‘மிஸியே’, ‘மதாம்’, பீரோ, ஒப்பித்தால், ‘சொல்தா’ ‘ருய் ரொமென் ரொலான்’, ‘ஹோட்டெல் தெ வீல்’, அல்லியான்ஸ் பிரான்ஸேஸ், லிஸ்ஸே பிரான்ஸே இதுபோன்ற சொற்களும், காவல் துறையின் ‘சிவப்பு கெப்பி, ‘ஆயி மண்டபம்’ போன்ற குறியீடுகளும், அன்னை எனப்படும் அரவிந்தரின் ஆன்மீகத் தோழியான மீரா அல்போன்ஸாவும் என்றென்றும் புதுச்சேரியை பிரான்சு நாட்டோடு இணைத்து நினைவூட்டுபவர்கள். காரணம் ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் தலைமைக் கேந்திரமாக புதுச்சேரி இருந்தது. ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழிருந்த இந்தியக் குடிகளுக்குப் பொருளாதார காரணங்களை முன்னிட்டு இங்கிலாந்தும் அமெரிக்காவும் சரணாலயமாக உருவெடுக்க என்ன காரணமோ அக்காரணம் புதுச்சேரி யூனியன் பிரதேச குடிமக்கள் புலம்பெயரவும், பிரான்சு தேசத்தைத் தங்கள் சரணாலயமாகத் தேர்வு செய்தமைக்கும் பொருந்தும்.
தாய்மொழியாலும், அம்மொழிவழி அறியவந்த மரபினாலும் ஒருவனைத் தமிழன் அல்லது தமிழச்சியென அடையாளப்படுத்தினாலும் அவன் தன்னையொத்த மனிதர்கூட்டத்தில் ஒருவனாக அல்லது ஒருத்தியாக நிறுத்துகிறபோது, நான் தமிழன் ஆனால் இந்தியத் தமிழன், நான் தமிழன் ஆனால் இலங்கைத் தமிழன் என்று தன்னை மேலும் பகுப்பாய்வு செய்து அடையாளப்படுத்திக்கொள்வதில் உள்ள ஆர்வத்தைப் பிறமக்களைப்போலவே தமிழர்களிடமும் பார்க்கிறோம். பிறந்து வளர்ந்த தேசத்தைப் பொறுத்து ஒரு சிறப்பு அடையாளத்துடன் வலம் வரும் மனிதர்கள் எல்லா இனத்திலும் உண்டு ; தமிழினமும் அதற்கு விதிவிலக்கல்ல. விளைவாக இந்தியத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள்,
சிங்கப்பூர் தமிழர்கள் மலேசியத் தமிழர்கள் என்கிற பேதம் அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலும் விடாமல் துரத்துகிறது. பிரான்சு நாடும் அதற்குத் தப்பவில்லை. சரி இந்தியத் தமிழர்கள் அல்லது இலங்கைத் தமிழர்களுக்குள் பேதமற்று இருப்பார்களா ? எனக்கேட்டால், இல்லையென்றே தலை குனிய வேண்டியுள்ளது. இந்தியத் தமிழரெனில் புதுச்சேரியா, காரைக்காலா ? என்றோ : இலங்கைத் தமிழரெனில் ஊரில் நீங்க எங்கே ? என்கிற கேள்வியைச் சம்பந்தப்பட்ட மனிதர்கள் எதிர்கொள்ள வேண்டும், இக்கேள்விக்குள் பலவிஷயங்கள் அடங்கியிருக்கின்றன.
திரைமறைவு பேதங்களை மறந்துவிட்டு இன்றைய பிரான்சு தமிழர்கள் என்பவர்கள் யார் என்கிற கேள்விக்கு வருவோம். பிரெஞ்சு மண்ணோடு, மொழியோடு, கலாச்சாரத்தோடு ஏதோவொரு வகையில் தொடர்புடைய தமிழர்களெல்லாம் பிரெஞ் சுத் தமிழர்களெனில், மொரீஷியஸ் தமிழர்களும், பிரான்சு நாட்டின் நிர்வாகத்தின் கீழிருக்கும் கடல் கடந்த பகுதிகளான ரெயூனியன், குவாதுலுப், மர்த்தினிக், பிரெஞ்சு கயானா தமிழர்களுங்கூட பிரெஞ்சுத் தமிழர்களாகிறார்கள். ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் தமிழர்கள் பிரான்சில் இன்றைக்கு வசிக்கிறார்கள் எனில் அவர்கள் இந்தியா (புதுச்சேரி), இலங்கை, மொரீஷியஸ் நாடுகளிலிலிருந்து அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களை முன்னிட்டு இங்கு குடியேறியவர்கள். இம்மூன்று பிரிவினரும் எண்ணிக்கை அளவில் ஏறக்குறைய சமமாகவே இருக்கிறார்கள்.
காலனிய ஆதிக்கத்தின் விளைவாக புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்தியத் தமிழர்களும், மொரீஷியஸ் தமிழர்களும் பிரான்சுக்குக் குடியேறியவர்கள். இந்து மாக்கடலைச் சேர்ந்த பிரெஞ்சு தீவுகளில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் 17ஆம் நூற்றாண்டிலேயே கப்பலில் கொண்டுவரப்பட்டு குடி அமர்த்தப்பட்டனர். தொடக்கத்தில் அடிமைகளாகவும், பின்னர் தோட்டத் தொழிலாளர்களாகவும் உதாரணமாக பெனுவா துய்மா என்பவர் கவர்னராக இருந்த காலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காப்பித்தோட்டத்தில் பணிபுரியவென்று 300 புதுச்சேரித் தமிழர்கள் அழைத்துவரப்பட்டு ரெயூனியன் என்ற தீவில் குடியமர்த்தப்பட்டார்கள். நாளடைவில் அவர்கள் மர்த்த்தினிக், குவாதுலுப், பிரெஞ்சு கயானா தீவுகளென்று பரவி வசித்தனர். பின்னர் அவர்களில் பலர் ஐரோப்பிய எல்லைக்குள்ளிருந்த பிரெஞ்சு பிரதேசத்துக்குக் குடிவந்தனர். இவ்வரலாறு மொரீஷியஸுக்கும் ஓரளவு பொருந்தும். 1940களில் இரண்டாம் உலகப்போரின் போது பிரான்சு பிற காலனிகளிலிருந்து எப்படி யுத்தத்திற்கு ஆள் சேர்த்ததோ அவ்வாறே தமது வசமிருந்த இந்தியக் காலனிப்பகுதிகளிலிருந்தும் வீரர்களைக் கொண்டுவந்தது. புதுச்சேரி அடித்தட்டு மக்கள் பலரும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பிரெஞ்சு இராணுவத்தில் சேர்ந்தனர். பிரான்சு நாட்டில் இன்றுள்ள புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்தியத் தமிழர்களில் பெரும்பாலோர் பிரெஞ்சு இராணுவத்தில் பணிபுரிந்தவர்களாகவோ அல்லது அவர்கள் சந்ததியினரின் இரத்த உறவுகொண்டவர்களாகவோ இருப்பார்கள்.
இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றதை அடுத்து, புதுச்சேரி மாநிலம் 1954, நவம்பர் 1 முதல் விடுதலை பெற்று இந்தியாவுடன்’இணைப்புத் தீர்மான ஒப்பந்தத்தின்' (De-facto settlement) அடிப்படையில் இணைந்தது. இதனால் எழுந்த சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள 1956இல் இந்தியாவுக்கும் பிரான்சுக்குமிடையில் மீண்டுமொரு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. தொடர்ந்து 1962, ஆகஸ்ட் 16இல் ‘நடைமுறை அதிகார மாற்ற ஒப்பந்தத்தில்’ (Dejure transfer) இந்தியப் பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்டனர். இவ்வொப்பந்தம் புதுச்சேரி மக்களுக்கு இந்தியா அல்லது பிரான்சுநாட்டுக் குடியுரிமைகளுள் இரண்டிலொன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பினை நல்கி, அவ்வாய்ப்பினை மேலும் ஆறு மாத காலம் நீட்டிக்கவும் செய்தார்கள். அதன் பலனாகக் கணிசமான அளவில் புதுச்சேரி, காரைக்கால்வாசிகள் மீண்டும் பிரான்சுக்கு வரநேர்ந்தது. இது புதுச்சேரித் தமிழர்கள் பிரான்சுக்கு வரநேர்ந்த வரலாறு. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை சென்ற நூற்றாண்டில் எண்பதுகளில் நடந்த இனக் கலவரத்திற்குப் பிறகு பிரான்சுக்குக் குடிவந்தவர்களென்பது அண்மைக்காலங்களில் திரும்பத் திரும்ப நாம் வாசித்தறிந்த வரலாறு.
பிரெஞ்சுத் தமிழர்களின் இன்றையை சமூகக் கூறுகள், பண்பாடுகளென்ன? என்பது சிக்கலானதொரு கேள்வி. நாமிருக்கும் உலகம் பொருள்முதல் வாதத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டது. மனித இனமும் விற்பனையை மட்டுமே அல்லது விலைபோவதை மட்டுமே கருத்திற்கொண்டு இயங்கும் சரக்காகிப் போனதொரு நிலையில் பண்பு, தொன்மம், அறம் இவைகளெல்லாம்கூட -விற்பனையில் கிடைக்கும் இலாபத்தின் அடிப்படையில் அவ்வப்போது உருமாற்றம் பெற்று ஆயுளை நகர்த்தும் நிர்ப்பந்தத்தில் உள்ளன. பிரெஞ்சுத் தமிழர்களின் சமூகக்கூறுகள் தமிழ்நாட்டைப் போலவே பல கூட்டு வடிவங்களை முன்னிறுத்துகின்றன. பொதுவாகப் பிரெஞ்சுத் தமிழர்கள், பண்பாட்டு அடையாளமென்று முன்னிறுத்துவது அவரவர் ‘இருத்தலை (Existence) உயர்த்திப் பிடிக்கும் குணமேயன்றி தமிழரின் அரிதானப் பெருமையை உண்மையில் மீளப்பெறும் முயற்சிகளில்லை.
பிரெஞ்சுத் தமிழர்களை ஒரு வசதிக்காகவும், மானுடவியல் தெளிவுறுத்தும் உண்மைகள் அடிப்படையிலும் மூன்றுவிதமாக அடையாளப்படுத்தலாம். தமிழை மறந்தவர்கள், மறந்து கொண்டிருப்பவர்கள், மறக்க இருப்பவர்கள். தமிழை மறந்தவர்களென்று பிரெஞ்சு மண்ணுக்கு பதினேழு, பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வந்துசேர்ந்த தமிழர்களின் இன்றைய சந்ததியினரைச் சொல்லலாம். இவர்கள் மேலே குறிப்பிட்ட ரெயூனியன், குவாதுலுப், பிரெஞ்சு கயானாவைச் சேர்ந்தவர்கள், அடுத்து புதுச்சேரி காரைக்கால் மக்களின் சந்ததியினராக ஹனோய், சைகோனிலிருந்து இவர்களுடன் இணைந்து கொண்டவர்கள், மூன்றாவதாக மொரீஷியஸிலிருந்து குடிபெயர்ந்து பிரான்சு நாட்டில் வசிப்பவர்கள். மொரீஷியஸ் தமிழர்களுள் ஒரு பிரிவினர் மட்டுமே தங்களைத் ‘தமுல்' (Tamoul) அதாவது தமிழர்கள் எனக் கூறிக் கொள்வார்கள். கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் அவர்கள் தமிழர்களாக இருந்தாலுங்கூட இவர்களுக்கு ‘இல்லை’. காரணம் இவர்கள் தீ மிதிக்கிறார்கள், காவடி எடுக்கிறார்கள், கோவிந்தனுக்குப் பூசை வைக்கிறார்கள், மாரியம்மனுக்கு கஞ்சி ஊற்றுகிறார்கள். திருவாசகத்தையும், ஒன்றிரண்டு திருப்புகழையும் பிரெஞ்சில் அப்படியே எழுதிவைத்துக்கொண்டு கதிரசனும் (கதிரேசனும்) பொக்கிலியும்(பொற்கலையும்) வாசிப்பவர்கள். ஆக இவர்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவது தமிழ்த்தாயோ தமிழன்னையோ அல்ல முருகனும், மாரியம்மனும். இதுபோன்ற நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் இவர்கள் முழுக்க முழுக்க மேற்கத்திய வாழ்க்கைநெறியைப் பின்பற்றுவர்கள். பிரெஞ்சுத் தமிழர்களில் இரண்டாவது வகையினருக்கு: இருபதாம் நூற்றாண்டில் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலிருந்து குடியேறியவர்களையும், திருமணம் மற்றும் வேறு காரணங்களை முன்னிட்டு (இந்த வேறுகாரணங்களில் அறுபது வயது பெண்மணியைப் பிரெஞ்சு குடியுரிமைக்காக மணப்பதும் அடக்கம்) பிரான்சுக்குப் புலம்பெயர்கிறவர்களையும் உதாரணமாகக் கொள்ளலாம்.
மொரீஷியர்கள் தங்களை ‘தமுல்' என்று சொல்லிக் கொள்ளத் தயங்குவதில்லை. தமிழ்ச் சங்கங்கள் வைத்து பொங்கல், தீபாவளி, பாரதி, கம்பன், அண்ணா என்று கொண்டாடினாலும் புதுச்சேரிமக்கள் அண்மைக் காலம்வரை தங்களைத் தமிழரென வெளிப்படையாக அறிவித்துக் கொள்வது குறைவு அல்லது அதனைத் தவிர்க்க நினப்பவர்கள். பிரான்சு நாட்டில் குடியிருக்கும் ஒரு புதுச்சேரிவாசியை நீங்கள் யாரென்று கேட்டீர்களெனில் அவர் சட்டென்று சொல்வது, ‘Je suis Pondicherien' (புதுச்சேரியைச் சேர்ந்தவன்). பிரெஞ்சு வரலாறும் அவர்களை புதுச்சேரியைச் சேர்ந்த பிரெஞ்சுக்காரர்களென்றே (Franco-Pondicherians) கருதிவந்திருக்கிறதே தவிர ‘பிரெஞ்சுத் தமிழர்கள்’ என்ற சொல்லாட்சியின் கீழல்ல. நாற்பதுகள், ஐம்பதுகள் அறுபதுகளில் பிரான்சுக்கு வந்தவர்கள் பெரும்பாலும் பிரெஞ்சு இராணுவத்திற்குச் சேவகம் செய்யவென்று வந்தவர்கள், அவர்கள் தமிழை மறக்காமலிருக்க நீங்கள் நினைப்பதுபோல கம்பனோ திருவள்ளுவனோ காரணமல்ல சிவாஜிகணேசனும் எம்ஜிஆரும். இக்காலங்களில் நன்கு படித்த இரண்டிலிருந்து ஐந்து சதவீத புதுச்சேரி தமிழர்களும் பிரான்சுக்கு வந்திருக்கிறார்கள், அவர்கள் பல்கலைகழகங்களிலோ உயர் பணிகளிலோ இருப்பவர்கள். தமிழால் எனக்கென்ன லாபம்? என்று வலம் வருபவர்கள். எண்பதுகளில் வந்த புதுச்சேரிக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் தமிழ்ச் சங்கங்களை நிறுவி வருடத்தில் ஒன்றிரண்டு நாள்கள் பட்டிமன்றம், கவிதையென்று அமர்க்களப்படுத்துகிறார்கள். இப்போக்கிற்கு இதேகாலங்களில் பிரான்சுக்கு வர நேர்ந்த இலங்கைத் தமிழர்கள் காரணமாக இருக்கலாம். தமிழ், தமிழ் மக்கள் என்ற சொல்லைப் பிரெஞ்சுக்காரர்கள் அறியப்படநேர்ந்ததே எண்பதுகளில் இலங்கைத் தமிழர்களின் வருகைக்குப் பின்பென்றுதான் சொல்ல வேண்டும், காரணம் இலங்கை சகோதரர்கள் தமிழர்களென்ற குலக்குறியுடன் பிரான்சுக்கு வந்தவர்கள் அகதித் தகுதி பெறுவதில் ஆரம்பித்து, பண்பாட்டிலும் பிறவற்றிலும் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய நெருக்கடி அவர்களுக்கு இருந்தது. இதே இலங்கையிலிருந்து எண்பதுகளுக்கு முன்பு ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்தவர்கள் இந்த அளவிற்குத் தமிழுணர்வைக் கொண்டவர்களல்லவென்பதையும் நினைவு கூர்தல் வேண்டும்.
தமிழ்த்தேசிய உணர்வுடன் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தமிழையும் கொண்டுவந்தார்கள். தமிழ்ச் சங்கங்கள் ஊடாக தமிழைப் போதிப்பதோடு உயர் நிலைப் பள்ளி இறுதிவகுப்புத் தேர்விலும் தமிழை ஒரு பாடமாக எடுக்க முடிகிறதென்றால் அது இலங்கைத் தமிழர்களின் முயற்சி, அதற்கு உறுதுணையாகவிருந்த புதுச்சேரிக்காரரான பாரீஸ் சொர்போன் பல்கலைக்கழகத்தின் l’Institut National des Langues et Civilisations Orientales தமிழ்ப் பேராசிரியர் நண்பர் முடியப்பநாதனையும் இங்கே குறிப்பிட வேண்டும். எண்பதுகளுக்குப் பிறகு பாரீஸ் நகரில் Gare du Nord என்ற பகுதி தமிழர் பகுதியாக மாறி இருக்கிறது. இங்கு பெயர்ப்பலகைகளெல்லாம் தமிழில் வைக்கப்பட வேண்டுமென்று சட்டங்கள் ஏதுமில்லை, இருந்தபோதிலும் பெயர்ப்பலகைகளைத் தூய தமிழில் பார்க்க முடியும். தமிழர்களுக்கே உரிய குணத்துடன் கோவில்களை நிறுவி, வழிபாடு, பூசைகள், சடங்குகள் எப்போதும்போல தொடர்கின்றன. இந்துக் கோவில்கள் மட்டுமல்ல கிறிஸ்துவ தேவாலயங்களிலும் தமிழில் பூசைகள் நடக்கின்றன. இங்கு எமது நிறத்தையும் முகத்தையும் பார்த்து தமிழரல்லாத ஒருவர் பிரான்சு நாட்டில் ‘வணக்கம்’ என்று கூறினால் அப்பெருமை இலங்கைத் தமிழர்களைச் சார்ந்தது.
உலகின் பலபகுதிகளிலிருந்தும், வெவ்வேறு காரணங்களை முன்னிட்டுப் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். இம்மக்களில் ஆசியர்கள் தனித்தன்மை மிக்கவர்கள். உழைப்பும் முன்னேற்றமும் அவர்களின் பிரத்தியேகக் கூறு, இயற்கைப் பண்பு. இந்திய உபக்கண்டத்தைச் சேர்ந்த இத்தமிழர்களும் பிரான்சுநாட்டில் உயிர்வாழ்க்கைப் போரில் வாகை சூடுகின்றவர்கள். தந்தைக்கோ தாய்க்கோ கல்வியில் போதாமை இருக்கலாம், ஆனால் பிள்ளைகள் கல்வியில் சாதித்து நல்ல பணிகளில் ஒளிரும் தலைமுறையினராக இருக்கின்றனர். இதற்கு முந்தைய பத்திகளில் கூறியது போல தமிழர்களை ஒன்று திரட்டுகின்ற வகையில் இயங்குகிற பல தமிழ்ச்சங்கங்கள் இன்று பிரான்சு நாட்டில் காந்திக்கும் வள்ளுவனுக்கும் சிலை வைத்து பெருமைச் சேர்த்துள்ளார்கள். இதுவன்றி நவீன இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட குறிப்பாக இலங்கை நண்பர்கள் பல படைப்புகளை நவீன தமிழிலக்கியத்திற்கு அர்ப்பணித்துள்ளனர். அவர்களில் தமிழுலகம் நன்கறிந்த மறைந்த கி. பி. அரவிந்தன், ஷோபாசக்தி போன்றோர் முக்கியமானவர்கள். அதுபோல குறும்படம் இயக்கம், இசை, பாரம்பரிய நடனமென ஆர்வம் கொண்டுள்ள இளம் வயது தமிழ் இளைஞர்களையும், தமிழ் பெண்களையும் பார்க்கிறோம்.
அண்மையில் பிரதீபன் ரவீந்திரன் என்பவர் எழுதி இயக்கிய நிசப்த நடனம் ஒரு முக்கிய கலைப்படம். 1983ல் தொடங்கி 2009 வரை நீடித்த, சிங்களப் பெரும்பான்மை, தமிழின சிறுபான்மையை சீரழித்த, கொன்று குவித்த, திக்குதிசையின்றி பின்னவர்களை தேசாந்திரிகளாக அலைய விட்ட ஓர் அவலச் சரித்திரத்தை திரைப்படக் கலை என்கிற தூரிகைக் கொண்டு காலத்தால் அழியாத சித்திரமாக இந்த ஈழத்துக் கலைஞர் உருவாக்கியிருக்கிறார். இப்படைப்பில் எழுத்து, இயக்கம், நடிப்பு இது தவிர திரைபட ஆக்கத்தின் பிறபணிகளுக்கும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கிறார். இன்று இந்தியத் தமிழர்களில் சிலர் பிரெஞ்சு அரசியலில் ஆர்வம் கொண்டு நகராட்சி உறுப்பினர்களாக இருக்கின்றனர். உதாரணம் அலென் ஆனந்தன் என்பவர். அவ்வாறே கண்ணபிரான் என்கிற மற்றொரு புதுச்சேரி தமிழரும் பிரான்சு பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிமுகமானார். அலென் ஆனந்தன் என்கிற புதுச்சேரித் தமிழர் முதன் முதலாக காந்தி சிலையைத் தமது பகுதியில் நிறுவினார், அதுபோல வொரெயாலைச் சேர்ந்த இலங்கைவேந்தன் என்ற தமிழரும் காந்தி மற்றும் வள்ளுவர் சிலையை அவர் குடியிருக்கும் பகுதியில் திறந்துள்ளார்.
இந்தியத் தமிழரோ இலங்கைத் தமிழரோ தமிழ் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் எவரென்று பார்த்தால், அவர் தங்கள் ஆயுளில் ஒரு பகுதியை இந்தியாவிலோ இலங்கையிலோ செலவிட்டவராக இருப்பார். மொழி மீதான காதல் எங்கும் அரும்பும், ஆனால் மொழி உணர்வினைப் பிறந்த மண்ணில் பெற்றால்தான் உண்டு.
- நாகரத்தினம் கிருஷ்ணா
(கட்டுரையாளர் தமிழ்நாடு, விழுப்புரம், கொழுவாரி என்ற ஊரைச் சேர்ந்தவர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்சில் ஸ்ட்ராஸ்பூர்க் என்ற நகரில் வசித்து வருகிறார். சமூகவியலில் முதுகலை, பிரெஞ்சு- ஆங்கிலம் மொழிபெயர்ப்பில் டிப்ளமோ ஆகியவற்றைப் பெற்றுள்ளார். தொழில் வாணிபம். பகுதிநேர மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்.
எழுபதுகளில் கவிதைகளில் இவரது இலக்கியப் பயணம் தொடங்கிற்று. சிறுகதைகள் குமுதம், விகடன், கல்கி எனத் தொடங்கி தற்போது இணைய தளங்கள், சிற்றிதழ்களில் எழுதி வருகிறார். பிரான்சு நாட்டில் ' நிலா' என்கிற இருமாத இதழைத் தொடங்கிப் பின்னர் அதனை மாத இதழாகவும் மூன்றாண்டுகாலம் நடத்தினார். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகளென படைப்பிலக்கியத்தின் பல துறைகளிலும் இயங்கிவருபவர்.. முதல் நாவல் "நீலக்கடல்" தமிழக அரசின் பரி- சினையும், இரண்டாவது நாவல் 'மாத்தா ஹரி' கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளைப் பரிசினையும், மூன்றாவது நாவல் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழக அரசின் பரிசினையும் பெற்றுள்ளன. ஓர் அறிவியல் சிறுகதை உட்பட இதுவரை ஐந்து சிறுகதை தொகுப்புகள்; ஆறு நாவல்கள்; மூன்று பிரெஞ்சு நாவல்கள், மூன்று சிறுகதைதொகுப்புகள் உட்பட ஏழு மொழிபெயர்ப்புகள்; ஒன்பது கட்டுரைத் தொகுப்புகள், அம்பை சிறுகதைகளின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு - De haute luttre (Editions Zulma) இவரது மொழிபெயர்ப்பில் வந்துள்ளன. தவிர இவருடைய 'மாத்தா ஹரி' நாவல் 'Bavani, l'avatar de Mata- Hari என்ற பெயரிலும், இறந்த காலம் நாவல் 'Je vis dans le passé என்ற பெயரிலும் (Edilivre) வெளிவந்துள்ளன. 2021 ஆம் ஆண்டு, பிரான்சு நாட்டில் Tu connais la nouvelle என்கிற பிரெஞ்சு இலக்கிய அமைப்பு Centre- Val de Loire மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மே 25-29 ஷத்தோதன் (Châteaudun) என்ற நகரிலும் ஜூன் 1-5 ழர்ழோ (Jarjeau) நகரிலும் நடத்திய தமிழ் இலக்கிய அறிமுக நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.)