"தமிழ், உலக மொழிகளில் மூத்ததும், மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி, கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவற்றுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது" என்று தமிழின் மாண்பைப் பாவாணர் விளக்குகிறார்.

தமிழ் இன்றளவும் நிலைத்து வாழ்வதற்கான காரணங்களில் மிக முக்கியமானது சொல்வளம். அதனால் தான் பாரதியாரும் கூட "யாமறிந்த மொழிகளிலே" என்று பாடும் சிறப்புத் தமிழுக்கு வாய்த்திருக்கிறது. ஞாலம், பூமி, உலகம், வையகம், மண்ணுலகம்,பூவுலகம், பூலோகம் என உலகைக் குறிக்க பல சொற்கள் இருக்கின்றன. ஒரு சொல் பல பொருள். பல சொல் ஒரு பொருள் தரும் சொற்களும் தமிழில் மிகுதி. அப்படியான பல பொருள் தருகின்ற சொற்களில் ஒன்று தான் யோகம் என்ற சொல். அதைப் பாரதியார் ஊருக்கு உழைத்தல் யோகம் என்ற தொடரில் பயன்படுத்துகிறார்.

யோகம் என்பதன் பொருள்

யோகம் என்பது சக்தி, உணர்வுநிலை ஆகியவை சாதாரணமாக வெளிநோக்கிப் பாய்வதை எதிர்ப்புறம் திருப்பும் ஓர் எளிய செயல்முறை ஆகும்; அதனால் மனம் இனியும் தவறும் இயல்புள்ள புலன்களைச் சாராது, பேருண்மையை உண்மையாகவே அனுபவிக்கும் திறனுள்ள, நேரடியாக உணரும் ஓர் ஆற்றல்வாய்ந்த மையமாகிறது என்ற ஆழ்ந்த பொருளை யோகம் என்ற சொல்லுக்கு வழங்குகிறது தகவல்களஞ்சியமான விக்கிபீடியா. ஆனாலும், இதனைக் கடந்தும் யோகம் என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு. சுபயோகம் என்பதில் யோகம் என்பது நல்ல நேரம் என்பதைக் குறிப்பதாக இருக்கிறது.bharathiyar 413யோகம் என்பது சூரியன் , சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20' அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும் சொல்லாகவும் விளங்குகிறது. எனவே இந்த யோகத்தைத் "தின யோகம்", "நித்திய யோகம்", "சூரிய சித்தாந்த யோகம்", போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம்.
இப்படி யோகம் என்ற சொல் தமிழில் பரந்துபட்ட பொருளைத் தருவதாக இருக்கிறது.

பாரதியின் யோகம்

சுதந்திரப்போராட்ட இந்திய வரலாற்றில் சுதந்திரத்திற்காகப் போராடிய கவிஞர்களின் பட்டியல் ஒன்றை உருவாக்கினால் அதில் மகாகவி பாரதியின் பெயர் முதல் வரிசையில் இருக்கும். சுதந்திரம் குறித்து ஏனோ தானம் என்று எழுத்துக்களால் மட்டும் பாடியவர் அல்ல பாரதியார். 'சொல்லிய வண்ணம் செயல்' என்ற வள்ளுவர் வழி வாழ்ந்து காட்டியவர். எல்லோரும் விடுதலையை வேண்டிக் கொண்டிருந்த சமகாலத்திலேயே சுந்திரத்தின் இனிமையை "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்தச் சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று" சுவைத்துப் பார்த்த தீர்க்கத்தரிசி.

பாரதியார் தன் பாடலில் பயன்படுத்தும் சொற்களுக்குத் தனித்த பொருளுண்டு. எல்லோரும் தாய்நாடு என்று பாடிக் கொண்டிருந்த தேசத்தை "என் தந்தையர் நாடென்ற பேச்சினிலோ ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே" என்று நாட்டைத் தந்தையர் நாடு என சிந்தித்த சொல் வேதாந்தி. அதன், அடிப்படையில் சிந்தித்தால் "ஊருக்கு உழைத்தல் யோகம்" என்ற சொற்றொடரின் சொற்கள் வழி ஆழ்ந்த பொருளை முன்வைக்கிறார். இந்தச் சொற்றொடரில் பொதுமையை மேன்மைப்படுத்துகிறார். ஊருக்கு உழைத்தல் யோகம் என்ற சொற்றொடரின் முழுப்பொருள் என்பது ஊருக்கு உழைத்தல் நன்மையைத் தரும் அல்லது மேன்மையைத் தரும் அதாவது யோகம் என்ற சொல்லை நன்மை, மேன்மை என்கின்ற பதத்திலேயே பயன்படுத்துகிறார்.

குடும்பமா? ஊரா? - எது பொதுவுடைமை?

சுயநலம் மட்டுமே மேலோங்கி இருக்கிற காலத்தில் வாழ்கிறோம். இன்றை சமூக நிலை இது தான். தன் வீடு , தன் மனைவி, தன் மக்கள் என்கின்ற சுயம் மட்டுமே நிலைத்திருக்கிற உலகத்தில் பாரதியும் வாழ்ந்திருக்கிறார். அதனால் தான் பாரதி குடும்பம் என்கின்ற சொல்லுக்கு மாற்றாக ஊர் என்ற பொதுமை சொல்லை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்ல வேண்டுமானால் ஊர் என்பதைப் பொதுவுடைமைச் சொல்லாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

குடும்பம் என்பது தனிவுடைமை. குடும்பத்திற்கு ஒருவன் உழைப்பது என்பது அவனது கடைமை, சுயநலமும் கூட ஆனால் ஊருக்கு உழைப்பது என்பது அப்படியல்ல அது பொதுவுடைமை. இல்லம் கடந்து ஒருவன் தன் உழைப்பைச் சிறப்படைய செய்ய எண்ணுவானேயானால் அந்த உழைப்புப் பேருழைப்பைபாக ஆக்கப்படுகிறது. அதன் பயனும் கூட ஒருவர், இருவர் துய்ப்பதாக அல்லாமல் பலர் துய்ப்பதாக மாறிப்போகிறது. எப்போதும் சுயநலமற்ற பேர் உழைப்பும், அந்த உழைப்பால் பெருகுகின்ற பெரும் செல்வமும் 'ஊருண்ணியில் நிறைந்த நீரைப்போன்றதாக ஆகின்றது' அஃது ஊரில் உள்ள அனைவருக்குமானது. ஊரில் உள்ள அனைத்து மக்களுக்குமான பொதுவுடைமைச் சொத்தாக மாறிப்போகிறது. குடும்பம் அல்ல ஊர் என்பதே என்றைக்குமான பொதுவுடைமை.

உழைப்பென்பது வேலையா? மூலதனமா?

ஒருவரைப் பார்த்துத் தம்பி என்ன செய்றீங்க , எங்க வேலை பார்க்கிறீங்க என கேட்டால் எங்க வேலை பார் க்கிறேன் வெட்டியாதான் இருக்கிறேன் என்பார். அல்லது எனக்கென்ன வேலையா கொடுக்கறாங்க அதெல்லாம் ஒரு வேலையா? ஏதோ குப்பை கொட்டிக்கொண்டு காலத்தை ஓட்டிப் பிழைப்பு நடத்துகிறேன் என்கின்ற இந்த இரண்டு பதில்களில் ஒன்று தான் வரும். இன்றைக்கு வேலை செய்கின்ற பலரின் மனநிலை இப்படித் தான் இருக்கின்றது. உழைப்பைப் பெருமைப்படுத்தவோ, பெருமை கொள்ளவோ யாரும் முன்வராதா ஓர் இருண்மை சூழ்ந்த வாழ்வியல் முறைகளுக்குள் இன்றைய நவீன உலகம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பொத்தாம் பொதுவான மனநிலை மாற்றப்படவேண்டிய ஒன்று. உழைப்பு என்பதை எல்லோரும் கொண்டாடும் உயரிய இடத்தில் வைத்துப் பார்க்கின்ற தகுதியை உழைப்பவர்களும் உழைப்பைப் பெற்றுக் கொள்பவர்களும் உழைப்பிற்கு வழங்க வேண்டும்.

ஆதியில் மனிதர்கள் அனைவரும் உழைப்பவர்களாக, உணவு தேடுபவர்களாக இருந்த காலத்தில் உழைப்பிற்கு இருந்த மதிப்பென்பது இன்றைய முதலாளித்துவக் காலத்தில் மங்கிப் போய்விட்டது. அதனால்தான் உழைப்பை நாம் இன்றைக்கு வேலையாக மட்டுமே பார்க்கத் தொடங்கி விட்டோம். அப்படியல்ல. செருப்பு நிறுவனம் ஒரு செருப்பை உருவாக்குகிறது எனில் அந்தச் செருப்பில் மூலப்பொருட்களுக்கு அடுத்த நிலையில் உழைப்பே பெரும் பங்கு வகிக்கின்றது. தயாரிக்கப்பட்ட செருப்பிலிருந்து உழைப்பைக் கழித்துவிட்டால் மூலப்பொருட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும். உழைப்பற்ற மூலப் பொருளால் எந்தப் பயனும் இல்லை. இந்த நோக்கில் நாம் உழைப்பைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் உழைப்பு என்பது வெற்று வேலையாக இல்லாமல் மூலதன உழைப்பாகப் பார்க்கப்படும். உழைப்பை வேலையல்ல மூலதனம் என்று நாம் எப்பொழுது பார்க்கத் தொடங்குகிறோமோ அன்று தான் உழைப்பு மேன்மையடையும்.

ஊருக்கு ஏன் உழைக்க வேண்டும்?

சுயநலத்தோடு வாழ்வதற்கும் பொதுவுடைமையோடு வாழ்வதற்குமான வேறுபாடு என்பது மிகப் பெரியது. சுயநலம் குறுகிய சித்தனையையும் வளத்தையும் மட்டுமே உருக்கி வைக்கிறது. பொதுநலத்தோடு உழைத்துச் சேர்க்கும் பொருள் அப்படியல்ல இருக்கும் இடத்திலிருந்து இல்லாத இடத்திற்கு எப்போதும் எந்தத் தடையும் கட்டுப்பாடும் இன்றிக் கடந்து சென்று நலம் பயக்கும் நன்மை கொண்டது. "அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி " என்கின்ற திருக்குறளின் கருத்தோடு ஒப்புநோக்கினால் அதன் ஆழ்ந்த பொருள் இன்னும் வெளிச்சம் பெரும்.

சுயநலத்தோடு சேர்க்கும் பொருள் அழிந்துபோக நேருமாயின் அப்பொருளைச் சேர்த்தவனுக்கு நீங்காத கொடிய வறுமையும் துயரமும் வந்து சேரும். அத்தகைய துயரத்தை யாரலும் நீக்கவும் முடியாது யாரும் நீக்கவும் முன்வர மாட்டார்கள். ஆனால் பொதுமையாக ஊருக்கு உழைப்பவனின் பொருள் அப்படியல்ல அது நல்ல நிலங்களில் உரிய காலத்தில் விதைக்கப்பட்ட விதைகளைப் போன்றது. அதுமட்டுமல்ல எல்லா மக்களின் கைகளிலும் வைத்துப் பாதுகாக்கப்படும் விதை நெல்லைப் போன்றது. ஒருவர் கையிலிருக்கும் விதை நெல் அழிந்து பட்டாலும் பெரும் துயரோ இழப்போ ஒன்றும் இல்லை. பொருளை இழந்தவன் கைகளுக்கு ஓராயிரம் கைகளில் இருந்து பொருளானது வந்து சேரும். இன்பம் வந்து சேரும். பொதுவுடைமை உழைப்பென்பது தடையற்ற மகிழ்வை , நன்மையை, மேன்மையை ஒருவரிடத்தில் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டேயிருக்கும்.

இந்த உரிய மேன்மையைத் தான், நன்மையைத்தான் . ஊருக்கு உழைத்தல் யோகம் என்று முண்டாசுக் கவிஞன் பாரதியார் பொதுமைச் சிந்தனை பொதிந்த வரிகளாகச் சுட்டிக் காட்டுகிறார்.

- மகா.இராஜராஜ சோழன், சீர்காழி

Pin It