நாட்டின் சேவைத்துறைகள் தமது நிலைகளில் வழுவி நிற்கின்றன. இதில் கல்வியும் விலக்கல்ல. காலனித்துவ நல் வரவுகளில் ஒன்றாக அமைந்தது இந்தியக்கல்வி. அதுவரை தூர நிறுத்தப்பட்ட வெகுமக்கள், குறிப்பாக பெண்கள் கல்விச் சாலைகளுக்குள் நுழைய நேர்ந்த தருணம் பெரும் ஜனநாயக முன்னெடுப்பு. ‘அனைவருக்கும் கல்வி’ என்பதே சாதனை எனச் சொல்லலாம். நவீனக் கல்வியின் வருகை முதலே அது குறித்த விமர்சனங்களும் இருக்கத்தான் செய்தன. இந்திய மரபு, சுதேசியம், அறநெறி சார்ந்து இவை துலக்கம் பெற்றன. காந்தி, அரவிந்தர், தாகூர், பாரதி போன்றோரின் கல்விச் சிந்தனைகளின் ஒட்டு மொத்தம் ‘இந்தியத்தன்மை’ என்பதாகவே அமைந்தது. தேசியம், தேசியமொழி, இந்தியச் சமூகம் குறித்த புரிதல் போன்றவற்றில் போதாமை இருக்கத்தான் செய்தது. விடுதலைப் போராட்டக் காலத்திலும், விடுதலைக்குப் பின்னரும் கல்வி குறித்த விவாதங்கள் தொடரத்தான் செய்தன. ஆனால், அதை ஒரு மையமாக உணர்ந்து செயல்படுத்தாத நிலைதான் இன்றைய கல்விச் சிக்கல்களுக்கு அடிப்படை.

விடுதலை இந்தியாவும் கல்வியைப் பரவலாக்குவதிலேயே கவனம் செலுத்தியது. ஆங்கிலேயர்கள் உருவாக்கிய கல்வி முறை மீது அவ்வப்போது ஒரு சில மாற்றங்கள் செய்து கொண்டே அடிப்படையில் மாற்றம் இன்றி தொடர்கிறது.

oru palli vazhkkaiஇன்று கல்வி பெருவணிகம். எழுபதுகளுக்குப் பின் உருவான பதின்மப் பள்ளிகள், உண்டுஉறைவிடப் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகள் ஆகியவற்றின் பெருக்கம் தமிழகப் பள்ளிக்கல்வி வரலாற்றில் மாபெரும் சிதைவு எனலாம். தாய்மொழி புறந்தள்ளப் பட்டு, ஆங்கில மோகம் பெருகியதும், கல்விச் சேவை என்ற நிலையிலிருந்து ஒரு பண்டமாக மாறியதும் சத்தமில்லாமல் நடந்தேறின.

 குழந்தைகளையும், கல்வியையும் பற்றிப் பேசாமல் பண்பாட்டு மாற்றத்தைக் கொணர முடியாது. சமூகத்தின் அடிப்படை அழகாக அமையும் கல்வி, கல்விமுறை, கல்விக்கூடங்கள், பாடத்திட்டங்கள், பயிற்றுமொழி, தேர்வுகள், மதிப்பெண்கள், வேலை வாய்ப்பு என்று பரந்து விரிந்த பரப்பு அது.

 மாற்றுக்களைத் தேடும் போது இருப்பவற்றைக் கவனப்படுத்தியே கடந்து செல்ல வேண்டும். அந்த வகையில் பழைய தஞ்சாவூர் மாவட்டத்தின் மன்னார்குடி நகரின் கல்வி நிலையங்களைப் பற்றி ஒரு அரிய ஆவணமாக ’ஒரு பள்ளிவாழ்க்கை’ எனும் நூல் அமைந்துள்ளது.

 நிலவுடமைச் சமூக அமைப்பின் ஒரு குறியீடாக அமைந்த நகரம் மன்னார்குடி. வேளாண் குடிகளும், பெருநிலக்கிழார்களும், கோயில்களும், மடங்களும், பிராமணர்களும் நிறைந்த பகுதி. விடுதலைப் போராட்டத்திலும், சமூக சமத்துவப் போராட்டத்திலும், மொழிப் போராட்டத்திலும் முன் நின்ற வட்டாரம். இங்கே உருவான கல்விச்சூழல் இந்நூலில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 மன்னார்குடி நகரில் முதலில் அமைந்த பள்ளி 1835 - இல் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷனரியினரால் தொடங்கப்பட்டது. 1862- ல் உயர்நிலைப் பள்ளியாகவும் 1896 வாக்கில் கல்லூரியாகவும் பின்னர் மீண்டும் பள்ளியாகவும் ‘பின்லே மேல்நிலைப் பள்ளி’ என்னும் பெயரோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

1942-ல் பெண்களுக்கென்று அன்னை திருச்சபையினரால் தொடங்கப்பட்டு இன்று பெரும் பள்ளியாக உயர்ந்து நிற்கும் தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்த இரு பள்ளிகளுக்கும் இடையில் தேசிய இயக்கத்தின் தாக்கத்தாலும் உள்ளூர் தன்மைகளின் தேவை கருதியும் 1899- ல் தொடங்கப்பட்டது தேசிய மேல்நிலைப்பள்ளி. மன்னார்குடி நகரில் தேசிய இயக்கத்தில் வலுவாக இருந்த டி .எஸ். சிங்காரவேலு உடையார், எஸ். ராமதுரை (அய்யர்) ஆகிய இருவரால் இப்பள்ளி தொடங்கப்பட்டது. மன்னார்குடி நகரின், வட்டாரத்தின் கல்விச் செயல்பாடுகளின் மையமாக இந்த மூன்று பள்ளிகளும் திகழ்ந்தன. இரு நூறு ஆண்டுகள் கல்வி வரலாறாக அமையும் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

'தேசிய கல்வி இயக்க வரலாறு’ என்னும் பகுப்பில், இந்த மூன்று பள்ளிகளுக்கும் அடிப்படையாகவும் பின்புலமாகவும் அமையும் வரலாற்றுக் கூறுகள் சுட்டப்படுகின்றன. ’உலகள்ளூரியத்துக்கான அறைகூவல்’ எனும் பத்திரிக்கையாளர் சமஸ் - ன் கட்டுரை இந்நூலின் திறப்பாக அமைகிறது. (GLOBAL - LOCAL) குளோபல் - லோக்கல் என்பதன் சேர்க்கைச் சொல்லாக (GLOCAL) ’குளோக்கல்’ என்ற சோனிநிறுவனரின் சொல்லை, ’உலகள்ளூர்’ என மொழியாக்கம் செய்து தனது கருத்துக்களை முன்வைக்கிறார். ’கல்விதான் சுயராஜ்யத்தின் திறவுகோல்’, ’ராட்டையும் தீண்டாமை ஒழிப்பும்’ ஆகிய கூறுகளை வலியுறுத்துவதும் காந்தியின் கல்வி சிந்தனைகளைத் தொட்டு, மையப்படுத்தப்பட்ட கல்விக்கு மாற்றாக கீழிருந்து உருவாகும் உள்ளூர்சார் கல்வியை முன்வைப்பதும் அதன் நோக்கில் மன்னார்குடியின் கல்வி நிலையை விவாதிப்பதும் எதிர்காலத்தன்மை வாய்ந்தவை.

‘லண்டனில் இருந்து மன்னார்குடிக்கு’ என்ற கட்டுரையில் எழுத்தாளர் அரவிந்தன் காலனியக் கால இந்திய கல்விப்போக்குகளை பருந்துப் பார்வையில் எடுத்துக்காட்டுகிறார். சமயம் சார்ந்த கிறித்தவ மெஷினரிகளும் சில முஸ்லிம் பள்ளிகளும் செயல்பட்ட நிலையில் தேசிய இயக்க உந்துதலால் உருவான தேசியப் பள்ளியின் தனித்துவத்தைச் சுட்டுகிறார். 1920களுக்குப் பின்னரே இந்தியாவில் உள்நாட்டுக்காரர்களால் பெரிதும் பள்ளிகள் தோற்றம் கொண்ட நிலையில், 1899லேயே மன்னார்குடியில் உருவானதைப் பதிவு செய்கிறார். இப்பகுதியில் மன்னார்குடிக்கு காந்தியடிகள் 15-09-1927-ல் வருகைதந்த போது தேசிய மேல்நிலைப்பள்ளி, பின்லே மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்கு சென்ற அனுபவத்தைப் பதிவு செய்துள்ளனர். காந்தியடிகள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பிள்ளைகள் படிக்கின்றனரா? என கேட்க, தேசியப் பள்ளியில் ‘இல்லை’ என்ற பதிலும், பின்லே பள்ளியில் ‘பல மாணவர்கள் படிக்கின்றனர்’ என்ற தகவலும் கிடைக்கின்றன.

'கல்வியாளர் எஸ்.எஸ்.இராஜகோபாலனிடம் பேட்டியை சமஸ் எடுத்துள்ளார். இதில் காந்தி, கிராமப்புறங்களின் அடிப்படைகள் என வலியுறுத்திய பஞ்சாயத்து நிர்வாகம், கூட்டுறவு அமைப்பு, ஆரம்பப் பள்ளி ஆகியவற்றில் பள்ளியும் கல்வியும் இடம்பெற்றதைச் சுட்டுகிறார். அன்றைய தேசிய கல்வி இயக்கத்தின் இலக்குகள் ‘அனைவருக்கும் கல்வி’, ‘தாய்மொழிக்கல்வி’, ‘பெண்களுக்கு கல்வியில் சம உரிமை’ ஆகியனவாக அமைந்ததையும் கூறுவது சிறப்பு. "சமத்துவத்துக்கான கல்விங்கிறது கல்வியை ஜனநாயகப்படுத்துறது வழியாகத்தான் சாத்தியம்” என்ற எஸ். எஸ். ராஜகோபாலனின் கருத்து இன்றைய தேவை.

 அடுத்த பகுதி, ‘கல்வி நகரம் மன்னார்குடி.’ ‘இதில் மன்னார்குடி பாருக்குள்ளே நல்ல ஊர்’ என்ற கட்டுரையை எழுத்தாளர் பானு குமார் எழுதியுள்ளார். இது மன்னார்குடி நகரின் மிகச் சுருக்கமான வரலாறாக அமைகிறது. அடுத்து ’இந்தியா குடியரசான போது மன்னார்குடி’ எனும் கட்டுரையில் நாடு விடுதலை அடைந்த போது சில அரிய புகைப்படங்களும், நகரம் குறித்த விவரங்களும் இடம்பெறுகின்றன.

 பேராசிரியரும் எழுத்தாளருமான தங்க. ஜெயராமன் அவர்களை சமஸ் பேட்டி கண்டு எழுதியுள்ள ’எப்படியான கல்வி நகரமாக இருந்தது மன்னார்குடி?’ பல அரிய செய்திகளைத் தருகிறது. எல்லாச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் படித்தது, பெண்களுக்கு கல்வி வாய்ப்பு, இந்தி எதிர்ப்புப் போராட்டம், பள்ளிகள் வழியாக அறிமுகமான ஆளுமைகள், மூன்று பள்ளிகளின் ஆசிரியர்கள்... என விரிவான பதிவு.

‘மூன்று திசைக் காட்டிகள்’ என்ற தலைப்பில் பின்லே பள்ளி, தேசிய பள்ளி, தூய வளனார் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளின் தோற்றமும், வளர்ச்சியும் தரப்படுகிறது. அடுத்து ’மூன்று சிகரங்கள்’ என்ற தலைப்பில் பின்லே பள்ளியின் ஏ.ஜே. அமலதாசன், தேசியப் பள்ளியின் வி. ஸ்ரீனிவாசன், தூய வளனார் பள்ளியின் அன்னை கஷ்மீர் ஆகிய மூன்று அரிய ஆளுமைகள் இப்பள்ளிகளின் முகவரிகளாக அமைந்ததை துல்லியமாகப் பதிவு செய்கிறார்கள். இம்மூவரும் கல்வியிலும், நிர்வாகத்திலும், பொதுமக்கள் உறவிலும் தனித்தன்மையோடு செயல்பட்டு, தத்தம் பள்ளிகளை நிலைநிறுத்திய விதம் கல்வி மேலாண்மையின் தனித்துவமாக அமையக் காணலாம். ’தமிழ்நாட்டிலேயே இப்படியான நல்ல போட்டி கிடையாது!’ என்ற பின்லே பள்ளியின் மூத்த ஆசிரியர் என்.சாமிநாதனின் பேட்டி கல்வி கற்பித்தலில் மூன்று பள்ளிகளும் போட்டி மனப்பாங்குடன் இயங்கியதைக் குறிக்கிறது. பின்லே தேசியப் பள்ளிகள் கல்வி நிலை, விளையாட்டு, கலை இலக்கியத்திறன் போட்டிகளில் தொடர்ந்து மாவட்ட அளவில் சம போட்டியாளர்களாக விளங்கி, ஆரோக்கியமான நிலையில் இயங்கியதை சாமிநாதன் கூறுவது பொருத்தம்.

‘பொற்காலத்தில் ஓர் உலா’ என்ற பகுப்பில் தேசியப்பள்ளிக்கு வந்த ஆளுமைகளின் குறிப்புகள், தேசியப்பள்ளி நிர்வாகம் செழித்து, பள்ளி வளர்ந்த விதம், பின்லே பள்ளி கிறித்தவம் சார்ந்த இசை வளர்ச்சிக்கு வித்திட்டது. தேசிய பள்ளியையொட்டி உருவான சரஸ்வதி கான சபா, தேசிய, பின்லே பள்ளிகளின் விளையாட்டுத் துறை பங்களிப்புகள் சுவையாக விளக்கியுரைக்கப்படுகின்றன. நகரின் பள்ளி, கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய சுவாமிநாத உடையார், மன்னை ப.நாராயணசாமி ஆகியோர் பற்றிய பதிவுகள் இடம் பெறுவது சிறப்பு. தேசிய பள்ளி நிர்வாகியான சுவாமிநாத உடையார் பிற பள்ளிகள் வளர்ச்சியிலும் அக்கறை காட்டியது வியப்பு. அதே போல நாத்திகரான மன்னை ஆதிக்கத்துடன் தொடர்புடைய தேசிய பள்ளிக்கு உதவியதும் பிற பள்ளிகள் வளர்ச்சிக்கு உதவியதும், அரசு கல்லூரி கொண்டு வந்ததும் சான்றாண்மை மிக்கவை. எஸ். கோபாலகிருஷ்ணன், எஸ். அன்பரசு ஆகியோரின் கட்டுரைகள் பல விவரங்களின் தொகுப்பாக அமைகின்றன.

‘கரிச்சான் குஞ்சு ஆசிரியர்களுக்குள் இருந்த எழுத்தாளர்’ என்ற எழுத்தாளர் மாலனின் பதிவு கரிச்சான் குஞ்சுவின் ஆளுமையை நினைவூட்டுகிறது. கரிச்சான் குஞ்சு தன் எழுத்துக்களில் மன்னார்குடியை வாழவைத்தவர். படைப்பாளிக்கு உரிய நெகிழ்ச்சியும் ஞானத் தேர்ச்சியும் அவரிடம் உண்டு. ‘வகுப்பில் மாணவர்கள் தவறு செய்தால் அவர்களை தண்டிப்பதற்கு, தான் நாற்காலியை சுவர் பக்கமாக திருப்பி போட்டுக் கொண்டு தன் உச்சிக்குடியை அவிழ்த்து தானே தலையில் அடித்துக் கொண்டு அழுவார்’ என அவரின் மாணவர் சொல்வர். கலை மேதாவியான அவரை அன்று யாரும் புரிந்து கனிவுடன் நடத்தவில்லையோ என்ற ஆதங்கம் மிஞ்சுகிறது.

 அதேபோல தமிழ் மொழியின் ஆற்றல் வாய்ந்த அறிஞர் தேவநேயப் பாவாணர் பின்லே பள்ளியில் சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். அவரின் தாக்கம் குறித்தும் தகவல் தொகுக்கப்பட வேண்டும்.

தேசிய பள்ளிக்கு உதவிய தேவங்குடி பார்த்தசாரதி நாயுடு போன்றவர்களின் கொடையாளர் மரபும் நூலில் போற்றப்படுகிறது. என். ராஜப்பா எழுதியுள்ள ‘ஸ்ரீனிவாசன் ஒரு பள்ளி வாழ்க்கை’ பள்ளியின் ஆசிரியர், தலைமை ஆசிரியர், நிர்வாகி என்ற நிலையில் திரு. சீனிவாசனின் ஆளுமைத்திறன் அற்புதமாக வெளிப்படுகிறது. ’அன்பே கடவுள்; பணியே பூசனை; உண்மையே அழகு’ என்ற பள்ளியின் முழக்க வாசகத்தை உருவாக்கி, அதன் இலக்கணமாகப் பள்ளியை வளர்த்ததில் இவரின் பங்கு மகத்தானது. ’பள்ளிக்கூடம் சிறிய அளவிலான சமூக மாதிரி’ என்பது சீனிவாசன் கூற்று. தேசிய பள்ளியின் ஆங்கில ஆசிரியரும் பகுத்தறிவாளருமான ச.கௌதமன் சங்கராச்சாரியார் பெரியார் இருவருக்கும் தேசிய பள்ளியில் இடம் இருந்த கருத்துச் சுதந்திரத்தைக் கூறுவது இன்றைய நிலையில் முக்கியத்துவமானது.

 இந்நூலில் முக்கியமான பகுதி தேசிய பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தங்களின் பள்ளி, கல்வி முறை, ஆசிரியர்கள் பற்றி பகிர்ந்து கொள்வது.

வெட்டிக்காடு எனும் சிற்றூரில் இருந்து இன்று தகவல் தொழில்நுட்பத் துறையில் பன்னாட்டு வல்லுநராக விளங்கும் பொறியாளர் ரவிச்சந்திரன் சோமு, பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வெங்கட சுப்பிரமணியன் ராமமூர்த்தி, கவிஞர் பத்திரிகையாளர் தே.ஆசைத்தம்பி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி, டாடா குழுமத்தின் பாலசுப்பிரமணியன் முத்துராமன், எண்ணெய் வளத்துறை சீனிவாசன், எஸ்.எப். லாஜிஸ்டிக் அருணாச்சலம், மைக்ரோசாப்ட் விஜய் ராஜகோபாலன், ‘ப்ரெஸ்ஸா' நிறுவனத்தின் செந்தில் முருகன், பனிமலர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் இல்ஹாம் ஜலீல் ஆகியோரின் வாக்குமூலங்களும் பேட்டிகளும் தேசிய பள்ளி வாழ்க்கையை மட்டுமல்ல, பல்வேறு கூறுகளில் ஏற்றத்தாழ்வும், வேறுபாடும் கொண்ட ஒரு சமூகம், கல்வி எனும் விளக்கின் வெளிச்சத்தில் எப்படி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்பதன் சாட்சியாக அமைகிறது. ‘பின்லே பள்ளியின் உலகத்திற்கு வெளிச்சம் நீங்களே’ என்ற முன்னெடுப்பு வாசகத்தின் விளக்கமாகவே இந்த சாதனையாளர்கள் அமைகிறார்கள்.

 இறுதியாக, சமஸ், தேசிய மேல்நிலைப் பள்ளியின் புகழ்மிகு தலைமையாசிரியரும், தாளாளருமான டாக்டர் எஸ்.சேதுராமனின் பேட்டியை அமைத்துள்ளார். மூன்று தலைமுறைகளாக ஆசிரியம் செய்யும் குடும்பத்தைச் சார்ந்தவர். கணினி அறிவியலை மன்னை நகருக்கும் தேசியப் பள்ளிக்கும் கொண்டு வந்து சேர்த்தவர். தேசியம், தேசியக்கல்வி, எதிர்காலக் கல்வி குறித்தெல்லாம் அக்கறை கொண்டவர். அவரின் கருத்துக்கள் இன்றைய கல்வித் துறை கவனிக்க வேண்டியவை.

இந்த நூல் மன்னார்குடி நகரத்தின் மூன்று கல்வி நிலையங்களையும், அதற்குள் தேசியப்பள்ளியையும் மையப்படுத்தி அமைகிறது. இது உள்ளூர் வரலாறு உருவாக்கத்தின் ஒரு பகுதி. தமிழ்ச் சமூக வரலாற்றின் சிறு பொறி. கல்வி வரலாறு, கல்வி முறை, எதிர்கால கல்வி ஆகியன குறித்து விவாதப்புள்ளிகளை இந்நூலில் காண முடிகிறது. நூல் வடிவமைப்பும், படங்களும் சிறப்பு. கட்டுரைகள், செய்தித் தொகுப்புகள், பேட்டிகள் தன் விவரணைகள்... என மாறிமாறி வடிவ வகைமைகளின் அணிவகுப்பில் நூல் படைப்பாக்கமும் மிளிர்கிறது. இது ஏற்றமுக நிலையில் (POSITIVE) அமைந்த ஒரு நூல். விமர்சிக்க வேண்டிய பகுதிகளும், விடுபடல்களும் இருக்கத்தான் செய்யும். அதேபோல வரலாற்று நிலையில் பேசும்போது காலவரையறை செய்து கொண்டு, பட்டியல் படுத்தல்களை தவிர்த்து எழுதுதல் நலம். உள்ளூர்தன்மையக் கல்வி பற்றிய அக்கறை, உள்ளூர் வரலாறு உருவாக்கம் ஆகிய நிலைகளில் இந்நூல் பாராட்டத்தக்க முயற்சி.

 இதனைச் சாத்தியமாக்கிய பத்திரிகையாளர் சமஸ், ஆசிரியர் குழுவினர், பதிப்பாளர் ’குளோபலியன்’ சி.செந்தில்குமார் ஆகியோருக்கு நன்றி.

ஒரு பள்ளி வாழ்க்கை / சமஸ்/ குளேபலியண் டிரஸ்ட் / சென்னை- - 44 விலை - 500/-

தொடர்பு - 9344912003

- இரா.காமராசு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல்துறைத் தலைவர், தஞ்சாவூர்

Pin It