நிலவரப்படி) ஆக இருந்தது. இது ஏழை பார்ப்பனர்களின் சராசரி வருமானத்தில் குத்துமதிப்பாக 76 விழுக்காடும், ஏழை உயர்சாதியினரின் சராசரி வருமானத்தில் சுமார் 56 விழுக்காடும் ஆகும். 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஏழைப் பட்டியலின மக்களின் சராசி குடும்ப வருமானம் ரூ. 64,652.74 ஆக இருந்தது. இது ஏழைப் பார்ப்பனர்களின் சராசரி வருமானத்தில் 73 விழுக்காடும், ஏழை உயர்சாதியினரின் சராசரி வருமானத்தில் கிட்டத்தட்ட 73 விழுக்காடும் ஆகும். இந்த இரு ஆண்டு கணக்கீடுகளிலும், பார்ப்பன ஏழைகளை விடவும், உயர்சாதி ஏழையை விடவும் ஏழை தலித்துகள் குறைவாக வருமானம் ஈட்டியுள்ளார்கள் என்பது தெள்ளத் தெளிவாக உள்ளது. பார்ப்பன சாதியைச் சார்ந்த ஏழைகளுக்கும், உயர் சாதி ஏழைகளுக்கும் இடையேயான வருமானத்தில் பெரிய இடைவெளி இல்லை. ஆனால் ஏழைப் பார்ப்பனர், ஏழை தலித் இடையிலான வருமான வேறுபாடு மிக அதிகமாக இருக்கிறது.

அடுத்ததாக 2005 இல், பார்ப்பன ஏழை வீடுகளில் குத்துமதிப்பாக ஒன்பது வீட்டு உபயோகப் பொருட்களும், உயர்சாதி ஏழை வீட்டில் 9.5 வீட்டு உபயோகப் பொருட்களும் சொந்தமாக இருந்தன. எனினும், ஏழை தலித்துகளுக்கு, மற்ற இரண்டு குழுக்களைவிடக் குறைவாக, ஏழு வீட்டு உபயோகப் பொருட்கள் மட்டுமே சொந்தமாக இருந்தன. 2005 ஆண்டு நிலவரப்படி, ஒட்டுமொத்த இந்திய குடும்பங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் சராசரியாக 14 வீட்டு உபயோகப் பொருட்கள் சொந்தமாக இருந்தன. 2012 ஆண்டுவாக்கில், அனைவரின் சராசரி வீட்டு உபயோகப் பொருட்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருக்கிறது. அதில் பார்ப்பன வீடுகளில் உயர்சாதியினரை விட சற்றுக் கூடுதலாக வீட்டு உபயோகப் பொருட்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் தலித்துகளிடம் இந்த இரு பிரிவினரையும் விட குறைவான வீட்டு உபயோகப் பொருட்களே இருந்தன (ஏறக்குறைய 9.7). வேளாண்மையில் ஈடுபடுவதாகச் சொல்லுபவர்களின் நிலவுரிமை என்று வரும்போது இந்த ஏற்றத்தாழ்வுகள் இதைவிட அப்பட்டமாகத் தெரிகின்றன. 2005 இல் 59% ஏழைப் பார்ப்பனர்கள் நிலம் வைத்திருந்தார்கள். இந்த விகிதம் 2012 இல் 91% ஆக உயர்ந்தது. ஏழை உயர்சாதியினர்களில் நிலவுரிமை விகிதம் 39% இலிருந்து 75% க்கு அதிகரித்தது. பார்ப்பன ஏழைகளைக் காட்டிலும், உயர்சாதி ஏழைகளின் நிலவுரிமை குறைவானது. அதைவிட தலித் மக்களின் நிலவுரிமை மிக மிக குறைந்த அளவில் இருக்கிறது.

வருமானம், செல்வச் செழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஏழை தலித்துகள் ஏழைப் பார்ப்பனர்களையும், ஏழை உயர்சாதியினரையும் விட மிக மோசமான நிலையில் இருப்பதை மிகத் தெளிவாக இந்த புள்ளி விவரங்கள் சொல்கின்றன. 2012 ஆம் ஆண்டில் ”உங்களைப் பொறுத்தவரை, உங்கள் குடும்பம் ஏழைக்குடும்பமா, நடுத்தர வர்க்கமா, அல்லது வசதியானதா?” என்ற கேள்விக்கான விடைகளின் வேறுபாடுகளை அலசி ஆராய்ந்தால் ஏழைகளுக்கிடையில் உள்ள நிலையை வெளிக்காட்டுகிறது. 77% ஏழை தலித்கள் தங்களை ஏழையாக கருதுகின்றனர், 57% தலித்கள் தங்களை ஏழைகளாக கருதுகின்றனர். பார்ப்பனர்களுடன் இதை ஒப்பிட்டால், 40% ஏழைப் பார்ப்பனர்கள் மட்டுமே தங்களை ஏழைகள் என்று கருதுகிறார்கள். அவரவர் சமூக நிலையைச் சார்ந்து உருவாகும் ஏழை என்ற இந்தத் தன்னுணர்வு, வெளிப்படையான ஏழ்மை நிலை இருந்தாலும், ஏழைப் பார்ப்பனர்களிடம் குறைவாகவே உள்ளது. அதே வேளையில், வறுமைக் கோட்டிற்குக் கீழே இல்லாதபோதும் ஏழைகளல்லாத தலித்துகளிடையே ஏழை என்ற தன்னுணர்வு அதிகம் இருக்கிறது. அதே போன்று, தங்களை நடுத்தர வர்க்கம் என கருதும் ஏழைப் பார்ப்பனர்கள் அதிகம். மாறாக தங்களை நடுத்தர வர்க்கம் என கருதும் வறுமைக்கோட்டிற்கு மேலுள்ள ஏழையல்லாத தலித்கள் பார்ப்பனர்களைக் காட்டிலும் குறைவு. சுருங்கச் சொன்னால், வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்தாலும், பார்ப்பனர்கள் தங்களை ஏழை எனக் கருதுவதில்லை. வறுமைக்கோட்டுக்கு மேலே இருந்தாலும், தலித்கள் தங்களை ஏழை இல்லை எனக் கருதுவதில்லை.

கல்வி நிலை: 2005 ஆம் ஆண்டில், வயது வந்தோர் கல்வி பெற்ற ஆண்டுகளின் சராசரி எண்ணிக்கை ஏழை பார்ப்பனர்களுக்கு 3.46 என்ற அளவில் மிக உயர்ந்தும், ஏழை உயர்சாதியினருக்கு 2.36 அளவிலும், ஏழை தலித்துகளுக்கு 3.22 அளவிலும், மொத்த தலித்துகளுக்கு 3.15 ஆண்டுகளாகவும் இருந்தன. 2012 ஆண்டு வாக்கில் ஏழை பார்ப்பனர்களுக்கு 5.55, ஏழை உயர்சாதியினருக்கு 4.21, ஏழை தலித்துகள் 3.61 என்ற அளவிலும் இருந்தது. உயர்ந்தபட்ச கல்வி பெற்றோரின் எண்ணிக்கையும் மேற்கண்டதைப் போன்ற சாதி இடைவெளியைக் காட்டுகிறது. ஏழை தலித்துகள் மட்டுமின்றி, மொத்த தலித்துக்களோடு ஒப்பிட்டாலும் ஏழை பார்ப்பனர்கள் அதிக ஆண்டுகள் கல்வி கற்றவர்களாகவே இருக்கிறார்கள்,

குறைந்தது ஒருவராவது 12 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டு படித்தவர்கள் உள்ள ஏழைக் குடும்பங்களின் விகிதத்தை ஆராய்ந்தால் 2005 ஆம் ஆண்டில் 22.81% ஏழை பார்ப்பனக் குடும்பங்களில் குறைந்தது ஒருவராவது 12 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் கல்வி பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உயர்சாதி ஏழை, ஏழை தலித் குடும்பங்களில் ஒருவர் கூட 12 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டு படிக்கவில்லை. 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, குறைந்தது ஒருவராவது 12 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டு படித்தவர்கள் உள்ள குடும்பங்களின் விகிதம் ஏழைப் பார்ப்பன குடும்பங்களில் 39.37% ஆகவும், ஏழை உயர்சாதி குடும்பங்களில் 16.48% ஆகவும், ஏழை தலித் குடும்பங்களில் 11.71% ஆகவும் அதிகரித்தது. கல்வி கற்றோர் எண்ணிக்கையின் அடைப்படையில் பார்த்தால், ஏழைப் பார்ப்பனர்களே அதிகம். பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் பலனையும் அவர்களே எடுத்துக்கொள்வார்கள்.

கல்விபெற்றோர் எண்ணிக்கை அவர்கள் பெற்ற கல்வித்தரத்தைப் பற்றி எதையும் குறிப்பதில்லை. இது வேறொரு பிரச்சினை. ஆனால் முக்கியமான ஒன்று. கல்வி நிலையின் ஆண்டறிக்கை (Annual Status of Education Report or ASER) ஆண்டுக்கு ஆண்டு சுட்டிக்காட்டுவதுபடி பள்ளிக் கல்வியின் ஒட்டுமொத்தத் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது. இது குறிப்பாக எல்லா ஏழைகளுக்குமே உண்மையென்றாலும் கற்றல் தரம் ஏழை தலித்துகளுக்கு மிக மிக அதிகமாக இருக்கிறது. 2005 ஆம் ஆண்டில் 8லிருந்து 11 வயதுக்கு இடைப்பட்ட ஏழை தலித் குழந்தைகளில் 33% பேரால் ஒரு கதை அல்லது ஒரு பத்தியைப் படிக்க முடிந்தது. இந்த விகிதம் ஏழை பார்ப்பனர்களிலிருந்து வேறுபட்டதல்ல. ஆனால் 2012 ஆண்டு வாக்கில், இந்த விகிதம் ஏழை தலித்துகளுக்கு 34% அளவில் அப்படியே இருந்தாலும், ஏழை பார்ப்பனர்களின் கற்றல் தரம் 51 விழுக்காடாக உயர்ந்திருந்தது. வகுத்தல் அல்லது கழித்தல் திறனை அளவிட்டதின்படி கணிதத் திறனில் இரண்டு ஆண்டுகளிலுமே ஏழை பார்ப்பனக் குழந்தைகள் மற்ற இரு குழுக்களை விட முன்னால் இருக்கிறார்கள். உண்மையில், ஏழை பார்ப்பன கற்றல் திறன் விழுக்காடு ஏழாண்டுகளில் 44% இலிருந்து 51% க்கு உயர்ந்திருக்கையில், ஏழை உயர்சாதியினரின் வீதம் மாறாமலும் ஏழை தலித்துகளின் வீதம் 26%லிருந்து 28%க்கு சற்று அதிகரித்தும் இருந்தன.

வேலைவாய்ப்பு: உடல் உழைப்பு சார்ந்த சாதாராண கூலி உழைப்பே அறுதிப் பெரும்பான்மை ஏழைகளின் வேலைவாய்ப்பாக அமைகிறது. 2005 ஆம் ஆண்டுக்கும், 2012 ஆண்டுக்கும் இடையில் உடல் உழைப்பு சார்ந்த சாதாரண வேலைகளில் இருந்த ஏழைகளின் வீதம் எல்லா சாதிக் குழுக்களிலும் குறைந்து வந்தது என்றாலும் பார்ப்பனர்களில் 85% இலிருந்து 71%க்குக் குறைந்து மிக மிக அதிகமாக 14 விழுக்காடு சரிவு இருந்த அதே வேளையில் உயர்சாதிகளிலும், தலித்துகளிலும் சாதாரண பணிகள் செய்பவர்களின் வீதம் முறையே ஏழு விழுக்காடும் (96% இலிருந்து 89%க்கும்) ஐந்து விழுக்காடும் (97% இலிருந்து 92%க்கும்) குறைந்தன. சாதாரணத் தொழிலாளார்களின் விகிதத்தை ஏழை பார்ப்பனர்களோடு ஒப்பிடும்போது மிக அதிமான தலித்கள் சாதாரண கூலி வேலை செய்கின்றனர்.

ஒட்டுமொத்த தலித் மக்களின் நிலை: ஏழை தலித்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தலித் மக்களின் 2005, 2012 ஆண்டு நிலவரங்களை ஒப்பிட்டாலும், தலித் மக்களுக்கும் பார்ப்பன ஏழைகளுக்கும் இடையேயான வேறுபாடு இன்னும் மிகத் தெளிவாக தெரிகிறது. கல்வியிலிருந்து தலித்துகளை ஒதுக்கிவைத்த வரலாற்று மரபை கல்விகற்ற ஆண்டுகளின் அடிப்படையில் பார்க்க முடியும். 2005, 2012 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும், ஒட்டுமொத்த தலித்துகளின் கல்விகற்ற ஆண்டுகளின் சராசரி எண்ணிக்கை ஏழைப் பார்ப்பனர்களை விட குறைவாகவே உள்ளது. இரண்டு ஆண்டுகளிலும் சாதாரண பணிகளில் இருக்கும் அனைத்து தலித்துகளின் விகிதம் ஏழைப் பார்ப்பனர்களை விட அதிகமாக இருக்கிறது. 2005 இல் தலித்துகளின் சராசரி வருமானம் கிட்டத்தட்ட ஏழை பார்ப்பனர்களின் சராசரி வருமானத்தைப் போலவே இருந்தது.

தவறாக வடிவமைக்கப்பட்ட EWS பிரிவு:

இதுவரையிலான ஒப்பீடுகள் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள, அதாவது அரசாங்கத்தால் ஏழை என வகைப்படுத்தப்பட்ட, குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டது. ஏழைகளாக இருந்தாலும், பார்ப்பன உயர்சாதி ஏழைகளை விட தலித் மக்கள் ஏழ்மையாலும், சாதியாலும் இன்னும் கூடுதலாக பாதிக்கப்படும் நிலை இருக்கிறது என்பதை விளக்கிக் காட்டுவதே இந்த ஒப்பீட்டின் நோக்கம். அதாவது, ஏழ்மைக்கும் சாதிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. வேறுவார்த்தைகளில் சொல்வதானால், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பார்ப்பன ஏழைகளின் நிலை, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள தலித் ஏழைகளின் நிலையை விட மிக மேம்பட்டு இருக்கிறது. அதே வேளையில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பார்ப்பன ஏழைகளின் நிலையை, ஒட்டுமொத்த தலித் மக்களின் வாழ்நிலையோடு ஒப்பிட்டால் மோசமாக இல்லை. அதாவது சராசரி தலித்தின் நிலை, ஏழை பார்ப்பனரின் நிலையை விட சிறப்பாக இல்லை அல்லது மோசமாக உள்ளது. பொருளாதார ரீதியிலான பின்தங்கிய நிலையே வறுமைக்கான சரியான அளவீடு என்று வாதிடுபவர்கள் இங்கு முன்வைக்கப்பட்ட ஒப்பீடுகள் மூலம் உண்மையை அறிந்து கொள்ளலாம். சுருங்கக் கூறின், வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்தாலும் பார்ப்பனர்கள் வறியவர்களாக இருப்பதில்லை. வறுமைக்கோட்டுக்கு மேலெ இருந்தாலும் தலித்கள் ஏழைகளாக இருக்கின்றனர்.

ஆண்டு வருமானம் ரூ. 8,00,000 க்கு கீழ் உள்ள குடும்பங்கள் EWS இட ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற்றவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் (2009) படி, ஒரு லட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்ட குழந்தைகள் இலவசக் கல்வி பெறத் தகுதியானவர்கள். அந்த வகையில், கல்வி உரிமைச் சட்டத்தில் மாநில அரசுகள் பயன்படுத்தும் வருமான வரம்பைக் (1 இலட்சம்) காட்டிலும், EWS இட ஒதுக்கீட்டிற்கான வருமான வரம்பு (8 இலட்சம்) எட்டு மடங்கு அதிகமானது.

கல்வி உரிமைச் சட்டத்தின் படி 1 இலட்சத்திற்கு குறைவான குடும்ப வருமானம் கொண்ட ஏழைக் குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகள் தில்லியின் மேல்தட்டுத் தனியார் பள்ளிகளில் EWS பிரிவின் கீழ் சேர முடியும். மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில், வறுமைக் கோட்டிற்குக் கீழோ அல்லது வறுமைக்கோட்டை ஒட்டிய குடும்பங்களை அடையாளம் காண்பதில் கல்வி உரிமைச் சட்டத்தின் வருமானக் கணக்கீடுகள் மிகத்துல்லியமாக உள்ளன.

குடும்ப ஆண்டு வருமானம் பற்றிய தேசிய அளவிலான தரவுகள் எளிதில் கிடைப்பதில்லை. 2015 ஆம் ஆண்டில், மொத்த குடும்பங்களில் 98 விழுக்காட்டினர் ரூ. 6,00,000 அல்லது அதற்குக் குறைவாக ஆண்டு வருமானம் ஈட்டின என்று ஒரு மதிப்பீடு (Statista nd) குறிக்கிறது. பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லாத குடும்பங்களில் ரூ 8,00,000 அல்லது அதற்குக் குறைவாக ஈட்டுபவர்களுக்கான ஒதுக்கீடு என்று நிபந்தனையை EWS இட ஒதுக்கீட்டிற்கு விதிப்பதின் மூலம், பாஜக அரசாங்கம் உயர்சாதி இந்துக்களுக்கென்றே பிரத்தியேகமான ஓர் இடஒதுக்கீட்டை உருவாக்குகின்றது. இதன் பொருள் யாதெனில், சாதி ரீதியாக இல்லாத பொருளாதார ரீதியிலான ஒதுக்கீடு என்று அழைக்கப்பட்டாலும் இது உண்மையிலேயே எவ்வித சமூகப் புறக்கணிப்பினாலும் பாதிக்கப்படாத சாதிகளை இலக்கு வைத்து அளிக்கப்படும் சாதி அடிப்படையிலான ஒதுக்கீடாகும். EWS இட ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற்ற சாதிகள் சமூக அந்தஸ்தில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கின்றன. அவர்களுக்கு எவ்வித சாதித் தீண்டாமையும், சமூக இழிவும் கிடையாது.

EWS பிரிவினரை வரையறுப்பதற்கான வருமான உச்ச வரம்பு இந்த EWS இட ஒதுக்கீட்டிற்கு மேலும் ஒரு பரிமாணத்தைச் சேர்க்கிறது. EWS இட ஒதுக்கீட்டிற்கு முன்பு பட்டியலின, பழங்குடியின, பிற்பட்ட வகுப்பு ஒதுக்கீடுகளுக்குத் தகுதிபெற்ற சாதிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் பொதுப் பிரிவிற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை (Cut Off) விட அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அவர்களால் ”பொது பிரிவு” (Open Category) என்றழைக்கப்பட்ட பிரிவில் இடம் பிடிக்க முடிந்தது. இப்போது EWS என்று அழைக்கப்படுபவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு என்பது கிட்டத்தட்ட உயர்சாதிகளுக்கு மட்டுமான ஒதுக்கீடு என்றாகிறது.

ஆண்டு வருமானம் எட்டு இலட்சத்திற்குக் கீழ் உள்ள குடும்பங்களைப் பற்றி IHDS தரவுகள் எதை வெளிப்படுத்துகின்றன? கவனிக்கவேண்டிய முதல் கருத்து, 99.75% பார்ப்பன, 97.93% உயர்சாதி, 99.75% பட்டியலினக் குடும்பங்கள் EWS வரம்பை விட குறைவான வருமானங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். இதனால், இந்த ஒதுக்கீட்டை EWS பிரிவினர்க்கானது என்று வகைப்படுத்துவது முற்றிலும் தவறாகும்.

இவ்வாறு, ரூ. 8,00,000 வருமான உச்ச வரம்பு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது உண்மையான ஏழைகளிடம் இருந்து எவ்வளவு விலகியிருக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலகியிலிருக்கும் என்பது தெளிவாகிறது. கூடுதலாக, வருமான வரம்பிற்குக் கீழே உள்ள பார்ப்பனர்களும், உயர்சாதியினரும் தலித்துகளுடன் ஒப்பிடும்போது ஏற்கனவே மேம்பட்டு இருக்கையில், சுருங்கிவரும் அரசுப் பணிகளில் இருப்பவர்களின் வீதம் எல்லா மட்டங்களிலும் கீழிறங்கியும், பிற்பட்ட வகுப்பினரின் பங்கு (எண்ணிக்கையில் அல்ல) அதிகரித்தும், தொடர்ந்து பார்ப்பனர்களின் பங்கு சற்று கூடியும் இருக்கிறது. பொருளாதார ரீதியான குறைபாட்டை சீர்ப்படுத்தும் நோக்கில் பார்த்தால் இந்த EWS இட ஒதுக்கீடு தேவைக்கதிகமானது என்பதை இந்த புள்ளிவிபரங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.

யார் உண்மையான ஏழைகள்?

10% EWS இட ஒதுக்கீட்டின் அடிப்படைகளை கேள்வி கேட்பதால், உண்மையான ஏழைகளை இலக்கு வைக்து, அவர்களைப் பாதுகாக்கும், அல்லது முன்னேற்றும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது என்று பொருள் அல்ல. வர்க்கம், சாதி, மதம், பாலினம் உள்ளிட்ட அனைத்து சமூகப் பரிமாணங்களில் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவிக்க வேண்டும் என்பதை யாரும் மறுப்பதில்லை. உண்மையில் வேறெந்த வடிவிலான இட ஒதுக்கீட்டுக்கும் இல்லாத குழந்தைகள் கல்வி உரிமைச் சட்டத்தின் (2009) கீழ் தில்லி மேல்தட்டு தனியார் பள்ளிகளில் சேர்க்கப் பட்டுள்ளது பல நல்ல நேர்மறையான விளைவுகளை மாணவர்கள் இடையே ஏற்படுத்தியிருக்கிறது. ஏழை வகுப்புத்தோழர்களுடன் சேர்ந்து படிக்கும் பணக்கார மாணவர்களின் நடத்தையை மேம்படுத்தியுள்ளது என்றும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வு கொண்ட ஏழை – பணக்கார மாணவர்களைக் கொண்ட வகுப்பறைகளில் பயிலும் பணக்கார மாணவர்கள் பள்ளிக்கு வெளியில் உள்ள ஏழைக் குழந்தைகளிடமும் அதிக பாகுபாடு காட்டாமல் இருக்கிறார்கள்.

இங்கு கூறப்படும் கருத்து யாதெனில் உயர்கல்வி நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும், அதாவது மிகவும் மேல்தட்டு இடங்களில், இட ஒதுக்கீடு வழங்குவது ஏழைகளை மேல்தட்டிலிருந்து ஒதுக்கி வைக்காமலிருக்கவும், மேல்தட்டின் பிரதிநிதித்துவம் மக்கள் தொகைசார் பரவலின் அடிப்படையில் ஒத்திருக்கவும் செய்ய உதவும் ஒரு கொள்கையாகும். அவ்வகையில், ஏற்கனவே நன்கு பிரதிநித்துவம் பெற்ற உயர்சாதியினருக்கு 10% EWS இட ஒதுக்கீடு அளிப்பதன் மூலம், பாகுபாடு காரணமாக புறக்கணிக்கப்பட்ட சாதிக் குழுக்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இட ஒதுக்கீடு எனும் கருவியை பாஜக அரசாங்கம் முனை மழுங்கச் செய்கிறது.

தவிர, 10% EWS இட ஒதுக்கீட்டிற்கான 8 இலட்ச வருமான உச்சவரம்பு உண்மையிலேயே ஏழைகளை இலக்கு வைக்கவில்லை, ஆனால் சுருங்கிவரும் அப்பத்தின் ஒரு துண்டை உயர் சாதிகளுக்கு ஒதுக்கிவைப்பதின் மூலம் அரசாங்கம் உயர்சாதியினருக்கு நல்ல வேலைகளை உறுதி செய்வதற்கு ஏதோ செய்வதாக ஒரு மாயையை உருவாக்குகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அரசாங்கம் வறுமையை தடுத்து நிறுத்த விரும்பினால் வளர்ச்சி முறையை அனைவரையும் உள்ளடக்கியதாக ஆக்குவதோடு கூடவே அது ஏழ்மைக்கெதிரான திட்டங்களை வகுக்க வேண்டும். கற்றல் திறனில் தாழ்ந்த நிலையிலும், ஊட்டச்சத்துக் குறைபாடு மிகுதியாகவும் இருப்பதில் இருந்து பொதுக் கல்வி, சுகாதாரக் கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டறிய முடிகிறது. சமூகக் கட்டமைப்பிலும், கற்றல் வாய்ப்புகளை அனைவருக்கும் சமன் செய்வதை உறுதி செய்யும் திட்டங்களிலும் அரசு கவனம் செலுத்த வேண்டிய வலுவான தேவை இருக்கிறது.

உண்மையான பிரச்சினை யாதெனில் அரசுப் பணிகளின் எண்ணிக்கை குறைவது அல்லது சரியாகச் சொல்வதென்றால் வேலைகள் இல்லாதிருப்பது. கடந்த இருபதாண்டுகளாக அரசுப் பணிகளின் முழு எண்ணிக்கைகள் சரிந்து வருகின்றன. ஆக இந்தியாவில் அரசு வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி வீதம் குறைந்து வருவது மட்டுமல்ல, உண்மையில் சரிந்தும் வருகிறது. 1991-2013 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஒன்றிய அரசின் இராணுவம் சாராத வேலைவாய்ப்பு எண்ணிக்கை 8,46,998 ஆகக் குறைந்தது. இது 22% சரிவு ஆகும். அதே காலகட்டத்தில் அதற்கிணையாக, பட்டியலினப் பணியாளர்களின் எண்ணிக்கை 2,00,476 ஆகக் குறைந்தது. இது 28% சரிவு ஆகும். இராணும் சாராத வேலைவாய்ப்புகளில் மிகப்பெரியதாகத் திகழும் இந்திய இரயில்வேயில் மொத்தப் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 1991 ஆம் ஆண்டில் 16,58,413 என்ற அளவில் இருந்து 2014 ஆம் ஆண்டில் 13,33,996 என்ற அளவுக்கு சரிந்தது. அதில் மிகப்பெரிய சரிவு C மற்றும் D வகைப் பணிகளில் ஏற்பட்டது. ஆகவே அரசு வேலைவாய்ப்புகளுக்கும் அரசு வேலை தேடும் ஆட்களின் எண்ணிக்கைக்கும் இடையே பெரிய வேறுபாடு இருப்பது அதிசயமானதல்ல. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு, ஒரு இலட்சம் இரயில்வே காலி இடங்களுக்கு இரண்டு கோடி பேர் விண்ணப்பித்தார்கள் என்ற செய்தி (Economic Times, 2018).

நிரந்தர வேலைப் பாதுகாப்பு, நல்ல ஊதியம், வேலையின் தன்மை, பணிச்சூழல், பிற சலுகைகள் போன்ற பல நன்மைகளுக்காக அரசாங்க வேலைவாய்ப்புகள் வெகுவாக பலரைக் கவர்வது உண்மை. இருப்பினும், அனைவரும் விரும்பத் தக்க அரசாங்க வேலை எனும் இந்த அப்பம் விரைவாகச் சுருங்கி வருகின்றது. அதை மேலும் பல துண்டுகளாகப் போடுவதின் மூலம் அப்பத்தின் அளவை அதிகரிக்க முடியாது. இந்தச் சூழலில் சமூக ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் குழுக்களின் இட ஒதுக்கீட்டிற்கான கோரிக்கையை அவர்களது புறவய சமூக - பொருளாதார நிலையால் நியாயப்படுத்த முடியாது. சமூகத்தின் மிகவும் விளிம்பில் உள்ளவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை களையத் தேவைப்படும் கொள்கையான இட ஒதுக்கீட்டை சமூகத்தில் ஆதிக்கம் செய்யும் பிரிவினருக்கு வழங்கினால், ஏற்கனவே சுருங்கிவரும் அரசுப்பணிகளை ஆதிக்கக் குழுக்களுக்கு பொதுப் பங்கீடு செய்யும் கருவியாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

இறுதியாக, இட ஒதுக்கீட்டை வறுமை ஒழிப்புத் திட்டமாக கருத என்ன தர்க்க அடிப்படை உள்ளது? அப்படி எதுவுமில்லை. அரசாங்கம் உண்மையிலேயே மக்களின் வறுமையை ஒழிக்கவும், வாழ்நிலையை முன்னேற்றவும் விரும்பினால் பல்வேறு வகைகளில் திட்டமிட முடியும். அனைத்திற்கும் மேலாக, வேலைவாய்ப்பை அதிகப்படுத்த பொருளாதார வளர்ச்சி வேண்டும். பலவகையான முறைசார் துறை, நிலையான, நல்ல வேலைகள். பொதுத் துறையிலும், அதற்கப்பாலும் தேவைப்படுகின்றன. இட ஒதுக்கீடு மந்திரக் கோல் அல்ல. அது வேலைகளை உருவாக்குவதில்லை. வறுமையை ஒழிப்பதில்லை. இது கொள்கையின் தோல்வியல்ல. அது வறுமை ஒழிப்பு நடவடிக்கையாக வடிவமைக்கப்படவில்லை. மாறாக இட ஒதுக்கீடு அதிகாரத்தைப் பரவலாக்கும். சமூகத்தை ஆதிக்கம் செலுத்தும் உயர்பதவிகளை அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கும் கொள்கையாகும். ஏற்கனவே தங்கள் தேவையை விட கூடுதலான உயர்பதவிகளை பிடித்து வைத்திருக்கும் உயர் சாதிகளுக்கான இட ஒதுக்கீடு தேவையில்லை. அவர்களுக்குத் தரப்படும் இட ஒதுக்கீடு அதிகாரப் பரவலுக்கு எதிரானது.

சாதியால் ஒடுக்கப்பட்ட தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் வெளிப்படையான நிவாரணத்திற்கு உத்தரவாதமளிக்கும் இட ஒதுக்கீட்டு கொள்கை வழியிலிருந்து விலகிச் செல்லத் தயாராக இருக்கிறது என்ற சமிக்ஞையை உயர்சாதிகளுக்கு அனுப்ப அரசு தயாராக இருக்கிறது. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகளால் தகுதி குறைவதைப் பற்றி வழக்கமாக வெறுப்பினால் நெஞ்சிலடித்துக் கொண்டு வெளிப்படும் வெறுப்புச் சுனாமியும், வெளிப்படையான சாதிய நஞ்சும் இந்த அறிவிப்பிற்குப் பிறகு அறவே இல்லாதிருப்பது உயர்சாதிகள் இந்த மாற்றத்தை வரவேற்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இதனோடு தலித்துகள் தங்கள் மரபுவழித் தொழில்களைச் செய்வற்காக அடித்துக் கொல்லப்படுதல், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அவர்களுடைய வாழ்வாதாரங்களைப் பறித்தல், சாதி மறுப்புத் திருமணங்களை குறிவைக்கும் வன்முறை, கோவில் நுழைவுத் தீண்டாமையை வலியுறுத்தும் சட்டவிரோத சமூக நடைமுறைகளை கடைபிடிக்க மறுத்தால் நிகழ்த்தப்படும் வன்முறை ஆகியவற்றைச் சேர்த்துப் பார்த்தால் வெள்ளை வண்ண சுவரில் எழுதப்படும் காவி வண்ண மை போல ஒரு உண்மை தெளிவாகத் தெரிகிறது. அந்த உண்மை என்னவெனில், 10% EWS இட ஒதுக்கீடு என்பது ஆண்டாண்டு காலமாக, சாதி ரீதியாக இழிவுபடுத்தப்படும், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு வழங்கிய உரிமைகளை நீர்த்துப்போகச் செய்யும் நகர்வாகும்.

- அஷ்வினி தேஷ்பாண்டே & ராஜேஷ் ராமச்சந்திரன்

நன்றி: Economic and Political Weekly இதழ் (2019, மார்ச் 30 வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: முனைவர் மு. சுந்தரமூர்த்தி

Pin It