"தமிழ்ச்சுவையை இங்கிலீஷால் அறிய முடிமோ? தமிழ்ப் பாட்டின் இனிமை தமிழனுக்குத் தெரியவில்லை. இங்கிலீஷ்காரன் தமிழ்ப்பாட்டு நன்றாயிருக்கிறது என்று சொன்ன பிறகுதான் தமிழனுக்குத் தெரிகிறது." பாரதிதாசன். (29, 1990)

"கவிதையில் தெய்வத் தன்மையிருக்கிறதென்கிறார்கள். அது வேண்டாம்; மனிதத் தன்மையிருந்தால் போதும். தெய்வத்தன்மை யென்று சொல்லிக் குட்டிச்சுவராகப் போய்விட்டோம்." பாரதிதாசன் (20,1990)

1. பாரதியும், பாரதிதாசனும்

போரதியார் இன்று நமக்கு வைத்து விட்டுப் போன சொத்துகள் பல, அவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், கனகசுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் என்று சொல்ல வேண்டும்" என்று தமிழ் நவீனச் சிறுகதைச் சிற்பிகளில் ஒருவரான புதுமைப்பித்தனால் (25,1986) குறிப்பிடப்பட்ட கனக சுப்புரத்தினம் என்கிற பாரதிதாசன் தமிழியக்கத்தின், தமிழ் மறுமலர்ச்சியின் முன்னொடிக் கவிஞர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால், தமிழ் மறுமலர்ச்சிடேன் உருவான தமிழ் நவீனத்துவம்" பாரதிதாசனை ஒரு மரபான தமிழ் பண்டிதக் கவிஞராகத் தமிழ் சீரிய இலக்கிய உலகம் எனும் சிறுபத்திரிக்கை சார்ந்த கலைமுதல்வாத உலகில் குறிநிலைப்படுத்தி வைத்துள்ளது. குறிப்பாக பாரதிக்கு தரப்பட்ட நவீன வெளிச்சம் சிறுபத்திரிக்கை உலகில் பாரதிதாசனுக்கு தரப்படவில்லை என்பது தமிழ் இலக்கிய வரலாற்றில் எதிர்கொள்ள வேண்டிய முக்கியக் கேள்வி.

இதன் பின்னணியில் இயங்கியது கலை குறித்து தமிழில் இயங்கிய நவீனத்துவம் சார்ந்த ஆதிக்கப் பார்வையே. அதாவது மறுமலர்ச்சி கருதுகோள் முன்வைத்த கருத்தியல்களான மேனிதநேயம், பெண் விடுதலை, தனிமனித சுதந்திரம், சமூக முன்னேற்றம், கல்வி அறிவு, பகுத்தறிவு தர்க்கம், சமத்துவம், சகோதரத்துவம்" ஆகியவற்றைவிட கலைசார்ந்த அழகியல், இரசனைவாதம் குறித்த இந்திய மெய்யியல் சார்ந்த பார்வையே கலையை ஆள்வதாகத் தமிழ்" சூழலில் வேர் கொண்ட தமிழ் நவீனத்துவமே இதற்குக் காரணம். மேற்கத்திய நவீனத்துவம் வளர்ச்சியடையாத, குடியேற்றத் தமிழகத்தில் தொழிற்படும்போது நிகழ்ந்த தகவமைப்பு என்று இதனைக் கூறலாம். தொழில்துறை வளர்ச்சியடைந்த மேற்கத்திய சமூகத்தில் நவீனத்துவம் என்பது பகுத்தறிவு சார்ந்த மறுமலர்ச்சி கேமாகவும், அறிவொளிக் காலமாகவும் மலர்ந்தது. அது மதத்தை, மத நம்பிக்கைகளை பொதுத்தளத்திலிருந்து தனித்தளத்திற்கு நகர்த்தியது. இதனைத் தமிழியம் சார்ந்த கருதுகோளாகப் புறவெளியிலிருந்து மதத்தை, அகவெளிக்குள் நகர்த்தியது என்று புரிந்து கொள்ளலாம். ஆனால், இந்தியாவில் நவீனத்துவம் வழக்கமாக இந்திய மெய்யியல் மற்றும் நிலமானியச் சிந்தனை அடிப்படையில், மதத்தையும், நம்பிக்கையை அகப்புற வெளிக்கானதாக மாற்றிக் கொண்டது. அதாவது, அகத்தில் மத நம்பிக்கையையும், புறத்தில் நாகரீகம் மற்றும் பகுத்தறிவுமான ஒரு கலப்பின இரண்டகத் தன்மைக் கொண்டதாக மாற்றிக் கொண்டது. அதனால் நவீனத்துவம் அகத்தில் கலை இலக்கியமாகவும், புறத்தில் அரசியலாகவும் வெளிப்பட்டது. குறிப்பாக, தமிழ் நவீனத்துவம்" கலையை அகம் சார்ந்தும், அரசியலை புறம் சார்ந்தும் குறிநிலைப்படுத்திக் கொண்டது. அதன் விளைவு, கலை தனிவெளியிலும், அரசியல் பொதுவெளியிலும் இயங்குவதாக மாறியது.

இதற்குத் தோதான, ஓர் அரசியல் சமூக" சூழல் சுதந்திரத்திற்கு முந்தைய, பிந்தைய இந்தியாவில் நிலவி வந்தது. அதில் உருவான ஆங்கிலம் படித்த ஒரு மேட்டிமை சார்ந்த குறிப்பாக பார்ப்பனியம் மற்றும் உயர்சாதிகளின் அழகியல் சார்ந்த பார்வையே கலைப் பார்வையாகத் தமிழில் ஆதிக்கம் பெறுகிறது. இப்பார்வை ஒருபுறம் தமிழின் மரபை மீறியதாகக் கூறிக்கொண்டு, தமிழை, தமிழ் இலக்கிய மரபைப் பல்கலைக் கழகங்களுக்குள் தள்ளியது. அங்கோ தமிழ் என்பது பழைமைவாதமாக உருப்பெற்றதே தவிர, மரபின் தொடர்ச்சியானதாக அமையவில்லை. "இன்று, தமிழகத்தில் பழமையின் சிறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் போதும் என்னும் மனோபாவம் பொதுவாகப் பரவியிருக்கிறது. இது முன்னேற்றத்திற்கு வழி காட்டாது. பழைமையை உதறித் தள்ளிப் புது வழியை மேற்கொள்ளுபவன்தான் உண்மையான சேவை செய்தவன்." (46,1990) என்று பாரதிதாசன் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது பழைமைக்கும், மரபிற்குமான வேறுபாடு அறியாத ஓர் ஆய்வுப் பார்வையும், மரபைப் பேணுதல், போற்றுதல் என்ற பெயரில், பழைமையை போற்றும் ஒரு பார்வை"மே முன்னுக்கு வந்தது. சிந்தனையில் புதுமையும், வடிவத்தில் மொழி வெளிப்பாட்டில் பழமையும் என்பதாக அவை வெளிப்பட்டன. பழமை என்பது கால வழக்கொழிந்தது. மரபு என்பது காலத் தொடர்ச்சி கொண்டது. ஒரு சமூகம் பழமையைக் கைவிட வேண்டும். ஆனால், மரபைப் பேணவேண்டும். அதனால்தான் தொல்காப்பியம் மரபை ஒரு செய்யுள் உத்தியாக முன்வைக்கிறது. மரபு என்பது ஒரு சமூகத்தின் காலத் தொடர்ச்சியைப் பேணும் ஒரு காரணியாகும். மரபுகள் இல்லாவிட்டால் வரலாறு இல்லை. வரலாறு இல்லாவிட்டால் இனம் குறித்த கதையாடலே இல்லை. அதனால்தான் இனம் குறித்து நவீனத்துவ சிந்தனை வரலாறு என்கிற ஆணிவேர் மரபைத் தேடிச் செல்வதாக அமைகிறது.

இச்சூழலின் தொடர்ச்சியாக உருவான கலை மையவாதப் பார்வையானது சிறுபத்திரிகை மரபாகத் தமிழில் உருப்பெற்றது. காலனிய மற்றும் மேற்கின் பாதிப்பில் உருவான நவீனத்துவ கலைமரபு தமிழ்ச் சமூகத்தின் அகவெளியாகவும், நவீனத்துவ அரசியல்மரபு புறவெளியாகவும் வடிவம் பெற்றது. அதன் வெளிப்பாடாக, 'தனித்தமிழ் இயக்கம்', 'திராவிட இயக்கம்' போன்றவை தமிழ் மறுமலர்ச்சி அரசியலைப் பேசின. இவை இரண்டிலும் தமிழ் குறித்த இருவேறு உலகக் கண்ணோட்டம் இருந்ததைக் கவனிக்க வேண்டும். அதாவது, தனித்தமிழ் இயக்கம் சைவம் சார்ந்த, நம்பிக்கையை முன்வைக்கும் பக்தி மரபின் தொடர்ச்சியாகத் தமிழை முன்வைத்தபோது, திராவிட இயக்கம் சங்ககால இயற்கை சார்ந்த, தர்க்கநெறிப்பட்ட, அறம் சார்ந்த, சமயச் சார்பற்ற தமிழ் மரபை முன்வைத்தது. பக்தி மரபு பெரிய புராணத்தை முன்வைத்தபோது, பாட்டு மற்றும் தொகை நூல்களையும், திருக்குறளையும் முன்வைப்பதாகத் திராவிட மரபு அமைந்தது. இம்மரபுகளில் கலைசார்ந்து வெளிப்பட்ட இரண்டு இலக்கிய இயக்கங்களே பாரதியும், பாரதிதாசனும். அதில் பாரதி வைதீக நெறிவயப்பட்ட பாரத தேசியத்தையும், பாரதிதாசன் வைதீக எதிர்ப்பான தமிழ்த் தேசியத்தையும் முன்வைக்கும் கலை இயக்கமாக முகிழ்ந்தனர்.

அதனால், மரபை மீறிய புதிய இலக்கிய ஆக்கத்தில் பாரதிக்குத் தந்த முக்கியத்துவத்தைக் கலை மையவாத தமிழ்ச் சிற்றிலக்கியத் தளத்தில் பாரதிதாசன் பெறவில்லை. காரணம், பாரதிதாசன், பாரதி போன்று வைதீக மரபில் தனது இலக்கியத்தைப் பெறாமல், அதற்கு எதிர் மரபில் குறிப்பாக தமிழின் தனித்துவ மரபில் கண்டடைந்ததே. அவ்வகையில் பாரதிக்கு நிகராகவும், குறிப்பிட்ட சில நவீனக் கருத்தியலில் பாரதியை மீறியும் வெளிப்பட்டவர் பாரதிதாசன். என்றாலும், இறுதிவரை பாரதியைத் தனது குருவாக வரித்துக் கொண்டவர். பாரதியின் அரசியலுக்கும், மெய்யியலுக்கும் எதிரான நிலைபாடு கொண்டிருந்தாலும், பாரதிதாசன், பாரதியின் மீது அளவற்ற மதிப்பை வைத்திருந்தார் என்பதே வரலாறு. பாரதியின் வரலாற்றை எழுதி அதனைத் திரைப்படமாக்கும் முயற்சியில் இறுதிவரை பாரதிதாசன் ஈடுபட்டு வந்துள்ளதைக் காணமுடிகிறது. அவரது வாழ்வின் இலட்சியமாக அதனைப் பதிவும் செய்துள்ளார்.

நோன் பாரதிதாசன் என்று புனைபெயர் வைத்துக் கொண்டுள்ளேன். அதற்குக் காரணம், அப்போது அவர் என் உள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான். சாதிக் கொள்கையை நன்றாக, உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்தாம்! அவருக்கு முன் பன்னூற்றாண்டுகளுக்கு முன் அவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்த வரை நான் கண்டதில்லை. பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது. பாரதியாரை நான் ஆதரித்ததும் பாரதிதாசன் என்று நான் புனைபெயர் வைத்துக் கொண்டதும், ஏதாவது ஒரு கூட்டத்தாரிடம் நன்மையை எண்ணியன்று. சாதி ஒழிப்பு விளம்பரம் ஆதல் வேண்டும் என்பதற்காகவும் பாரதியாரைப் போல எளிய நடையில் மக்களுக்கு இன்றைக்கு வேண்டிய கருத்தை வைத்துப் பாடல் இயற்ற வேண்டும் என்பதைப் புலவர்க்கு நினைவூட்ட வேண்டும் என்பதற்காகவுமே" என்று பாரதிதாசன் குறிப்பிடுவதைச் சுட்டுகிறார் கு.வெ. பாலசுப்ரமணியன்.

நவீனத்துவத்தின் புதிய இலக்கிய வடிவம், பொதுவான மனிதநேயச் சிந்தனை, பெண் விடுதலை, கல்வி, மறுமலர்ச்சி என பாரதி முன்னெடுத்த நவீனக் கூறுகளில் அவரது வேதசோர்பு மற்றும் அத்வைதம் அவரைக் காலனியம் உருவாக்கிய இந்தியப் பெருந்தேசியத்திற்குள் அடைக்கலமாக்கியது. பாரதிதாசனையோ தமிழின் அவைதீக மரபு குறிப்பாக சங்கப்பாடல்களும், திருக்குறளும் சரியான நவீனத்துவக் கருத்தியலுக்குள் அதன் பகுத்தறிவு மெய் யியலுக்குள் கொண்டுவந்து, வைதீக, சனாதன, பார்ப்பனிய எதிர்ப்பாளராக, சுயமரியாதையாளராகக் கட்டமைத்தது. பாரதி மதத்தை அதன் கருத்தியலை, நம்பிக்கையை ஏற்றுக்கொண்டார். போரதிக்கு எல்லா மதமும் ஒன்று. கூடுமானால் மதமே இல்லை யென்றாலும் பரவாயில்லை." (30,1990) என்று பாரதிதாசன் குறிப்பிடுகிறார். ஆனால், பாரதி தேசபக்தியும், தெய்வபக்தியும் ஒன்று என்பதாகக் கொண்டவர். பாரதிதாசனோ மதத்தையும், அதன் கருத்தியலையும், நம்பிக்கைகளையும் கடுமையாக எதிர்த்தார். ஒரு மதச்சார்பற்ற இலக்கிய ஆக்கத்தைத் தமிழின் மரபான பார்வையாகக் கொண்டிருந்தார். தமிழருக்கு மதமோ, சாதியோ இல்லை என்பதிலும், தமிழ் என்பது ஓர் ஆழ்தள சமூக நனவிலியாக அவரது கலை உற்பத்திக்கான மையப் புள்ளியாக அமைந்துள்ளது. அவரது ஒட்டுமொத்த இலக்கிய இயக்கமும் சுழலும் புள்ளி அல்லது அசோணி தமிழ்தான். தனது மொழியால் தமிழை முடிந்தவரை வெளிப்படுத்திவிடும் வேட்கையே அவரது இலக்கிய உற்பத்திக் களனாக இருந்துள்ளது. தமிழைப் பாட அவர் சலிப்புற்றதேயில்லை. தமிழ் என்ற பொது உடலைக் கட்டமைப்பதிலும், உலகளாவிய மனிதநேயத்தினை அதன் பொருட்திணிவாக்குவதிலும், உயிர், உடல் என அனைத்தும் தமிழ்தான் என்று காட்டுவதிலும் பாரதிதாசனுக்கு நிகரான மற்றொரு இலக்கியவாதியைத் தமிழ் வரலாற்றில் காண்பது அரிது.

"தமிழுக்கு அமுதென்று பேர்" என்று கூறுவதில் தமிழ் ஓர் அழிவற்ற வாழ்வை அனைவருக்கும் தரும் ஒன்று என்பதையும், அதுவே அனைவருக்குமான வேராக உள்ளது என்பதையும் முழங்கியவர். அவர்தான் தமிழ் வரலாற்றில் ஒரு புதிய தமிழை, தமிழியக்க உணர்வுடன் படைத்தவர். காரணம், தமிழ் மரபில் கிளைத்து, தமிழுக்கு எதிரான வைதீகம் சார்ந்த, சமஸ்கிருத மரபை எதிர்த்தும் வேரூன்றி நின்றவர். தமிழ் மரபில் பல காப்பியங்களை அவர் எழுதுவதற்கான காரணம் சமஸ்கிருத காப்பிய மரபிற்கான சவாலை அவரது ஆழ்மனம் ஏற்றுக்கொண்டு இயங்கியது என்பதாக எண்ணத் தோன்றுகிறது. (முத்தமிழ் என்றுக் கூறிக்கொண்டு தமிழில் நாடகமே இல்லை என்பதால் நாடகங்களை நிறைய எழுதியதாக அவர் குறிப்பிடுவதில் உள்ள அவரது உள்ளக் கிடக்கையை ஒப்பிட்டு அறியலாம்.) அதாவது, நவீன இலக்கிய வடிவில் காப்பியம் என்ற பழைய வடிவை முன்கை எடுத்து அவர் படைத்திருப்பதற்குக் காரணம், சமஸ்கிருதக் காப்பிய மரபிற்கான ஒரு மொழிவயப்பட்ட சவால் என்றே கருதத் தோன்றுகிறது. காரணம், பாரதியின் போஞ்சாலி சபதம்தோன் பாரதிதாசனை மிகவும் கவர்ந்த ஒன்றாக இருந்ததை அவர் சுட்டிக் காட்டுகிறார். தமிழை இவ்வளவு எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம், வாசிப்பின்பம் நல்கும் விதத்தில் எழுதமுடிமோ என்று அவர் தனது வியப்பைப் பதிவு செய்கிறார். அதன் பாதிப்பில் அவர் பல காப்பியங்களை எழுதுகிறார். பின்னாளில் குறிப்பாக மணிமேகலை மற்றும் கண்ணகி காப்பியத்தை எழுதுவதும் ஒரு இடையீட்டுப் பிரதியாகத் தமிழ்க் காப்பியத்தை கொள்வதால்தான். பாஞ்சாலி என்கிற சமஸ்கிருத பாரத மரபிற்கு ஒரு மாற்று மரபாக அவர் படைத்தவையே அவரது பல காப்பியங்கள். அக்காப்பியங்களில் முழுக்க தமிழ் மக்கள், தமிழ் நிலம், தமிழ் வாழ்வு, தமிழர்கள் என்பதையும், ஓர் இலட்சிய தமிழகத்தையும் கற்பனை செய்கிறார்.

அவர் படைக்க விரும்பிய இலட்சியத் தமிழர்களைப் பாத்திரங்களாகக் கொண்டே அவரது காப்பியங்கள் படைக்கப் பட்டுள்ளன. பல அந்நியர்கள் குறிப்பாக ஆரியர்களின் மேலாதிக்கத்திலிருந்து தமிழை காப்பதும், அதன் தனித்தன்மைகளை நிறுவுவதுமே அவரது கனவு. "குறிஞ்சித் திட்டு" இதற்கு ஒரு சான்றாகக் கொள்ளலாம்.அவரது இலட்சியத் தமிழகத்தை ஓர் குறியீடாகக் கொண்டும், அதன் மீதான மதங்களின் ஆதிக்கம் உருவான சதியையும் பேசுகிறது அக்காப்பியம். ஒரு அறிவார்ந்த, அற உணர்ச்சி கொண்ட தமிழ்ச் சமூகமே அவரது இலட்சியம் என்பதை அவரது காப்பியங்களில் உணர முடிகிறது. முடியாட்சியை ஒழித்து குடியாட்சியை, அதாவது மக்களாட்சியைக் கொண்டுவரும் அவரது காப்பிய முடிவுகளுக்கு மாறாக, அவரிடம் மூவேந்தர்களின் ஆட்சி குறித்த பெருமித உணர்வு இருந்ததைக் காணமுடிகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு அக்கனவு அவசியம் என்று அவர் கருதியிருக்கக் கூடும். ஏனென்றால், பழமைவாதத்தை எதிர்ப்பவராக அவர் இருந்துள்ளார், அதேநேரத்தில் மூவேந்தர் ஆட்சியைத் தமிழ்ப் பெருமித மரபாக அவர் காண்கிறார். தமிழ்தேசியப் பார்வையில் அதற்கான நியாயம் அதில் உள்ளது என்றாலும், அதன்பின் ஒரு மொழிப்பாசிசம், முடியாட்சியின் எதேசேதிகாரம் ஒளிந்திருப்பதை அவர் கவனிக்கத் தவறியுள்ளார் என்பதைவிட, அதை அன்றைக்கான தேவையாக அவர் கருதியிருக்கக் கூடும். காரணம் தமிழர்கள் விழிப்பு கொள்ள வேண்டும், தன்னைத் தற்காத்துக் கொள்ள மறத்தமிழனாக மாற வேண்டும் என்பதை ஒரு போர்ப் பரணியாக தனது பல கவிதைகளில், பாடல்களில் முன்வைக்கிறார்.

தமிழ் ஒரு தெய்வீக மொழி என்ற கருத்தை அடியோடு மறுப்பவராக இருந்துள்ளார். தமிழ் மனித முயற்சியால், மனிதார்த்த உணர்வை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு மொழி என்ற கருத்தைக் கொண்டவராக இருந்துள்ளார். தமிழ் சிவபெருமானால் செய்யப்பட்டது சிவபெருமானால் ஆராய்ந்து திருத்தம் செய்து தரப்பட்டது என்று கூறி மன நிறைவு அடைந்து தூங்கிக் கொண்டிருந்ததால்தான் இன்று தமிழின் நிலை வருந்தத்தக்கதாகி விட்டது. தமிழுக்கும் தெய்வத்திற்கும் தொடர்பிருக்கிறது என்றால் அந்த தெய்வம் எது? அப்படி என்று ஒன்று இருக்கிறதா?" (64,1990) என்று கூறும் பாரதிதாசன் தமிழை ஓர் இயற்கை சார்ந்த மொழியாகவே முன்வைக்கிறார். இயற்கை குறித்த சங்கத்தமிழின் தாக்கம் அவரது பல கவிதைகளில் நிறைந்தோடி இன்பம் பயப்பதாக அமைந்துள்ளது. இயற்கை என்பது இரண்டுவிதங்களில் அவரிடம் பொருள்கொண்டதாக அமைகிறது. ஒன்று, தமிழ்ச் சங்க மரபில் பாடப்படும் இயற்கை. மற்றது, மறுமலர்ச்சிக்காலம் இறைவனுக்கு மாற்றாக முன்வைத்த இயற்கை. ஆக, இயற்கையைப் பாடுதல் என்பது தமிழ் அறிவொளி மரபின் புத்தெழுச்சியாக அவரிடம் இலக்கிய வடிவம் கொள்கிறது. மொழியின் அசையும், இசையும் அவருக்கு மிக முக்கியமானதொரு கோட்பாட்டு" சிந்தனையாக அமைந்திருப்பதை அவரது இசை குறித்த பல பேச்சுகளில் வாசிக்க முடிகிறது. ஆக, தமிழ் என்பது தெய்வீக மொழி என்ற சைவச் சார்பான தமிழை நிராகரித்து, அதனை தொன்மை மரபுவாய்ந்த நாகரீகமான சமூகத்தின் இயற்கை சார்ந்த மொழியாக, பகுத்தறிவிற்கு உட்பட்ட மொழியாக மறு ஆக்கம் செய்துகாட்டும் பணியை தனது எழுத்தியக்கமாகக் கொண்டுள்ளார்.

2. பாரதிதாசனின் குடும்பக் காப்பியங்கள்

சி. சுப்ரமண்ய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த பாரதிதாசன் பாரதியின் வேதஅத்வைதசமஸ்கிருத மரபிலிருந்து வெளிவந்தபின் திராவிடப்பகுத்தறிவு தமிழ் மரபில் எழுதப்பட்ட பல காப்பியங்களில் ஒன்று "குடும்ப விளக்கு" மற்றும் "இருண்ட வீடு". இவ்விரு காப்பியங்களும் பிரதிஎதிர்பிரதி (வெளிச்சம் X இருட்டு) என்ற அமைப்பில் எழுதப்பட்டவை. ஒரு திராவிடத் தமிழ் இலட்சியக் குடும்பத்தை "குடும்ப விளக்கு" முன்வைத்தால், இன்றைய மேல்தட்டுக் குடும்பம் ஒன்றின் நிலவுடமையின் பழம் மதிப்புக் கொண்ட கல்வியற்ற தன்மையை கூறுவதாக அமைந்துள்ளது "இருண்ட வீடு". கல்வி என்பது நவீனத்துவச் சிந்தனையின் மறுமலர்ச்சிவாதம் முன்வைத்த அறிவொளியை பரப்பும் விளக்கு என்பதே இரண்டு காவியங்களின் அடிப்படை படிமமாக அமைந்துள்ளது. ஒன்றில் கல்வி ஒளிவீசுவதால் அக்குடும்பம் இலக்கிய வகைப்பட்ட இலட்சியக் குடும்பம் "குடும்ப விளக்காக" ஒளி வீசுகிறது. மற்றது, கல்வி ஒளியேற்றப்படாத "இருண்ட வீடு" ஆகிறது என்பதை தனது கவித்துவ இயற்கை சார்ந்த கற்பனைப் பொருளாக முன்வைக்கிறார். கல்வியை அறிவொளியின் அடிப்படையாக முன்வைப்பது அவரது பல எழுத்துக்களில் காண முடிகிறது. கல்வி இல்லாத பெண்ணைக் களர் நிலத்திற்கு ஒப்பிடுகிறார் பாரதிதாசன் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். காரணம் பெண்கள் ஒரு சமூகத்தின் மறுஉற்பத்திக்கான காரணியாக அமைந்துள்ளனர். அவர்கள் கல்வி பெறுவதும், சமஉரிமை பெற்று அறிவாற்றலுடன் விளங்குவதுமே ஒரு நல்ல சமூகத்திற்கான அடிப்படை என்பதை வலியுறுத்தும் வகையில் அவர் எண்ணற்ற பெண் பாத்திரங்களை தனது காப்பியங்களில் படைத்துக் காட்டுகிறார்.

பாரதிதாசனின் வெளிப்பாட்டு முறையில் கவிதையும், குறிப்பாக அவரது காப்பியக் கவிதைகளும் தலையாய இடத்தைப் பிடிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. அவரது காப்பியங்களில் மையமான பாத்திரத்தைப் பெண்களே ஆற்றும்படி அமைத்திருப்பது கவனத்தைக் கவருவதாக உள்ளது. "குறிஞ்சித் திட்டு" என்ற காப்பியத்தில் வரும் ஆரியத்தின் குறியீடான "விநோதை" என்ற பெண் பாத்திரம் மிக வலுவானதாக அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பொதுவாக பிற காப்பியங்களில் அவரது பெண் என்ற படிமம் தமிழ் மொழி தொடங்கி, தமிழ் நிலம், தமிழ் உணர்வு, தமிழ்ச் சங்க மரபின் அகம், தமிழரின் நம்பிக்கை, வழிபாடு என பல வடிவங்களில் உருப்பெறுவதாக அமைந்துள்ளது. அவர், பாரதியின் பாதிப்பில் பெண் விடுதலை, சமூக சீர்திருத்தம், சாதி மறுப்பு, தீண்டாமை எதிர்ப்பு ஆகியவற்றைப் பேசத் தொடங்கினாலும், ஆரம்பகாலத்தில் அதில் பாரதம், தெய்வ நம்பிக்கை, தேசபக்தி உள்ளிட்ட வடமொழி வழிப்பட்ட பாரத தேசம் குறித்த படிமமே ஆட்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

பாரதிதாசன் பாரதத்தை 'தெய்வீகத் திருநாடு' என்றும், நாலுவேதத்தின் தாய்', 'அறு சமயத்தின் தாய்' என்றும் போற்றுகின்றார்." (29,2007) என்பதைக் குறிப்பிடுகிறார் முருகுசுந்தரம். பேசுவைப் பலபடப் பாராட்டுகிறார் பாவேந்தர். நாடெங்கும் பசுசோலைகள், புல்வெளிகள், பசுக்குளங்கள் அமைக்க வேண்டுமென்று மக்களைக் கேட்டுக் கொள்கிறார்." (39,2007) இவ்வாறு, இளமையில் முருக பக்தராகவும், தீவிர சைவக் குடும்பத்திலும் பிறந்து வளர்ந்த பாரதிதாசனின் அறி வியக்கப் பரிணாமம் என்பது இளமையில் காந்தியவாதி, தேசியவாதி என்று பாரதியின் பாதிப்பில் இருந்து, பின்னாளில் பெரியாரியர், தமிழ்த் தேசியர், பகுத்தறிவுவாதி என்ற நிலைக்கு வளர்ச்சியுறுகிறது. தமிழில் மறுமலர்ச்சிக்கான சிந்தனையை முன்வைக்கும் வலுவான கருத்துக்களை இயற்கையோடு இணைந்த கவித்துவ உவமைகளாக அவர் முன்வைக்கிறார். குறிப்பாக, குடும்ப விளக்கின் நாயகிகளான தங்கம், நகைமுத்து இருவரும் தமிழின் இலட்சியப் பெண் பிம்பங்களாக அவரால் உருவகப்படுத்தப் பட்டுள்ளனர். இக்காப்பியங்களை 1942ல் முதல் பகுதி, 1944ல் இரண்டாவது பகுதியும், இருண்ட வீடும், 1948ல் மூன்றாவது பகுதி, 1950ல் நான்கு மற்றும் ஐந்தாவது பகுதி என எட்டு ஆண்டுகளில் இதனை முழுமைப்படுத்தி முடித்துள்ளார்.

முழுக்கக் குடும்பம் என்ற அமைப்பே ஓர் அதிகாரத்தின், சமூகத்தின் அடிப்படை அலகாக இருப்பதை உணர்ந்து, அதிலிருந்து சமூக" சீர்திருத்தத்தை உருவாக்க முனைகிறார். அக்குடும்பத்திலும்கூட, திருமணம் ஆன மணமக்களை தனிக்குடித்தனம் வைத்தல், காதலித்தவர்களே என்றாலும் கருத்தொருமிப்பு இல்லாமல் போனால், இருவரும் பிரிந்து வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதையும், பெரியார் கூறிய கர்ப்ப ஆட்சி என்பதை பெண்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் முன்வைப்பவராக உள்ளார். பகுத்தறிவுக்கு ஒவ்வாத பழங் கருத்துக்களை எதிர்த்தும், துறவறம் போன்ற இல்லற எதிரப்பை நகைச்சுவையாக மறுத்தும் பேசுகிறது இக்காப்பியம்.

"ஞாலத் தொடர்பினால்

நல்லின்பம் காணலன்றி

ஞாலத் துறவில் இன்பம்

நண்ணுவதும் ஏலுமோ?" (குடும்ப விளக்கு)

என்று இல்லறத்தைப் போற்றி துறவறத்தை மறுக்கிறது. காரணம், தமிழ் மரபில் துறவறம் இல்லை. அதோடுகூட, இக்காப்பியம் வள்ளுவரின் இல்லறவியல் குறட்பாக்களின் ஓர் ஊடிழைப் பிரதியாக (intertextual), காப்பிய நாடகமாக எழுதிக் காட்டப்பட்டதாக அமைந்துள்ளது. ஒரு அறம் சார்ந்த குடும்பத்தின் இல்லற ஒழுக்கத்துடன், அவர்களது கல்வி அறிவும், சமூகத் தொண்டிற்கான வேட்கையும், உறவுகளிடையே உருவாகும் தமிழ் மொழி சார்ந்த இலக்கிய இன்பமும் எனத் தனது காப்பியத்தை இல்லறமே நல்லறம் என்ற பார்வையில் விரிவுபடுத்தி உள்ளார். ஆனாலும், வள்ளுவரின் துறவறவியலை ஏற்காமல் மறுப்பதாக அமைந்துள்ளது கருதத்தக்கது. காரணம், முத்தமிழ், முசேங்கம், மூவேந்தர்கள், முக்கனிகள் போல தமிழ் மரபு அறம், பொருள், இன்பம் என்கிற மூன்று நிலைகளையே வாழ்வியல் அடிப்படையாக முன்வைக்கிறது. சமஸ்கிருத தர்மாக் கோட்பாட்டின் நால்வேதம், நால்வர்ணம், நான்கு ஆசிரமங்கள், நான்கு நிலைகள் என்கிற தர்மா, அர்த்தா, காமா, மோட்சா என்பது தமிழின் அறக்கோட்பாட்டிற்கும், வாழ்நிலைக்கும் புறம்பானது. அதனால் வீடு, வீடுபேறு உள்ளிட்டவை, துறவறம் ஆகியவற்றைப் பாரதிதாசன் எதிர்த்து எழுதியிருப்பது அவரது தமிழ் மரபின் ஆழத்தை உணர்த்துவதாக உள்ளது. திருக்குறளில் உள்ள துறவறம், வீடுபேறு உள்ளிட்ட சமணம் சார்ந்த நம்பிக்கைகளை பாரதிதாசன் புறந்தள்ளியிருப்பது கவனப்படுத்த வேண்டிய ஒன்று. காரணம், சமஸ்கிருத தர்மாக் கோட்பாட்டிற்கு எதிராகத் தமிழின் அறக் கோட்பாட்டை முன்வைப்பதே. பாரதி சமஸ்கிருத தர்மாக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர். ஆனால், பாரதிதாசனோ தமிழ் அறக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர் என்பதை இக்காப்பியங்கள் வழி உணர முடிகிறது. காப்பியத்தில் இடையிடையே திருக்குறள் நேரடியாகப் பயன்படுத்தப்பட்டாலும், பாரதிதாசன் முன்வைக்கும் இல்லறம் என்பது திருக்குறள் முன்வைக்கும் இல்லறவியலின் இருபது அதிகாரங்களுடன் ஒப்பு நோக்க, இது திருக்குறளின் அறநிலைப்பாட்டில் நின்று அதனை ஒரு காப்பியமாக்கும் முயற்சியாகக் கருதமுடிகிறது. எப்படி சமஸ்கிருத தருமக் கோட்பாடுகளை விளக்க மகாபாரதம், இராமாயணம் என்று இரு காப்பியங்கள் உருவாக்கப்பட்டதோ, அப்படி தமிழ் அறத்தை விளக்கும் காப்பியமாக விளங்குகிறது "குடும்ப விளக்கு" மற்றும் "இருண்டவீடு" என்ற இவ்விரு காப்பியங்களும்.

இன்றைய நவீன பெண்ணிய நோக்கில் குடும்பம் ஓர் அரசின் அடிப்படை அதிகார அலகாக உள்ளது என்பதும், அதில் பெண் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுபவளாக இருக்கிறாள் என்பதும் முன்வைக்கப்படுகிறது. இத்தகைய பார்வைகளுடன் பாரதிதாசனை அணுகும் போது இடர்படும் இடங்கள் இக்காப்பியத்தில் இல்லாமலில்லை. சங்க மகளிரின் அகக் காதலை நவீன குடும்ப அமைப்பிற்குள் இருத்தும் ஒரு தமிழ் பொற்கால கற்பனாவாதம் பாரதிதாசனிடம் இருப்பதை மறுத்துவிட முடியாது. ஆனால், அத்தகைய கற்பணாவாதம் ஒரு சமூக முன்னேற்றதிற்கான கனவை விதைப்பதாக அமைந்துள்ளது என்பதே முக்கியம். அது சமூக மறு உற்பத்திக்கான கற்பனாவாதமாக அமைந்திருப்பதும் கூடுதல் முக்கியத்துவத்தைத் தருவதாக உள்ளது. பாரதிதாசன் அடிப்படையில் பகுத்தறிவான, சுயமரியாதை உள்ள, ஒரு கற்பனைவயப்பட்ட இலட்சியத் தமிழ்ச் சமூகத்தைத் தனது கவிதைகள், காப்பியங்களில் கட்டமைக்க முயலுகிறார். அவரது அக்கற்பனைகள் உணர்ச்சிகளை மையமிட்டதாக அமைந்துள்ளது.

பகுத்தறிவை தனது உலகப்பார்வையாகக் கொண்ட பாரதிதாசன், உணர்ச்சிக்கு அதிகம் முக்கியத்தவம் தருபவராக உள்ளார் என்பது முரணாகத் தோன்றலாம். அவர் உணர்ச்சிக்கும், அறி விற்குமான வேறுபாட்டை நன்கு உணர்ந்தவராக உள்ளார். இது குறித்து, "நூலறிவும் உணர்வும்" என்று தனியானதொரு உரையே நிகழ்த்தி உள்ளார். அதில் உண்மை, மெய்மை ஆகியவற்றின் வேறுபாட்டை விளக்குகிறார். "உண்மை என்பது உள்ளத்தின் தன்மை, அதாவது, உட்புறத்தின் இயல். மெய்மை என்பது மெய் (உடல்)யின் தன்மை. அதாவது, மேற்புறத்தின் இயல்" (16,1990) என்கிறார். தோர்க்கீக அறிவிற்கும் உணர்வுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் தார்க்கீக ஞானமானது செயலில் வருவது துர்லபம். ஒன்றை அறிந்ததற்கு அறிந்தபடி செயல் செய்வதற்கும் இடையில் தாமதமேயின்றி அறிவும் செயலும் ஒரே நேரத்தில் நிகழ்வது உணர்வு." (18,1990) என்று உணர்விற்கு ஒரு புதிய விளக்கத்தை தருகிறார். அதாவது உணர்வு என்பது அறிவும் செயலும் ஒரே நேரத்தில் நிகழ்வது என்கிறார். அறிவு உடனடிச் செயல்வடிவம்பெற உணர்வு முக்கியம் என்பது அவரது பார்வையாக உள்ளது.

"உணர்ச்சி தேவை! உணர்ச்சி பிழைபடுவதில்லை. அது உண்மை." என்கிறார். ஆக, அறிவு செயலாக மாறும் ஒன்றே உணர்ச்சி என்பதாகப் பாரதிதாசனது உணர்ச்சி குறித்த கருத்தாக்கம் உள்ளது. ஆக, அறிவைச் சமூகத்தில் கொழுத்துவதன் மூலம் அது உணர்ச்சியாகப் பரவும். அதற்கு அடிப்படை அறிவார்ந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதே. அறிவைப்பெற முதலில் உணர்ச்சியைத் தூண்ட வேண்டும். தூண்டப்பட்ட உணர்வு அறிவால் செயல்வடிவம் பெறும் என்பதே அவரது உணர்ச்சி குறித்த கோட்பாடாக உள்ளது. அதனால்தான் அவரது கவிதைகள் அறிவாரந்த சமூகத்திற்கான கருத்துக்களை உணர்ச்சிகரமாக பாடுவதாக அமைந்துள்ளது. இசைடேன் கூடியதாகப் பாக்களை அமைப்பது என்பது, எளிமையாக மக்களிடம் பரவும் என்பதுடன் அது மனதில் பதிந்து ஒரு மந்திரமாகச் செயல்படும் தன்மைக் கொண்டது. மதங்களின் மறைநூல்கள் இப்படி இசைடேன் பாடப்படுவதே, அதை நினைவில் நிறுத்திக் கொள்வது எளிது என்பதுடன் அதனைப் பாடப்பாட, ஏற்படுத்தும் உடல் இயைபு (லயம்) உடனடிச் செயல் வடிவம் கொண்டதாக மாறும். உள்ளத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் என்பதே. அதனை வெறும் மரபுக் கவிதைகள் என்று ஒதுக்குவது தமிழ் அறிவொளி மரபைப் புரிந்துகொள்ள மறுக்கும் செயலே.

இறுதியாக, பாரதிதாசனின் இக் காப்பியங்கள் கீழ்கண்டப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது.

1. இலட்சிய திராவிடத் தமிழ்க் குடும்பம்

2. அறிவார்ந்த மனிதர்களைக் கொண்டதாக அமையும் குடும்பம்

3. பெண் கல்வி, பெண் மையச் சிந்தனை, பெண்ணிய நோக்குநிலை

4. சாதி, மதமற்ற, பகுத்தறிவான அறிவுச் சமூகம்

5. பழந்தமிழ் அறநெறிப்பட்ட நவீனக் குடும்ப அமைப்பு

6. தன்னலமற்ற பொதுநலத்தை ஒவ்வொரு தனிமனிதனும், குடும்பங்களும் பேண வேண்டும்

7. குடும்பமும் நாடும் வேறு வேறல்ல, இரண்டும் ஒன்றுதான்

தமிழில் மறுமலர்ச்சிக் காலத்தில் இயங்கியவர்கள் பாரதியும், பாரதிதாசனும் என்றாலும், பாரதி மறுமலர்ச்சிடேன் நின்றுவிட, பாரதிதாசன் மறுமலர்ச்சிடேன் தமிழ் அறிவொளி இயக்கத்தின் முன்னோடியாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருப்பதை அவரது இலக்கிய இயக்கம் வெளிப்படுத்துவதாக உள்ளது. தமிழை அவர் ஒரு மறுமலர்ச்சிக்கான கருவியாக மட்டும் பார்க்கவில்லை, அதனை அறிவிற்கான ஒரு அறிவொளிக்காலக் கருவியாக பார்க்கிறார். இக் கருத்தின் மீது பற்பல விமர்சனக் கண்ணோட்டங்கள் இருந்தாலும், தமிழ் அறிவொளிக் காலத்தின் முன்னத்தி ஏராக உள்ளார் பாரதிதாசன் என்பதை அவரது இலக்கியங்கள் மற்றும் இயக்கங்கள் தெளிவாக முன்வைப்பதாக உள்ளது.

பார்வை நூல்கள்:

1. பாரதிதாசன் பேசுகிறார், பாவேந்தர் பாரதிதாசன், 1990, பூம்புகார் பதிப்பகம், சென்னை108.

2. பாவேந்தம் தொகுதி 3, பாரதிதாசன், 2009, தமிழ்மண் பதிப்பகம், சென்னை17

3. புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன், டாக்டர் சி. பாலசுப்பிரமணியன், 1986, பாரிநிலையம், சென்னை108

4. இந்திய இலக்கியச் சிற்பிகள் பாரதிதாசன், முருகு சுந்தரம், 2007, சாகித்திய அகாதெமி, புது தில்லி01

5. குறிஞ்சித் திட்டு, பாரதிதாசன், 1985, பாரிநிலையம், சென்னை108

6. பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழா மலர் 1991, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி

- ஜமாலன்