செகமெலாம் புகழ் சுதேசிக்கு இறைவன் இவனே

சிதம்பரச் செயசிங்கமே

என்ற தொடர் சிதம்பரனாருக்குச் சுதேசியத்தின் மீதிருந்த கொள்கைப் பிடிப்பை, செயற்பாட்டின் சிறப்பைக் காட்டுகிறது எனலாம். திரு.தெய்வநாயகம் பிள்ளை எழுதிய ஜெயவீர சிந்து என்ற படைப்பில் இடம்பெறுகிறது இத்தொடர். (திவான்.செ., வ.உ.சி. புகழ் பாடிய முன்னோடிகள், ப.16) ஆம். வந்தே மாதரம் என்ற மந்திரச் சொல்லை மாநிலம் முழுதும் ஒலித்தமையால் வந்தேமாதரம்பிள்ளை எனப் போற்றப்பட்ட சிதம்பரனார் சுதேசிப் பிள்ளையாகப் பேருருக் கொண்டமையை ஆய்வின் செல்நெறியில் காண்போம்.

சுதேசியம்

சுதேசியம் என்ற சொல்லுக்கு, தனது நாட்டில் செய்த பொருள் எனத் தமிழ் அகரமுதலி பொருள் தருகிறது. ‘சுதேசியம்’ என்பது சொந்த நாடு எனச் சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகனும் ஜே.பி. பேப்ரியஸ் தமிழ் ஆங்கில அகராதியும் பொருள் தருகின்றன. மேலும் சுதேசியம் என்பது நாட்டிற் செய்த பண்டம் எனத் தமிழிலும் என ஆங்கிலத்திலும் பொருள் தருகிறது, பேப்ரியஸ் அகராதி.

சுதேசி, சுதேசம், சுதேசியம் என்ற சொற்கள் அந்நியர், நமது தேசத்தை ஆண்டபோது உருவான ஒரு சொல்லாகும். அந்நியர் ஆட்சியில் நமது நாட்டில் பிறந்தவர்களைச் சுதேசி என்றனர். நாம் பிறந்த மண் சுதேசம் எனப்பட்டது. உள்நாட்டில் உற்பத்தி செய்தலும், செய்யப்பட்ட பொருள்களும் சுதேசியம் என்ற சொல்லுக்குள் சுழல்கின்றன எனலாம். இந்திய நாட்டின் அடிமைச் சூழலில் உருவான இச்சொல் இந்திய விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாக அமைந்தது எனலாம்.

சுதேசி இயக்கம்:

1905-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் வைஸ்ராய் கர்ஸான் பிரபுவினால் ஏற்படுத்தப்பட்ட வங்கப்பிரிவினை நாடு முழுவதுமான சுதந்திரப் போராட்ட இயக்கத்திற்குப் பெரும் எழுச்சியை அளித்தது எனலாம். மேலும் பிரிட்டிஜாரின் பிரித்தாளும் சூழ்ச்சியையும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தியது எனலாம். பேரெழுச்சி கொண்ட வங்கத்தில் வந்தே மாதரம் என்ற முழக்கமும் சுதேசியம் என்ற கோட்பாடும் எழுந்தன.

1906-ஆம் ஆண்டு கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் சுதேசியக் கோட்பாடு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தாதாபாய் நவ்ரோஜி தலைமையில் நிறைவேறிய இத்தீர்மானத்தில், முழுமையான விடுதலை அடைய அந்நியப் பொருள்களைப் புறக்கணிப்பதும் உள்நாட்டில் பொருள்களை உற்பத்தி செய்வதும், நமது நாடு சார்ந்த கல்வி முறைகளைச் செயற்படுத்துவதும் அடங்கியிருந்தன.

சுதேசி இயக்கம் பற்றிய தீர்மானத்திற்கான செயற்பாடுகளில் காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்கள் வேறுபட்டனர். இந்தத் தீர்மானம் சார்ந்த இயக்கம் தற்காலிகமானது எனவும் பகிஷ்கரிப்பு என்பதனைப் பிரிட்டிஷ் அரசாங்கம் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது எனவும் எண்ணினர். அதாவது எதிர்ப்பினைப் பெரிதாக வெளிப்படுத்த மிதவாதிகள் ஆர்வம் கொள்ளவில்லை.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பினைத் தீவிரமாகவும் வெளிப்படையாகவும் காட்ட முற்பட்டவர்கள். தீவிரவாதிகள் எனவும், புதிய கட்சியினர் எனவும் அடையாளப் படுத்தப்பட்டனர். இந்தத் தீவிரவாதப் பிரிவில் திலகர், பிபின் சந்திரபால், லாலா லஜபதிராய், அரவிந்தர் ஆகியோர் இருந்தனர்.

சுதேசி இயக்கம் பற்றி, புறக்கணிப்பு என்பது யுத்தத்திற்கு ஒரு மாற்றாகும். தென்னாப்பிரிக்காவில் போயர்கள் யுத்தம் தொடுத்தது போல் நாங்கள் யுத்தம் தொடுக்க இயலாது. எங்களுக்கு அடுத்து வாய்த்த சிறந்தவழி பிரிட்டிஷ் சாமான்களை வாங்க மறுப்பதேயாகும். இதுவே சுதேசி, பகிஷ்கார இயக்கத்தின் பின்னேயுள்ள உணர்வோட்டமாகும் எனத் திலகர் விளக்கம் அளிக்கிறார். (மணி. பெ.சு., (மொ.ஆ.), நவபாரதச் சிற்பிகள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, ப.81). இவ்வாறு உருவான சுதேசி இயக்கம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது வரலாற்றின் பதிவாகும்.

சென்னை மாகாணத்தில் சுதேசி இயக்கம்:

அன்றைய சென்னை மாகாணம் என்பது தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. சுதேசி இயக்கத்தைத் தமிழகத்தில் சென்னை மாகாணத்தில் முன்னெடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர், ஜி. சுப்பிரமணிய ஐயர் ஆவார். தமது இந்து, சுதேசமித்திரன் ஆகிய இதழ்கள் மூலமாகவும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும், சுற்றுப் பயணங்கள் மூலமாகவும் சுதேசி இயக்கப் பிரசாரத்தை நடத்தினார் (மேலது).

சென்னை சுதேசிய நிதியும் தொழிற்சங்கமும் எனும் அமைப்பினை உருவாக்கினார். இருபத்தியோரு வயதானவர்களை உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டார். ஆண்டுச் சந்தா ரூபாய் மூன்றாகும். இந்த அமைப்பின் வழி நமது நாட்டின் கைத்தொழில்கள், மேலை நாட்டுத் தொழில் கற்றல், கற்றவற்றை நமது நாட்டில் உருவாக்குதல், என உற்பத்தி, வணிகம் ஆகியவற்றிற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தனர். மேலும் இவை தொடர்பான செய்திகளை மக்களிடம் சொற்பொழிவு மற்றும் துண்டு அறிக்கைகள் வழி வெளியிடவும் முற்பட்டனர்.

சென்னையில் செயற்பட்டு வந்த இந்த அமைப்பினைப் பற்றி பாரதியார் தமது இந்தியா இதழிலும் அரவிந்தர் தமது வந்தேமாதரம் இதழிலும் எழுதியுள்ளனர். ஜி. சுப்பிரமணிய ஐயரின் சுதேசமித்திரன் இதழில் பணியாற்றிய பாரதியும் அவரது நண்பர் சிதம்பரம் பிள்ளையும் ஐயருடன் சேர்ந்து சுதேசிய நிதிக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து சென்னையில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி உள்ளனர். (மேலது, ப.84)

சுதேசியப் பொருள்கள் மற்றும் இயக்கம் சார்பான கருத்துக்களை மக்களிடத்தில் பரப்புவதற்காக 1907-ஆம் ஆண்டு தமது நண்பரும் சட்டக்கல்லூரி மாணவருமான வி.சக்கரைச் செட்டியாரைத் தலைவராகக் கொண்டு சுதேசி வஸ்து பிரசாரிணி சபை என்ற அமைப்பைப் பாரதியார் சென்னையில் உருவாக்கினார். ஒவ்வொரு வாரமும் சென்னையில் குறிப்பிட்ட இடங்களில் இச்சபையின் சார்பாகச் சுதேசக் கொள்கைகளை விளக்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டமையைப் பாரதியார் தமது இந்தியா இதழில் (08-06-1907) குறிப்பிட்டுப் பாராட்டுகிறார்.

சுதேசி இயக்கம் சார்பாகச் சென்னையில் பாரதியார் ஏனைய விடுதலை இயக்கத்தவரோடு இணைந்து பாலபாரத சங்கம் என்ற ஓர் அமைப்பினையும் உருவாக்கினார்.

வங்காளப் பிரிவினையின் நல்விளைவுகளுள் ஒன்றான சுதேசி இயக்கம் தமிழகத்தில் ஒரு புதிய எழுச்சியை உருவாக்கியது எனலாம். இவ்வாறு தமிழகத்தில் ஜி. சுப்பிரமணிய ஐயர், பாரதி முதலியவர்களது முன்னெடுப்பில் சிதம்பரனாரும் கைகோர்த்துள்ளார். அதாவது, தமிழகத்தில் சிதம்பரனார், பாரதி முதலிய நட்பு வட்டத்தினர் சுதேச இயக்கத்தை உருவாக்கியுள்ளனர் எனலாம். இந்தப் பின்னணியில் சிதம்பரனாரின் சுதேசியத்தைக் காண முற்படுவது சரியான புரிதலை அளிக்கும்.

சுதேசியம் அளிக்கும் சுகம்:

மரபார்ந்த சைவக் குடும்பத்தில் பிறந்த சிதம்பரனாருக்குத் தமிழ் இலக்கியம், திருமுறைகள், சித்தாந்த நூல்கள் ஆகியவற்றில் இயல்பாகவே பரிச்சயமிருந்தது. அவற்றோடு அக்காலகட்டத்தில் நெல்லை வட்டாரத்தில் எழுந்த வேதாந்தச் சூழலில் அவர் வேதாந்தப் பயிற்சியும் பெற்றிருந்தார்.

தமது அத்தையுடன் சென்னை சென்ற சிதம்பரனார் இராமகிருஷ்ண இயக்கத்தைச் சேர்ந்த துறவி இராமகிருஷ்ணானந்தரைச் சந்திக்க நேர்ந்தது. அச்சந்திப்பின்போது துறவி நாட்டிற்கு என்ன செய்தாய் என வினவினார்; எல்லாம் மாயை என வேதாந்தப் பற்றில் விடை தந்த சிதம்பரத்தை நோக்கி, சுதேசியத்தின் சுகத்தினைத் துறவி அறிவுறுத்துகிறார். அன்று சுதேசியம் என்னும் விதை சிதம்பரனார் உள்ளத்தில் முளைவிடத் தொடங்கி விட்டது. இதனைச் சிதம்பரனார் தமது சுயசரிதையில்,

இராம கிருட்டிணா னந்தனைக் கண்டேன்

‘தராதலம் பரவிச் சாரும் சுதேசியக்

கைத்தொழில் வளர்க்கவும் கைத்தொழில்

கொள்ளவும் எத்தகை முயற்சி இயற்றினை’ என்றான்

“கனவினை நிகர்த்துக் காணும் இவ்வுலகின்

நினைவினைக் கொண்டென்? நீள்வினை யாற்றியென்

கீழ்கோ டுயர்ந்தென்? மேல்கோ டுயர்ந்தென்?

வாழ்வோ தாழ்வோ மாய்கையே!” என்றேன்.

“சுதேசியம் ஒன்றே சுகம்பல அளிக்கும்

இதே என் கடைப்பிடை” என்றனன், அவனுரை

வித்தென விழுந்தது மெல்லிய என்னுளம்;

சித்தம் அதனைச் சிதையாது வைத்தது”

எனக் குறிப்பிடுகிறார். (அரசு.வீ., (தொ.ஆ.), வ.உ.சி. நூல் திரட்டு, ப.53)

அந்த ஆண்டு கார்த்திகை மாதம் ஜப்பான் தேசம் செல்லும் வழியில் தூத்துக்குடி வந்த இரு வங்காளிகள் வங்கதேசத்தில் வளரும் சுதேசி இயக்கம் பற்றி எடுத்து உரைத்தனர் எனவும் தமது சுயசரிதையில் சிதம்பரனார் குறிப்பிடுகிறார். மேலும், தூத்துக்குடித் துறைமுகத்தில் வந்து இறங்கிய அபேதானந்தர், பிரமானந்தர் முதலிய இராமகிருஷ்ண மடத்துத் துறவிகளுக்கு மிகப்பெரும் வரவேற்பை அளித்துள்ளார். இவ்வாறு வங்காளதேசம் சார்ந்த இராமகிருஷ்ண மடத்துத் துறவிகளால் தூண்டப்பட்ட சிதம்பரனார், தூத்துக்குடியில் சுதேசி இயக்கம் சார்பாகப் பல அமைப்புகளை ஏற்படுத்தினார். வழக்கறிஞராகத் தமது பணியை ஆற்றிய கப்பலோட்டிய தமிழருக்குப் பாரதி முதலிய நண்பர்களின் விடுதலை இயக்கம் மற்றும் சுதேசி இயக்கம் சார்பான செயல்பாடுகளும், அன்று தமிழகத்தில் வெளிவந்த இதழ்கள் (ஏனைய வெளிநாட்டிதழ்கள் பலவும்) மூலம் தெரிந்த செய்திகளும் சுதேசியச் செயற்பாடுகளுக்கு விதையாக விழுந்தது எனலாம்.

சிதம்பரனாரின் சுதேசி அமைப்புகள்:

இராமகிருஷ்ணானந்தரால் சிதம்பரனார் உள்ளத்தில் விழுந்த சுதேசி விதை கொஞ்சமாக முளைவிடத் தொடங்கியது. அதன் விளைவாகக் கைத்தொழில் வளர்சங்கம், தருமசங்கம் என இரண்டு அமைப்புகளைத் தூத்துக்குடியில் உருவாக்கினார். இந்த அமைப்புகள் பின்னர் சுதேசிப் பண்டகசாலை, தருமநெசவு சங்கச் சாலை, ஜனசங்கம் என வடிவம் பெற்றது. இந்தச் சுதேசிய அமைப்புகள் சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பே சிதம்பரனாரால் தொடங்கப்பட்டவை என்பது கருத்தில் கொள்ள வேண்டிய குறிப்பாகும்.

சுதேசியம் என்ற வித்து இரண்டிலை கொண்டு எழுந்த வித்தாகிப் பின் செழித்து வளர்ந்து கனி தந்தது என இந்தச் சுதேச அமைப்புகள் பற்றிச் சிதம்பரனார் தமது சுயசரிதையில்,

தூற்றுக் குடிசைத் தொழில்வளர் சங்கம்

சாற்றுதற் கரிய தருமசங்கம்

எனவிரண் டிலைகொண் டெழுந்ததவ் வித்து

எனவும்

... ... இறைவன் குணத்தொடு

தருமம் புரிதரக் கனிதரும் நமது

தரும சங்க நெசவு சாலை

நாடுசேர் சுதேசிய நாவாய்ச் சங்கம்

பாடுசேர் சுதேசியப் பண்டகசாலை

எனவும் குறிப்பிடுகிறார். (மேலது, பக்.53-54)

சுதேசியப் பண்டகசாலை என்பது நமது நாட்டில் உற்பத்தியான பொருட்களை வாங்கி மக்களுக்கு விற்பனை செய்கின்ற வணிக நிறுவனமாக இயங்கியது. இந்நிறுவனத்தின் விதிகளும் செயற்பாடுகளுமே சிதம்பரனாரின் கப்பல் நிறுவனத்திற்கு அடிப்படையாக இருந்தது எனலாம்.

தரும சங்க நெசவு சாலைக்காக ஒரு நூற்பாலையைக் கட்டி, சிதம்பரனார் வேலையைத் தொடங்கினார். ஆனால், அந்நிறுவனத்திற்கு முதலீடு செய்வதற்கு வாக்களித்த பலர் பின்வாங்கியதால், அந்த அமைப்பு செயற்படவில்லை என்பார் திறனாய்வாளர் (மணி.பெ.சு., மு.நூ., ப.88)

கப்பல் நிறுவனம் நிறுவிச் செயற்பட்ட சிதம்பரனார் மேல் இராஜநிந்தனைக் குற்றம் சாட்டிய ஆங்கிலேய அரசு அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்துச் சிறை தண்டனை அளித்தது. விடுதலை பெற்று சென்னை வந்த செக்கிழுத்த செம்மல், 1921-ஆம் ஆண்டு அக்டோபர் 11­ஆம் தேதியன்று சென்னை விவசாயக் கைத்தொழில் சங்கம் லிமிடெட் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இந்தச் சங்கத்தின் பங்கு ஒன்றின் விலை ரூபாய் பத்து ஆகும். அப்பங்குத் தொகையையும் பல தவணைகளாகச் செலுத்தலாம் என விதி வகுத்தார். (ஆறுமுகம்.கெம்பு., வ.உ.சிதம்பரனார் வரலாறு, பக்.30-31) இவ்வாறு ஏழை எளிய விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்க்கை உயர்த்துதற்குச் சுதேசியத்தை வழியாக்கினார். மேலும், சுதேசிக் கைத்தொழில்கள் மூலம் உற்பத்தியாகும் பொருட்களால் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வாய்ப்பு ஏற்படும் எனக் கருதினார், சிதம்பரனார். தரிசாக இருக்கும் விளைநிலங்களைச் சங்கத்தின் வழியாக வாங்கி நவீனமுறையில் விவசாயம் செய்யவும் ஏற்பாடு செய்வதன் வழி வேலைவாய்ப்பும் தன்னிறைவும் பெறலாம் என எண்ணினார். இவ்வாறான முற்போக்குத் திட்டங்கள் அச்சங்கத்தின் நோக்கங்களாக அமைந்தன.

சுதேசி இயக்கத்தில் செயல்பாடுகள்:

தமது சுதேசி இயக்கச் செயற்பாடுகளுக்காகவே, சுதேசிப் பிரச்சார சபை என்ற அமைப்பைச் சென்னையில் சிதம்பரனார் ஏற்படுத்தினார் என்பர் திறனாய்வாளர் (மேலது, ப. 31)

சுதேசி இயக்க வளர்ச்சிக்காகச் சிதம்பரனார் தமது மன, மொழி, மெய்யால் செயற்பட்டார் எனலாம். தமது சுயசரிதையில்,

வேலிபிடித்து வேறுளம் கொண்ட

போலிச் சுதேசியம் பொய்யுரை மிருகம்

நெருங்கிட விடாது. நினைவொடு காத்து

தர்க்கமெனும் தகுமண் வெட்டியால்

வர்க்கப் பாத்தி வரிசையாய்ச் செய்து

ஜகத்தினை என்றும் தன் வசப்படுத்தும்

அகத்தின் கேணியின் அருளின்நீரை

நாவெனும் துலாவால் நாளும் இறைத்து

‘தா’ எனும் இன்சொலின் தகளியால் வார்த்துப்

பலபல சங்கக் கிளையுடன் அச்செடி

வலனிதம் பெற்றிட மதிகொடு வளர்த்தேன்

எனக் குறிப்பிடுகிறார். (அரசு.வீ., மு.நூ., ப.54). அதாவது போலிச் சுதேசியம் நெருங்கவிடாது வேலி போடுகிறார்; நண்பர்களோடு இணைந்து தர்க்க மண்வெட்டியால் கொத்துகிறார்; தன் உள்ளத்தில் ஊறிய அருள் எனும் நீரை வார்க்கிறார்; சொற்பொழிவு எனும் துலாவால் அந்நீரை இறைக்கிறார்; பலரிடமும் பொருள் பெறுவதைத் தகளி என்கிறார். பல்வேறு கிளைச் சங்க அமைப்புகள் வழி சுதேசிய வித்து செடியாகிறது. இராமகிருஷ்ணானந்தர் ஊன்றிய சுதேசிய விதையை இவ்வாறு சிதம்பரனார் வளர்த்தெடுக்க, அது மூன்று கனிகளைத் ( தரும சங்க நெசவு சாலை; சுதேசிய நாவாய் சங்கம்; சுதேசியப் பண்டக சாலை) தருகிறது என உருவகப்படுத்தித் தமது சுதேசியச் செயற்பாடுகளை விவரிக்கிறார். மேலும், பாரதி, ஜி. சுப்பிரமணிய ஐயர் உள்ளிட்டவர்களுடன் தொடக்கத்திலும் (1905 ரூ 1906களில்) வி.சக்கரைச் செட்டியார், முதலியவர்களுடன் பின்னரும் (1920-- 21களில்) செயற்பட்டார்.

சுதேசியம் பற்றி 1906-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-இல் மதுரை நகரில் பாண்டித்துரை தேவர் தலைமையில் சொற்பொழிவுகளைச் சிதம்பரனார் நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தகுந்தது ஆகும். (மணி.பெ.சு., மு.நூ., ப.92)

சுதேசிபிமானம் கட்டுரை:

வள்ளிநாயகம் சுவாமிகள், மூ.ரா.கந்தசாமிக் கவிராயர் ஆகியவர்களுடன் இணைந்து சிதம்பரனார் நடத்திய விவேகபாநு இதழில் சுதேசபிமானம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார். அக்கட்டுரை சிதம்பரனாரின் சுதேசியம் பற்றிய கொள்கை விளக்கம் எனலாம்.

சுதேசபிமானம் எனும் தொடர்மொழியானது சொந்த தேசத்தின் மீது அன்புடைமை எனப் பொருள்படும்’ எனத் தொடங்கும் அக்கட்டுரையில் சுதேசம் என்ற சொந்த நாட்டிற்கு அவர் தரும் விளக்கம் தருக்க முறையிலான சிறப்புடையது.

... அவருக்குத் தெரிந்த வரையிலும் முதற்காரராயிருந்த முப்பாட்டன், முப்பாட்டி முதலிய முன்னோர் பிறந்த தேசமெதுவோ அதுவே அவருக்குச் சுதேசமெனலாம் என்கிறார். மேலும் அபிமானம் எனது அன்பு ...அ ன் பு என்பது தொடர்புடையார் மாட்டுத் துன்பம் கண்டவழி துக்கிக்கவும் சுகம் கண்டவழி சுகிக்கவும் காரணமாக நிற்குமோர் அகநிகழ்ச்சி யேயாம்’ என்பார். இந்தச் சுதேசபிமான ஒவ்வொருவரிடமும் உள்ள இயற்கைக்குணம் என்று விளக்க முற்படுகிறார். இந்தச் சுதேசபிமானத்தை வெளிப்படுத்தும் சமயமாக தாயினும் மேலான தேசத்திற்கு நேரும் துயரைத் துடைப்பது என்கிறார்.

சுதேசத்தார்க்கு அன்னமின்னை, ஆடையின்மை, சுகமின்மை முதலிய வறுமை நேருங்கால் சுதேசாபிமானமுள்ள ஒவ்வொருவரும் அவரவராலியன்றவரை அன்னம், ஆடை, மருந்து முதலியவற்றை உதவி அவ்வறுமைகளை நிவர்ப்பதுடன் சுதேசத்தார் அவ்வறுமைகளைப் பின்னரும் அடையாது வாழும்படிக்கான செயல்களைத் தேர்ந்து செய்யவும் வேண்டும். சுதேசத்தில் கடவுள் ஞானம், கல்வியறிவு, பொருள் முதலியவற்றைச் சுதேசத்தார்க்கு அளிக்க வேண்டும். பலர்கூடி அன்னசாலை, ஆடைசாலை, வைத்தியசாலை, ஞானசபை, பள்ளிக்கூடம், கைத்தொழிற்சாலை முதலியன ஏற்படுத்திச் சுதேச வறுமைகளைப் பின்னர் வராது நீக்கவும் வேண்டும். ஆனால் சுதேசத்தார் சுயார்ச்சிதம் இழந்து அன்னியர்க்கு அடிமைப்பட நேருமானால் அவ்வடிமைத்தனத்தினின்றும் அவரை நீக்கிச் சுயார்ச்சிதம் பெறுதற்குச் சுதேசத்தாரெல்லாரும் ஒன்றுகூடி ஒற்றுமையுடன் வேலை செய்ய வேண்டும் (ப.304) என விவரிப்பார்.

சுதேசபிமானத்திற்குத் தடையாயிருப்பது அவரவர் ஜாதியின் மீதும் மதத்தின் மீதும் கொண்ட பற்றும் என்று உரைக்கும் சிதம்பரனார் சுதேசம் சுகமாக வாழ நாமும் சுகமாக வாழ்வோம் என அடையும் பயனை எடுத்துரைக்கிறார். (விவேகபாநு, பிப்ரவரி 1906, தொகுதி-5; புத்தகம். 2)

சிதம்பரனாரின் சுதேசியக் கொள்கை:

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வதே சிதம்பரனாரின் சுதேசியக் கொள்கையாக இருந்தது. ஆகவேதான் தனது மெய்யறம் நூலில் உழவு, வணிகம், கைத்தொழில் முதலிய உற்பத்தி சார்ந்த செயற்பாடுகளுக்குத் தனித்தனி அதிகாரங்களைத் தருகிறார்.

வித்திற்காமெரு மெத்த விடுத்தல்

வேர் செலும் ஆழம் ஏர் செல உழுதல்

விற்கத் தக்க விலையுடை யதுபொருள்

செலவெலாம் கூட்டிச் சிறிதேற்றி விற்றல் என உழவையும்

வாணிகம் பண்ட மாற்று நற்றொழில்

கவெலாங் கூட்டிச் சிறிதேற்றி விற்றல் என வணிகத்தையும்

மெய்யுறுப்புக் கொடு செய்வது தொழிலே

தொழிலை எனில் உலகழிவது திண்ணம்

தொழிலிலார் வறுமையுற்று அழிவெலாம் அடைவர்

படைக்கலம் அனைத்தையும் பண்பொடு பயில்க

எனத் தொழிலையும் எடுத்து விளக்குகிறார். (அரசு.வீ., மு.நூ., பக்.325 ரூ 345)

தனது கப்பல் நிறுவனத்தின் பங்குகளை இந்தியர் இலங்கையர் மற்றும் ஆசியர்களுக்கு மட்டுமே விற்க வேண்டும் எனவும் அவர்களுக்கு அத்தொழில் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் விதிகள் வகுக்கிறார். (மணி.பெ.சு., மு.நூ., ப.99 ) மேலும் கப்பல் ஓட்டும் தொழில், உருவாக்கும் தொழில் அவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிப்பது, வியாபாரம் செய்வதும், ஏனைய சுதேசியக் கைத்தொழில்கள் செய்வது என எட்டு நோக்கங்களையும் குறிப்பிடுகிறார். இதன் மூலம் சுதேசியம் என்ற கொள்கையைக் கொண்டு இந்திய நாட்டினைத் தொலைநோக்குப் பார்வையுடன் வளரச் செய்வது சிதம்பரனாரின் வழிமுறையாக இருந்தமையை உணர முடிகிறது.

சிதம்பரனார் வாழ்வில் சுதேசியம்:

சென்னை ஜனசங்கம் சார்பில் தூத்துக்குடியில் உருவான ஜனசங்கத்தின் உறுப்பினர் விண்ணப்ப படிவம் சிதம்பரனாரின் அந்நிய நாட்டுப் பொருள்களின் புறக்கணிப்பு முறையின் விளக்கமாக அமைகிறது எனலாம்.

அடியில் கையப்பமிட்ட நான் அந்நிய ஆடைகளை, சக்கரையை, எனாமல் பூச்சுள்ள பாத்திரங்கள் மற்றும் அந்நியப் பொருட்களை முடிந்த அளவு முற்றிலுமாக பகிஷ்கரிப்பேன் என்று பற்றுறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் (மேலது, ப.90) என்பது வெறும் ஏட்டளவில் இன்றி அவரது வாழ்விலும் நிகழ்ந்த ஒன்றாகும்.

வ.உ.சி.யின் ஜீவியசரிதச் சுருக்கத்தில், அவர் வீட்டில் ஒரு பரதேச சாமானைக்கூடக் காண முடியாது. அவர் பல நாட்களாய் வைத்திருந்த கைகடியாரத்தைக்கூட ஒருவருக்குக் கொடுத்து விட்டாரெனில், நாம் இனிக் கூற வேண்டுவ தென்னவிருக்கிறது? அம்பட்டனிடம் சுதேசியக்கத்தி இல்லாவிடில் சவரம் செய்து கொள்ளாமலே இருந்து விடுவார். பரதேசித்துணி தரித்தவன் முகத்தை நேராகப் பார்க்க மாட்டார். இதெல்லாம் வீராவேசப் பைத்தியம் என்று பலர் கருதுவார்கள். (ரெங்கையா முருகன் ரூ சக்ரா ராஜசேகர், வ.உ.சி. வரலாற்றுச் சுருக்கம், ப.35) என்ற குறிப்பு சொந்த வாழ்க்கையில் சிதம்பரனார் கைக்கொண்ட சுதேசப் பற்றிற்குச் சான்றாகிறது.

தான் சுதேசப் பொருட்களைப் பயன்படுத்துகிறேன் என்ற மண்டையம் ஸ்ரீநிவாசாசாரியாரைப் பாரதி சென்னையில் தங்கியிருந்த சிதம்பரனார் வீட்டிற்கு அழைத்துச் சென்று காட்டிய நிகழ்வு அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் பலராலும் குறிப்பிடப்படுகிறது. மேலும் தமது மெய்யறம் நூலின் முதற்பக்கத்தில், காகிதம், மை, கட்டுநூல் முதலியனவெல்லாம் சுதேசியம் என்று குறிப்பிடுவதும் இங்கு இணைத்து எண்ணத் தக்கதாகும்.

முடிவுரை:

தொண்டின் திருவடிவமாகவும் தூயதமிழ்ப் பொன்னுருவமாகவும் திகழ்ந்த சிதம்பரனார் ‘சுதேசியம்’ என்ற கொள்கையைக் கண்ணெனப் போற்றினார்; உயிரென வளர்த்தார். அதனையே தமது வாழ்வாகவும் கொண்டார். ஆம். சுதேசியப் பிள்ளையாக உயர்ந்தார்; சிறந்தார்.

துணைநூற் பட்டியல்

1. அரசு.வீ., (தொ.ஆ.), வ.உ.சி.நூல்திரட்டு, புதுமைப்பித்தன் பதிப்பகம், 2002

2. ஆறுமுகம்.கெம்பு, வ.உ.சிதம்பரனார் வரலாறு, செந்தூரான் பதிப்பகம், 1991

3. குருசாமி மயில்வாகனன், கப்பலோட்டிய கதை, நிவேதா பதிப்பகம், 2021

4. திவான்.செ., (தொ.ஆ.), - வ.உ.சி. புகழ் பாடிய முன்னோடிகள், (சுஹைனா பதிப்பகம், 1999)

5. மணி.பெ.சு., (மொ.ஆ.) நவபாரதச் சிற்பிகள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, பப்ளிகேஜன்ஸ் டிவிஜன் செய்தி ஒலிபரப்பு அமைச்சகம், 1995

6. ரெங்கையா முருகன் ரூ சக்ரா ராஜசேகர் (ப.ஆ.ள்) வ.உ.சி. வரலாற்றுச் சுருக்கம், சக்ரா பதிப்பகம், 2021

7. இந்தியா இதழ்கள் தொகுப்பு

8. விவேகபாநு இதழ்கள் தொகுப்பு

(சுருக்கக் குறியீட்டு விளக்கம் தொ.ஆ - தொகுப்பு ஆசிரியர் ப.ஆ - பதிப்பு ஆசிரியர் மொ.ஆ - மொழிபெயர்ப்பு ஆசிரியர்)

முனைவர் யாழ்.சு.சந்திரா

Pin It