ராஜீவ் காந்தி ஈழத்துக்கு அனுப்பி வைத்த இந்திய ராணுவம் 1987 ஆம் ஆண்டில் நிகழ்த்திய போர்க் குற்றங்கள், இனப் படுகொலைகள் பற்றிய ஒரு தொகுப்பு:

18.10.87
இன்று நடைபெற்ற மோதலில் விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்த அலன்,ஜனா, விஜி ஆகியோர் வீர மரணமடைந்தனர். மானிப்பாய், ஆனைக் கோட்டைப் பகுதிகளில் 3 மணி நேரத்துக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட 125 எம்.எம்.ஆட்லரி செல்கள் இந்திய  படையினரால் ஏவப்பட்டன. இதில் 9 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன் நூறு பேர் வரையில் படுகாயமடைந்தனர்.

பலரின் வீடுகளும், உடைமைகளும் கடும் சேதத்துக்குள்ளாயின. மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோயிலடியில் இந்தியப் படையினரால் ஏவப்பட்ட செல்கள் விழுந்து வெடித்ததில் கோயிலில் தஞ்சம் புகுந்திருந்த பல பொது மக்கள் காயமடைந்ததுடன், கோயிலும் பலத்த சேதத்துக்குள்ளானது.

18 ஆம் தேதி மாலை 3 மணியளவில் கோப்பாயில் மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதலை மேற் கொண்ட இந்தியப் படையினரின் செயின் வாகனத் தின் மீது விடுதலைப் புலிகள் ஆர்.பி.ஜீ. மற்றும் கண்ணிவெடித் தாக்குதல் மேற்கொண்டதில் ஒரு செயின் கவச வண்டி முற்றாகச் சேதமுற்றது. சண்டி லிப்பாய் என்ற இடத்தில் இந்தியப் படையினரின் ஒரு செயின் வாகனம் விடுதலைப் புலிகளால் தாக்கித் தகர்க்கப்பட்டது.

தாக்குதலுக்கு எதிர் நிற்க முடியாத இந்தியப் படையினர் பின் வாங்கினர். விடுதலைப் புலிகள் இந்தியப் படையினரிடமிருந்து ஒரு ஜீ.பி.எம்.ஜி. மற்றும் ஏராளமான ஆயுதங்களைக் கைப்பற்றினர்.

கோப்பாயில் நடந்த கடும் சமரில் இந்தியப் படையினரின் 5 ஏ.பி.சி. கவச வண்டிகளை விடுதலைப் புலிகள் ராக்கட் லோஞ்சர் கொண்டு தாக்கி அழித்தனர். நாவாந்துறையில் இருந்து யாழ் கோட்டையை நோக்கி முன்னேற முயன்ற இந்தியப் படையினரின் முயற்சியை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். யாழ் கோட்டையிலிருந்து வெளியே வர முயன்ற இந்தியப் படையினரின் முயற்சியையும் விடுதலைப் புலிகள் முறியடித்தனர்.

20.10.87
இன்று கோண்டாவில் வைத்து இந்தியப் படையினரின் 3 ஏ.பி.சி. டாங்குகளை பசுக்கா (ராக்கட்) தாக்குதல் மூலம் அழித்தனர். அராலியில் நடந்த சண்டையில் இந்திய அமைதிப் படையில் ஒரு ஏ.பி.சி. கவச வண்டி ஒரு ஜீப் வண்டி, ஒரு கனன் ஆட்லரி உட்பட சகல ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றி யதுடன் இரண்டு இந்தியப் படையினரையும் விடுதலைப் புலிகள் கைது செய்தனர். கோப்பாயில் விடுதலைப் புலிகளின் ‘பசூக்கா’ ராக்கட் லோஞ்சர் தாக்குதலின்போது இந்திய அமைதிப் படையின் இரண்டு டாங்குகள் முற்றாக சேதமுற்றுள்ளன. அவர்களிடம் இருந்து இந்தியத் தயாரிப்புகளான  இரண்டு 50 காலிபர் துப்பாக்கிகளையும் 3000 காலிபர் ரவைகளையும் விடுதலைப்  புலிகள் கைப்பற்றினர்.

பலாலியில் இருந்து உரும்பிராய்க்குச் சென்ற இந்தியப் படையினர் செல்லும் வழியில் 10 அப்பாவித் தமிழ் மக்களைச் சுட்டுக் கொன்றனர். ஆனைக்கோட்டையில் இருந்து கல்லுண்டாய் வெளிக்குச் சென்று இந்திய ராணுவத்தினர் 20-க்கும் மேற்பட்ட பொது மக்களைச் சுட்டுக் கொன்றனர். மாலை 3 மணியளவில் கோட்டை முகாமுக்கு அடுத்துள்ள பண்ணைப் பகுதியில் சிறீலங்காவின் 3 பொம்பர் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்குதல் மேற்கொண்டன. இதில் பல பொது மக்கள் இறந்த துடன் மேலும் ஏராளமான மக்கள் காயமடைந் துள்ளனர்.

சிங்கள ராணுவத்தினர் நடத்தியதைவிட இந்திய அமைதிப் படையினர் நடத்திவரும் கொடூரமான செல் தாக்குதல்களினால் யாழ்நகரில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. மக்கள் பெரிதும் துன்பம் அடைகின்றனர். நல்லூர் கந்தசாமி கோயிலில் அடைக்கலம் புகுந்திருந்த அகதிகள்கூட பீதியினால் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே இடம் பெயரத் தொடங்கியுள்ளனர். இந்தியப் படை யினரால் தினசரி 500 செல்களுக்கு மேல் ஏவப்படுகின்றன. (சிங்கள இராணுவம் தாக்கிய காலத்தில் ஆகக் கூடியது 40-50 செல்கள் வரை தான் தினசரி பயன்படுத்தின) இதனால் மக்கள் பெரும் அளவில் காயமடைகின்றனர். ஏராளமான மக்கள் உணவு உறைவிடமின்றித் தவிக்கின்றனர்.

கேரத்தீவில் ஹெலிகாப்டர் சுட்டதில் 2 பொது மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் படுகாயமுற்றனர்.

21.10.87
இன்று காலை யாழ்கோட்டையில் இருந்து வெளியே வர முயன்ற இந்திய அமைதி காக்கும் படையினரை எதிர்த்து விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட இந்திய அமைதிப் படையினர் கொல்லப்பட்டனர்; அவர்களிடமிருந்து எல்.எம்.ஜி., எஸ்.எம்.ஜி. போன்ற ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

யாழ் கோட்டை ராணுவ முகாமிலிருந்து இந்தியப் படை யினர் நடத்திய செல் தாக்குதலில் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியினுள் செல் விழுந்து வெடித்ததில் அங்கு அகதிகளாக இருந்த 7 பேர் கொல்லப் பட்டனர். 40 பேர் காயமுற்றனர். கல்லூரிக்கு அருகில் இருந்த வீடுகளில் இருந்த 5 பொது மக்களும் இந்தச் செல் தாக்குதலில் பலியாகினர்.

இந்திய அமைதி காக்கும் படையினரின் செல் தாக்குதலில் இனுவில் அம்மன் கோவிலில் தஞ்சம் அடைந்திருந்த 10 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் காயமடைந்தனர்.

நகரின் 3 குண்டு வீச்சு விமானங்கள் குண்டுவீசித் தாக்கியதில் 100 க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

(தொடரும்)

Pin It