கீற்று இணையதளத்தின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா24.7.2010 மாலை 5 மணி அளவில் சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது. முதல் அமர்வாக இஸ்லாமியர்கள் மீதான சமூக அரசியல் ஒடுக்குமுறைகள் என்ற தலைப்பில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய தோழர்கள் தங்களின் நேரடி வாக்குமூலங்களை பதிவு செய்தனர். எந்த ஒரு குற்றச் செயலிலும் ஈடுபடாத அப்பாவி மக்களை முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஆண்டுக்கணக்கில் தமிழக காவல்துறை சிறையிலடைத்த கண்ணீர் கதைகளைக் கேட்டபோது, அவை இறுக்கமடைந்தது. கொழும்பிலிருந்து வந்திருந்த இஸ்லாமிய தோழர் ஒருவரும் தங்கள் நாட்டில் இஸ்லாமியர்களுக்கு நிகழ்ந்த பாதிப்புகளை விளக்கிப் பேசினார்.
 
இரண்டாம் அமர்வாக ‘கீற்று.காம் பயணமும் இலக்கும்’என்ற தலைப்பில் நடந்த நிகழ்வில் மாலதி மைத்ரி, பாரதி கிருஷ்ணகுமார், பாஸ்கர் சக்தி, யுகபாரதி, ஜெயபாஸ்கரன், விடுதலை இராசேந்திரன், சுப. வீரபாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். 30-க்கும் மேற்பட்ட சிற்றிதழ்களை இணையதளத்தில் ஏற்றி, உலகம் முழுதும் கொண்டு செல்லும் சிறப்பான பணியை - கீற்று இணையதளம் செய்து வருகிறது. ‘புரட்சிப்பெரியார் முழக்கம்’ ஏட்டை உலகம் முழுதும் வாழும் தமிர்கள் கீற்று இணையதளத்தின் வழியாக படித்து வருகிறார்கள். எந்த ஒரு கட்டணமும் வாங்காமல் சமூகச் சேவையாகவே தோழர்கள் ரமேஷ், பாஸ்கர், பிரபாகர், பிரியா ஆகிய நால்வரும், இந்தப் பணியை சமூக அக்கறையோடு செய்து வருகிறார்கள். இதற்காக ஒவ்வொரு நாளும் தங்கள், அலுவலகப் பணியையும் செய்து கொண்டு, குறைந்தது 6 மணி நேரம், அவர்கள் உழைத்து வருகிறார்கள். பெரியார் திராவிடர் கழகத்தின் மீது உண்மைக்கு மாறான அவதூறுகளைப் பரப்பி வரும் பேராசிரியர் அ. மார்க்ஸ் போன்றவர்களுக்கு உரிய மறுப்புகளை தெரிவிக்கும் கட்டுரைகளையும் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி வருவோருக்கு, உரிய மறுப்புகளையும், கட்டுரைகளாக‘கீற்று’ வெளியிட்டு வருகிறது.
 
அரசியல், பொருளாளதாரம், சமூகம் சார்ந்த, நூற்றுக்கணக்கான கட்டுரைகளை ‘கீற்று காம்’வெளியிட்டுள்ளது. தன்னலமற்ற எந்தப் பலனும் கருதாது செயல்படும் ‘கீற்று காம்’ குழுவினரின் தொண்டை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தனது உரையில் பதிவு செய்தார். கீற்று இணைய தளம், அவ்வப்போது, கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது. வி.பி.சிங் நினைவு நாள்; நளினி விடுதலை; சாதிவாரி கணக்கெடுப்பு; குமுதம் இதழில் ஓவியர் பாலா வரைந்த ஈழம் தொடர்பான கார்ட்டூன்களின் நூல் தொகுப்பு வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகளை ‘கீற்று’ நடத்தியது.
 
ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரி, கணினிப் பொறியாளர்கள் சென்னையில் இரண்டு நாள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திலும் ‘கீற்று’ இணையதளம் குழுவினர் பங்கேற்று இரண்டு நாட்களும் பல்வேறு தலைப்புகளில் கருத்துரைகள் வழங்கும் நிகழ்வுகளை ஒழுங்கு செய்தனர்.
 
பெரியாரிய இயக்கங்கள், தலித்திய அமைப்புகள், இடதுசாரி இயக்கங்கள், தமிழ்த் தேசிய அமைப்புகள், மற்றும் சிறுபான்மையினர் நடத்தும் இதழ்களை இணையதளத்தின் வழியாக பரப்பி வரும் கீற்று மதச்சார்ப்பின்மையையும் சாதி ஒழிப்பையும் தனது இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

கீற்று இணையதளத்தின் சீரிய பணிகள் தொடர ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வாழ்த்துகிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It