மர்கெரித் த்யுரா / பிரெஞ்சிலிருந்து தமிழில்:நாகரத்தினம் கிருஷ்ணா

அவளை நிச்சயம் புரிந்துகொள்ள போவதில்லை. இத்தனைக்கும் தங்கும் விடுதியில், வீதியில் இரயிலில், மதுக்கடையில், புத்தகத்தில், திரைப்படத்தில், உங்களுக்குள்ளாகவே, உங்களிடத்தில், உன்னில், எதிர்பாராதவிதமாக குறி விரைத்துக்கொள்ள எங்கே வைப்பது அல்லது அதனிடத்தில் தத்தளிக்கும் கண்ணீரை எங்கே கொட்டித் தீர்ப்பதென தேடிய நேரங்களிலெல்லாம் ஏற்கனவே நீங்கள் கண்டவள்தான். அவளுக்கான ஊதியத்தை கொடுத்தும் இருப்பீர்கள்.

இனி தொடர்ந்து ஒவ்வொரு இரவும் அவசியம் வரவேண்டுமென சொல்லியும் இருப்பீர்கள். வெகுநேரம் உங்களைப் பார்த்திருத்துவிட்டு, அப்படியானால் அதற்குக் கூடுதலாகப் பணம் தரவேண்டியிருக்குமே, சம்மதமா? என்றிருப்பாள்.

அப்படி உங்க மனசிலே என்னதான் இருக்கு? - அவள்.

அதற்கு, இவ்வுடலை, முலைகளை, அதன் நறுமணத்தை, அதன் சௌந்தர்யத்தை, சந்ததிகளை உருவாக்கவென்று இவ்வுடல்படும் அவஸ்தைகளை விக்கினங்களில்லாத, பலத்தைப் பிரயோகித்திராத மாசுமருவற்ற இவ்வுடம்பை, அதன் முகத்தை, அதன் நிர்வாணத்தை, இவ்வுடம்பிற்கும் அதில் வாசமிருக்கும் ஜீவனுக்கும் நேர்ந்துள்ள பொருத்தத்தைச் சோதித்துப் பார்த்துவிட வேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும் கற்கவேண்டும், பழகவேண்டும் என்பதே என் விருப்பமென நீங்கள் சொல்வீர்கள்.

அவ்வுடம்பைப் பரிட்சித்துப் பார்க்கும் விருப்பம் ஒன்றிரண்டு நாட்களுக்கானதல்ல பலநாட்களுக்கானது என்பீர்கள்.

அநேகமாக பல வாரங்களுக்கு.அநேகமாக, வாழ்க்கை முச்சூடும்கூட. .

பரிட்சித்து பார்ப்பதென்றால்? - கேட்கிறாள்.

காதலிப்பது, உறவு கொள்வது - நீங்கள்.

ஏன் இது போதாதா? - அவள்

போதாது. இதுவரை அறிந்திராத அவ்விடத்தில் அதாவது விரிந்த யோனியில் நித்திரை கொள்ளவேண்டுமென்கிற அவா என்னிடத்தில் இன்னமும் நிறைவேற்றப் படாமலிருக்கிறது, எனவே போதாது. தவிரவும் அவ்வனுபவம் எப்படிப்பட்டதென தெரிந்து கொள்ளவும், உலகின் அக்குறிப்பிட்ட பிரதேசத்தை மாத்திரம் கண்ணீரில் நனைக்கவும் விருப்பம் - என்பீர்கள்.

உங்கள் பதிலைக்கேட்டு சிரிக்கிறாள்.

என்னிடத்திலும் அப்படிப்பட்ட ஆசை உங்களுக்கு உண்டென்று சொல்லுங்கள்? - அவள்.

ஆம். அப்படித்தான் சொல்லவேண்டும். ஆனால் குழப்பமாகயிருக்கிறது. அங்கும் பிரவேசித்துப் பார்த்திட ஆசை. சொல்லப் போனால் எனது வழக்கத்திற்கு மாறான கடுமையுடன். அதனிடத்தில் எதிப்புச் சக்தி கூடுதலென்று சொல்லக் கேள்வி, வெற்றிடத்தினும் பார்க்க வெல்வெட் திடமாய் எதிர்க்குமாமே. - நீங்கள்

அதற்கவள், தான் ஏதும் சொல்வதற்கில்லை, சொல்லவும் போதாது என்கிறாள்.

வேறு என்னென்ன நிபந்தனைகள் வைத்திருக்கிறீர்கள்? - அவள்

அதற்கு, அறுவடைக்குப் பிறகு, தானியக் கிடங்குகளிற் குனிந்துகுனிந்து கூன்போட்ட குடியானவப் பெண்கள், அயர்ந்து நித்திரை கொள்கிற நேரத்தில் அவர்களைத் தேடிவரும் ஆண்களிடம் மறுப்பதற்குத் திராணியற்று இணங்கிப்போவதைப்போல எதிர்ப்பேதும் காட்டாமல் உங்கள் காலடியில் உங்களின் விருப்பத்திற்குப் பணிந்தவளாக, அவளது முன்னோர்கள் காலத்துப் பெண்களைப்போலவே அவளும் வாய்மூடிக் கிடக்கவேண்டும் என்கிறீர்கள். அப்படிக்கிடக்கும் பட்சத்தில் கடவுளுக்காகத் தங்களை அர்ப்பணித்து வாழும் மத நம்பிக்கைக்கொண்ட பெண்களைப்போலவே அவளது உடம்பும் உங்களுடையதோடு இணைந்து, உங்கள் தயவில் ஜீவிக்க வாய்ப்புண்டு என்பது அவளுக்கான நன்மையென்றும், இனி உடம்பை எங்கே கிடத்துவது அல்லது எந்தப் பிளவினை நேசிப்பதென்கிற அச்சம் காலப்போக்கில் உங்களிடம் குறைவதற்கு வாய்ப்புண்டு என்பது உங்களுக்கான நன்மையென்றும் அவளுக்கு விளங்கப்படுத்துகிறீர்கள்.

அவள் உங்களை நேரிட்டுப் பார்க்கிறாள். அவ்வாறு பார்ப்பதை பின்னர் தவிர்க்கிறாள். வேறு திசையில் பார்க்கிறாள். இறுதியாக உங்களுக்குப் பதில்சொல்ல முனைகிறாள்.

அப்படியென்றால், அதற்கான ஊதியம் இன்னும் அதிகம், என்றவள், அத்தொகையையும் குறிப்பிடுகிறாள்.

நீங்கள் சம்மதிக்கிறீர்கள்.

ஒவ்வொரு நாளும் அவள் கட்டாயம் வந்தாக வேண்டும். ஒவ்வொரு நாளும் அவள் வருகிறாள். முதல் நாள் ஆடைகள் முழுவதையும் களைந்துவிட்டு நிர்வாணமாய், கட்டிலில் நீங்கள் கைகாட்டிய இடத்தில் நீட்டிப் படுக்கிறாள். அவள் ஆழ்ந்து உறங்குவதைப் பார்த்தபடி இருக்கிறீர்கள். வார்த்தைகளேதுமில்லை. ஆழ்ந்து உறங்குகிறாள். இரவு முழுக்க அவளை அவதானிக்கிறீர்கள். அந்தி சாய்ந்தவுடன் அவள் வரவேண்டும். அந்தி சாய்ந்தவுடன் அவள் வருகிறாள். இராத்திரி முழுக்க அவள் உறங்கியபடியிருக்க நீங்கள் கண்விழித்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இரண்டு இரவுகள் தொடர்ந்து அவ்வாறு பார்க்கிறீர்கள். அவ்விரு இரவுகளிலும் அவளிடத்திலிருந்து ஓரிரு வார்த்தைகள்கூட இல்லை. ஓர் இரவு மௌனத்தைக் கலைத்துக்கொள்ள தீர்மானித்தவள்போல, பேசுகிறாள்.

இவ்வனுபவத்தினை எப்படி உணருகிறீர்கள். உங்கள் உடம்பின் 'ஏகாந்தத்தைக்' குறைக்க உபயோகம் கண்டிருக்கிறேனா? எனக் கேட்கிறாள். அச்சொல் உங்களது இருப்பினை எப்படி அடையாளப்படுத்துகிறது என்பதை சரிவர புரிந்துகொள்ளவியலாத இக்கட்டில் நீங்கள். உங்கள்வரையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது போலவும் அல்லது தனிமைப் படவிருப்பது போலவும் குழப்பமான மனநிலை. எனவே அவளிடத்தில், என் இருப்பின் நிலைமையை நான் உன்னோடு இருக்கும் தருணத்திற்கு ஒப்பிடலாம், என்கிறீர்கள்.

அன்றிரவும் அப்படித்தான் நடுநிசியில் விழித்துக்கொண்டவள், வருடத்தின் எந்தப் பருவத்தில் நாம் இருக்கிறோமென வினவுகிறாள்.

குளிர்காலம் வரவில்லை, அதாவது இன்னமும் இலையுதிர் காலத்தில்தான் இருக்கிறோம். - நீங்கள்.

என்னமோ இரைச்சல் கேட்கிறதே? - அவள்.

கடல். - நீங்கள்

கடலா. .. . எங்கே? - மீண்டும் அவள்.

பக்கத்தில்தான், இவ்வறை சுவருக்கு மறு பக்கம்.

அப்பதிலுக்காகத்தான் காத்திருந்தவள்போல மீண்டும் உறக்கத்தில் ஆழ்கிறாள். இளம்பெண், இளமை பிராயத்தவள். அவளது ஆடைகளிலும் கூந்தலிலும் வாசம் ஏதேனும் இருக்கவேண்டும். அவ்வாசத்தினால் ஈர்க்கப்பட்ட நீங்கள் ஒருவழியாய் அது என்னவென்று கண்டறிந்து அதற்கான பெயரையும் தேர்வு செய்யவேண்டும், ஏதோ இதிலெல்லாம் உங்களுக்குத் தேர்ச்சியுண்டென்பதுபோல, அவ்வாறே செய்யவும் செய்கிறீர்கள். "சூரிய காந்தியும் எலுமிச்சையும் கலந்த மணம்" என்று நீங்கள் முடிவு செய்து அதை தெரிவிக்கிறீர்கள்.

அதற்கவள், எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள், என்ன பெயரிட்டும் அழைத்துக் கொள்ளுங்கள், என பதிலளிக்கிறாள். .

மற்றோர் இரவு, திட்டமிட்டபடி எல்லாம் நடக்கிறது, அவள் விரிந்த கால்களின் ஆரம்பத்தில், அவளது உடம்பைப் போலவே ஈரம் கண்டுள்ள யோனியில், திறந்துள்ள இடத்தில், முகம்வைத்து நித்திரை கொள்கிறீர்கள். மறுப்பேதுமின்றி அவளும் அதை அனுமதிக்கிறாள். மற்றோர் இரவு, தவறுதலாக போகத்தின் பரவசநிலைக்கு அவளை அழைத்துசென்று விடுகிறீர்கள், அவள் சத்தமிடுகிறாள்.

நீங்கள் அவளிடம் சத்தம் போடாதே என்கிறீர்கள். அவளும், இல்லை இனி சத்தமிட மாட்டேன் என்கிறாள்.

அதற்குப் பிறகு அவள் சத்தமிடவில்லை.

இனி உலகில் எந்தப் பெண்ணும் உங்களிடத்தில் இப்படிச் சத்தமிட்டு தானடைகிற இன்பத்தை வெளிப்படுத்தமாட்டாள். அக்குரலை இதுவரை உங்களுக்குக் கிட்டாத சந்தோஷமென்று நம்பி ஒருவேலை அவளிடத்திலிருந்து நீங்கள் அபகரிக்கும் முயற்சியோ என்னவோ நான் அறியேன். ஒருவேளை இப்படியும் இருக்குமா? அவளது சுவாசத்தின்போது அதாவது அவளது வாய்க்கும் வெளிக்காற்றுக்குமான பயண இடைவெளியில் வெளிப்படுகிற ஊமை முனகலேயன்றி, போகப்பரவசத்தினால் வெளிப்படுவது அல்லவென்று அக்குரலை நீங்கள் நம்புகிறீர்களோ என்னவோ, அதனையும் நான் அறியேன். உங்கள் நம்பிக்கை எதுவாயினும் எனக்கதில் உடன்பாடில்லை.

கண் விழித்தவள், நான் பாக்கியசாலி, என்கிறாள்.

அவள் பேசக்கூடாது என்பது போல, உங்களது கைகளால் அவள் வாயைப் பொத்துகிறீர்கள். இதற்கெல்லாம் வாய் திறக்கக்கூடாது என்கிறீர்கள்.
கண்களை மூடிக்கொள்கிறாள்.

இனி இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கமாட்டேன் - அவள்.

பிறகு, அவர்கள் இதுபற்றியெல்லாம் பேசுவதுண்டா, கேட்கிறாள். நீங்கள் இல்லை என்கிறீர்கள்.

வேறு என்னதான் பேசுவார்களென்று அவள் மீண்டும் கேட்கிறாள். நீங்கள், பேசுவதற்கு விஷயங்களா இல்லை, இதைத்தவிர எல்லாவற்றையும் பேசுவார்கள், என்கிறீர்கள்.

கேட்டுவிட்டுச் சிரித்தவள், மீண்டும் உறங்கிப்போகிறாள். சிலவேளைகளில் அறைக்குள்ளேயே கட்டிலைச் சுற்றி வருகிறீர்கள் அல்லது கடல் பக்கமிருக்கும் சுவர்களையொட்டி நெடுக்க நடக்கிறீர்கள். சில சமயம் கண்ணீர்விட்டு அழுகிறீர்கள். சில வேளை அறையைவிட்டு வெளியேறி பால்கனிக்கு வருகிறீர்கள். அங்கே இளங்குளிரில் நிற்கிறீர்கள். கட்டிலில் கிடக்கும் அப்பெண்ணின் உறக்கத்திற்கான பொருள் உங்களுக்கு விளங்கவில்லை.

இவ்வுடம்பிலிருந்து விலகிச் செல்ல உங்களுக்கு விருப்பம். பின்னர் பிறருடைய உடம்பிற்காகவோ அல்லது உங்களது உடம்பிற்காகவோகூட திரும்பவும் வரவேண்டுமென்பதும் உங்கள் விருப்பம், தவிர அழுது கண்ணீர் சிந்துவதைவிட இப்போதைக்கு அதுவொன்றே உங்கள் கடமையாகிறது.

அவள் அறைக்குள் இருக்கிறாள். உறக்கத்திலிருக்கிறாள். அவள் உறங்குகிறாள். அவள் உறக்கத்தை நீங்கள் கலைப்பதில்லை. அவள் உறக்கம்போலவே பொல்லாத நேரமும் நீள்கிறது. ஒருமுறை தரையிலேயே கட்டிலினுடைய கால்களையொட்டி நீங்களும் உறக்கம் கொள்கிறீர்கள்.
அவளிடத்தில் எப்போதும்போல மாறாத தூக்கம். நன்கு உறங்கிய நிலையில் அவள் இதழ்களில் குறுநகை. பொதுவாக அவளது உடலையோ, மார்பகங்களையோ, கண்களையோ நீங்கள் தீண்டினாலன்றி விழிப்பவளல்ல. சிலவேளை எங்கிருந்து இவ்வளவு இரைச்சல்? காற்றா, கடலில் வீசும் பேரலையா இரண்டில் எது காரணம்? என கேட்பதற்காக விழித்துக் கொள்வதுண்டு. சிலவேளை காரணங்களின்றியும் விழித்துக் கொள்கிறாள்.
அப்படியொருமுறை விழித்துக் கொண்டவள், உங்களை சிலநொடிகள் அவதானிக்கிறாள். பின்னர் நோய் மேலும் மேலும் பரவிக் கொண்டிருக்கிறது உங்கள் கண்களும், குரலும் பாதிக்கபட்டுள்ளன, என்கிறாள்.

என்ன நோய்? கேட்கிறீர்கள்.

அதைத் தெளிவாகச் சொல்ல இன்னமும் எனக்குப் போதாது - என்பது அவளது பதில்.

அடுத்தடுத்த இரவுகளில் அவளது இருண்ட யோனிக்குள் பிரவேசிக்கிறீர்கள். இப்படியொரு குருட்டுத்தடத்தில் செல்லவேண்டியிருக்குமென தெரியாமலேயே அதனை தேர்வு செய்திருக்கிறீர்கள். எந்த நேரத்திலும் உங்கள் இருவரில் ஒருவரால் எதேச்சையாக நடக்கவிருக்கும் இயக்கத்திற்கோ, மீண்டுமொருமுறை உங்களுடைய இச்சையை அவளிடத்தில் பூர்த்தி செய்து கொள்ளவேண்டியோ, அவ்விடத்தை மீண்டும் தூர்க்கவோ, அல்லது கண்களில் நீர் தளும்ப பரவசத்திற்காகவென்று சம்போகிக்கவோ உபகாரம் செய்யும் விதத்தில் சில வேளைகளில் இங்கேயே, அவ்விடத்திலேயே நீங்கள் தங்கிவிடுகிறீர்கள், உறங்கிப்போகிறீர்கள், இன்னும் சொல்லப்போனால் இரவு முழுக்கக் காத்திருக்கிறீர்கள்.
அவளுக்கு உங்கள் செய்கைகளில் இணக்கம் இருக்கிறதோ இல்லையோ கடனேயென்று இருக்கிறாள். அவள் உள்ளக்கிடக்கையை சரியாக அனுமானிப்பதென்பது இயலாததாக இருக்கிறது. இதுவரை உங்களால் அறியப்பட்டுள்ள அவளது புற சமிக்ஞைகளைக் காட்டிலும், மிகவும் புதிராகத்தான் இருக்கிறாள்.

இவ்வுலகம் குறித்து, உங்களைக் குறித்து, உங்கள் உடம்பு குறித்து, உங்கள் ஆன்மா குறித்து, உங்களைப் பீடித்திருப்பதாகச் சொல்லப்படும் நோய் குறித்து அவளது பார்வை என்ன, அவளது கருத்து என்ன என்பதை அறிகிற வாய்ப்பினை உங்களுக்கோ அல்லது வேற்றுமனிதர்களுக்கோ அவள் தரப்போவதில்லை. ஏன் அவளுக்கேகூட அதுகுறித்துத் தெரியாது. அதனைத் தெரிவிக்கும் வகையும் அவள் அறியாள், எனவே அவளிடத்திலிருந்து எதையாவது அறிவதென்பது ஆகாத காரியம்.

எத்தனை யுகங்கள் எடுத்துக் கொண்டாலும்சரி நீங்களோ அல்லது வேறொருவரோ உங்களைப் பற்றியும், இவ்விவகாரங்கள் பற்றியும் அவள் மனதில் உள்ளது என்ன? என்பதை ஒருபோதும் அறிய மாட்டீர்கள். உங்கள் உயிர் வாழ்க்கை குறித்த மறதிக்கு யுகக் கணக்கில் வயதிருக்கலாம், அத்தனையிலும் அவள் மனதில் உள்ளது என்னவென்பதை ஒருவரும் அறிந்திருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை, அவளுக்கும் அதனைத் தெரிந்துகொள்ள போதாது.

யாதொரு விபரமும் உங்களுக்கு அவளைப்பற்றித் தெரியாதென்பதால், உங்களைக் குறித்தும் யாதொன்றும் அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லையென நீங்கள் சொல்லக்கூடும். அப்படியான உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளும் உத்தேசமும் உங்களுக்கு இல்லாதிருக்கலாம்.

Pin It