அந்த வரிகள் என்னுள் பதிந்து முப்பது ஆண்டுகள் நகர்ந்திருக்கலாம். இன்றும் அவை என்னைத் தீண்டுகின்றன. தூண்டவும் செய்கின்றன. எத்தனையோ எழுத்துகள் நம்மில்பட்டு, நம்மைவிட்டு எங்கோ மறைந்துவிடும் நிலையில், ‘சிலமட்டும்’, நம்மில் நின்று நம்மை வென்று தீண்டியும், தூண்டியும் உறவாடிக்கிடக்கின்றன.
முப்பது ஆண்டுகள்! நீண்ட நெடுங்காலம்!...
அது ஒரு சுதந்திரத் திருநாள் என்று ஞாபகம்!
திங்களிதழ் ‘தீபத்தின்’ அட்டைப்பதிவு .முதல் பக்கத்தின் முதல் வரிகள்....
“சேமிக்கப்பழகு!...” முதல்வரியைக் கடக்கிறேன். மறுபடியும் “சேமிக்கப்பழகு!....” வியப்புமில்லை. சலிப்பும் இல்லை. சலனம் இன்றி பார்வை மேலேறுகிறது. அடுத்தவரி இப்படித் தொடர்ந்தது; “இந்த நாட்டில் அழுவது கூட அனாவசியச் செலவுதான்...” எந்தச் சலனமுமின்றி மேலேறிய பார்வை நின்று நிதானம் கொள்கிறது! மீள்கிறேன்.
“சேமிக்கப்பழகு!
சேமிக்கப்பழகு!
இந்த நாட்டில்
அழுவது கூட
அனாவசியச் செலவுதான் !
சேமிக்கப்பழகு...”
இயல்பு நிலையிலிருந்து எதிர் நிலைக்குச் சென்ற மனம் தொடர்கிறது!
“.....கண்ணீரைச் சேமித்துக்
கனலாக மாற்று!
உன் விழிச் சிவப்பின்
வெம்மைபட்டு
அந்த
சூரியனுக்கும்
ஜுரம் வரட்டும்.....”
‘வண்டிக்குதிரை’ பந்தையக் குதிரையாய் பாயச்சலெடுக்கிறது! கவனம் வரிகளுக்குள் புதைகிறது. பதிந்த பார்வையை மீட்டெடுத்து, மேல்நோக்கி மேயவிடுகிறேன்...
“.... உரசபயந்து ஓய்ந்து கிடந்தால்
தீக்குச்சியை
விளக்குக்கூட
விவாகரத்து செய்துவிடும்...
பசித்த மனங்கள்
பாடத்தொடங்கினால்
ராகங்கள் கூட
ஆயுதமேந்தும்...” எழுத்துகள் நெருப்பாய்மாறி நெஞ்சைத் தீண்டின. மனம் கொதிப்பில் மூழ்கிக் கொந்தளித்தது. நீண்ட நேரத்துக்குப்பின்னால் மீண்டும் மீண்டும் அசைபோட்டேன். காகித எழுத்துகள் கல்வெட்டாய் மாறி நெஞ்சில் நின்றன. இன்றும் அவற்றை எழுதுகிறேன்! பேசுகிறேன்!
சிறியர், இளைஞர், பெரியோர் என்று கேட்கும் எவரையும் ஈர்க்கும் ஆற்றல் இந்தக் கவிதைக்கு இன்றும் இருக்கிறது.
சொல்லச் சலிப்பின்றி சொல்லவும் முடிகிறது
கேட்பவர் நெஞ்சை ஈர்க்கவும் முடிகிறது
‘மேத்தா’வின் தொகுப்பில் இது இருக்கிறதா என்று தேடிப்பார்க்கவேண்டும். அவரது வாலிப காலத்து வரிகள். பாதுகாத்த அந்தப் பக்கம் கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டது. பதிவுமட்டும் இன்றுவரை நெஞ்சேறிக் கிடக்கிறது.
சிலநாட்களுக்கு முன்னர் ‘கலைஞருக்கு அஞ்சலி’ நிகழ்ச்சியில் – தொலைக்காட்சியில்- அவர் பேசினார். இந்த நெருப்புக் குழம்பை உமிழ்ந்து தீர்த்த எரிமலையின் நிழலை அவரில் பார்த்தேன். காலம் அவரைக் கரைத்திருந்தது. ஆனால் இந்தக்கவிதை ‘வேகம் குறையாத பிரவாகமாய்’ மீண்டும் என்னுள் பெருக்கெடுத்தது...
‘அழுவதெல்லாம் அனாவசியச் செலவு!’- ‘தேம்பி அழும் குழந்தை நொண்டி’ என்ற பாரதியின் வரியோடு அந்த வரிக்கு எத்தனை இசைவு!
‘உரசபயந்து.... செய்துவிடும்”
“உன் விழிச்சிவப்பின்... ஜுரம் வரட்டும்”-என்ற வரிகள் ‘திடம் கொண்டு போராடவும், ரௌத்ரம் பழகவும்’ கற்பித்த பாரதியின் வரிகளுக்குத் தெளிவுரை போன்ற உணர்வை நான் ஆயிரம் முறை அனுபவித்தது உண்டு.
‘பசித்த மனங்கள் பாடத்தொடங்கினால் ராகங்கள் கூட ஆயுதமேந்தும்’ என்ற வரிகளை உச்சரிக்கும் போதெல்லாம் ‘ஏழை அழுத கண்ணீர் கூரியவாள் ஒக்கும்’ என்ற தொன்மொழியும் நினைவில் தோன்றாமல் போகாது.
மரபை மீட்டு, மறுவார்ப்புச் செய்யும் கலைமனம் எத்தனை அழகாய் இன்னொன்றை சிருஷ்டித்து விடுகிறது.
இத்தகைய எழுத்துகளே, உள்வாங்கும் மனசை ஏவுகணையாய் இட(ம்) மாற்றிப் போடுகின்றன.
‘பாரதியின் பாட்டு பரங்கியர்க்கு வேட்டு’ என்பார்கள். ஒரு படைப்பாளியின் சமூகப்பங்களிப்பு அதுதான். எந்த எழுத்தும் ஒரு துண்டுச் சீட்டாய் உறைந்து விடக்கூடாது. ஒடுக்கப்பட்ட எவனும் எழுச்சிபெறுவதற்கான உந்து சக்தியாய் இருந்தாக வேண்டும். இந்தக் கவிதை அந்த வேலையை அற்புதமாய் செய்திருக்கிறது!செய்யும்!
- தொடரும்