அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் நடந்த நாள் 1957, நவம்பர் 26. அரசியல் சட்டத்தை எரித்து, சிறைச் சென்ற மூவாயிரம் தோழர்களில் நாகை எஸ்.எஸ்.பாட்சாவும் ஒருவர். அப்போது நாகை எஸ்.எஸ். பாட்சாவுக்கு வயது 27. அரசியல் சட்டத்தின்  சாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை எரித்ததற்காக அவருக்கு 9 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
 
பெரியார் திராவிடர் கழகம் 2007 ஆம் ஆண்டு மே 19 ஆம் நாள் தஞ்சையில், சாதி ஒழிப்பு மாநாட்டை நடத்தி, அரசியல் சட்ட எரிப்புப் போராளிகளுக்கு விருது வழங்கி, கவுரவித்தது. அந்த நிகழ்வில் பங்கேற்று தோழர் எஸ்.எஸ். பாட்சா ஆற்றிய உரையை அவரது நினைவாக, மீண்டும் வெளியிடுகிறோம்:
 
சட்ட எரிப்புப் போராட்டம் என்பது சாதி ஒழிப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். வயது வந்த அனைவருக்கும் ஓட்டுரிமை தரப்பட்டு, அவர்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு நாடாளுமன்றம், நமக்கு அரசியல் சட்டத்தை உருவாக்கவில்லை. படித்தவர்கள் - பணக்காரர்கள் - பதவிக்காரர்கள் மட்டுமே வாக்களிக்கக்கூடிய பிரிட்டிஷாரின் நிர்வாகக் கட்டுப் பாட்டுக்குள் இருந்த அரசியல் நிர்ணய சபைதான் அரசியல் சட்டத்தை உருவாக்கியது. அதன் தலைவராக டாக்டர் அம்பேத்கர் இருந்தார். மற்றொரு உறுப்பினர் ஒரு முஸ்லீம். மற்ற உறுப்பினர்கள் எல்லோரும் பார்ப்பனர்கள். எனவே, இந்த அரசியல் சட்டத்தை அப்போதே பெரியார் மறுத்தார். இதனால் ஏற்பட்ட விளைவுகள் என்று பார்க்கும்போது - அரசியல் சட்டத்தின் ஜீவாதார உரிமை என்ற அடிப்படை உரிமைகளுக்குள் மதம், சாதி, கலாச்சாரம், பணம் ஆகியவற்றுக்கான உரிமை கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த அடிப்படை உரிமைகளுக்கு எதிராக, எந்த சட்டமன்றமும், சட்டம் இயற்ற முடியாது. அப்படி சட்டம் இயற்றப்படுமானால், அது பற்றி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தன்னிச்சையாக முடிவு செய்யும் உரிமை, இந்த நீதி மன்றங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. உதாரணத் துக்கு சொல்ல வேண்டுமானால்,

கலைஞர் அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றியதை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அது நிலுவையில் உள்ளது. இதை முடிவுசெய்யும் உரிமை உச்சநீதிமன்றத்துக்கே இருக்கிறது. மதத்தை யும், சாதியையும், அது தொடர்பான சட்டங் களையும் அரசியல் சட்டம் உறுதி செய்வதால், அந்தப் பிரிவுகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெரியார் அரசியல் சட்டத்தை எரிக்கச் சொன்னார்.
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றங் களை நீதிமன்றங்கள் கட்டுப்படுத்துவதை எதிர்த்து பெரியார் ‘சுப்ரீம் கோர்ட் கண்டன நாள்’ கூட்டங்கள் நடத்தி நாட்டை ஆள்வது சட்ட மன்றங்களா, நீதிமன்றங்களா என்று கேட்டார். அவ்வளவு துணிவோடு பேசக்கூடிய தலைவர் அவர் ஒருவர்தான். நமது பிரதமர் மன்மோகன் சிங், உச்சநீதி மன்றம் எல்லை தாண்டிடக் கூடாது என்றுதான் கூறினார். உடனே அதே மேடையில் இருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பால கிருட்டிணன் நீதிமன்றம், சட்டப்படி தான் செயல்படுகிறது என்று பிரதமர் முகத்தில் அடிப்பது போல் பதில் கூறினார். ஆக, நீதிமன்றங்கள்தான் எதையும் நிர்ணயிக்கிறது என்றால், பார்ப்பனர்களிடம் தான் அதிகாரம் இருக்கிறது என்பதுதான் அதன் அர்த்தம். பெரியார் இப்படிக் கூறினார் என்று தான் என்னைப் போன்றவர்களால் பேச முடியுமே தவிர, பெரியார் பேசுவது போல் என்னால் பேச முடியாது. அந்தத் துணிவு எனக்குக் கிடையாது.

சுப்ரீம் கோர்ட் கண்டன நாள் கூட்டம் நடத்திய பெரியார், “3 கோடி வாக்காளர்கள் ஓட்டளித்து, தங்களுக்கு வேண்டிய அரசாங்கத்தை தேர்வு செய்கிறார்கள். அந்த அரசாங்கம் செய்யும் சட்டத்தைத் தடுக்க உனக்கு ஏது உரிமை?” என்று கேட்டார் பெரியார். இந்த எல்லை வரை நாமும் பேசலாம். ஆனால் பெரியார் அடுத்த எல்லைக்குப் போய் - “யார் இந்த நீதிபதிகள்? பிச்சை எடுத்துப் படித்தவன், பந்தக்காலைப் பிடித்து மேலே வந்தவன்; இவர்கள்தான் இந்த நாட்டை ஆள்வதா? இதற்கு ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும் என்று கேட்டார். இப்படிக் கேட்கும் துணிவு கொண்ட தலைவர் வேறு யாராவது உண்டா? அவர்தான் பெரி யார்; அவருக்கு தொண்டராக இருந்தோம் என்பது தான் எங்களுக்கு உள்ள பெருமை. (கைதட்டல்)
 
சட்டத்தைக் கொளுத்தி, சிறைக்கு - இளையோர், முதியோர் வரை சென்றார்கள். மன்னிப்புக் கேட் கிறாயா, உடனே விடுதலை என்று சொல்லப்பட்டது. மன்னிப்புக் கேட்டால் சிறைத் தண்டனையை முழுமையாக அனுபவிக்கத் தேவையில்லை. விடுதலை கிடைக்கும் என்றார்கள். ஆனால், ஒருவர் கூட, மன்னிப்புக் கேட்டு வெளியே வர வில்லை. அது தான் இந்தப் போராட்டத்தின் வெற்றி. (கைதட்டல்)
 
சாதியை ஒழிக்க போராடினோம்; ஆனால் சாதி ஒழியவில்லை. ஆனால் அதற்கான போராட்டத்தில் பங்கு பெற்றோம் என்பதுதான் எங்களுக்குள்ள மகிழ்ச்சி. 3000 ஆண்டுகளாக நிலை பெற்றுள்ள சாதியை 50 ஆண்டில் ஒழித்துவிட முடியாது. அண்ணா, திராவிடர் கழகப் பொதுச்செயலாளராக இருந்தபோது, “உழைக்க வாருங்கள்! பிழைக்க என்ன வழி என்று கேட்காதீர்கள்! போராட வாருங்கள்! அது எப்போது முடியும் என்று கேட்காதீர்கள்!” என்றார். இதே கருத்தை பெரியார், “உன் வீட்டுச் சோற்றைத் தின்றுவிட்டு என் வீட்டு வேலைக்கு வா” என்று அவரது மொழியில் சொன்னார். “உன்னுடைய குடும்ப சூழ்நிலை சரியாக இருந்தால் வா! இல்லாவிட்டால் வரவேண்டாம். போராட்டத்துக்கு வராதவர்களை கட்சியில் இரண்டாம் பிரஜையாக நான் நினைப்பது கிடையாது” என்றார்.
 
இன்னொரு கேள்வி கேட்கப்படுகிறது. நான் பிறப்பால் ஒரு முஸ்லீம். “உனக்கு எதற்கு சாதி எதிர்ப்புப் போராட்டம்?” என்று கேட்கப்படுகிறது. பெரியார் ராமன் பட எரிப்பு, விநாயகன் சிலை உடைப்புப் போராட்டங்களை நடத்தியபோது, முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் வர வேண்டாம் என்றார். ஆனால் சாதி ஒழிப்புப் போராட்டத்தில் அப்படிக் கூறவில்லை. திருச்சியிலேயே இருந்த பிரான்சிஸ் ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும் போராட்டத்தில் கலந்து கொண்டார். எந்த மதத்தவராக இருந்தாலும், அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் அனைவரையும் கட்டுப்படுத்துகிறது. எனவே இந்த நாட்டின் குடிமகன் என்ற உரிமையில் சாதியைப் பாதுகாப்பதை அடிப்படை உரிமையாக்கும் அரசியல் சட்டப் பிரிவை எரிக்கும் போராட்டத்தில் பங்கேற்றேன்.
 
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தி.மு.க. அரசு உதவித் தொகை வழங்கக் கூடாதா என்று கேட்கப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பும் இருக்கிறது. அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பேன் என்று உறுதி ஏற்று, ஆட்சிக்கு வருகிறவர்களால், அரசியல் சட்டத்தை எரித்தவர்களுக்கு எப்படி, அரசு உதவித் தொகை வழங்க முடியும்? நாம் எப்படி அதை எதிர்பார்க்க முடியும்? ஈ.வெ.கி. சம்பத் அழகாகச் சொன்னார். பெரியாருடைய பேச்சு மூன்று மணி நேரம் நிகழுகிறது என்றால், “தாய்மார்களே, பெரியோர்களே, தோழர்களே” என்ற முதல் வாக்கியமும், “நான் சொல்வது உங்களுக்கு சரியானது என்று தோன்றினால், ஏற்றுக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நிராகரித்து விடுங்கள்” என்ற இறுதி வாக்கியமும் தான், சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்கும். மற்ற மூன்று மணி நேர உரை முழுதும், அரசியல் சட்டத்துக்கு எதிராகவே இருக்கும் (பலத்த கைதட்டல்) என்று சம்பத் குறிப்பிட்டார். நாம், விலைவாசி உயர்வை எதிர்த்து புளி, மிளகாய் விலை ஏற்றத்தை எதிர்த்து சிறைக்குப் போகவில்லை. நாட்டின் அமைப்பையே தலைகீழாக மாற்றுவதற்காக போராட்டம் நடத்தி சிறை சென்றவர்கள். எனவே நாம் அரசு மான்யத்தை, உதவியை, போனசை எதிர்பார்க்கக் கூடாது. அந்த மரியாதையை எதிர்பார்த்து நாம் போராடவில்லை.
 
நானும், என்னுடைய தோழர்களும், உடல் தளர்ந்து, பிணி, மூப்பு என்று வந்து விட்டோம். நமக்குப் பிறகு, இந்தக் கொள்கைகளைத் திருப்பிச் சொல்ல யார் இருக்கப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். உங்களைப் பார்க்கும்போது நம்பிக்கை ஏற்படுகிறது. நான் உங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், பெரியார் கருத்தை, குழப்பாமல் நேரடியாகச் சொல்லுங்கள்.
 
நாம் போராட்டம் நடத்தி 50 ஆண்டுகளுக்குப் பிறகும், பெரியார் திராவிடர் கழகம், நம்மை நினைவு கூர்ந்து, நமக்கு மரியாதை செய்ய இந்த மாநாட்டை நடத்துகிறதே; இந்த மரியாதையைவிட வேறு மரியாதை நமக்குத் தேவை இல்லை. (கைதட்டல்)