மனிதனின் உணர்வுகளில் வீரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால், ஒரு வம்சத்தின் வெற்றியையோ புகழையோ நிர்ணயிக்கும் அளவுகோலாக வீரம் விளங்கியிருப்பது தெரியவரும். ஏனென்றால், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதனின் ஆற்றல் அவனுடைய உடலாற்றலை வைத்துத்தான் அளக்கப்பட்டது. உலகின் புகழ்வாய்ந்த இனங்கள் அனைத்தும் வீர சாகசங்களால் மட்டுமே அறியப்பட்டன. கோழைத்தனம் குடிபுகுந்த எந்த ஒரு வம்சமும் கொற்றம் அமைத்துக் கோலோச்சியதாக வரலாறு இல்லை. பகைவரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வோடு, உலகின் ஒவ்வோர் இனமும் வீர விளையாட்டுக்களுக்கான வியூகங்களை வகுத்துக் கொண்டன. ஐம்புலன்களையும் அடக்கி, உடலையும் மனதையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த மனித இனங்கள், உயிர்காக்கும் தற்காப்புக் கலைகளையும் உருவாக்கி, அவற்றைப் பேணிடும் வகையில் பாசறைகள் அமைத்துப் பயிற்சிகள் மேற்கொண்டன. இதில் தமிழினமும் அடங்கும்.
“வாளொடு முன்தோன்றி மூத்தக் குடி” என்னும் செவ்விய கூற்று, தமிழ் இனத்தை ஒரு வீரப் பரம்பரையாகவும், தமிழ் மண்ணை ஒரு வீரத்தின் விளைநிலமாகவும் சித்தரிப்பதாகும். தற்காப்புக் கலையில் தமிழ் இனம் தழைத்தோங்கியிருக்கிறது என்பதற்குச் சங்க நூல்கள் தொட்டே தடயங்கள் கிடைக்கின்றன. “முதுமரத்த முரண்களரி வரிமணல்” என்ற பட்டினப்பாலைக் குறிப்பு ஒன்று, தமிழனின் போர்த்தொழில் வித்தைகள் பற்றிய குறிப்புக்கள் தருகின்றது. தொல்காப்பியம், பதிற்றுப் பத்து, புறப்பொருள் வெண்பாமாலை, திருமந்திரம் ஆகிய நூல்களிலும் தமிழனின் தற்காப்புக்கலை அங்கங்கள் விரித்துரைக்கப் பட்டிருக்கின்றன.
ஆனால், இந்தப் போர்த்தொழில் வித்தைகட்கெல்லாம் அப்பாற்பட்டு, தமிழினம் அறிந்துவைத்திருந்த “வர்மம்” என்னும் தர்மம், உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் செம்மாந்து நிற்கிறது. சித்தர் பெருமக்களின் செய்தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது தாங்கொணாத வேதனையாக இருக்கிறது. அந்த வேதனைக்குக் கடுகளவேனும் விடிவுகாணும் முடிவுதான் இந்தக் கட்டுரையின் கருப்பொருள்.
வர்மத்தின் எண்ணிக்கைகள், வர்ம நாடிகளின் உட்பிரிவுகள், மாத்திரைகள், காலங்கள், ஈடுகள், அடங்கல்கள், இளக்குமுறைகள் இன்னோரன்ன விளக்கங்களையெல்லாம் யான் இங்கு விலாவாரியாக எழுதிடக் கருதவில்லை. மாறாக, வர்மக் கலையின்பால் தமிழனுக்கு உண்டாக வேண்டிய பெருமிதங்களையும் பெருங்கடமைகளையும் மட்டும் ஒரு படைப்பாளனின் பார்வையில் நின்றுகொண்டு அலசிட முற்படுகிறேன்.
“வர்மம்” வடமொழியா?
தமிழின் வரலாறும் சொல்வளமும் அறியாத சிலர் “வர்மம்” ஒரு வடமொழிச் சொல் என்றும் வர்மக் கலையானது சமஸ்கிருத நூல்களிலிருந்துதான் தமிழுக்குப் பெயர்க்கப்பட்டதென்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற கொள்கையுணர்வு இங்கே நமக்கு மிகமிகத் தேவைப்படுகிறது. அத்தோடு, இலக்கண விதிகளையும் விளக்கங்களையும் ஊடகமாக வைத்து இதை நாம் அணுகவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது.
தமிழில் “வல்” என்னும் சொல் ஒன்று உண்டு. அச்சொல் நிலைமொழியாக நிற்பின், ஏவல் வினைமுற்று ஆகும். அந்த நிலைமொழியோடு வருமொழியாக ஒரு பெயர்ச் சொல்லை இணைத்தால், அதை உரிச்சொல் ஆக்கிவிடலாம் (எடுத்துக்காட்டு: வல்+இனம் ஸ்ரீ வல்லினம்). நிலைமொழி ஒரு பகுதியாக நிற்க, அதனை இன்னொரு விகுதியோடு புணர்ந்திட அனுமதித்தால், அது பெயர்ச்சொல் ஆகிவிடும், அதாவது, பகுதி மற்றும் விகுதியின் இணைப்பால் ஒரு புதிய சொல் பிறக்கும் என்பது புணரியல் விதி. இந்த விதியின் அடிப்படையில், “வல்” என்ற பகுதியோடு “மை” என்ற (தொழிற்பெயர்) விகுதியை இணைத்தால் “வன்மை” என்ற பெயர்ச்சொல் பிறக்கிறது. “வன்மை” என்ற சொல்லுக்கு “வல்லமை” “வல்லவனாக இருத்தல்” “வலிமை பொருந்திய செயல்புரிதல்” என்றெல்லாம் பொருள்விளக்கம் கொடுக்கலாம். இந்த “வன்மை” என்ற சொல்லின் வேறொரு வடிவம்தான் “வன்மம்”. “வன்மம்” என்ற இந்தச் சொல்லில்கூட “அம்” என்ற ஒரு தொழிற்பெயர் விகுதிதான் இணைந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
“வன்மம்” என்னும் இந்தத் தூய தமிழ்ச் சொல்தான் காலப் போக்கில் “வர்மம்” என மருவியிருக்கிறது என்பது மொழியியல் ஆராய்ச்சிகளின் மூலம் மறுப்பிற்கிடமின்றித் தெளிவாகியுள்ளது. ‘ன’கர ‘ண’கர ஒற்றுக்கள் ‘ர’கர ஒற்றாகத் திரிவது என்பது, தமிழ்ச் சொற்களின் மரூஉக் களங்களிலே பரவலாகக் காணப்படும் மாற்றங்கள் ஆகும். ‘வண்ணம்’ என்பது ‘வர்ணம்’ என்று வழங்கப்படுவதும், ‘துன்மார்க்கம்’ என்பது ‘துர்மார்க்கம்’ என்று வழங்கப்படுவதும் இதற்கான சில எடுத்துக்காட்டுக்கள். இப்படித்தான் ‘வன்மம்’ என்பதும் ‘வர்மம்’ என்று மருவியிருக்க வேண்டுமென்பது இலக்கணம் படித்தவர்க்கு எள்ளளவும் ஐயமின்றி விளங்கும். பண்டைத் தமிழ் மன்னர்கள் சிலர், ‘வர்மன்’ என்னும் சொல்லைத் தமது ஈற்றுப் பெயராகக் கொண்டு திகழ்ந்திருப்பதைக் காணுங்கால், அது ‘வர்மம்’ என்ற தூய தமிழ்ச் சொல்லோடு ‘அன்’ என்னும் ஆண்பால் விகுதி நிகழ்த்தியிருக்கும் சுத்தமான இலக்கணப் புணர்ச்சிதான் என்பதும் எந்தவொரு தமிழ்மகனுக்கும் எளிதில் விளங்கும். வாதத்துக்கெல்லாம் அப்பாற்பட்ட “வர்ம” வரலாறு இதுதான். இதற்குப்போய்ச் சமஸ்கிருதச் சாயம் பூசுவதை எப்படிச் சகிப்பது?
சமஸ்கிருதத்திலும் வர்மநூல்கள் இல்லாமல் இல்லை. தமிழனின் கலைகளையெல்லாம் கபளீகரம் செய்து தத்தமது மொழிகளில் புத்தம்புது பெயர் சூட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த வடவர் குலம், வர்மக் கலையையும் விட்டு வைக்கவில்லை. வர்ம ஸ்தானங்களை விளக்கி வாக்படேர் என்னும் சமஸ்கிருத ஆசிரியர் எழுதிய நூலின் பெயர் “அஷ்டாங்க ஹ்ருதயா” என்பதாகும். அந்த நூலின் தலைப்பிலும் சரி, உள்ளடக்கங்களிலும் சரி “வர்மம்” என்ற சொல் எந்த இடத்திலும் மூலச்சொல்லாக வழங்கப்படவில்லை யென்பது குறிப்பிடத்தக்கது. எனவே, “வர்மம்” வடமொழிச் சொல் அல்ல என்பது தெளிவாகிறது.
இது இவ்வாறிருக்க, தமிழனின் வர்மக்கலை நூல்களில் வடமொழிச் சொற்கள் இருக்கிள்றன என்பதையும் நாம் மறுக்க முடியாது. நட்சத்திர காலம், சந்திர கலை, சர்வாங்க அடங்கல், தட்சிணா வர்மம் போன்றவை எடுத்துக்காட்டுக்கள். இருப்பினும், இவை மிகக் குறைவாகவே உள்ளன. அதுவும் வடமொழித் தாக்கத்தினால் வந்து புகுந்துவிட்டவைதான். அவற்றுக்கு ஈடான தமிழ்ச் சொற்கள் நம்வசம் இருந்திருந்தும், அச்சொற்களை நம்மவர்கள் கையாள முடியாத அளவுக்கு வடமொழி ஆதிக்கம் கோலோச்சியிருக்கிறது என்பதைத்தான் இது நமக்கு உணர்த்துகிறது. தமிழின் சொல்வளம் உலகறிந்த உண்மை. இன்னும் சொல்லப்போனால் நமது வர்மநூல்களில் காணப்படுகின்ற தமிழ்ச் சொற்கள்தான் ஒருசில வடிவமாற்றங்களோடு வடமொழியில் வாசம் புரிகின்றன என்பதற்கு ஆதாரங்கள் காட்டலாம்.
பதஞ்சலி முனிவனின் யோகசாஸ்திரத்தில் காணப்படும் “சூஷ்மனா” (தமிழில் ‘சூட்சுமம்’ என்பார்கள்) என்பது, நமது வர்மநூலில் உள்ள “சுழிமுனை” என்பதன் வடிவமாற்றம் ஆகும். ‘சுழிமுனை’ என்னும் சொல், நம் உடலில் உள்ள மிக முக்கியமான இரண்டு உயிர்நிலை முடிச்சுகளைக் குறிப்பதாகும். “சுழிமுனைகள் இரண்டுண்டு” என்று நமது தமிழ் வர்மநூல்கள் குறிப்பிடுகின்றன. அதாவது, ணநசழ pழiவெ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாக வழங்கப்படத் தகுந்த அப்பட்டமான ஆதித் தமிழ்ச் சொல்தான் ‘சுழிமுனை’. அதைத்தான் வடவர்கள் எடுத்து வைத்துக்கொண்டு “சூஷ்மனா” என்கிறார்கள். “சுழி” என்ற சொல்கூட “சுழியம்” என்ற தொழிற்பெயர் வடிவம் கொண்டு, இப்போது பரவலாக இதர இந்திய மொழிகளில் “சூன்யம்” என்று வழங்கப்பட்டு வருவதை யார்தான் மறுக்க முடியும்? இதே “சுழி” எனும் சொல்தான் “ணநசழ” என்று வழங்கப்படும் ஆங்கிலச் சொல்லுக்கும் நதிமூலம் என்பது சொற்பிறப்பியல் வரலாற்றில் கிடைக்கும் இன்னொரு சுவையான தகவல். ஆக, எத்தனையோ தமிழ்ச் சொற்கள் பிறமொழிகளுக்கு இடம்பெயர்ந்து அங்கே சில வடிவ மாற்றங்களுடன் குடிகொண்டிருக்கின்றன என்னும் பேருண்மை நாளுக்கு நாள் ஆதாரங்களுடன் வலுவடைந்து வருகிறது.
வர்மமும் கிரேக்கமும்!
கிரேக்கமும் திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், எண்ணிறந்த தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது. “வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.
தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!
இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது என்பது வரலாற்று அறிஞர்கள் தெளிந்துரைக்கும் முடிவு. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன. தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று, வௌ;வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.
தற்காப்புக் கலையைப் பொறுத்தமட்டில், சீனம் நெடுங்காலமாகவே சிறந்து விளங்கியிருக்கிறது. அங்கும் அடிமுறை ஆசான்மார் பெரும் அரசியல் ஞானிகளாகக் கோலோச்சியிருப்பது வரலாற்றில் பதிவாயிருக்கிறது. தற்காப்புக் கலையில் சீனம் எந்த அளவுக்குப் பிரபலம் வாய்ந்தது என்றால், இன்றும் கூட தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வசிக்கும் அடிமுறை ஆசான்மார் தற்காப்புக் கலையைச் “சீனாடி” என்று குறிப்பிடுவதுண்டு.
சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
வர்மத்தின் அதிசயங்கள் !!
வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விழைகிறேன்:
ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.
வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.
ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.
ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.
நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.
மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.
மேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்.
வர்மக்கலை ஆசிரியர் யார்?
“வர்ம”மெனும் பொக்கிஷத்தின் வானளாவிய புகழ்பற்றிச் செருக்கும் செம்மாப்பும் பூண்டிருக்கும் தமிழினம், அதன் ஆசிரியன் யார் என்பதற்குச் சரியான விடைதர இயலாமல் தலைநாணி நிற்கிறது. ஒப்பற்ற இக்கலைக்கென்று உலகளாவிய பொது நூல் ஒன்று நம் கையில் இல்லை என்பது உண்மையிலேயே வருத்தம் தருகிறது. வர்மத்தைப் பற்றி வலுவானதொரு இலக்கண நூல் வகுத்து, உலக அரங்கிலே உலா வரவேண்டிய உன்னத நிலையைக் தமிழ் அன்னைக்கு நம் முன்னோர் தரவில்லையே என்ற துயர்மிகுந்த ஆதங்கம் நம்மைத் துளைத்தெடுக்கிறது.
சிவபெருமான்தான் இதன் ஆசிரியன் என்கிறது “வர்ம காவியம்” என்னும் நூல். அகத்திய முனிவன்தான் இதன் ஆசிரியன் என்கின்றன சில பண்டைய செவிவழிச் செய்திகள். அகத்திய முனிவன் வர்மசாஸ்திரத்தை சமஸ்கிருத்தில் மட்டுமே எழுதியதாக மலையாளக்காரர்கள் வேறு வாதிடுகின்றனர். இவ்விரண்டு ஆசிரியர்கள் பற்றிய கூற்றும் உறுதி செய்யப்படாத வெறும் யூகங்கள் என்பதால் இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு நாம் பெருமை தேடிக் கொள்ளவோ உலக அரங்கில் பீடுநடை போட்டுப் பறைசாற்றி நிற்கவோ மார்தட்டிப் பேசவோ நம்மால் இயலாமற் போகிறது.
வர்ம நூல்களின் வரிசைகள்!
வேறு யார்தான் வர்மக்கலையின் ஆசிரியர்கள்? ஆளாளுக்கு நிறைய பாடல்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். அத்தனையும் விருத்த வடிவம் கொண்டவை. அவற்றுள்ளே நூற்றுக்கணக்கான சொற்பிழைகள். பொருள் முரண்பாடுகள். இடைச் செருகல்கள். இலக்கணத் தவறுகள். யாப்பிலக்கணச் சீர்கேடுகள். இலக்கணப் பிழையின்றி, இலக்கியத் தரம் குன்றாமல் எந்தவொரு வர்மநூலும் நம்மிடையே இல்லை. சித்தர்கள் மற்றும் முனிவர்கள் போர்வையில் பற்பலரும் அரைகுறை யாப்பிலக்கணத்தில் அடுக்கடுக்காய் எழுதி வைத்திருக்கும் இப்பாடல்கள் நமக்குப் பெருமை சேர்ப்பனவாக இல்லை. பவணந்தியின் “நன்னூல்” போலவோ, திருமூலரின் “திருமந்திரம்” போலவோ செந்தமிழ் மணம் வீசிடும் செய்யுள் நூலாக எந்தவொரு வர்மநூலும் தமிழில் இல்லை. வள்ளுவனையும் இளங்கோவையும் கம்பநாடனையும் காளமேகனையும் கைவசம் வைத்திருக்கும் நாம், வர்மநூலை எழுதியவனென்று பேர் சொல்லும்படியாக ஒரு பெரும்புலவனை அடையாளம் காட்ட முடியாத நிலையில் இருக்கிறோம் என்பது ஆற்றொணாத பெருங்குறை.
வர்ம சூத்திரம், வர்ம சூட்சுமம், வர்மப் பீரங்கி, வர்மக் கண்ணாடி என்று நமக்குக் கிடைத்துள்ள பலதரப்பட்ட வர்மநூல்களில் சில வர்மங்கள் ஒன்றுக்கொன்று முரணாக விளக்கப் பட்டிருப்பதும், சில வர்மங்கள் முற்றாக விடுபட்டிருப்பதும், சில இடங்களில் விருத்தங்கள் அரைகுறையாகவே காட்சியளிப்பதும், இந்த மாபெரும் கலைக்கு இழைக்கப்பட்டிருக்கும் களங்கம் என்றே கருதவேண்டியிருக்கிறது.
வள்ளுவனும் வர்ம நூலும்!
வள்ளுவன் காலத்தில்கூட வர்மம் மாண்புற்று விளங்கியிருக்க வேண்டும். அதற்கான சான்றுகள் திருக்குறளிலேயே போதிய அளவுக்குக் கிடைக்கின்றன. “நூல்” என்ற சொல்லைக் கையாளுகின்ற பெரும்பாலான இடங்களிலெல்லாம் வள்ளுவன் வர்மத்தையும் வைத்தியத்தையும் சுட்டிக் காட்டுவதாகத் தோன்றுகிறது. “ஏதிலார் நூல்” (குறள்: 440) என்றும் “நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று” (குறள்: 941) என்றும் எழுதுகிற வள்ளுவன், வர்மக் கலையையும் வர்ம நாடிகளையும் நேரடியாகவே சுட்டிக்காட்டுகிறான் என்பது கூர்ந்து நோக்கத் தக்கது. நமது வர்மச் சுவடிகளில் கூட “திறமான நூல் எவர்க்கும் வெளியிடாதே!” என்றும் “பொருள் வாங்கி நூலே ஈயே” என்றும் “நூல் தா என்று உன்னை ஏய்ப்பர்!” என்றும் காணப்படுகின்ற வரிகளில் “நூல்” என்ற சொல் நேரடியாக வர்மக் கலையைச் சுட்டிக்காட்டத்தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. எனவே வள்ளுவனும் அதே பொருளில் “நூல்” என்ற சொல்லைக் கையாண்டிருப்பதில் எந்த வியப்பும் இல்லை. ஒருவேளை வள்ளுவனே வர்மம் பற்றியும் ஓர் இலக்கியம் வடித்திருப்பானோ? நம் கைகளுக்கு அது கிடைக்காமற் போனதோ? யார் கண்டார்கள்!... மொத்தத்தில் வர்மக் கலையின் சூத்திரதாரியாக வள்ளுவன் உட்பட எந்தப் புலவனையும் சொந்தம் கொண்டாட முடியாத சோக நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருப்பது உண்மை.
தமிழ் இனம் செய்யவேண்டியது என்ன?
தமிழன் விழிக்க வேண்டும். வர்மக் கலையின் உன்னத சக்திகளை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். ஆற்றல் மிக்க அடல்மறவரும் ஆசான்மாரும் வர்மப் புலவோரும் ஒருங்குகூடி, ஓர் உலகப் பொது வர்ம நூலை இலக்கண வளத்தோடும் இலக்கிய வனப்போடும் யாத்து, அதை அன்னைத் தமிழாள் மலரடிக்கு அர்ப்பணிக்க வேண்டும். அந்தக் கடமையினின்று தமிழன் தவறிட நேர்ந்தால், சரித்திரத்திலே தமிழ்ப் புலத்தின் வெற்றிச் செருக்கிற்கோர் சறுக்கல் விளைந்திடும் அபாயம் உண்டு.
- தொ.சூசைமிக்கேல்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
வர்மம் - தமிழனின் தற்காப்புக் கலை
- விவரங்கள்
- தொ.சூசைமிக்கேல்
- பிரிவு: கட்டுரைகள்