திரைகடல் ஓடித் திரவியம் தேடப் புலம்பெயர்ந்து வளைகுடா சென்ற ஆசிய குறிப்பாக இந்தியர்களின் வாழ்நிலைப் பற்றிய கதைகளை 2015ல் வெளிவந்த “பத்தேமாரி” என்ற மலையாளத் திரைப்படத்தின் இறுதிக் காட்சியிலிருந்து தொடங்கலாம். வளைகுடா வாழ்வியல் குறித்த நினைவுகளை சில மலையாளத் திரைப்படங்கள் பதிவு செய்துள்ளது. குறிப்பாக 1960களில் “கள்ளத்தோணி” என அழைக்கப்படும் பாய்மரக் கப்பல்கள் வழியாக கேரளாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குக் குறிப்பாக துபாய்க்குச் சென்ற இளைஞர்கள் குறித்த திரைப்படமே “பத்தேமாரி”. பாய்மரக் கப்பலைக் குறிக்கும் மலையாளச் சொல்லே பத்தேமாரி. 2007ல் “தமிழ்க்கொடி” என்கிற புலம்பெயர் தமிழர்கள் வாழ்வு குறித்த சிறப்பிதழுக்கு எழுதிய கட்டுரையின் தலைப்பு “பணம் தேடிச் செல்லும் பாய்மரங்கள்” என்பது இத்திரைப்படப் பாதிப்பில் வைக்கப்பட்டத் தலைப்பே.

 உண்மையில் புலம்பெயர் வாழ்வு என்பது இத்திரைப்படத்தில் வரும் “உடல்தான் இங்கு உள்ளம் ஊரில்தான் உள்ளது” என்ற வசனத்தைப் போன்றதுதான். உடல் புலம்பெயர் நிலத்திலும், உள்ளம் ஊரிலும் கிடந்து தவிக்கும் ஓர் இருமை வாழ்வின் உளவியல் வன்முறைக்கு உட்பட்ட வாழ்வு அது. ஓர் உடல் பணமாக மட்டுமே மதிப்பிடப்படும் ஒரு வாழ்வு. முதலாளியம் மனித உறவுகளை ரொக்க-பட்டுவாடா உறவாக மாற்றிவிடும் என்று மார்க்சியம் கூறியதன் சாட்சியம் அது. அதற்குச் சொந்தம் பந்தம் உற்றார் உறவு எல்லாம் பணம்தான். அது கொண்டுவந்து தரும் பளப்பளப்பான வாழ்க்கைதான் தாய்மண்ணில் உள்ளவர்களுக்கு முதன்மையானது. பிழைப்பிற்காகப் புலம்பெயர்ந்த உடல்களுக்கு ஒரு உயிர்த்தல் உள்ளது, வாழ்தல் உள்ளது என்பதெல்லாம் இரண்டாம்பட்சமே. பெரும்பாலும் அவை உழைப்பு எந்திரங்களாக மாற்றப்படுகிறது. அதன் உழைப்புச்சக்தி அதிக இலாபத்திற்கு விற்கப்படுகிறது. அதன் சந்தை மதிப்பு தாயகத்தைவிடப் புகலிடத்தில் அதிகமானதாக உள்ளது. மதிப்பு மட்டுமின்றி அவ்வுடலின் உழைப்பை உறிஞ்சுவதற்கான பணிகளும் அங்கு அதிகமாக உள்ளது. தாயகத்தில் தன்னை மறுஉற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் குடும்ப நிறுவனங்கள் வழி நிகழ்கிறது. ஆனால், புகலிடங்களில் தன்னைத் தானே மறுஉற்பத்தி செய்துகொள்ள வேண்டிய பணிச்சுமையும் கூடிவிடுகிறது. உற்பத்தி, மறுஉற்பத்தி என்ற இரண்டு களங்களிலும் ஓர் உடல் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டிய நிலையே உள்ளது.

புலம்பெயர்வும் மார்க்சியமும்

மனித உடலை வெற்று உழைப்பு எந்திரங்களாகக் கருதி உலக அளவில் பல்வேறு நாடுகளின் மனிதர்களைத் தங்களது தேவைக்காக வேறு நாடுகளுக்கு இடப்பெயர்த்து செல்வது என்பதே புலம்பெயர்தல் என்ற நிகழ்விற்கான அடிப்படை. இது மனித குலத்தின் தோற்றம் தொடங்கி நிகழும் ஒன்று. நிலவுடமை சமூகத்தில் மதங்களால், போர்களினால் இந்த இடப்பெயர்வு நிகழ்ந்ததை வரலாற்றில் வாசிக்க முடியும். பைபிளின் நோவா, ஆப்ரஹாம், மோசஸ், குர்ரானில் முகமது நபி தொடங்கி இந்தப் புலப்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளது. இத்தகைய புலப்பெயர்வுகள் தொன்மங்கள் அடிப்படையில் நிகழ்ந்தன. நவீன காலங்களில் முதலாளியத்தின், காலனியத்தின், இனவெறி, நிறவெறி, மதவெறி அரசியல் அடிப்படையில் நிகழும் ஒன்றாக இது மாறியுள்ளது. வளைகுடா போன்ற செல்வம் கொழிக்கும், வளர்ந்த நாடுகள் நோக்கிப் புலம் பெயர்தல் என்பது கட்டாயத்தின் பேரினால் அல்லாமல், விருப்பத்தின் அடிப்படையில், தாயகத்தின் வறுமை, வேலையின்மை அடிப்படையில் நிகழ்கிறது. தாயகம் கைவிட்டநிலையில் புகலிடத்தில் அடைக்கலமாதல் நிகழ்கிறது.

ஒரு மனித உடலின் உழைப்புச் சக்தியை அதிக விலைக்கு விற்கும் சந்தையாக இப்புலம்பெயர்தலின் அரசியல் பொருளாதாரம் அமைந்துள்ளது. ஒரு மனித உடலின் அரசியல் பொருளாதாரம் என்பது அதன் உழைப்புச் சக்திக்கான மதிப்பு, விலை, இலாபம் என்பதற்குள் அடக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் படைக்கப் பிறந்தவர்கள் என்பதை ஆளும் அதிகார வர்க்கம் உழைக்கப் பிறந்தவர்களாக மாற்றியுள்ளது. அடிப்படையில் மனிதர்களின் படைப்பாக்கமாக உள்ள உள்ளுறைந்த ஆற்றலை அதாவது “ஆன்மீக” உள்ளடக்கத்தை முழுக்க உழைப்பிற்கான ஆற்றலாக அதாவது வெறும் உழைப்புச் சக்திகளாக மாற்றி ஒரு குறிப்பிட்ட ஆளும் வர்க்கம் பயன்படுத்துவதே வரலாறாக உள்ளதை மார்க்சியம் சுட்டிக் காட்டியது. ஆன்மீகம் என்பதைப் படைப்பாற்றல் என்பதாக மார்க்சியம் மாற்றீடு செய்தது. அதிலிருந்தே அதன் அந்நியமாதல் என்கிற கருத்தாக்கம் உருவானது. தனது உழைப்பின் மூலம் விற்கப்படும் அல்லது உறிஞ்சப்படும் உழைப்புச் சக்தியின் பண மதிப்பே இந்தப் புலம்பெயர் வாழ்வைத் தீர்மானிப்பதாக அமைந்துள்ளது.

மார்க்சியம் முன்வைக்கும் ஆன்மீகம் என்பது இறை, அப்பாலை உலகு, விதிவாதம், மோட்சம் உள்ளிட்ட ஆளும் வர்க்கக் ஆன்மீகக் கருத்தியலுக்கு மாற்றாக ஒரு படைப்பூக்கம் மிக்க மனிதர்களை உருவாக்குவதே. ஆனால், முதலாளியம் மனித உடல்களை வெறும் உழைப்பு எந்திரங்களாக மாற்றுகிறது. ஒரு உடலின் ஆற்றலை, உயிர் வாழ்வதற்கான உழைப்பும், உயிர்த்தலுக்கான படைப்பும் மிக்கதாக மாற்றவேண்டும் என்பதே மனித உடல் குறித்து மார்க்சியம் முன்வைக்கும் புரிதல். அதற்கான வேலைத்திட்டமே புரட்சிகர மாற்றம். அது புறத்தில் மட்டுமல்லாமல் அகத்திலும் நிகழ வேண்டும். அகத்தில் மாற்றம் வரப் புறநிலையில் மாற்றம் தேவை என மார்க்ஸ் அதைக் குறிப்பிட்டார் வாழ்நிலைதான் உணர்வை தீர்மானிக்கிறது என்றார். அத்தகைய படைப்பூக்கமிக்க மனித தன்னிலையை அகநிலையில் உருவாக்கும் புறநிலைச் சமூகமே பொதுவுடமை சமூகம். மார்க்சியம் புராதன சமூகத்தை பொதுவுடமை சமூகம் என்றதன் பொருள் அதுதான். அச் சமூகத்தில் சொத்துடமை அற்ற, அனைத்தும் பொதுவுடமை என்றும் உழைப்பே ஒரு படைப்பிற்கான செயல்பாடாகவும் அமைந்துள்ளதை நுட்பமாக விளக்கியது. மார்க்சியத்தை ஓர் அரசியல் கோட்பாடாக மட்டும் கருதாமல், மனித தன்னிலையை மாற்றி ஒரு புதிய படைபூக்கமிக்க மனிதர்களாக மாற்றுவதே அதன் அடிப்படை என்ற புரிதல் அவசியமானது. இந்த புரிதலற்றதாக மார்க்சிய கோட்பாடுகளும், கட்சிகளும் மார்க்சியத்தை ஒரு வறட்டு சூத்திரமாக மாற்றியுள்ளது என்பதே வரலாற்று அவலம். புலம்பெயர் மனித உழைப்பு என்பது இரட்டை அந்நியமாதலுக்கு (double alienation) உட்பட்ட உழைப்பு. ஒன்று, படைப்பூக்கமற்ற உழைப்பால் முழுமையை உணரமுடியாத எந்திரத்தனமான உழைப்பால் உருவாகும் அந்நியமாதல். மற்றது, தனது உழைப்பு தனது தாயகத்தில் அல்லாத ஒரு புகலிடத்தில் நடைபெறுவதால் உருவாகும் அந்நியமாதல்.

புலம்பெயர் வாழ்வு என்பது புகலிடம் X தாயகம் என்கிற இருமை எதிர்வின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட மனித உடல்கள் பற்றியது. அதன் உளவியல் இந்த முரணில் இயங்கும் உளவியலால் உருவாகும் வன்முறையால் கட்டப்பட்டது. புகலிட வாழ்வு என்பதே அடிப்படையில் வன்முறை சார்ந்த வாழ்வு. இந்த வன்முறை ஒழிய வேண்டும் என்றால், தேசமற்ற ஒரு சர்வதேசிய அமைப்பாக இந்த உலகு மாறவேண்டும். தேசம் என்ற கருத்தியல் உள்ளவரை புலம்பெயர்தல் என்ற கருத்தாக்கம் உயிர்ப்புடன் இருக்கும். புகலிடம் X தாயகம் என்கிற முரண் ஒழிய இந்த உலகமே தாயகமாக அனைவருக்கும் மாறவேண்டும். அந்த வகையில் மார்க்சியம்தான் முதன்முதலாகச் சர்வதேசம் என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்தது. மற்ற கருத்தியல்கள் முன்வைத்த சர்வதேசம் என்பது ஒரு பேரரசிற்கான அடிமைகளாக உலக மக்களை மாற்றுவதற்கான திட்டமே. அதனால்தான் மார்க்சியம் தேசமற்ற ஓர் சர்வதேச உலகைப்பற்றிப் பேசுகிறது. அது இன்றைய உலகமயத்திற்கு எதிரானது. உலகமயம் ஓர் உலகமயக் குடிமகன் என்ற பெயரில் உலகளாவிய முதலாளியத்திற்கும், அதன் ஏகாதிபத்திய முகவர்களுக்கும் சேவை செய்யும் ஒரு உலகளாவிய உழைக்கும் தன்னிலையை கட்டமைக்க முயல்கிறது. மார்க்சியம் படைப்பாற்றல் உள்ள மனித தன்னிலையை உருவாக்குவதன் மூலம் மனிதர்களை உலகமயப்படுத்த முனைகிறது. தேசியங்களின் உரிமையை மதிக்கும் மார்க்சியம், அத்தேசியங்களைப் பல்வேறு தேசியங்களின் கூட்டமைப்பிற்குள் கொண்டு வருவதையே சர்வதேசியம் என்கிறது. இது விரிவாக உரையாடப்பட வேண்டிய கருத்து என்பதைச் சொல்லி வளைகுடா வாழ்வில் இந்தப் புலம்பெயர் மனித எந்திரங்கள் எப்படி இயங்குகின்றன என்பதைத் தொடரலாம்.

வளைகுடா உருவாக்கமும் புலம்பெயர்வும்

வளைகுடா நாடுகள் என்பது பாரசீக வளைகுடாவை சுற்றியுள்ள பஹ்ரைன், குவைத், ஈராக், ஓமன், கத்தார், சவுதி அரேபிய மற்றும் ஐக்கிய அமீரக நாடுகள் எனப்படும் அபுதாபி, துபாய், சார்ஜா, ராசல் கைமா, புஜைரா, அஜ்மான் ஆகிய கூட்டமைப்பு நாடுகளைக் குறிக்கும். 1960களில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணைவளமே இந்நாடுகளைச் செல்வம் கொழிக்கும் நாடுகளாக மாற்றியது. அன்றுமுதல் இந்நாடுகளைச் சர்வதேசத் தரம் மிக்க நாடுகளாக உருவாக்கியதில் ஆசிய, ஆப்பிரிக்கர்களுக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால், நாட்டின் வளங்களை சுரண்டிக் கொழிப்பது அமெரிக்க, ஐரோப்பிய வல்லரசு நாடுகளே. அவர்கள் உலகப் புவியியலையும், வரலாற்றையும் உருவாக்கியதற்குப் பின்னிருப்பது இந்த சுரண்டல் அமைப்பே. அவர்கள் புதிய நாடுகளைத் தேடியது இயற்கை மூலவளங்களைக் கொள்ளையிட மட்டுமல்ல. இயற்கையாக அமைந்த மனித உடல்களின் உயிராற்றலை உறிஞ்சிச் சுரண்டவும்தான். அதன் விளைவாக உருவாக்கப்பட்டதே “புலம்பெயர்தல்” என்ற கருத்தாக்கம். இது இரண்டு வகையானது.

ஒன்று, வாழவழியற்ற நிலையில் பிழைப்பிற்காகத் தேடிச் சென்று வாழத்தொடங்கும் புலம்பெயர்வு. இதனை “தன்னிச்சையான புலம்பெயர்வு (voluntary migration)” என்பார்கள். இரண்டு வாழவழியற்ற நிலையில் உயிர்பிழைப்பிற்காக நிகழும் புலம்பெயர்வு. இதனை “கட்டாயப் புலப்பெயர்வு” (forced migration)” என்பார்கள். வளைகுடா நாடுகளை நோக்கிப் போனவர்கள் முதல் வகையினர். இரண்டாம் வகையினர் ஈழம், பாலஸ்தீனம் போன்ற நாடுகளிலிருந்து தப்பிப் பிழைத்து தஞ்சம் புகுந்தவர்களைக் குறிப்பது.

வளைகுடா நாடுகளுக்குப் புலம்பெயர்தல் 1960களில் துவங்கி 70களில் அதிகரித்து 80 களில் உச்சமடைகிறது. பெரும்பாலும் இந்தியர்களே எண்ணிக்கையில் அதிகம். குறிப்பாக தென்னிந்தியர்கள். அதிலும் மலையாளிகள், தமிழர்கள், தெலுங்கர்களே அதிகம். 1935ல் வளைகுடா எண்ணை நிறுவனமான BAPCO (Persian Oil Company) இந்திய தொழிலாளிகளை பணிக்கு அமர்த்தியதில் தொடங்குகிறது. தற்கால வளைகுடா புலம்பெயர்வு. 2015ன் கணக்குப்படி 2. 5 கோடி இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் இருப்பதாக இந்திய அரசின் அயல்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. வளைகுடா நாடுகளின் வாழ்வியல் என்பது பெரும்பாலும் கட்டுப்பாடுகள் உள்ள சவுதி அரேபியாவிலும், ஓரளவு தாராளவாத அடிப்படையில் இயங்கும் அமீரகத்திலும்தான்.

இப்படிப் புலம்பெயர்ந்த ஆசிய, ஆப்பிரிக்க மக்களின் உடலைப் பிழிந்து அவர்களது உயிராற்றலை உறிஞ்சிப் பெரும் மாடமாளிகைகள், கூடகோபுரங்கள், சூப்பர் மாரக்கெட்டுகள், மால்கள், அரசின் பிரமாண்ட அலுவலகங்கள் என அந்நாடுகளின் உள்கட்டுமானம் உருவாக்கப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த சாலைகள், போக்குவரத்துகள் தொடங்கி அங்கு கட்டப்பட்டுள்ள அடிப்படைக் கட்டுமானங்கள்வரை அனைத்தும் உருவாக்கியது புலம்பெயர் ஆசிய ஆப்பிரிக்க மக்களே. நவீன வாழ்வின் வசதிகளை நுகர்வதற்கான உடல் உழைப்பு அனைத்தும் தந்தவர்கள் இந்திய குறிப்பாக தமிழர்கள் மற்றும் மலையாளிகள். ஐரோப்பிய நாடுகளின் மாதிரிகளைப்போல அந்நாடுகளை உருவாக்கியதில் புலம்பெயர்ந்த எண்ணற்றத் தென்னிந்தியர்களின் இரத்தமும் வியர்வையும் கலந்துள்ளது. வளைகுடா நாடுகளின் உருவாக்கம் என்பதன் பின்னுள்ள உடலரசியல் பொருளாதாரம் இதுவே. இது உருவாக்கிய வளைகுடா வாழ்வியல் என்பது சோகமும், துயரமும் நிறைந்த ஒன்று.

வளைகுடா வாழ்வியல்

இவ்வாறு, அமீரகம் நவீனக் கட்டுமானங்களை உருவாக்கிய ஒரு காலத்தில்தான் “பத்தேமாரி”த் திரைப்படத்தின் நாயகன் நாராயணன் (மம்முட்டி) துபாய்க்க்கு கள்ளத்தோணியில் போய் பொருளீட்டத் தொடங்குகிறான். ஒருவேளை உணவுக்கூட கிடைக்காத தனது குடும்பத்தை, தனது சகோதரிகளைக் காப்பாற்றுவதற்காக. உழைத்து, உழைத்துக் குடும்பத்தின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுகிறான். ஒருகட்டத்தில் வளைகுடா வாழ்வில் சலிப்படைந்து ஊரில் தங்க வேண்டும் என்ற அவனது ஏக்கம் வெற்று ஆசையாகப் போகிறது. துபாய்காரன் மனைவி என்ற பட்டத்தைவிடத் தயாரற்ற மனைவி, திருமணம் செய்து கொடுத்த பின்னும் சகோதரிகளின் தேவைகள், அவர்களது பிள்ளைகள் திருமணம் என அனைத்தையும் முடிக்க வேண்டிய நெருக்கடி பெருகுகிறது. தனது சொந்த வீட்டை சகோதரியின் மகள் திருமணத்திற்கு எழுதித் தந்துவிட்டு, தன் வீட்டிற்குக் தானே வாடகை கொடுக்கும் நிலைக்கு இறங்க வேண்டிய அவலநிலை. பெற்ற பிள்ளைகள்கூட அவனை ஒரு பணம் தரும் எந்திரமாக, தங்களது ஆசையை நிறைவேற்றும் ஒரு கருவியாக மட்டுமே பார்க்கிறார்கள்.

நவீன உலகின் மதம் முதலாளியம் என்றால், அதன் கடவுள் பணம். அது மனிதத் தன்னிலையை எப்படி மாற்றியமைக்கிறது என்பதை இத்திரைப்படம் ஓர் அனுபவமாக மாற்றுகிறது. எப்படியோ கடின உழைப்பின் வழியாகத் தனக்கு என்று ஒரு சொந்த வீடு கட்டுகிறான். வீடு முடிந்த நிலையில் ஒருநாள் பிழைப்பேகிப் போன புலம்பெயர் நாட்டிலேயே இறந்துவிடுகிறான். இறந்த உடல் ஊருக்கு வந்தபின், அவ்வுடலைச் சொந்த வீடு புதிது என்பதால் முதன்முதலான அதற்குள் பிணத்தை வைக்க முடியாது என்று அவனது பிள்ளைகள் வெளியில் வைத்தே சடங்குகளை நடத்தி பின் புதைக்கிறார்கள். அவனது கனவான சொந்தவீட்டில் வாழ்வது என்பது பிணமான பின்னும் நிறைவேறவில்லை. அதன்பின் அவனது நேர்காணல் ஒன்று தொலைக்காட்சியில் வருகிறது. அந்த இறுதிக்காட்சியில் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்க தனது பாடுகள் அனைத்தும் ஒரு பொருட்டல்ல, மற்றொரு ஜென்மம் இருந்தால் அதிலும் அவ்வூரில் பிறக்கவே ஆசைப்படுவதாகக் கூறுகிறான். அவனது சுகதுக்கங்களில் பங்குபெற்ற மொய்தீனின் நண்பனாக இருப்பதே தனது ஆசை என்றும் கூறுகிறான். இந்த நேர்காணலைக் கேட்ட அவனது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்வதுடன் முடிகிறது திரைப்படம்.

இக்கட்டுரை எந்த மனநிலையில் எழுதப்பட வேண்டுமோ அதை அத்திரைப்படம் உங்களுக்குக் கடத்திவிடக் கூடியதாக அமைந்துள்ளது. குடும்ப நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு சராசரி மனித உடலின் வேட்கை என்பது அக்குடும்ப நலனைச் சுற்றி மட்டுமே கட்டப்படுகிறது என்பதை காட்சிப்படுத்தி அதன் துயரத்தை உணரும்படிச் செய்கிறது. இதைதான் இந்திய புராணங்கள், தொன்மக் கதைகள் நவீனக் கதைகள் அனைத்தும் நிறுவ முயல்கின்றன. குடும்பம் என்பது ஓர் அரசின் தனித்ததொரு, தன்னிச்சையாகத் தோற்றம் தரும் ஓர் அலகு. அதிகாரத்தின், ஆதிக்கத்தின் தொடக்கம், குடும்ப நிறுவனத்திலிருந்து மாபெரும் அரசு எந்திரத்தின் நிறுவன வடிவம் வரை செயல்படக்கூடியதாக உள்ளது. ஓர் உடலை அதிகாரத்திற்கும், அரசுக்கும் ஏற்ப ஒழுங்கமைக்கும் ஒரு நிறுவனம் குடும்பம். லூயி அல்தூஸர் என்ற பிரெஞ்சு மார்க்சியவாதி குடும்பம் என்பது ஒரு கருத்துருவ அரசு எந்திரம் என்று வரையறுத்தார். வளைகுடா போன்ற நாடுகளுக்குப் பிழைப்புதேடிச் செல்லும் புலம்பெயர் வாழ்விற்கான அடிப்படைகள், இந்த குடும்ப நிறுவன அமைப்பை உற்பத்தி செய்வதிலும், ஏற்கெனவே உள்ளதை மறுஉற்பத்தி செய்வதிலுமே உருவாக்கப் படுகிறது.

வளைகுடாவில் 26வது வயது முதல் 53 வயதுவரை வாழ்ந்தவன் என்றமுறையில் அத்திரைப்படம் எனக்கு ஏற்படுத்தும் ஓர் அணுக்கமான உணர்வை, தாயக மண்ணில் இருந்து பார்ப்பவர்களுக்கு எற்படுத்தாது. நாயகனின் பணிகள்தான் வேறு, பாடுகள் ஒன்றுதான். புலம்பெயர் வாழ்வனுபவத்தை ஒரு புனைவாக்கமாகச் சொல்லாமல், அதன் வலியை, துயரத்தை, அது தரும் சின்னச் சின்ன மகிழ்வை எளிதாகக் கடத்திவிட முடியாது. காரணம் எந்த ஒன்றைச் சொல்வது என்றாலும், அது மொழியின் எல்லைகளைத் தாண்டி, அதன் குறியமைப்பைத் தாண்டி க்கடத்திவிட முடியாது. சொல்பவரும் கேட்பவரும் ஒரே குறியமைப்பிற்குள் அல்லது ஒரே அலைவரிசையில் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

இதில் வரும் நாராயணனின் வாழ்வை ஒத்த எனது ஊரைச் சேர்ந்தவர் ஒருவர் இருந்தார். அவருக்கு நான்கு சகோதரிகள். ஊரில் தறி நெசவில் ஈடுபடும் குடும்பம். ஒவ்வொரு தங்கையாக திருமணம் முடித்து அவரும் திருமணம் செய்துக் கொண்டு மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றார். அவரது இறுதி தங்கைக்குத் திருமணம் முடித்தப் பிறகு அவரது முதல் மகள் பெரிய பெண்ணாகி விட்டார். அவரை நாங்கள் “என்ன தலைவரே தங்கைகள் முடிந்து அடுத்து மகள்களின் புராஜக்ட் தொடங்கி விட்டதா?” என்று கிண்டலாக கூறுவோம். இரவு பகல் பார்க்காமல் பணி செய்வார். அவரை அறையில் காண்பதே கடினம். நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருப்பார் திடீரென ‘லோடு’ வந்து விட்டது என்று அவரைத்தான் அழைப்பார்கள். ‘ஓவர்டைம்’ என்று சளைக்காமல் பணிக்குப் போவார். அவரது மூன்று பெண்களைத் திருமணம் செய்துக் கொடுத்த பிற எப்பொழுது அவர் மனைவியோடு ஊருக்குப் போய்ச் சேர்ந்தார் என்றே தெரியவில்லை. வளைகுடா வாழ்வில் மனைவி, குழந்தைகள் குடும்பத்தை பிரிந்து வாழும் சோகம் எழுத்தில் கூறமுடியாத ஒன்று. ஓர் உடலை முழுக்க உழைப்புக்கும், உழைப்பிற்கு பின்னாலாலன ஓய்வு எனும் வகையில் ஒடுக்கப்பட்ட பாலுந்தத்திற்கும் மட்டுமே கொண்டதான ஓரு வாழ்க்கை அது. மனிதர்களின் அடிப்படை இயல்புணர்ச்சிகளான பசி, பாலுறவு இரண்டு மட்டுமே கொண்டு இயங்கும்ஒரு வெறுமையான வாழ்வு அது. தனது அனைத்து மகிழ்விற்கான உந்தங்களையும் தாயகம் திரும்பியபின் ஓர்நாள் வாழ்ந்து கழித்துவிடலாம் என அவற்றை ஒடுக்கிக் கொண்டு வாழும் வாழ்க்கை.

வளைகுடா என்ற மரணச் சுழலில் சிக்கிய பலருக்கு அதிலிருந்து மீள்வது கடினம். அதேநேரத்தில், நல்ல தொழில்முறை விற்பன்னர்களாக உள்ள சிலர் வளைகுடாவில் குடும்பம், கார், பிள்ளைகள் படிப்பு என தாயகத்தைவிடச் செல்வச் செழிப்புடன் வாழ்பவர்களும் உள்ளனர். தொழிலுக்காக, வருமானத்திற்காக புலம்பெயர்ந்தோர் வாழ்வில் இப்படியானவர்களைவிட தொழிலாளிகளாக, கூலிகளாக, உடல் உழைப்பாளர்களாக உள்ளவர்களே பெரும்பான்மை. ஒருபுறம் வளைகுடா வசந்தமாக இருந்தாலும், மற்றொருபுறம் அது ஒரு வறண்ட பாலைவனம் என்பது புலம் பெயர்ந்தவர்களின் வாழ்விலும் உள்ளது என்பதே நிதர்சனம். அதேநேரத்தில் பணிபுரியும் நிறுவனத்தில் கல்லாவில் கைவைத்துக் காசு சேர்ப்பவர்கள், சரக்குகளைக் கணக்கில் கொண்டு வராமல் கைமாற்றித் தந்து பணம் ஈட்டுபவர்கள் என்ற வகையினரும் உள்ளனர். இப்படியானவர்களுக்கே வளைகுடா வசந்தமாக உள்ளது.

வளைகுடா வசந்தமும், தொலைதூரத் தேசியமும்

வளைகுடாவில் ஈட்டிய பணம், பெரும்பகுதி தாயகத்திற்கான அந்நிய செலாவணியை அதிகரிக்கச் செய்கிறது என்பது முக்கியம். தேசபக்தி பேசும் தாயகத்தில் உள்ளவர்களைவிட அதீத தேசபக்தி கொண்டவர்களாக புலம்பெயர்ந்தவர்கள் உள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக இதனை Distant nationalism (தொலைதூரத் தேசியம் என்று கூறலாம்) என்பார்கள். இத் தேசபக்தியால் வளைகுடாவில் வாழ்பவர்கள் பெரும்பாலும் தங்கள் தாயகத்தின்மீதான குருட்டு பக்திக் கொண்டவர்களாக இருப்பார்கள். இதன்மூலம் உருவாகும் தாயக ஏக்கம் (nostalgic) தனது தாயகப் பண்பாட்டு விழாக்களின் மீட்பாகவும், சடங்கு, வழிபாடு ஆகியவற்றின்மீதான அதீத ஈர்ப்பாகவும் மாறுகிறது. நவீன சமூகத்திற்குள் ஒரு முன்நவீனத்துவ பழமைவாதிகளாக, பண்பாட்டுக் காவலர்களாக இவர்களது உளவியல் செயல்படுகிறது. குறிப்பாக, ஓணம், தசரா, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவதும், பாரம்பரிய உடைகள் அணிவதை ஒரு மகிழ்விற்கான, பகிர்தலுக்கான ஒன்றாகக் கொண்டாடுவதும் இயல்பானதாகக் காணலாம். பண்பாட்டு பழமைவாதிகளாக இவர்கள் இருப்பதன் பின்னணி ஒரு கற்பிதமான தாயகத்தை (imagined homeland) தங்களது புகலிடத்தில் உருவாக்க முனையும் செயல்பாடாகக் காணமுடிகிறது. இது தாயகத்தின் அரசியலில் பெரும் தாக்கத்தை உருவாக்குவதாக மாறுகிறது. பண்பாட்டுப் பழமைவாத அரசியல் அமைப்புகளின் வளர்ச்சியில் இந்த உளப்போக்கு பெரும் பங்கு வகிக்கிறது. இது தாயக மதம், சாதிய, இன அடிப்படைவாத சக்திகளின் வளர்ச்சிக்கு பங்களிப்பதாக மாறுகிறது.

வளைகுடா நாடுகளில் வியாழன், வெள்ளி விடுமறை நாள்கள் என்பதால், ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு நண்பர்கள் ஒருவரது அறையில் கூடுவது வழக்கம். வளைகுடாவில் வசந்தம் என்பது இந்த வியாழன், வெள்ளி விடுமுறை நாள்கள்தான். அங்கு தினவாழ்வு என்பது இல்லை. வாராந்திர வாழ்வுதான். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை விடுமுறையை நோக்கியதாகவே தினசரி நேரங்கள் கழியும். வருடத்திற்கு 52 அல்லது 53 வெள்ளிக் கிழமைகள்தான் அந்த மொத்த ஆண்டையும் கழிக்க உதவும். வெள்ளிக்கிழமை நண்பர்களைச் சந்தித்தல், குடும்பங்களுடன் பேசுதல், ஊர்க்காரர்களைச் சந்தித்து நிலவரங்களை கேட்டறிதல் என்பதுதான் விடுதலைபெற்ற ஒரு வெளி. அதற்கென அனைத்து வளைகுடா நகர்களில் ஏன் அனைத்து புலம்பெயர் நகரங்களிலும் ஒரு சந்திப்பு பகுதி உண்டு. சவுதி அரேபியா ரியாத்தில் பத்தா என்கிற நகர் மொத்த ரியாத் நகரின் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் சந்தித்துப் பேசும் இடமாக இருந்தது. ஜெத்தாவில் பலத், தமாமில் ஓரிடம் என்று. அன்று அந்த இடங்கள் பெரும் ஊர்த்திருவிழாப்போல காட்சி அளிக்கும். பல நாட்டினரும் கூடுவதற்குத் தனித்தனியாக இடம் உண்டு அங்கு. மலையாளிகள் ஒருபுறம், தமிழர்கள் ஒருபுறம், வடவர்கள் ஒருபுறம், பாகிஸ்தானிகள் ஒருபுறம், பங்காளிகள் ஒருபுறம், சூடானி உள்ளிட்ட ஆப்பிரிக்கர்கள் கூடுவதற்கு ஓரிடம் என அந்த நகரின் மையப்பகுதி முழுக்கக் தலைகளாக இருக்கும். அன்றுதான் தங்களது ஒரு வார வலியை, துயரங்களைப் பகிர்ந்து கொண்டு தன்னைத் தானே அடுத்த ஒருவாரம் பணியில் ஈடுபடுவதற்கான மறுஉற்பத்தி செய்து கொள்வார்கள்.

இது வளைகுடா மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளிலும் உண்டு. இத்தகைய வெளிகள் ஒரு பெரும் கார்னிவல் உணர்வைத் தரக்கூடியதாக அமையக் கூடியது. அந்தந்த நாட்டு அரசுகளும் அதனை அனுமதிக்கிறது. காரணம் அது மன அழுத்தங்களை வெளியேற்றி உடலையும், உள்ளத்தையும் புத்துணர்ச்சி ஆக்குவதற்கான அடிப்படை வெளியாக அமைந்துள்ளதே. தாயகத்தில் அப்படியான வெளிகளைக் காணமுடியாது. ஏனென்றால் இங்கு எங்குமே சுதந்திரவெளி உள்ளது என்பதான கற்பனையே காரணம். தவிரவும் இங்கு குடும்பம் என்ற ஓர் அமைப்பு உள்ளது. ஆனால் தொழிலுக்காக புலம்பெயர்ந்த பகுதியில் குடும்பம் என்பதே சக மனிதர்களின் கூட்டணியும், தாய்மொழி வழி இணைந்துள்ள பிணைப்புமே. அது ஒரு மொழிசார் பெருங்குடும்பமாக அமைந்த ஒன்று.

முடிவுரை

நான் பிழைப்பிற்காகப் புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவன். எனது தந்தையார் தனது 16 வயதில் மலேசியாவிற்குப் பிழைப்பிற்காகப் புலம்பெயர்ந்தார். அங்கு கோலாலம்பூரில் உள்ள ஒரு மலைக் கிராமத்தில் “சோத்துக்கடை” வைத்துக் கொண்டு, அந்த மக்களுக்கான அனைத்துப் பொருட்களையும் மலை- யிலிருந்து இறங்கி வந்து நகரத்தில் கொண்டுபோய் வியாபாரம் செய்தவர். இரண்டாம் உலகப்போர் காலத்தில் மலேசியாவில் இருந்தவர். அவரது இறப்புவரை முழு வாழ்வும் அப்படியே கழிந்தது. இதயநோயுடன் ஊருக்கு வந்த சில மாதங்களிலேயே இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது விக்ரவாண்டியில் நெஞ்சுவலி வந்து இறந்துபோனார். விழுப்புரம் சென்று அவரது உடலை நான்தான் எடுத்துவந்தேன். அவரது இளமை என்பது 16 ஆண்டுகள் தாய் மண்ணில் வளர்ந்தது மட்டுமே. மற்றபடி 3 வருடங்கள், 5 வருடங்கள் கழித்து விடுமுறைகளுக்கு ஊருக்கு வந்து தங்கிச் சென்ற காலங்கள் மட்டுமே அவரது தாய்மண் உறவு. மலேயாவில் தந்தையும், வளைகுடாவில் உள்ள மகனின் அனுபவத்தையும் அறிய நண்பர் ஆபிதீனின் சிறுகதைகள் உதவும். வளைகுடா நாடுகளின் துயரத்தை அவர் அளவிற்கு அவலநகையாக ஒரு ‘பிளாக் காமெடி’யாக சொன்ன மற்றொரு எழுத்தாளரை நான் வாசித்ததில்லை.

வளைகுடாவில் சவுதி அரேபிய வாழ்வு துபாய் போன்ற அமீரக நாடுகளின் வாழ்வைவிடக் கடினமானது. காரணம் ஒப்பீட்டளவில் அரேபியா சுதந்திரம் மறுக்கப்பட்ட ஒரு நாடு. மதச்சார்புள்ள நாடு என்பதால், கட்டாயம் ஐந்துவேளை தொழுகை செய்வது கண்காணிப்பிற்கு உட்பட்ட ஒரு நாடு. தொழுகை நேரங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுவிடும். தெருவில் நிற்பவர்கள், நடப்பவர்கள் அனைவரும் இஸ்லாமியராக இருந்தால் கட்டாயமாகத் தொழுகைக்கு பக்கத்தில் உள்ள ஏதேனும் மசூதிக்குச் செல்லவேண்டும். அதனைக் கண்காணிக்க மதக்காவலர்கள் (முத்தவ்வா என்பார்கள்) உண்டு. அவர்கள் பெரிய ஜிம்எசி வண்டியில் மைக்கில் அலறியபடி சுற்றிக் கொண்டிருப்பார்கள். யாரையாவது பிடித்தால் அவரை அழைத்துச் சென்று அவரது மனம் போன போக்கில் தண்டிப்பார்கள். அதாவது அறையில் அடைத்து வைத்து ஏசியை ஹீட்டரில் போடுவது. அல்லது அவர்களது தலையில் சுற்றியுள்ள கயிற்றை (வட்டு என்பார்கள்) கழற்றி அடிப்பது இப்படி. அவரை தொழவைத்து பல அறிவுரைகள் சொல்லி, கைரேகை வாங்கி அவரது அடையாள அட்டையை பதிவு செய்துவிட்டு எங்காவது இறக்கி விடுவார்கள். நாம் நம் இடத்தை தேடி வந்து சேர வேண்டும். இதுபோன்ற தொல்லைகள் மற்ற நாடுகளில் கிடையாது. இஸ்லாமியரல்லாதவர்களுக்கு இந்த தொல்லைகள் கிடையாது. அதனைக் கண்டுபிடிக்க அடையாள அட்டையில் இஸ்லாமியர்களுக்கு பச்சை நிறமும், மற்றவர்களுக்கு சிவப்பு நிறமுமாகத் தரப்படுகிறது. அப்படித் தர மற்றொரு காரணம், இஸ்லாமியப் புனித நகரமான மெக்கா, மதீனாவிற்குள் நுழைந்துவிடக்கூடாது என்கிற கட்டுப்பெட்டித்தனம். இப்படியாக வளைகுடா வாழ்வியல் குறித்து எண்ணற்ற கதைகள் உண்டு. ஒவ்வொன்றும் புனைவுகளைத் தாண்டிய உண்மைகள். அவைகளை எழுதினால் அது ஒரு தனியான புனைவாக்கமாகவே அமையும் என்பதால், முடிவாக, வளைகுடா சிலருக்கு வசந்தமாகவும், பலருக்குப் பாலைவனமாகவும் இருப்பதற்கு காரணம், அது தரும் பணமே. வாழ்வையும், உழைப்புச் சக்தியையும் விற்று பெரும் பணம், தாயகத்தின் செழிப்பிற்குப் பயன்படுகிறது, ஆனால் வளைகுடாவாசிகளுக்கு “பத்தேமாரி” திரைப்பட இறுதிக் காட்சியைப்போல, சாவில்கூட தனது கனவை நிறைவேற்றிக் கொள்ளமுடியாத அவலமே மிஞ்சுகிறது.

- ஜமாலன்

ஜமாலன் நூல்கள்

(1) உடலரசியல், காலக்குறி பதிப்பகம், 2020

(2) சனாதனம் இந்துத்துவம், பாரதி புத்தகாலயம், 2024

(3) நவீனத் தொன்மங்கள் நாடோடிக்குறிப்புகள், புலம் மற்றும் பாரதி புத்தகாலயம், 2010, 2022

(4) சினிமாத்துவம் - காட்சி எந்திரங்களும் காணும் எந்திரங்களும், பாரதி புத்காலயம், 2023

(5) குடியாண்மைச் சமூகமும் நுண்பாசிசமும், பாரதி புத்தகாலயம்,

(6) கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள், நிழல், 2014

(7) சொற்களால் நெய்யப்படும் உலகு, நன்னூல் பதிப்பகம், 2021 (8) தலித் சினிமா - அழகியல் அரசியல் அறவியல், நிழல், 2019

(9) பிரதியில் கிளைக்கும் பிம்பங்கள், காலக்குறி, 2018

(10) மொழியும் நிலமும், புது மலர் மற்றும் கருத்துப்பட்டறை, 2003, 2017

(11) மௌனியின் இலக்கியாண்மை, காலக்குறி, 2017

(12) இன்குலாப், சாகித்ய அகாதமி, 2022

விருதுகள்

(1) “மேலும் விமர்சகர்” விருது

(2) உடலரசியல் நூலூக்கான “பஞ்சு பரிசில்” விருது

(3) திறனாய்வுப் பணிகளுக்கான களரி அறக்கட்டளை வழங்கிய  “எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்” விருது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.