இப்படி ஒரு துயரமான சம்பவம் நேரும் என்று அந்த மாணவர்களும், இளைஞர்களும் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். போராட்ட களத்திற்குப் புதியவர்கள், திட்டமிட்டே கட்டியமைக்கப்பட்ட தமிழர் பண்பாடு என்ற மாயைக்கு எளிதில் உணர்ச்சிவசப்பட்டு, தங்களை முழுவதுமாகவே அதை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தில் கரைத்துக் கொண்டவர்கள். அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்பதுதான் உண்மை. அரசு என்ற கட்டமைப்பு எப்படி இயங்குகின்றது, அது யாரால் இயக்கப்படுகின்றது, அதன் வர்க்க நலன் என்ன என்று இப்படி எதுவுமே தெரியாமல் ஒரு மகிழ்ச்சியான மனநிலையில், பண்பாட்டை மீட்டெடுக்கும் வீர உணர்வில், அது ஆயிரம் ஆயிரமாக, லட்ச லட்சமாக கலந்து கொண்டது. அரசு பயங்கரவாதம் என்ற ஒன்றை நேரடியாக தன் வாழ்நாளில் பார்த்திராத அந்த இளைஞர் பட்டாளம், பார்த்தவனை எல்லாம், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தவனை எல்லாம் போற்றி, போற்றி மகிழ்ந்தது. காவலர்கள் தங்களை அம்மா போன்று பார்த்துக் கொண்டனர், தாயைப் பிரிந்துதான் அலங்காநல்லூர் சென்றோம், அங்கே எங்களுக்கு நிறைய புதுத் தாய்கள் கிடைத்தார்கள் என்று தங்களது அரசியல் அற்ற, உணர்ச்சி மட்டுமே நிரம்பிய பதிவுகளை தொடர்ச்சியாக இட்டபடி இருந்தனர்.
அவர்கள் நிஜம் எது, பொய் எது என்று பிரித்தறியும் ஆர்வமும் இன்றி, அவசியமும் இன்றி இருந்தனர். இதைச் சாதகமாக பலர் பயன்படுத்திக் கொண்டனர். குறிப்பாக சினிமாக்காரர்கள் நன்றாக தங்களுடைய விளம்பரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டனர். சிம்பு, அமீர், சீமான், ராகவா லாரன்ஸ், ஹிப்ஹாப் ஆதி, மன்சூர் அலிகான், ஆர்.ஜே. பாலாஜி என சொல்லிக் கொண்டே போகலாம். அரசியல் கட்சித் தலைவர்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னவர்கள் தாராளமாக இந்த அரிதாரம் பூசும் ஏமாற்றுப் பேர்வழிகளை தங்களின் வழிகாட்டியாக ஏற்றனர். அவர்களே லட்சக்கணக்கான போராட்டக்கார்களின் உணர்வுகளை பிரதிபலிப்பவர்களாக தங்களை ஊடக வெளிச்சத்தில் அடையாளப்படுத்திக் கொண்டனர். ஏதாவது ஒரு அரசியல் கட்சி சார்ந்தவர்களாகவே அனைவரும் இருந்தும், போராட்டக் களம் ஏனோ அதை வெளிப்படையாக வெளிப்படுத்திக் கொள்ள மறுத்தது. ஆனால் அரசியல் அற்ற இந்தச் சமூகத்தை மிகக் கீழ்த்தரமான பண்பாட்டு நிலைக்கு இறக்கிய அயோக்கியர்களை அதே களம் பூங்கொத்து கொடுத்துக் கொண்டாடியது அடிமைத்தனம் தவிர வேறில்லை.
தெளிவான திட்டமிடுதலுடனும், சித்தாந்த பின்புலத்துடனும் நடக்கும் போராட்டங்களே எதிர்ப்புரட்சி சக்திகளால் நாசம் செய்யப்பட்டுவிடும் போது, எந்தவித சித்தாந்தப் பின்புலமும் அற்று, 'ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி , பீட்டாவை தடை செய்' போன்ற முழக்கங்கள் மட்டும் அல்லாமல், இந்திய அரசுக்கே சாவல்விடும் பல முழக்கங்கள் வைக்கப்பட்டது, போராட்டத்தின் தன்மையை கொஞ்சம் மாற்றிவிட்டது என்றே சொல்ல வேண்டும். அரசின் நோக்கமும், போராட்டத்தை பல்வேறு ஊர்களில் ஒருங்கிணைத்தவர்களின் நோக்கமும் இதனால் பெரிய அளவில் முரண்பட்டன. ஜல்லிக்கட்டு நடப்பதைவிட இந்தப் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவது அரசுக்கு முக்கியமான பிரச்சினையாக உருமாறியது. இந்தச் சூழலில் தான் சனிக்கிழமை அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
நிரந்தரச் சட்டம் வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். ஆனால், ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரன், காங்கேயம் காளை அறக்கட்டளை தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, வழக்கறிஞர் அம்பலத்தரசு, 'ஹிப் ஹாப்' தமிழா ஆதி, வீர விளையாட்டு மீட்புக் கழகத் தலைவர் ராஜேஷ் ஆகியோர் போராடும் மாணவர்களை மிக மோசமாகக் காட்டிக் கொடுத்தார்கள். அதைவிட மிகப்பெரிய அவலம் என்னவென்றால், அவர்கள் எந்த மக்களுக்காக விடிய விடிய அர்ப்பணிப்போடு அலங்காநல்லூரிலே போராடினார்களோ, அந்த மக்களாலேயே அவமானகரமான முறையில் கைவிடப்பட்டார்கள். மாணவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதான் ஜல்லிக்கட்டு போன்ற சாதிய விளையாடுகளில் ஒளிந்திருக்கும் அப்பட்டமான துரோக அரசியல். இப்படி ஒரு நிலை கடைசியில் போராட்டக்காரர்களுக்கு ஏற்படும் என்று ஆரம்பத்தில் இருந்தே நாம் நினைத்தோம். சல்லித்தனமான சாதிய விளையாட்டுகளை தமிழகத்தின் பொதுப்பிரச்சினையாக மாற்றி, அதற்காக தங்களுடைய நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு, அதைப் போராடி பெற்றுக் கொடுத்தவர்களுக்கு அந்த வீரவிளையாட்டை சொந்தம் கொண்டாடும் சாதிவெறியர்கள் கொடுத்த மரியாதை இதுதான். இதனால் தான் ஆரம்பத்தில் இருந்தே அந்தக் கருமம் பிடித்த விளையாட்டை ஆதரிக்க வேண்டாம் என்று தொடர்ச்சியாக சொன்னதற்குக் காரணம்.
இந்தப் போராட்டம் போராட்டக் களத்தில் இருந்த இளைஞர்களுக்கு எல்லாம் இனி ஒரு பாடமாக இருக்க வேண்டும். இது போன்ற கீழ்த்தரமான, முழுக்க முழுக்க சாதிய பெருமையைக் காப்பதற்காகவே நடைபெறும் எந்த ஒரு பண்பாட்டு நிகழ்வையும் ஆதரிக்காமல் விலகி இருப்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் செய்யும் நன்மையாக நினைத்துக் கொள்ளுங்கள். அரசு கட்டமைப்பையும், அரசியல்வாதிகளையும் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், இந்த உலகத்தில் மிக மோசமான வன்முறைக் கருவி அரசுதான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவுதான் உங்களின் நண்பனாக அரசைக் கருதினாலும் அது ஒரு வர்க்க ஒடுக்குமுறைக் கருவி என்பதையும், ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்வதற்காகவே அது வரலாற்றில் தோற்றுவிக்கப்பட்டது என்பதையும் கற்றுக் கொள்ளுங்கள். அவர்களை எப்போதுமே சந்தேகக்கண் கொண்டே பாருங்கள். ஒரு கொடிய குற்றவாளியைப் பார்ப்பதுபோல, ஒரு மோசடிக்காரனைப் பார்ப்பதுபோல, ஒரு துரோகியைப் பார்ப்பது போல பாருங்கள்.
நீங்கள் ஒரு மாமா வேலை பார்ப்பவனிடம் இருந்தோ, இல்லை கஞ்சா விற்பவனிடம் இருந்தோ, கள்ளச்சாரயம் விற்பவனிடம் இருந்தோ கூட கொஞ்சம் மனிதாபிமானத்தை வாழ்க்கையின் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்பார்க்கலாம். ஆனால் எப்போதுமே காவல்துறை மற்றும் இராணுவத்திடம் இருந்து அதை எதிர்பார்க்காதீர்கள். அப்படி எதிர்பார்த்து உங்களது போராட்டத்தை நீங்கள் கட்டமைத்தீர்கள் என்றால், இது போன்று மிகக் கொடிய அடக்குமுறையைத்தான் எதிர்கொள்வீர்கள். அரசியல் அற்ற இது போன்ற NGO வகைப்பட்ட போராட்டம் நிச்சயம் அழிவைத்தான் ஏற்படுத்தும். உங்களை, உங்கள் தலைமைகள் நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். அதனால் வருங்காலங்களில் இதுபோன்ற அரசியல் அற்ற அற்பத்தனமான கோரிக்கைகளை முன்வைத்து இயக்கப்படும் போராட்டங்களில் பங்கெடுக்காமல், தெளிவான சித்தாந்ததையும், தேர்ந்த சிந்தனையும் கொண்ட அரசியல் கட்சிகளின் பின்னால் அணிதிரண்டு போராடுங்கள். அவை தேர்தலில் பங்கெடுக்கும் அமைப்புகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. போராட்டமே அனைத்திற்கும் தீர்வு என்பதை இப்போது உங்கள் சொந்த அநுபவத்தின் மூலம் நீங்கள் உணர்ந்து உள்ளதால், வருங்காலங்களில் அமைப்புரீதியாக உங்களை பிணைத்துக்கொண்டு கோரிக்கைகளை முன்னெடுங்கள். ராகவா லாரன்ஸ், ஆர்.ஜே. பாலாஜி, ஹிப்ஹாப் ஆதி போன்ற ஆர்.எஸ்.எஸ் காலிகளிடம் நீங்கள் வைக்கும் நம்பிக்கையை இங்கிருக்கும் நேர்மையான தலைவர்கள் மீது வைக்க மறுப்பது அபத்தமானதாகும்.
முதலில் உங்களை அரசியல் மயப்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு போராடுவதைப் பற்றி முடிவெடுங்கள். எதற்காகப் போராடுகின்றோம், யாரின் வர்க்க நலனை முன்னிலைப்படுத்தி போராடுகின்றோம் என்பதெல்லாம் நன்றாகத் தெரிந்து கொண்டு களத்தில் இறங்குங்கள். அப்போதுதான் தெளிவாக போராட்டத்தைக் கட்டமைக்க முடியும். போராட்டத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் தலைமையின் தேர்ந்த வழிகாட்டுதல்படி அதை நடத்திச் செல்ல முடியும். இல்லை என்றால் இது போன்ற துரோகத்தைத்தான் நீங்கள் சந்திக்க வேண்டி வரும். அது உங்களை மட்டும் அல்லாமல் உங்களைச் சார்ந்தவர்களையும் அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றுவிடும். எதிரி மிகத் தெளிவாகவே கண்ணுக்குத் தெரிகின்றான். ஆனால் நம்மால் நண்பர்களைத்தான் தெளிவாக அடையாளம் காண முடியவில்லை.
- செ.கார்கி