அணுமின் சக்தி உற்பத்தியை ஆதரிப்போர் சில முக்கிய கேள்விகளுக்கு பதில் கூறுவது இல்லை.

1.    அணுமின் உலைகளில் பேரழிவை ஏற்படுத்தும் விபத்து ஏற்படுத்துவதற்கான சாத்தியமே இல்லை என்று ஒருவரும் உறுதியளிக்கத் தயாராக இல்லை.

2.    இதுவரை இந்தியாவின் அணு உலைகளில் ஏற்பட்ட பல விபத்துகளை அணு உலையை ஆதரிப்போர் ‘சாதாரண’ நிகழ்வுகள் என்று கூறி மூடி மறைக்கின்றனர். எடுத்துக் காட்டாக, 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி, கர்நாடக மாநிலத்தில் உள்ள கைகா அணுமின் நிலையத்தில் பணியாற்றிய 90 ஊழியர்கள் கதிர்வீச்சால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை மூடி மறைக்க அணுசக்தித் துறை கடும் முயற்சி மேற்கொண்டது. ஆனால், அதையெல்லாம் மீறி 28 ஆம் தேதி செய்தி வெளியானது. அப்போது பதிலளித்த கைகா அணுசக்தி நிலையத்தின் இயக்குனர் ஏ.என். குப்தா, பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அணுஉலைக்கு வெளியேதான் இருந்திருக்கின்றனர். அப்படி இருந்தும் அந்த அளவிற்கு கதிர்வீச்சு எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை என்று கூறினார். இதற்காக அணுசக்தி ஆணையம் அவரைக் கண்டித்ததோடு, இப்படிப்பட்ட விவரங்களை ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டது. இதே போன்று, மராட்டிய மாநிலம் டிராம்பேயில் உள்ள பாபா அணுசக்தி மையத்திலும் கடந்த ஆண்டு ஒரு விபத்து ஏற்பட்டது. அதைப் பற்றிய விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

3.     புகுஷிமாவில் ஏற்பட்டதே மிக மோசமான விபத்து என்றும்,  அதைவிட பெரிதான விபத்து ஏற்படும் என்று கூறுவதற்கில்லை என்றும் அணுஉலை ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். அதனால்தான் புகுஷிமா விபத்தில் ‘கற்ற பாடங்களின் அடிப்படையில்’ பல மேம்பாடுகளை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் செய்துள்ளதாகக் கூறுகின்றனர்.

4.    அணு உலைகளில் பயன்படுத்தப்படும் யுரேனியம் எரி பொருளில் 5 விழுக்காடு மட்டுமே செறிவூட்டப்பட்டு பயன்படுத்தப்படுகிறது என்கிறது உலக அணுசக்தி சங்கம். ஆனால் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் எவ்வாறு கையாளப் படுகிறது என்ற எந்த விவரத்தையும் கூற மறுக்கிறார்கள். இதுவரை மறுசுழற்சி தொழில் நுட்பம் இந்தியாவிடம் உள்ளது என்றுதான் கூறுகிறார்களே தவிர, அது எங்கு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்ற விவரமும் தெரிவிக்கப்பட வில்லை.

5.    இந்தியாவில் பல பத்தாண்டுகளாக 20 அணு உலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பயன்படுத்தப்பட்ட யுரேனியம் எரிபொருளில் இருந்து கிடைக்கும் துணைப் பொருளான புளூட்டோனியம் எனும் அணுப் பொருள்தான் அணுகுண்டு தயாரிக்கத் தேவையான வெடி பொருளாகும். புளூட்டோனியத்தை எரி பொருளாக பயன்படுத்தி, அணு மின் சக்தி தயாரிக்கும் வேக அணு உலை ஒன்று இப்போது தான் கல்பாக்கத்தில் கட்டப்பட்டு வருகிறது.

6.    அணுஉலைகள் அமைத்து அதிலிருந்து மின் சக்தி தயாரிக்க ஆகும் செலவு ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.3 மட்டுமே என்கிறார் எம்.ஆர். சீனிவாசன் (சூரிய சக்தி தயாரிப்புக்கு ரூ.30 ஆகும் என்கிறார்) ஆனால், இது எந்தக் கணக்கின் அடிப்படையில் என் பதை விளக்கவில்லை. இவர்கள் அயல்நாடுகளில் இருந்து வாங்கி நிறுவும் அணு உலைகள் மிக அதிக விலையானவை. அப்படியிருக்கும் போது, மிகக் குறைந்த தயாரிப்புத் திறன் கொண்ட இந்திய அணு உலைகளில் இருந்து பெறப்படும் உற்பத்தி - விலை கணக்கை அயல்நாட்டு அணு உலைகளுக்கும் பொருத்தி கணக்கு சொல்வது எப்படி சரியாகும்?

7.    ஒரு அணு உலையின் ஆயுள் 30 ஆண்டுகள் மட்டுமே. இவர்கள் ‘நன்றாக பராமரித்து’ 60 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர். அப்படியே வைத்துக் கொண்டாலும், 60 ஆண்டுகளுக்குப் பிறகு அதனை மூடுவதற்கு ஆகும் செலவு எவ்வளவு என்பதை இதுவரை சொல்லவில்லை.

கழகத் தலைமையகத்தில் நடந்த முதல் சிந்தனை வட்டம்

கழகத்தின் புதிய தலைமையகத்தில் ‘மணல்மேடு வெள்ளைச்சாமி-பட்டுக்கோட்டை இராமசாமி சிந்தனை வட்டத்தின்’ சார்பில் சிந்தனை அரங்கம் 13.10.2011 அன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. “கூடங்குளம் அணுமின் நிலையம் அவசியமா?” என்ற தலைப்பில் ஆண்டன் கோமஸ் (கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைவர்), ஊடகவியலாளர் டிஎ.ஸ்.எஸ். மணி, பொறியாளர் பொன். ஏழுமலை ஆகியோர் உரையாற்றினர். 70 தோழர்கள் பங்கேற்றனர். சிந்தனை மய்யத்தின் ஒருங்கிணைப்பாளர் சுகுமார் வரவேற்புரையாற்ற, கழகப் பொறுப்பாளர் ச. குமரன் நன்றி கூறினார். இது, கழகத்தின் புதிய தலைமையகத்தில் நடந்த முதல் கூட்டம். அனைவருக்கும் இனிப்பு, தேனீர் வழங்கப்பட்டது.

Pin It