இரு கலாச்சார அல்லது பல் கலாச்சார வாழ்வும் அதுசார் சூழலும் பல்வகையான சவால்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றை ஒற்றைப் பரிமாணத்திற் பார்க்கவும் முடியாது. அதற்குள் ஆழமானதும் சிக்கலானதுமான பல அம்சங்களும் சவால்களும் பல அடுக்குகளில் உள்ளன. அவை பல்வேறு நேர்மறையான வாய்ப்புகளைக் கொண்டுள்ளமையையும் மறுத்துவிட முடியாது.
கலை கலாச்சாரத் தளங்களில் ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையை முதன்மையான கலாச்சார அரசியற் கொள்கையாகவும் இலக்காகவும் நோர்வே அரசு கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாகக் கலை பண்பாடு சார் செயற்பாடுகளிற் சிறார்கள், இளைஞர்களின் பங்கேற்பை அதிகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அக்கறை கொண்டுள்ளது. அவற்றை உள்ளூராட்சி சபை, நகரசபை, தேசிய ரீதியாக எனவாகக் கட்டமைப்பு ரீதியாகவும் கவனம் செலுத்துகின்றது.
இன்றைய நாட்களில் நோர்வேயின் நாடுதழுவிய மொத்தச் சனத்தொகையில் 17 வீதமானவர்கள் வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்டவர்களும் அவர்களின் அடுத்தடுத்த தலைமுறையினருமாக (நோர்வேயில் பிறந்;து வளர்வோர்) உள்ளனர். தலைநகர் ஒஸ்லோவில் 35 வீதத்தினர் வெளிநாட்டுப் பின்னணியுடையவர்கள். 1970இல் இருந்து புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையும் மொத்த மக்கட்தொகையில் வெளிநாட்டவர்களின் விகிதாச்சாரமும் துரிதமாக அதிகரித்துள்ளன. 1970இல் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 57 000. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 931 000 என நோர்வேயின் மத்திய தகவல் மையத் தரவுகள் (Statistics Norway-SSB) கூறுகின்றன. அரை நூற்றாண்டுக்கு முன்னர்; குடியேறியவர்களின் தொகை மக்கட்தொகையின் 1. 5 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. இந்த விகிதம் 2024இல் 17 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஜனநாயகப்படுத்தலும் பன்மைத்துவப்படுத்தலும்
பொதுவான கலை கலாச்சாரச் செயற்பாடுகள், பாடசாலை, இணைவாக்கச் செயற்பாடுகள், மற்றும் உள்ளூராட்சி மேம்பாடு ஆகியவற்றின் குறுக்குவெட்டுச் சந்திப்பில் ஒட்டுமொத்தக் கலாச்சாரக் கொள்கை இலக்குகள் மீளாய்வுகளுக்கும் உட்படுத்தப்படுகின்றன. அத்தோடு கொள்கைகள், இலக்குகள், கோட்பாடுகள் மற்றும் உள்ளூர் நடைமுறைத் திட்டங்களுக்கிடையேயுள்ள தொடர்புகள் ஆய்வுகளுக்கும், மதிப்பீடுகளுக்கும் மீளாய்வுகளுக்கும் உட்படுத்தப்பட்டுத் திட்டங்கள் மேம்படுத்தவும் புதுப்பிக்கவும் படுகின்றன. தேசிய அரசியல் இலக்குகளுக்கும் உள்ளூர், நகர மட்ட செயற்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த அடைவுகளுக்கும் இலக்குகளுக்குமிடையிலான இடைவெளியை அடையாளம் காணும் வகையில் ஆய்வுகள் குறித்த கால இடைவெளிகளில் நடாத்தப்படுகின்றன. சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், குறிப்பாகப் பல்லினப் பின்னணியைக் கொண்டவர்களின் பங்கேற்பை உறுதிசெய்வதுவும் அரசின் திட்டங்களின் இலக்காக இருக்கின்றது. இன்னொரு வகையிற் சொல்வதானால் பால், இன, மொழி, பண்பாட்டுப் பின்னணிகளைக் கடநது கலை கலாச்சாரச் செயற்பாடுகளின் ஜனநாயகப்படுத்தலும் பன்மைத்துவப்படுத்தலும் எனவாக அரசின் கலை கலாச்சாரக் கொள்கை ஆவணங்களின் உள்ளடக்கம் அமைந்துள்ளது.
கடந்த 20-30 ஆண்டுகளில் நோர்டிக் கலாச்சாரக் கொள்கைக்கான உட்பொருளைக் கொடுத்த கருத்துக்களில், உள்ளூர்க் கலாச்சாரக் கொள்கை நடைமுறை சார்ந்து நேரடியான தாக்கங்களை ஏற்படுத்துகின்ற குறிப்பிடத்தக்க இலக்குகள், அடிப்படைப் பதங்களை அடையாளம் காணமுடியும். அப்பதங்களை முன்வைத்து உரையாடவும் முடியும். கலாச்சார ஜனநாயகம் மற்றும் ஜனநாயகப்படுத்தல், பங்கேற்பு, பன்முகத்தன்மை மற்றும் உள்வாங்குதல் ஆகியவை (Cultural democracy, democratization, participation and diversity) அச்சொல்லாடல்களாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்திலிருந்து நோர்வே உட்பட்ட நோர்டிக் நாடுகளின் கலாச்சாரக் கொள்கைசார் ஆவணங்களில் இத்தகு சொல்லாடல்கள் மற்றும் இவைசார்ந்த கருத்துகளை நாம் பரவலாக அவதானிக்க முடியும்.
உள்வாங்குதல், இணைவாக்கம், பன்மைத்துவம்
1948 இல் நோர்வேயில் தேசிய அரங்கு (Riksteateret) நிறுவப்பட்டது. 1968 இல் தேசிய இசை கச்சேரிகளுக்கான (Rikskonsertene) மையம் நிறுவப்பட்டது. ‘கலாச்சார- ஜனநாயகமயமாக்கல்’ இவற்றின் முதன்மை இலக்கு. 1965 இல் கலாச்சார கவுன்சில் நிறுவப்பட்டது. அது கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டினையும் அதே நேரத்தில் கலை மற்றும் கலாச்சார விழுமியங்களை முடிந்தவரை பலராலும் அணுகக் கூடியதாக மாற்றும் இரட்டை நோக்கத்தினைக் கொண்டிருந்தது. 1970களில் அத்தகைய ஜனநாயகப்படுத்தல் கலாச்சார ஜனநாயகம் பற்றிய கருதுகோளால் உந்துதல் பெற்றதாகும். 1990களில் உள்வாங்குதல், இணைவாக்கம், பன்மைத்துவம் என்பனவற்றின் தாக்கம் கலாச்சார வாழ்வின் அங்கமாகிக் கலாச்சார அரசியல் கொள்கையினதும் சொல்லாடல்களினதும் அங்கமாகவும் ஆகியது.
1990 களில், பன்மைத்தன்மை எனும் சொல்லாடல் கலாச்சார- இனத்துவ அர்த்தத்தில், கலாச்சாரக் கொள்கைக்கான ஒரு புதிய இலக்காக மாறியது. நோர்வேயில், கலாச்சாரத்தின் ஜனநாயகமயமாக்கலுக்கான கொள்கை ரீதியான கருத்துகள் 2011 இல் கலாச்சாரம், உள்வாங்கல், பங்கேற்பு என்ற தலைப்பிலான அறிக்கையில் உள்ளடக்கப்பட்டு நாடாளுமன்றத்திற் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அந்த ஆவணமே கலாச்சார அரசியல் அபிலாஷைகளின் உச்சகட்டத்தை இன்றளவும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
கலை கலாச்சாரச் செயற்பாடுகள் அனைவருக்குமானதாக இருத்தல் வேண்டும், அனைவருக்குமானதாகப் பரவ வேண்டும், அனைவரையும் தழுவிக்கொள்ள வேண்டும், அனைவராலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது கொள்கை ரீதியான அந்தத் தீர்மானமாகும். ஆனால் நடைமுறையில் அது எத்தனை தூரம் சாத்தியமாகியிருக்கின்றது என்பது கேள்விக்குரியது, விவாதத்திற்குரியது, மீளாய்வுக்கும் மீள் மதிப்பீடுகளுக்குமுரியது.
குழந்தைகள், சிறார்கள், இளைஞர்கள்: கலாச்சாரக் கொள்கை
கலைகளும் பண்பாட்டு அம்சங்களும் உள்ளார்ந்த விழுமியங்களைக் கொண்டிருப்பதோடு, மனித மனதுக்கு இன்பமூட்டி, வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துகின்றன. சமூகப் பாகுபாடுகளைக் கடந்த பரந்த கலை கலாச்சாரப் பங்கேற்பு சமூகக் கூட்டுணர்வினையும் ஜனநாயகத்தையும் மேம்படுத்தவல்லது என்பது மறுக்க முடியாத யதார்த்தம்.
1990 மற்றும் 2000களில் சிறார்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்ட கலை கலாச்சாரச் செயற்பாடுகள் நோர்வேயின் கலாச்சாரக் கொள்கையின் முதன்மைப்படுத்தல்களில் ஒன்றாக வளர்ந்துவருகின்றது. 2001 இல் ‘கலாச்சார பாடசாலைப் பை - (நோர்வேஜிய மொழியில் ‘Den kulturelle skolesekken’) திட்டம் நிறுவப்பட்டதன் மூலம் இது கவனப்படுத்தப்பட்டது. பாடசாலை நேரத்தில் அனைத்து மாணவர்களும் குறைந்தபட்சம் ஒரு கலாச்சார செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பினை வழங்குவதை உறுதிப்படுத்துகின்ற இலட்சியத் திட்டம் அதுவாகும். கடந்த இரண்டு தசாப்தங்களில், குழந்தைகள், சிறார்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்ட பல கலை கலாச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைக் கலை மற்றும் கலாச்சார நிகழ்த்துகைகளின் பயனர்களாக ஆக்குவதையும் அவர்களுக்குப் பயிற்சியளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட திட்டங்களாகும்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களைக் கலை கலாச்சார வாழ்விற்குள் உள்வாங்குவதற்கும் ஈடுபடுத்துவதற்குமான செயற்திட்டங்களுக்காக ஒவ்வோராண்டும் அரசு மில்லியன் கணக்கான நிதியை ஒதுக்குகின்றது. இந்த ஆண்டு (2024) 13 மில்லியன் குரோணர்களைப் பங்கிட்டுள்ளது. அத்தோடு அரசின் கீழ் (பண்பாட்டு அமைச்சகம்) இயங்கும் பண்பாட்டு அலகுகளில் கலைப் படைப்புகளுக்கான நிதி அனுசரணையை விண்ணப்பித்துப் பெறுகின்ற வாய்ப்பு உள்ளது. கலை வடிவம், பேசுபொருள், வெளிப்பாடு சார்ந்த உயர்ந்த தரம் அதற்கான முதன்மை நிபந்தனைகளாக உள்ளன. அதற்குரிய கண்காணிப்புப் பொறிமுறைகளும் உள்ளன. வெளிநாட்டுப் பின்னணியை உடைய கலைஞர்கள் தரம்மிக்க வகையிற் தமது தனித்துவமான படைப்பாக்கங்களை உருவாக்குவதற்கான வெளியும் சூழலும் வாய்ப்புகளும் நிலவுகின்றன என்பதைச் சொல்வதற்காக அதனைக் குறிப்பிடுகின்றேன்.
செயற்பாட்டு வெளி
புலம்பெயர் நாடுகளிற் பண்பாடு, மொழி, கலை சார்ந்த செயல்முன்னெடுப்புகள் பல தளங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ்ப் பள்ளிக்கூடங்கள், கலைகளைக் கற்பிக்கும் செயற்பாடுகள் (இசை, நடனம், சங்கீதம்), கலை- பண்பாட்டு நிகழ்வுகள் எனப் பல்வேறு வடிவங்களிலும் தளங்களிலும் அச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அரசியல், சமூகம், மொழி, கலை, பண்பாடு சார்ந்த வெளிநாட்டவர்களின் ஈடுபாட்டிற்கும் செயற்பாட்டிற்குமான வெளி நோர்வே உட்பட்ட ஸ்கன்டிநேவிய நாடுகளில் நிலவுகின்றன. ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இவை சார்ந்த செயற்பாடுகள் ஜனநாயக மற்றும் அரசியற் கொள்கை, சட்ட உரிமை உட்பட்ட இன்னபிற அடிப்படைகளால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கலை கலாச்சார ஈடுபாடும் செயற்பாடுகளும் தனியான கலாச்சார அரசியற் கொள்கை வகுப்பிற்கு ஊடாக முக்கியத்துவமளிக்கப்பட்டிருக்கின்றது.
அரசியலை எடுத்துக் கொண்டால், தாயக அல்லது இன்னொரு நாட்டு மக்களின் ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்களுக்கும் சுயநிர்ணய உரிமைக்கும் ஆதரவான செயற்பாடுகளில் அமைப்பு ரீதியாக ஈடுபடுவதற்குரிய வெளியும் உள்ளது. அதாவது அரசியல், கருத்து ரீதியாக மட்டுமன்றி நிதிசேகரிப்பு, பொருளீட்டல் உட்பட்ட அமைப்பு ரீதியான செயற்பாடுகளுக்குரிய வெளி நிலவிவந்துள்ளது. செப்ரெம்பர் 2001 இற்குப் பின்னான பயங்கரவாதத்திற்கு எதிரான போர்ப் பிரகடனத்திற்குப் பின்னான சூழலில் இறுக்கங்களும் கெடுபிடிகளும் தோற்றுவிக்கப்பட்ட போதும் ஜனநாயக ரீதியிலான செயற்பாட்டு வெளி பறிக்கப்படவில்லை. முரண்பாடுகள் நிலவுகின்ற நாடுகள் பலவற்றிற்கான சமாதான அனுசரணை நாடு என்ற வகிபாகத்தை நோர்வே கொண்டிருக்கின்றமையும் நோர்வேயிலுள்ள வெளிநாட்டுப் பின்னணியையுடைய சமூகங்களின் அரசியற் செயற்பாடுகளுக்கு அநுகூலமான அம்சம். ஐரோப்பிய ஒன்றியத்தில் நோர்வே அங்கம் வகிக்கவில்லை என்பதும் இன்னொரு அநுகூலம். தமிழீழ விடுதலைப் புலிகள், ஹமாஸ் போன்ற அமைப்புகளோடு நோர்வே நேரடித் தொடர்பில் இருந்தமையும் அவை போன்ற அமைப்புகளை நோர்வே தடைசெய்யவில்லை என்பதையும் இங்கு உதாரணமாகச் சொல்லலாம்.
வெளிப்பாட்டுத் தளங்கள்
தமிழர்களாக இருக்கட்டும், வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட ஏனைய சமூகங்களாக இருக்கட்டும், பெரும்பாலான வெளிநாட்டுச் சமூகங்களின் கலை, கலாச்சார வெளிப்பாடுகள் மூன்று தளங்களில் நிகழ்த்துவதற்கான வெளியினைக் காணலம். தத்தமது சமூகத்திற்குள் தனியாக நிகழ்த்தப்படுபவை. நோர்வே பெரும்சமூகத்தின் கலை கலாச்சார நிகழ்த்துகைகளில் பன்மைத்துவத்தின் வெளிப்பாடாகப் பரஸ்பர அங்கீகாரத்தோடு நிகழ்த்தப்பவை. மூன்றாவது பன்மைத்துவத்தின் வெளிப்பாடாகக் காட்டுகின்ற நோக்கோடு உள்வாங்கப்படுகின்ற நிலை. அங்கு பரஸ்பர அங்கீகாரத்தினை எதிர்பார்க்க முடியாது. நடைமுறையிற் பெரும்பாலும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த கலைஞர்கள், குறிப்பாக இசைக் கலைஞர்கள் பன்மைத்துவத்தினைக் காட்டுவதற்கான அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தப்படுவதாகச் சில கலைஞர்கள் அனுபவரீதியாக உணர்கின்றனர்.
இன்றைய சூழலிற் பெரும்பாலும் தமிழ்ச் சமூகத்திற்குள் கலை கலாச்சாரச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை இரண்டாம் தலைமுறை இளைஞர்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர். அதேவேளையில் தமிழ்ப் பின்புலம் கொண்ட சிலர் நோர்வே பெருஞ்சமூக மற்றும் பல்லினச் சமூகத் தளங்களில் கலை மூலம் தம்மை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். இது நேர்மறையானது, ஆனால் ஆரம்பக் கட்டத்திலேயே நிற்கின்றது என்பதைக் குறிப்பிடவேண்டும்.
போலச் செய்தல்
தமிழர்களின் கலைசார் முன்னெடுப்புகளைப் பொறுத்தவரை தமிழகச் சினிமாவும் அதன் பாடல்களும் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. நிகழ்வுகளில் தனித்துவமானதும் புத்தாக்கமானதுமான சில அரங்க ஆற்றுகைகள், நடனங்கள், நடன நாடகங்கள், நாடகங்கள் படைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சினிமாவின் பாதிப்பே கலை நிகழ்த்துகைகளின் பெரும்போக்காகவும் பெரும்பான்மையினரின் இரசனைக்குரியனவாகவும் உள்ளன. திரைப்பட முயற்சிகளும் சிறிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றிலும் பெரும்பான்மையானவை தமிழகச் சினிமாப் பாணியின் தத்தெடுப்புகளே.
மக்களின் ரசனையும் கீழிறங்கிக் கொண்டிருக்கின்றது. ‘போலச் செய்தல்’ என்பதற்கே முன்னுரிமை. சினிமாப் பாடல்களை மேடைகளிற் பாடுவது, சினிமாப் பாடற் போட்டிகளை நடாத்துவது, சினிமாப் பாடல்களின் கரோக்கே இசையில் பாடுவது எனவாகப் போலச் செய்தலின் பட்டியல் நீளமானது. இளம் திருமணத் தம்பதிகள்கூட சினிமாவில் இடம்பெற்ற பாடலொன்றுக்கு ஏதோவொரு வெளிநாட்டுக்குப் படப்பிடிப்புக் குழுவுடன் சென்று காணொளி உருவாக்கித்; தமது திருமண விழாவில் திரையிடுவதும், பின்னர் அந்த வீடியோவைச் சமூக வலைத்தளங்களிற் பதிவதிலும் பெரும் ஆர்வம் கொண்டிருக்கின்றனர். திருமணத் தம்பதிகள் தம் காதலைக் கொண்டாடும் வகையிற் தமது உணர்வுகளைப் புதிய பாடலாக உருவாக்கிக் காணொளியாக்கினாற்கூட அதில் ஒரு படைப்பாக்கமும் இரசனையும் அழகியலும் இருப்பதாகக் கருதலாம். புத்தாக்கம் என்பது பொதுவாகவே மிகமிக அருகிவருகின்ற நிலை.
ஈழத்தமிழர்: நோர்வேக்கான புலப்பெயர்வின் வரலாறு
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வின் பின்னணியைச் சற்றுச் சுருக்கமாக இங்கு நோக்குவது பொருத்தமானது. பின்- கொலனித்துவ இலங்கையின் யதார்த்தத்திலும் சிங்களம் மட்டும் சட்ட அமுலாக்கத்தின் பின்னணியிலும் தமிழர்களில் ஒரு பிரிவினர் தொழில் அகதிகளாக (Labour Migants) பிரித்தானியாவிற்குச் சென்றனர். தனிச்சிங்களச் சட்டம்; எதிர்கால வேலைவாய்ப்புகளைத் தடுக்கும் ஓர் ஒடுக்குமுறைக் கருவியாகத் தமிழ்மக்களாற் பார்க்கப்பட்டது. நோர்வேக்கான தமிழர்களின் புலப்பெயர்வு 1960களின் பிற்பகுதியிற் தொடங்கியது. சிலோன் - நோர்வே (Cey-Nor) மீன்வள அபிவிருத்தித் திட்டமே தமிழர்களின் நோர்வே நோக்கிய புலப்பெயர்வுக்கான தொடக்கம். இது முக்கியமான இரண்டு நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. மற்றையது நோர்வேயின் ‘Folk high schools’ (Adult Education Center) கல்விவாய்ப்புத் திட்டம்.
1975 இற்குப் பின் நோர்வேக்கான தமிழர்களின் புலப்பெயர்வு ஒரு கல்விசார் புலப்பெயர்வாக (Educational migrants) அமைந்தது. குறிப்பாக நோர்வேஜிய மொழியில் ‘Folkehøgskole’ எனப்படும் Folk high schools (Adult Education Center) கல்விவாய்ப்பிற்கூடாகப் புலம்பெயர்ந்தனர் ஒரு பிரிவினர். அத்தோடு குறிப்பிட்ட சிறு எண்ணிக்கையிலான தமிழ் மாணவர்கள், நோர்வேஜியப் பல்கலைக் கழகங்களில் நேரடி அனுமதிபெற்று உயர்கல்வி வாய்ப்புடன் புலம்பெயர்ந்தனர். அதற்கான அரசியற் பின்னணி 1971இன் சிறிலங்கா அரசின் கல்வித்தரப்படுத்தல். இவ்வாறாக 1986 வரையான கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் தொழில் மற்றும் கல்விசார் புலப்பெயர்வு ஊடாகக் கிட்டத்தட்ட 1000 வரையானவர்கள் நோர்வேக்குப் புலம்பெயர்ந்தனர்.
1980 களின் நடு மற்றும் இறுதிப்பகுதியில் 1983 ஜூலைக் கலவரங்களின் விளைவான புலப்பெயர்வு அரசியற் காரணங்களின் பின்னணியில் நிகழ்கின்றது. அதனைத் தொடர்ந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த நிலையில் அகதிகளாகவும் அரசியற் புகலிடம் கோருபவர்களாகவும் (Asylum seekers and political immigrants) தமிழர்களின் புலப்பெயர்வு நிகழ்கின்றது. போர் காரணமாகப் புலம்பெயர்ந்த இந்தப்பிரிவினரே, தமிழ் டயஸ்போறாவின் உலகளாவிய பரப்பலுக்குரிய பெரும்பான்மையாக உள்ளனர். நோர்வேக்கா தமிழ்ப் புலப்பெயர்விற் பெரும்பான்மையும் அத்தகைய பின்னணியைக் கொண்டதே. அதன் தொடர்ச்சியாகக் குடும்ப மீள் இணைவு (Family re-union settlers) அமைகின்றது. அதாவது நோர்வேக்கு முதற்கூறப்பட்ட வெவ்வேறு காலகட்டங்களில், குறிப்பாக அகதிகளாகவும் அரசியற்காரணிகளாலும் புலம்பெயர்ந்தவர்கள் தமது குடும்பத்தினரை நோர்வேக்கு அழைத்த காலகட்டம் அமைகின்றது. இன்றைய சூழலில் 17 000 வரையான ஈழத்தமிழ் பின்னணியுடைய தமிழர்கள் நோர்வேயில் வசிக்கின்றனர்.
பெருஞ்சமூகத்தின் அபிப்பிராயம்
தமிழர்களின் நோர்வேயிய சமூகத்துடனான இணைந்து வாழ்தல் சார்ந்து ஊடகங்களில் நல்ல அபிப்பிராயம் நிலவிவந்துள்ளது. முன்னுதாரணமான புலம்பெயர் சமூகமென்ற பொதுவான சித்தரிப்பும் உள்ளது. அடிப்படையில் இந்தப் பொதுவெளி மற்றும் ஊடக அபிப்பிராயத்தைக் கட்டமைப்பதற்கான முக்கியக் குறிகாட்டி என்பது தொழிற்சந்தைப் (Participation in labour market) பங்கேற்பின் அளவுதான்.
தமிழர்களின் தாயகத்துடனான பிணைப்பும் பேணலும் நோர்வேஜிய பெருஞ்சமூகத்தின் மத்தியில் நன்கு அறியப்பட்ட விடயம். ஆனால் அதுவிடயம் பெருஞ்சமூகப் பொதுவெளியில் எதிர்மறையான சித்தரிப்புகளுக்கு உட்படவில்லை. இணைந்து வாழ்தலுக்குத் தடையாக முன்வைக்கப்படவில்லை. தொழிற்சந்தையில் தமிழர்களின் பங்கேற்பு அதிகம் என்பதும் சொந்த வீடுகளைப் பெரும்பான்மையான தமிழர்கள் கொண்டிருப்பதுவும் இதற்கான முக்கிய காரணங்கள். தாயக உறவு பேணலுடன் சமாந்தரமாக நோர்வேயில் வெற்றிகரமான வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும் என்பதற்கான உதாரணமாக சொல்லப்பட்ட ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன. பெருஞ்சமூக அரசியலாளர்களாலும் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
கலாச்சாரங்களின் சந்திப்பும் மையநீரோட்டப் பங்கேற்பும்
வெவ்வேறு கலாச்சாரங்கள் சந்திக்கும் போது, அவை ஒன்றிலொன்று செல்வாக்குச் செலுத்துகின்றன. அனைத்துக் கலாச்சாரங்களும் பிற கலாச்சாரங்கள் மற்றும் அவற்றின் விழுமியங்களால் செல்வாக்குப் பெற்று புதிய திசைகளிற் தம்மை மேம்படுத்திக் கொள்கின்றன. கிட்டத்தட்ட இன்றைய முழு உலகமும் பல்லின-பல்கலாச்சார- பன்மொழிச் சமூகங்களாகவே வாழ்கின்றது. இந்த வாழ்வு முறை புதிய சிந்தனைகளுக்கும் புத்தாக்கங்களுக்கும் வழிகோலுகின்றது என்பதை மறுக்கமுடியாது. அது கலாச்சாரத்தையும் கலையையும் உயிர்ப்போடு பேணவும் வளர்க்கவும் கடத்தவும் பங்களிக்கின்றது சமூகத்தின் நேர்மறை மாற்றங்களுக்கு உகந்த வழிகளிலும் வடிவங்களிலும் கலைகளும்; கலாச்சாரமும் ஒருங்கிணைக்கப்பட்டு வளர்ச்சியடைவது இயல்பானதும் ஆரோக்கியமானதுமாகும்.
தமிழ்ப் பின்னணியுடைய (நோர்வேக்குப் புலம்பெயர்ந்த) முதற்தலைமுறையினரிற் ஒரு சிலர் அரசியல், கலை பண்பாடு மற்றும் ஊடகத் தளங்களில் பங்கேற்றுள்ளனர். முக்கிய துறைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய சில முன்னோடிகள் இருந்துள்ளனர். இரண்டாம் மூன்றாம் தலைமுறையிலிருந்தும் சிலர் (நோர்வேயிற் பிறந்து வளர்ந்த) இத்துறைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். தொழில்முறையாக இத்துறைகளில் ஈடுபடும் சிலரும் சமகாலத்தில் அடையாளப்பட்டுவருகின்றனர். குறிப்பாக கட்சி, உள்ளூராட்சி, நகரசபை மற்றும் நாடாளுமன்ற அரசியல், இசை, ஊடக மற்றும் எழுத்துத் துறைகள் சார்ந்த பங்கேற்பினைக் குறிப்பிட முடியும். ஊடக மற்றும் எழுத்துத்துறையில் தனித்துவம் பாதிக்கப்படாத வகையில் ஈடுபடக்கூடிய சூழல் நிலவுகின்றது.
மைய நீரோட்டக் கலை முன்னெடுப்பும் கட்டமைப்பும்
நோர்வேஜிய மைய நீரோட்டக் கலை முன்னெடுப்புகளை எடுத்துக் கொண்டால் அவை தனியான கட்டமைப்புகள், வலையமைப்புகள், அடுக்குகளைக் கொண்டிருக்கின்றன. அவற்றின் பங்களிப்பாளர்களாக வெளிநாட்டுப் பின்னணியைச் சேர்ந்த பல்லினக் கலைஞர்கள் இருப்பினும் அவற்றின் தயாரிப்பாளர்களாகப் பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் வெள்ளையின நோர்வேஜியர்களே இருப்பர். அவை அதிகமதிகம் வணிக மயப்பட்டவையாகவும் இருக்கின்றன. ஆத்மார்த்தமான கலைஞர்கள், தமது தனித்துவமான படைப்புகளை உருவாக்கும் உந்துதலுடையவர்கள் இத்தகைய நிகழ்போக்குகளிற்குப் பின்னாற் செல்ல மாட்டார்கள்.
பன்மைத்துவம் என்ற அளவுகோல் என்பது மைய நீரோட்டத்தை நோக்கிச் சிறுபான்மைச் சமூகங்கள் செல்வதை, உள்வாங்கப்படுவதையே குறிக்கின்றது. மாறாக சிறுபான்மைச் சமூகங்களை நோக்கிப் பெருஞ்சமூகம் செல்வதையும் இணைவாக்கமடைவதையும் குறிப்பதில்லை என்பது விமர்சனமாக முன்வைக்கப்பட வேண்டியது. இதற்குள் ஒருவகைக் கரைய வைத்தல் (Assimilation) போக்கு உள்ளதான விமர்சனங்கள் நிலவுவதை மறுப்பதற்கில்லை. இரு கலாச்சார அல்லது பல் கலாச்சார வாழ்வும் அதுசார் சூழலும் பல்வகையான சவால்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றை ஒற்றைப் பரிமாணத்திற் பார்க்கவும் முடியாது. அதற்குள் ஆழமானதும் சிக்கலானதுமான பல அம்சங்களையும் சவால்களையும் பல அடுக்குகளில் உள்ளன. அவை பல்வேறு நேர்மறையான வாய்ப்புகளைக் கொண்டுள்ளமையையும் மறுத்துவிட முடியாது.
உசாத்துணை:
- Nordisk kulturpolitisk tidsskrift, Idunn, 2016, Kultur for å delta - Når kulturpolitiske idealer skal realiseres i praktisk kulturarbeid- ‘பங்கேற்பதற்கான கலாச்சாரம் - கலாச்சார அரசியற் கொள்கைகள் நடைமுறைக் கலாச்சார நடவடிக்கைகளாக நிறைவேற்றப்படும் போது’! (Åsne Dahl Haugsevje, Ole Marius Hylland & Heidi Stavrum)
- Homeland Orientation of War-torn Diasporas: Remittance and Cultural Practices of Tamils and Somalis in Norway, 2011, (Tharmalingam, Sarvendra <https://www.duo.uio.no/discover?filtertype_1=author&-filter_relational_operator_1=equals&filter_1=Tharmalingam,%20Sarvendra>)
- Statistics Norway - SSB(நோர்வே மத்திய தகவல் மையம்)
- Utrop, 11.06.2024 (13 million for the inclusion of children and young people in cultural life)
- ரூபன் சிவராஜா
ரூபன் சிவராஜா 1993 ஆம் ஆண்டு சிறுவனாக இருக்கும்போது ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தார். தற்போது கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, நாடகம் மற்றும் ஊடகம் ஆகிய தளங்களில் இவர் செயற்பட்டு வருவதுடன் அரசியல், சமூகம், கலை, இலக்கியம் சார்ந்தும் எழுதி வருகிறார். ஈழம், தமிழகம், மற்றும் புலம்பெயர் ஊடகங்கள், இதழ்களில் இவரது எழுத்துக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.
'எதிர்ப்பரசியல்', 'அதிகார நலனும் அரசியல் நகர்வும்' (உலக அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு), 'எழுதிக் கடக்கின்ற தூரம்' (கவிதைத் தொகுப்பு), 'கலைப்பேச்சு' (திரை நூல் அரங்கு) என்பன இதுவரை வெளிவந்த படைப்புகளாகும்.