இந்தியாவை விட மூன்று மடங்கு நிலப்பரப்பு கொண்ட அமெரிக்காவில் பூர்வகுடி மக்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையாகி , குறிப்பிட்ட சில நிலப்பரப்புகள் மட்டுமே அவர்களுக்கு என்றாகி விட்ட நிலையில், ஐக்கிய அமெரிக்க நாட்டின் பெரும் நிலப்பரப்பு வேறு கண்டங்களிலிருந்து வந்து குடியேறியவர்களால்தான் நிரப்பப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் உலகெங்கும் வணிகத்திற்காகவும் பிறநாட்டு வளங்களை தமதாக்கிக் கொள்ள்வதற்காகவும் தங்கள் காலனிகளை உருவாக்கியபோது, ஐரோப்பியச் சட்ட திட்டங்களிலிருந்து விடுதலை பெறுவதற்காக அங்கிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார்கள் அமெரிக்க முன்னோடிகள்.

ஆனாலும் அமெரிக்காவில் 13 மாநிலங்கள் உருவாகி இங்கிலாந்து நாட்டிற்கு அடிமையாகத்தான் போனார்கள் அம்மக்கள். 1776ல் பல போர்களுக்குப் பிறகு, இங்கிலாந்து நாட்டிலிருந்து விடுதலை பெற்றதாக தங்களை அறிவித்துக் கொண்டது அமெரிக்கா.

தங்களுக்கான விடுதலையை அறிவித்துக் கொண்ட அமெரிக்கா தன்னை ஒரு முதலாளித்துவ நாடாகவும் உருவாக்கிக் கொண்டது. கடவுள் அமெரிக்காவை ஆசிர்வதிக்கட்டும் (God Bless America) என்ற முழக்கத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா, தனி மனிதனுக்கான பேச்சுரிமை, மத உரிமை, மதம் இல்லாத உரிமை ஆகியவற்றையும் தன்னுடைய அரசியல் சாசனத்தில் பதித்துக் கொண்டது.

மற்றொரு மனிதனை அடிமையாக வைத்துக் கொள்ளலாம் என்பதையும் அதிகாரப்பூர்வமாக வைத்துக் கொண்ட அமெரிக்காவில், அனைவரும் சமம் என்ற நிலையைப் பெறுவதற்குத்தான் ஒரு உள்நாட்டுப் போரையே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நான்கு ஆண்டுகள் உள்நாட்டுப் போருக்குப் பிறகு 1865ல் தான் அடிமைச் சட்டம் நீங்கி அனைவரும் சமமாகினார்கள். உலக நாடுகளை ஆதிக்கம் செலுத்தும் உலகின் மிகப்பெரிய சக்தியாகவும் வளர்ந்து விட்டார்கள்.

வாய்ப்புகளின் நிலம் (Land of Opportunities) என்று அழைக்கப்படும் இந்த வளம் மிக்க நாட்டில் திறன் மிக்க குடியேற்ற மக்களுக்கு எப்போதும் கதவுகள் திறந்தே இருந்து வந்துள்ளது. ஆனாலும் 1960களின் பிற்பகுதியில் தான் இங்கே தமிழர்களின் வரவு தொடங்கியுள்ளது. முதன் முதலாக அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த தமிழர்கள், தமிழ்நாட்டில் மருத்துவம் பயின்று மருத்துவர்களாக பணியாற்றி வந்தவர்கள் தான். 60களின் பிற்பகுதியிலும் 70களின் தொடக்கத்திலும் பொறியியல் படித்தவர்களும், ஆராய்ச்சிப் பட்டப்படிப்பு படித்தவர்களும் அமெரிக்காவிற்கு புதிய வாய்ப்புகளைத் தேடி வரத் தொடங்கியுள்ளனர்.

இப்படிக் குறைந்த எண்ணிக்கைகளில், கற்றறிந்த திறன் மிக்க முன்னோடித் தமிழர்கள் அமெரிக்காவில் அந்தந்த துறைகளில் தனிப்பெரும் செல்வாக்குகளுடனேயே திகழ்ந்துள்ளனர்

நியூயார்க், சிகாகோ போன்ற பெரும் நகரங்களில் தமிழர்களின் வரவு அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் தமிழ்ச் சங்கங்களை உருவாக்கி அமெரிக்கத் தமிழ்ச்சமூகத்தை ஒன்றிணைக்க முயற்சி எடுத்துள்ளனர் இந்த ஆன்றோர்கள்.

தங்களை மருத்துவர்களாக உருவாக்கிய தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மருத்துவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து தமிழ்நாடு அறக்கட்டளை என்ற தன்னார்வ அமைப்பை உருவாக்கினார்கள். கல்வி, பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற வளர்ச்சி, உடல்நலம் மற்றும் சுற்றுப்புறத் தூய்மை ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

பொன்விழா கண்ட தமிழ்நாடு அறக்கட்டளை, நியூயார்க், சிகாகோ, ஹுஸ்டன் தமிழ்ச்சங்கங்கள் அமெரிக்காவில் தமிழர்களின் தொன்மைக்கு சான்றாக விளங்கி வருகிறது.

70/80களில் மேற்படிப்புக்காவும் தமிழர்கள் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து, முதுகலைப் பட்டம் பெற்று உயர் பொறுப்புகளிலும் பணியாற்றத் தொடங்கினார்கள். 90களில் கணினித் துறை வளர்ச்சி அடையத் தொடங்கிய போது தமிழ்நாட்டில் 80களிலேயே கணினித்துறையில் பயின்றவர்கள் பெருமளவில் அமெரிக்காவுக்கு வரத் தொடங்கினர். 90களின் பிற்பகுதியில் இந்த எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது.

மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து வரத் தொடங்கினர்.

தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், பிற பெரும் நகரங்களில் பரவலாகக் குடியேறியதும் அமெரிக்காவில் மேலும் மேலும் புதிய தமிழ்ச்சங்கங்களை உருவாக்கியது. தமிழ்ச்சங்கங்களை ஒன்றிணைக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் உருவானது.

ஆண்டுதோறும் அமெரிக்காவின் முக்கிய நகரம் ஒன்றில் தமிழர் கலை, பண்பாட்டு விழுமியங்களைப் போற்றும் வகையில் தமிழ் விழாக்கள் நடத்தத் தொடங்கினார்கள். உள்ளூர் தமிழ்ச் சங்கம் முன்னெடுக்கும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் இந்த தமிழ் விழா, கனடா உள்ளிட்ட வட அமெரிக்கத் தமிழர்களுக்கு மூன்று நாள் தமிழர் திருவிழா என்றாகிவிட்டது.

அனைவரையும் உள்ளடக்கிய சமய வழிபாட்டின் அடையாளமான தமிழர்களின் கோவில் திருப்பணியும் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். நியூயார்க்கில் அமைந்துள்ள கருங்கற்களால் வடிவமைக்கப்பட்ட பிள்ளையார் கோவில், ஹுஸ்டனில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் திருக்கோயில் தமிழர்களின் பெருமுயற்சியால் எழுந்தருளியவை ஆகும். அவை தமிழர்களின் சிற்பக்கலையைப் போற்றும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது மிக முக்கியமானதாகும்.

சீ2ரி என்ற 2000ம் ஆண்டிற்கான கணினி மென்பொருள் மாற்றத்திற்காகப் பெருமளவில் திறனாளர்கள் தேவைப்பட்ட போது, பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையினால், ஆங்கில மொழியில் பொறியியல் பயின்ற தமிழர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது.

இந்த கணினித்துறை வேலைகளுக்காக தற்காலிக குடியேற்ற விசாவில் வந்தவர்களில் மிகக்குறைந்த எண்ணிக்கையினரே தமிழ்நாடு திரும்பிச் சென்றார்கள் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தொடர் வேலை வாய்ப்புகள் மூலம் நிரந்தரமாகக் குடியேறிவிட்டனர். க்ரீன் கார்டு பெற்று, அமெரிக்க குடியுரிமையும் பெற்று வருகின்றனர். அமெரிக்கத் தேர்தல்களில் வாக்களிப்பதோடு, தேர்தல் நிதியளித்து தேர்தல் குழுக்களில் இணைந்து பணியாற்றவும் தொடங்கியுள்ளனர்.

கணிணித்துறையினர் வரவுக்குப் பின்னர் அமெரிக்கத் தமிழ்ச் சமூகத்தில் ஒரு பெரும் எழுச்சி ஏற்பட்டது என்றால் மிகை- யில்லை. தமிழ்ச் சங்கங்களைத் தொடர்ந்து தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பட்டது. வார இறுதி நாட்களில் மட்டுமே செயல்படும் இந்தத் தன்னார்வப் பள்ளிகள் மூலம் அமெரிக்காவில் பிறக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழினத்தின் தொன்மை குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் உருவானது.

அமெரிக்கா முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வருவதாகத் தெரிகிறது. இந்தப் பள்ளிகளின் பாடத்திட்டங்களை ஒருங்கிணைக்க இரு பெரும் கல்விக் கழகங்கள் உருவாகி செயல்பட்டு வருகிறது. தவிர இணைய வழி தமிழ்ப் பள்ளிகளும் உண்டு. தமிழ் மொழிக்கு அந்நிய மொழிப் பிரிவில் அமெரிக்க உயர்நிலைப் பள்ளியில் மதிப்பெண்கள் பெற்றுத் தரும் வகையில் தமிழ்ப் பள்ளிகளின் செயல்பாடுகள் உயரம் தொட்டுள்ளது.

18 ஆண்டுகளுக்கு முன்னதாக, அமெரிக்காவில் முதன் முதலாக ஒரு குறள் ஒரு டாலர் பரிசுப் போட்டி அறிமுகமானது. அதன் வெற்றியைத் தொடர்ந்து வட அமெரிக்கா முழுவதும் ஒரு டாலர் பரிசுடன் திருக்குறள் போட்டிகள் பரவலாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் திருக்குறளின் தாக்கம், தமிழ்நாட்டிலும் திருக்குறள் மீதான புதிய எழுச்சியை உருவாக்கியது எனலாம்.

தமிழ்ச் சங்கங்கள், தமிழ்ப் பள்ளிகள், திருக்குறள் போட்டிகள் என கண்ட அமெரிக்கத் தமிழர்களின் பண்பாட்டுப் புரட்சியாக அமெரிக்காவின் திக்கெட்டும் அதிரச் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது பறையிசை. கணினித்துறை வல்லுனர்களின் கைகளில் பாரம்பரிய பறையிசைக் கருவி இசைக்கத் தொடங்கியது முதல் பறையிசைக்கு உலகம் முழுவதும் புத்துயிர் கிட்டியுள்ளதை யாராலும் மறுக்க இயலாது.

தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சியாக ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள் நடைபெற்ற போது அந்நிய மண்ணிலிருந்து முதல் ஆதரவு அமெரிக்காவிலிருந்துதான் வந்தது, அமெரிக்கா முழுவதுமான தொடர் போராட்டங்கள், இந்தியத் தூதரகத்தில் குவிந்த மனுக்கள் ஜல்லிக்கட்டுப் போராட்ட வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது வரலாற்றுச் சான்றாகும்.

அமெரிக்காவில் தமிழ் மொழியில் கவிதை, கட்டுரைகள், கதைகள் என தங்கள் படைப்புகளையும் உருவாக்கி வருகின்றனர் நம் தமிழர்கள். சங்க இலக்கிய ஆர்வம் அமெரிக்கத் தமிழர்களிடையே அதிகரித்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. புறநானூற்று விழா எடுத்தார்கள். திருக்குறளுக்கு முழுமையாக உரை எழுதி தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருதும் பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ஒரு அமெரிக்கத் தமிழர்தான்.

தாங்கள் வசிக்கும் நாட்டில் தமிழ் மொழி, பண்பாடு, கலை, தமிழர் விழாக்கள் என தமிழர்களின் அடையாளங்களுடன் வாழும் அமெரிக்கத் தமிழர்கள் தமிழ்நாட்டு உறவை ஒரு போதும் மறந்து விடவில்லை.

பேரிடர் காலங்களில் பணமாக, பொருட்களாக அமெரிக்காவிலிருந்து உதவிக்கரம் நீட்டுவதை தங்களின் கடமையாகக் கொண்டுள்ளனர். கொரோனா காலத்தில் மருத்துவக்கருவிகளாக, அரசுத் திட்டங்களுக்கு உதவியாக, பொருளாதார நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவியாக அமெரிக்காவிலிருந்து தாய் மண்ணுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்கள் அமெரிக்க உறவுகள்.

தமிழ்நாட்டு அரசின் சார்பில் அமெரிக்க மண்ணுக்கு வரும் அதிகாரிகள், அமைச்சர்கள், முதல்அமைச்சர்கள் என அனைவரையும் அன்போடு வரவேற்று அவர்களின் செயல்திட்டங்களுக்கு உதவிகரமாகவும் இருந்து வருகிறார்கள். பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், எடப்பாடி பழனிசாமி, மு. க. ஸ்டாலின் என நான்கு முதலமைச்சர்களுக்கு அமெரிக்கத் தமிழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர்.

மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்த முதலமைச்சர் எம். ஜி. ஆருக்குச் சிறப்புக் கவனம் செலுத்தி மருத்துவ உதவிகள் பெற்றுத் தந்தவர்கள் அமெரிக்கத் தமிழ் முன்னோடிகள்.

சமீபத்தில் சிகாகோ நகரில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில், அயலகத் தமிழர்கள் நலன்களுக்காகத் தனியாக வாரியம் அமைத்துச் செயல்படுத்தி வரும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களை ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்று திரண்டு வரவேற்றுச் சிறப்பித்தனர்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ்க் குழந்தைகள் பல்துறைகளிலும் வித்தகர்களாக பணியாற்றி வருகின்றனர். அடுத்தடுத்து கல்லூரிகள் செல்லும் குழந்தைகள் அமெரிக்காவில் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் பயின்று வருகிறார்கள் என்று நிச்சயமாகக் கூற முடியும். மேலும் முதுகலைப் படிப்புகளுக்காக அமெரிக்கா வரும் தமிழ்நாட்டு மாணவர்கள் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர் மன்றங்கள் உருவாகும் அளவுக்கு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த மாணவர்களில் சிலர் அமெரிக்க அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு நாளைய அமெரிக்க அதிபர் ஆகும் வாய்ப்பும் இருப்பதை உணர முடிகிறது. தற்போதே உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கேற்று மாநகர மன்ற உறுப்பினர்களாக, துணை மேயராகத் தமிழர்கள் பொறுப்பேற்றுள்ளனர். நாளைய அமெரிக்கத் தமிழர்கள் அமெரிக்காவின் செனட்டர்களாக, மாநில கவர்னர்களாக, ஏன் அமெரிக்க அதிபராக ஆகும் வாய்ப்புகள் கூட உருவாகலாம்.

இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லியாக வேண்டும். அமெரிக்காவில் வசிக்கும் ஏனைய இந்திய மாநிலங்களைச் சார்ந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட அடையாளத்திற்குள் இருப்பவர்களாக உள்ளார்கள். ஆனால் அமெரிக்கத் தமிழர்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊராட்சியின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். சமத்துவத்தின் அடையாளமாகத் திகழ்கிறார்கள். தமிழ்நாட்டின் சிறிய கிராமங்களிலிருந்தும் அமெரிக்காவுக்கு வந்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.

அமெரிக்கத் தமிழர்கள் என்பவர்கள் நீதிக் கட்சி தொடங்கி காமராசர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற முதலமைச்சர்களின் திட்டங்களால் பலனடைந்து கல்வியால் உயர்ந்து அமெரிக்கா சென்று முன்னேறியவர்கள்.

இன்றைய முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் மாணவர்களின் கல்வி சார்ந்த நடவடிக்கையும், செயற்கை தொழில்நுட்பம் உள்ளிட்ட எதிர்கால அறிவியல் சார்ந்த முயற்சிகளும், அமெரிக்கத் தமிழர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.

அமெரிக்காவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பாலமாகவும், பொருளாதார சமூக முன்னேற்றத்திற்கு இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் வகையிலும் அமெரிக்கத் தமிழர்களின் செயல்பாடுகள் இருக்கும் என்பதை உறுதியுடன் சொல்லலாம்.

- தினகர் ரத்னசபாபதி (கணினித் துறையில் 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றி வரும் தினகர், 2010ம் ஆண்டு முதல் அமெரிக்கத் தமிழர்கள் தொடர்பான செய்திகளை முன்னணி இணைய ஊடகத்தில் எழுதி வந்துள்ளார். 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள தமிழ்ச் சங்கச் செயல்பாடுகளை இணைய வழியாக வெளிக்கொணர்ந்தவர். சமூக ஊடகத்தின் தாக்கம் இல்லாத நிலையில், தமிழ்நாடு அறக்கட்டளை, தமிழ்ச் சங்கங்கள், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் விழாக்கள், திருக்குறள் போட்டி, பறையிசை, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட அமெரிக்கத் தமிழர்களின் முக்கிய நிகழ்வுகளை உலகறியச் செய்ததில் பெரும் பங்கெடுத்தவர்.) 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.