கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பெண்ணடிமைச் சின்னங்களை அகற்றிய ஜாதி மறுப்பு வாழ்விணையர்கள் கல்கி - தேஜஸ்ஸ்ரீ இருவரும் பி.டெ.க். பட்டதாரிகள். படிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

தேஜஸ்ஸ்ரீ ஆந்திராவைச் சார்ந்தவர். அவர் தந்தை தெலுங்கு ஆசிரியராக தமிழ் நாட்டில் பணி செய்கிறார். அவர் இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். தந்தையின் எதிர்ப்பு காரணமாக வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேறி தேஜஸ்ஸ்ரீ - கல்கி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

கல்கியின் பெற்றோர் வினோத்- ஸ்டெல்லா ஆகியோர் இந்த திருமணத்திற்கு ஆதரவளித்தனர். வினோத் - ஸ்டெல்லா இணையர் பகுத்தறிவாளர்களாக பெரியாரியலை ஏற்றுக் கொண்டு வாழ்ந்துவரும் தோழர்கள் ஆவர்.

இந்நிலையில் கடந்த 20.04.2016 அன்று கொளத்தூரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தோழர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர். இவர்களின் திருமணம் குறித்து தேஜஸ்ஸ்ரீயின் பெற்றோருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைக்கப் பெற்ற தேஜஸ்ஸ்ரீ பெற்றோர் 2 முறை நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் அவர்கள் கடைசிவரை இந்த திருமணத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.

மேலும் தன் மகள் அணிந்திருக்கும் நகைகளை கழற்றி கொடுக்கச் சொல்லி வாங்கிக்கொண்டு சென்று விட்டனர். இணையர்களை பிரிக்கும் நோக்கத்தில் பெண்ணின் பெற்றோர் இருந்ததால் திருமணம் நடைபெற்று விட்டதை காட்டும் நோக்கத்தில் அடையாளமாக தாலியையும், மெட்டியையும் தேதஸ்ஸ்ரீ பேச்சுவார்த்தையின் போது அணிந்து கொண்டிருந்தார்.

இத்திருமணத்தை ஏற்றுக்கொண்டு ஆதரவாக இருந்த வினோத் வீட்டின் சார்பில் இவர்களின் திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி 01.05.2016 அன்று மாலை 5 மணியளவில் கவுந்தப்பாடி அருகில் உள்ள சலங்கபாளையத்தில் நடைபெற்றது. மணமகன் கல்கியின் தாயார் ஸ்டெல்லா வரவேற்புரை வழங்கினார். இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகத் தோழர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். மணமக்களின் கல்லூரி தோழர்கள், தோழிகள் என 80 க்கும் மேற்பட்டவர்கள் இந்த வரவேற்பு விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்வாக பெண்ணடிமைச் சின்னங்களான தாலி மற்றும் மெட்டியை அகற்றும் நிகழ்வு நடைபெற்றது. மணமகளான தேஜஸ்ஸ்ரீ திருமணத்திற்கான அடையாளமாக காட்டுவதற்கு அணிந்த அடையாளச் சின்னங்களை தானாகவே முன்வந்து சொந்த விருப்பத்தின் பேரில் அகற்றிக் கொள்வதாக தெரிவித்து, கழகத் தலைவர் மற்றும் தோழர்கள் முன்னிலையில் தாலியை அகற்றிக் கொண்டார். மெட்டியை கல்கி அகற்றினார்.

பெண்ணடிமைச் சின்னங்களை அகற்றும்போது கூடி இருந்த தோழர்கள் பலத்த கரவொலி எழுப்பி இணையர்களுக்கு தங்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக் களையும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, பொருளாளர் துரைசாமி, வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன், காவை ஈஸ்வரன், நாத்திக ஜோதி, கவுந்தப்பாடி மதி ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர். மணமக்கள் இருவரும் ஏற்புரை வழங்கினர்.

இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி தனது வாழ்த்துரையில், “இந்து சமூகச் சூழலில் ஒருவர் இரண்டு விசயங்களை தானாக தெரிவு செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது எனவும் அவை ‘திருமணம் மற்றும் தொழில்’ என குறிப்பிட்டார்.

மேலும் தொழிலை தேர்வு செய்யும் உரிமையில் உள்ள நிலை கூட மாறி இருக்கிறது ஆனால் ஒருவர் துணையைத் தேர்வு செய்யும் உரிமை இன்று வரை தடுக்கப்பட்டு வருகிறது'' என்றும் குறிப்பிட்டார். கழகத் தலைவரின் வாழ்த்துரையோடு நிகழ்ச்சி சிறப்புடன் நிறைவு பெற்றது.

Pin It