இந்தியாவின் தலைநகரில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அரசு அதிகாரத் திமிருடன் மதவாதம் படை எடுக்கிறது. மாணவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கடந்த பிப்.9 ஆம் தேதி இந்தியாவின் ஆளும் பார்ப்பன ஆதிக்க சக்திகளால் முறைகேடாக தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு நாளில் தூக்குத் தண்டனைக்கு எதிராகவும்  இராணுவ ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும் காஷ்மீர் மக்களுக்காகவும் மாணவர்கள் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். அவ்வளவுதான். மாணவர் தலைவர் கன்யாகுமார் உள்ளிட்ட 5 மாணவர்கள் மீது ‘தேச விரோத சட்டம்’ பாய்ந்தது.  கன்யாகுமார் என்ற புரட்சிகர சிந்தனையை ஏற்றுக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து படிக்க வந்த இளைஞர். கன்யாகுமார் பிணையில் வெளிவந்த பிறகும் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த மாணவர்களை விட்டு வைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். தலைமை, பல்கலைக்கழகங்களில் ‘இந்துத்துவா’ வுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளையும் அனுமதிக்கக் கூடாது என்று மோடி ஆட்சிக்கு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்  வெளிப் படையாகவே எச்சரித்தார்.

மாணவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளை மத்திய மனித வளத் துறை அமைச்சகம் முடுக்கி விட்டது. பிப்.9 ஆம் தேதி என்ன நடந்தது என்பதை விசாரிக்க 5 பேர் அடங்கிய குழு ஒன்றை நிய மித்தார்கள். குழுவினர் அனைவருமே இந்துத்துவா ஆதரவாளர்கள். குழுவின் பரிந்துரைகள் மிகவும் கொடூரமானவை. செமஸ்டர் தேர்வுகளை எழுத அனுமதிக்கக் கூடாது; பிஎச்.டி. ஆய்வை சமர்ப்பிக்க அனுமதி இல்லை; வளாகத்துக்குள் நுழைய அனுமதி இல்லை; கன்யாகுமார் உள்ளிட்ட 14 மாணவர் களுக்கு ரூ. 10,000லிருந்து ரூ.20,000 வரை அபராதம் என்று குழு ஆணையிட்டது. இந்த அடக்கு முறைகளை எதிர்த்து மாணவர்கள் போராடி வருகிறார்கள்.

ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு வித தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஏதோ பல்கலைக்கழகத்துக்காகவே தனியாக ஒரு குற்றவியல் சட்டம் இருப்பதுபோல இவர்களே கருதிக் கொண்டு செயல்படுவதை மாணவர்கள் ஏற்கவில்லை. அதே நேரத்தில் விசுவ இந்து பரிஷத் மாணவர்கள் வளாகத் துக்குள் நடத்திவரும் அத்துமீறல்கள், வன்முறைகள் தொடர்கின்றன.

இஸ்லாமிய மாணவர்களை தாக்கியுள்ளனர். நர்மதா விடுதிக்குள் சாராயத்தை ஊற்றினார்கள். மாணவர் சங்கத் தேர்தல்களில் மாணவர்களை தாக்கினார்கள். கன்யாகுமார் மீது செருப்பு வீசினார்கள். இவர்களின் அடாவடி வன்முறை நடவடிக்கைகள் மீது எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.

அடக்குமுறைகளை எதிர்த்து, ‘டார்ச் லைட்’ (கை ஒளி விளக்கு) பேரணி, உண்ணாவிரதப் போராட்டம் என்று மாணவர்கள் பல்வேறு வடிவங்களில் அற வழியில் போராடுகிறார்கள். போராடும் இடத்துக்கு மாணவர்கள் சூட்டியுள்ள பெயர் ‘சுதந்திர சதுக்கம்’ (Freedom Square). மாணவர்கள் போராட்டத்துக்கு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 120 பேராசிரியர்கள் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் 180 பேர் இந்தப் போராட்டங்களில் பங்கெடுத்தனர். பீகார், கல்கத்தா பல்கலைக் கழகங்களிலும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. ‘இந்துத்துவ பார்ப்பனியத்துக்கு எதிரான மாற்று அரசியலை முன்னெடுப்போம்’ என்ற முழக்கங்களையே மாணவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.

உடலில் பெரும் பகுதி செயலிழந்த நிலையிலும் மனித உரிமைக்காகப் போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனித உரிமைப் போராளி பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் துணைவியார் வசந்தகுமாரி மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகிறார்.

(ஜி.என். சாய்பாபாவுக்கு அண்மையில்தான் பிணை கிடைத்திருக்கிறது) கன்யாகுமாருக்கு விதித்துள்ள அபராதத் தொகையை மும்பையில் கூலித் தொழிலாளர்கள் நன்கொடையாகத் திரட்டி அனுப்பி வைத்துள்ளனர். உறுதிகுலையாத அடக்கு முறைகளை எதிர்த்து நிற்கும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை ‘தேசவிரோதிகள்; பிரிவினைவாதிகள்; பயங்கரவாதிகள்’ என்ற தலைப்பில் 200 பக்க அறிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் நூலாக அச்சடித்து பரப்பி வருகிறது.

காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த மாணவர்களும் தலித் மாணவர்களும் இணைந்து தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் வளாகங்களில் மாட்டிறைச்சி உணவுத் திருவிழாக் களை நடத்துவதாகவும் அந்த அறிக்கை குற்றம்சாட்டுகிறது.

காஷ்மீரும், வடகிழக்கு மாநிலங்களும் ‘இந்துத்துவா’வின் தேச வரைபடத்துக்குள் இடம் பெறவில்லை என்று மதவாத பார்ப்பனியம் முடி வெடுத்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. இங்கிலாந்து தலைநகர் இஸ்லாமியர் ஒருவரை மேயராக தேர்வு செய்கிறது.

இந்தியாவின் தலைநகரம் டெல்லியிலோ - தலைநகருக்கு வரலாற்றுப் பெருமை யை சேர்த்து வரும் ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் மதவெறி இந்துத்துவா கொள்கையை ஏற்க மறுக்கும் மாணவர்களை அரசு ஒடுக்குகிறது.

இலண்டனும் புதுடில்லியும்

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டனின் மேயராக தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சாதிக்கான் என்ற இஸ்லாமியர், கடந்த மே 5ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் இங்கிலாந்து நாட்டின் ஆளும் கட்சியான ‘கன்சர்வேட்டிவ்’ கட்சியைச் சார்ந்த ஜாக். கோல்ட் ஸ்மித் என்ற பெரும் பணக்காரர்.

‘நான்தான் சாதிக்கான்; இலண்டன் மாநகரத்தின் மேயர்’ என்று மக்களிடம் எளிமையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவரின் மூதாதையர் பாகிஸ்தானியர்கள். இவரது தந்தை, இலண்டன் மாநகர வீதிகளில் பேருந்து ஓட்டுனர். சாதிக் கான் 1970இல் இலண்டனில் பிறந்தவர்; சட்டம் படித்தவர். எதிர்த்துப் போட்டியிட்ட கோல்ட்ஸ்மித், சாதிக்கானை இஸ்லாமிய பயங்கரவாதி என்று பிரச்சாரம் செய்தார்.

இஸ்லாமிய பயங்கரவாதம் இலண்டனுக்குள் ஊடுருவிவிடும் என்று மக்களிடம் மத வெறுப்புகளைத் தூண்டி விட்டார். இலண்டன் நகர மக்கள், இந்த ‘மதவெறி’ப் பிரச்சாரங்களை புறந்தள்ளி விட்டார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் பல்வேறு அடையாளங்கள் உண்டு.

ஒற்றை அடையாளத்துக்குள் திணித்துவிட முடியாது ‘பன்முக’ அடையாளங்களை அங்கீகரிப்பதே - மக்கள் நாயகத்துக்குரிய செழுமையான அடை யாளம். சாதிக் கான் - அதே கண்ணோட் டத்திலே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை அவரிடம் முன் வைத்த கேள்வி, “உங்களை எப்படி அடையாளப் படுத்திக் கொள்கிறீர்கள்?” சாதிக் கான் குழப்பம் ஏதுமின்றி இவ்வாறு கூறினார். “நான் இலண்டன் வாசி; இலண்டனில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும் மேயர்; நான் அய்ரோப்பியன்; நான் ஆங்கிலேயர்; ஆசியாவைச் சார்ந்தவன்; எனது மூதாதையர் பாகிஸ்தானியர்கள்; நான் ஒரு தந்தை; நான் ஒரு கணவன் - இப்படி எனக்குப் பல அடையாளங்கள் உண்டு” இது சாதிக்கான் அளித்த பதில்.

எவர் ஒருவரையும் ஒற்றை அடையாளத்துக்குள் திணிக்க முயல்வது ஆபத்தானது. பன்முக அடையாளங் களிலும் முன்னுரிமை தரும் அடையாளம் ஒன்று தேவைதான். அந்த அடையாளம் சமத்துவத்துக்கும் மனித உரிமைகளுக்குமான அடையாளமாக இருக்க வேண்டும். ஒற்றை வார்த்தையில் கூற வேண்டு மானால், அந்த அடையாளத்தின் பெயர் ‘சுயமரியாதை’. எனவேதான் பெரியார் ‘சமூகத்தின் சுயமரியாதை’ மீட்புக்கான போராட்டத்தைத் தொடங்கினார்.

இந்து மத அடையாளத்துக்குள் மக்களை திணித்து மக்களின் ஒரு பகுதியினரை விலக்குகளுக்கும் வெறுப்புக்கும் உள்ளாக்குவதும், மொழி, இன அடையாளங்களுக்குள் மக்களின் ஒரு பகுதியினரை ‘விலக்குகளுக்கும் வெறுப்புக்கும்’ உள்ளாக்குவதும், உள்ளடக்கத்தில் ஒன்றுதான். ஒற்றைச் சொல்லில் கூறினால் இதற்குப் பெயர் ‘பார்ப்பனியம்’; உலக மொழிகளில் கூற வேண்டுமானால், இதற்குப் பெயர் ‘பாசிசம்’.

Pin It