பிப்ரவரி 18, 2023 அன்று கோவை மாநகரக் கழகம் நடத்திய “1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாடும், தமிழ் நாட்டு அரசியலும் கருத்தரங்க”த்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. (சென்ற இதழ்த் தொடர்ச்சி)

செங்கல்பட்டு சுயமரியாதை மாநாடு எப்படி நடந்தது என்பதற்கு குடிஅரசில் பல செய்திகளைப் பதிவு செய்கிறார் பெரியார். அந்த மாநாட்டில் அன்றைய முதலமைச்சராக இருந்த டாக்டர். சுப்பராயன் கலந்து கொள்கிறார். பிடி.இராசன் கொடியேற்றி உரையாற்றுவார். எம்.கே.ரெட்டி வரவேற்புக் குழு தலைவர், டாக்டர் சுப்பராயன் மாநாட்டை திறந்து வைப்பார். WPA சௌந்தரபாண்டியன் மாநாட்டுத் தலைவர், எம்.கிருஷ்ணன் நாயர் பனகல் அரசரின் திருவுருவப் படத்தை திறந்து வைப்பார். சுரேந்தர்நாத் ஆரியா தொண்டர் படைத் தலைவராக இருப்பார்.

ambedkar periyar 301அதைவிட சிறப்பாக மாநாட்டிற்கு ஸ்பெஷல் ட்ரெயின் விட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார். அதற்குப் பிறகு வருத்தப்பட்டு எழுதுகிறார் இரயில்வே துறையினர் நம்மை ஏமாற்றி விட்டனர். நாம் மாநாட்டு பந்தலுக்கு அருகில் புதிதாக ஒரு இரயில் நிலையத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். தொடக்கத்தில் ஒப்புக் கொண்டவர்கள் மாநாட்டிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு 3209 ரூபாய் கட்டினால் தான் நாங்கள் அமைக்க முடியும் என்று சொல்கிறார்கள். இதை ஏற்கனவே சொல்லியிருந்தால் பரவாயில்லை, சரி நடப்பது நடக்கட்டும். மொத்தமாக 12 பெட்டிகள் கொண்ட இரயில்கள் புறப்படுகிறது என்றெல்லாம் விளம்பரம் வருகிறது. மாநாட்டிற்கு சிறப்புப் பேருந்து விட்டது எல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த மாநாட்டிற்கு சிறப்பு தொடர் வண்டிகள் விடப்படுகின்றன.

முக்கியமாக இரண்டு, மூன்று தீர்மானங்கள் தான். பெரியார் இதில் அரசியல் விவகாரங்கள் பேசப்படாது என்று சொல்லி விட்டேன் என்கிறார். இரண்டு அரசியல் விஷயங்களை பேசுகிறார். அப்போது சைமன் கமிஷன் என்ற ஒரு கமிஷன் வருகிறது. எதற்காக வருகிற தென்றால் இதுவரை அரசாங்கத்தின் திட்டங்கள் போய்ச் சேராத மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்கு என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்வதற்காக வருகிறார்கள். இதுவரை இப்படி இந்தியாவில் எந்த அரசியல் கட்சிகளாவது செய்திருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். இப்போது தான் திராவிட முன்னேற்ற கழக அரசு திட்டங்கள் நிறைவேறுகிறதா என்று ஆய்வு செய்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். சைமன் ஆணையத்துக்குப் பிறகு இந்த ஆட்சியில் தான் கள ஆய்வு செயல்படுத்தப்படுகிறது.

தேர்தல் ஒரு புறம் நடக்கட்டும். திட்டங்கள் நிறைவேறியதா என்று முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 1928ஆம் ஆண்டு அந்த சைமன் குழு வருகிறது. பார்ப்பனர்கள் அந்த குழுவை வரவேற்கக் கூடாது என்கிறார்கள். என்ன காரண மென்றால் அந்த குழுவில் ஒரு இந்தியர் கூட இல்லை, எல்லாம் ஆங்கிலேயர்களாகவே வருகிறார்கள். அதனால் வரவேற்கக் கூடாது என்கிறார்கள் பெரியார் எழுதுகிறார் அதற்காகவே அந்த குழுவை வரவேற்பேன் என்று. ஏனென் றால் இந்தியன் என்றால் பார்ப்பானைத் தான் போட்டு இருப்பார்கள், அவன் பார்ப்பன ரல்லாதாருக்கு எதிராகத் தான் இருப்பான். ஆங்கிலேயனாவது நடுநிலையாக பார்ப்பான் அதற்காகவே வரவேற்கிறேன் என்றார். இந்தியாவில் வரவேற்றவர்கள் இரண்டே பேர் தான் தென்னிந்தியாவில் பெரியாரும், வட இந்தியாவில் அம்பேத்கரும். நீதிக்கட்சி வரவேற்க மறுக்கிறது. பெரியார் கடுமையாக எதிர்த்து எழுதினார். அதற்குப் பிறகு வரவேற்றனர். அந்த ஆலோசனையின் அடிப்படையில்தான் தீண்டத்தகாத மக்களுக்கு இரட்டை வாக்குரிமை, தனித் தொகுதி என்று வழங்கப்பட்டது.

இரட்டை வாக்குரிமை, தனித் தொகுதி என்ற முறையை சைமன் குழுவினர் பரிந்துரை செய்தனர். உடனே காந்தியார் இரட்டை வாக்குரிமை இந்துக்களை பிரிந்துவிடும் என்று சொன்னார். எல்லா இந்துக்களும் கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பது போலவும், இது வந்துதான் பிரித்துவிடுகிறது போலவும் காந்தியார் சொல்லி நாடகம் நடத்தி அதை இல்லாமல் செய்துவிட்டார். மாநாட்டில் சைமன் குழுவை வரவேற்க வேண்டும் மக்கள் ஆங்காங்கு வரவேற்பு கொடுத்து தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்தது நேரு கமிட்டி. காங்கிரஸ் காரர்கள் விடுதலை பெறுவதற்கு முன்னரே கமிட்டி ஒன்றை உருவாக்கி அரசியல் சட்டத்தை எழுத ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு நேரு கமிட்டி என்று பெயர், அதன் தலைவராக மோதிலால் நேரு இருந்தார். விடுதலைக்குப் பின்னால் அரசியலமைப்பு சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்ற தீர்மானம் காங்கிரஸ் நடத்திய 1929, 1930, 1931 ஆகிய ஆண்டுகளில் நடைப்பெற்ற மாநாடுகளில் வைக்கப்படுகிறது. நேரு கமிட்டி அறிக்கையானது நமது இயக்கத்தின் அடிப்படையான கொள்கைக்கு விரோதமாய் இருப்பதால் அதைக் கண்டிப்பதுடன் இந்தியாவில் வருங்கால அரசியல் திட்ட அமைப்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது என்று மற்றொரு தீர்மானம்.

முக்கியமான இன்னொரு தீர்மானம் என்னவென்றால் மக்கள் தங்கள் பெயர்களோடு போடும் ஜாதி பட்டங்களை விட்டுவிட வேண்டும். இதில் என்ன சிறப்பு என்றால் 1929ஆம் ஆண்டு மாநாடு நடை பெறுகிறது. பெரியார் 1927ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி குடிஅரசு இதழில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்பதை மாற்றி ஈ.வெ.ராமசாமி என்று போடத் தொடங்கு கிறார். அந்த மாநாட்டின் தலைவராக இருந்த WPA சௌந்தர பாண்டியன் நாடார். மாநாடு முடிந்த பிறகு குடிஅரசு இதழுக்கு கடிதம் எழுதுகிறார். நான் என் பெயருக்கு பின்னால் இருக்கிற நாடார் என்பதை கைவிடுகிறேன் என்னை சௌந்தர பாண்டியன் என்று எழுதுகிறார்.

பின்னர் சிவகங்கை ராமச்சந்திர சேர்வை அவர் சொல்கிறார், இனிமேல் என்னை சிவகங்கை ராமச்சந்திரன் என்று அழைத்தால் போதும். சேர்வை என்ற பின்னொட்டை நீக்கிவிட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அப்படி வரிசையாக தங்களது ஜாதிப் பெயரை கைவிட்டோர் பெயர்களைப் பக்கம் பக்கமாக பட்டியலிட்டுக் கொண்டே வருகிறது குடிஅரசு இதழ். அதுதான் தொடக்கம் ஆனால் இப்போது தமிழ் நாட்டில் ஜாதி சங்க தலைவர்களே ஜாதிப் பெயர் இல்லாமல் தான் தங்களுடைய பெயரைக் குறிப்பிடுகின்றனர். ஆனால் அப்போது அது பெரிய முயற்சி.

கடவுள் என்ற பெயரால் கோயில்களிலாவது அல்லது வேறு இடங்களிலாவது ஒரு பைசாவாவது ஒரு பைசா பெரும்படியான சாமானமாவது செலவழிக்கக் கூடாது என்றும் வணங்குகிறவனுக்கும் வணங்கப்படுபவனுக்கும் இடையே தரகர்கள் இருக்கக் கூடாது என்றும் இம் மாநாடு கருகிறது. இனிமேல் ஒரு கோயிலும் கட்டக்கூடாது என்றும் இப்போது இருக்கிற கோயில் மடம் வேத பாடசாலை முதலியவைகளுக்காக விடப் பட்டிருக்கிற சொத்துக்களை கைத்தொழில் வியாபாரம் ஆராய்ச்சி கல்வி முதலியவை களுக்காகவும் கைத்தொழில்களாகவும் செலவு செய்ய வேண்டுமாய் பொது ஜனங்களுக்கு இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது என்பது மற்றொரு தீர்மானம்.

கோயில்களில் உற்சவங்கள் முதலியவை கொண்டாடுவதை நிறுத்திக் கொண்டு அவற்றிற்கு பதிலாக பொதுஜன அறிவு வளர்ச்சி. ஆரோக்கிய வளர்ச்சி. பொருளாதார வளர்ச்சி முதலியவை சம்பந்தமான பொருட்காட்சிகளை நடத்தி மக்களுக்கு அறிவும் செல்வமும் வளர ஏற்படச் செய்ய வேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீண்டாதார் எனப்படுவோருக்கு சர்க்காரில் காலியாகும் உத்தியோகங்களில் முதல் உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும். மற்ற வகுப்பு சிறுவர் சிறுமியர் அந்தஸ்தை பெரும்வரைக்கும் தீண்டாதார் எனப்படும் சிறுமிகளுக்கு பள்ளிக் கூடங்களில் உணவு உடை உண்டி ஆகியவை இலவசமாய் வழங்கப்பட வேண்டும் என்று இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.

பெண்களுக்கு ஆண்களைப் போலவே சொத்துரிமை. பள்ளிக்கூட உபாத்தியாயர்கள் வேலைகளில் பெண்களே அதிகமாக நியமிக்கப்படுவதற்கு தக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும். ஆரம்பக் கல்வியை கற்றுக் கொடுக்கும் உபாத்தியாயர் வேலைகளில் பெண்களையே நியமிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

(தொடரும்)

- கொளத்தூர் மணி

Pin It