போர் ஓர் ஆண்பால் சொல். ஆணாதிக்கத்தின் குறியீடு. சுய விருப்பு வெறுப்புகளுக்காக ஆண்களே தொடங்கிய வன்முறை. பெண்கள் ஒருபோதும் போரை விரும்பியதில்லை. போர் என்பதன் குறைந்தபட்ச ஒதுக்கீடே உயிரிழப்பாக இருக்கும்போது, உயிர் உற்பத்தி செய்யும் பெண்கள் எப்படிப் போரை ஆதரிப்பார்கள்? கோசர் படையெடுப்பிலிருந்து ஆங்கிலேயர் படையெடுப்பு வரை, கடந்த 2400 ஆண்டுகளில் 104 ஆணாதிக்க இனக்குழுக்கள், இந்தியத் துணைக் கண்டத்தின் மீது போர் தொடுத்து தங்கள் வல்லாதிக்கத்தை நிலைப்படுத்தியுள்ளன. இதில் எந்தப் போரையும் பெண் சமூகம் தலைமையேற்று நடத்தியதில்லை. இது போன்ற போரினால் நேரடியாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான் என்பதை ஈராக் போரின் விளைவுகளில் கூட கண்டறிய முடிகின்றது. ‘மக்கள் விடுதலைக்காகத்தான் சண்டை போடுகிறோம்' என்று ஓர் அறநெறியைக் கூறிவந்தாலும் ‘போர் மரபு' என்பது மானுடத்திற்கும், மனித நேயத்திற்கும் முற்றிலும் எதிரானது. ஆனால், போர் மரபை விடுதலைக்கான குறியீடாகவும் அணியமாக்கலாம் என்று தோழர் தலித் சுப்பையா ‘இசைப்போர்' மூலம் முழக்கமிடுகிறார்.

Dalth child with parai
ஒடுக்கப்பட்ட மக்கள் கொடுமைகளுக்கு எதிராக, வரலாற்றில் தொடர்ச்சியாக போர் தொடுத்துள்ளனர். உலக நாடுகளில் இன்று வரையிலும் ஒடுக்கப்பட்டு வருகின்ற சமூகக் குழுக்கள், தங்களின் விடுதலைக்காக கையில் கிடைத்தவற்றையெல்லாம் கருவிகளாக்கி, மாபெரும் போரை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. அதுதான் மண்ணின் மரபையும், மக்களையும் பாதுகாக்கின்ற பண்பாட்டுப் போர். எந்தவித உயிர் இழப்பையும் திட்டமிட்டுச் செய்யாமல், வெட்டிக் கொல்லுகின்ற ஆயுதங்களைக் கையிலேந்தாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வோடு பிணைந்திருக்கின்ற கலை இலக்கியக் கூறுகளைக் கொண்டு, இந்த பண்பாட்டுப் போர் திட்டமிடப்படுகின்றது. விடுதலைக் குரல் எழுப்பும் போர் மரபை, பண்பாட்டு ஆயுதத்தால் நிகழ்த்த முடியும் என்று ‘இசைப்போர்' ஒத்திகையை விடுதலைக்குரல் தொடங்கியுள்ளது.

தோழர் தலித் சுப்பையா, 1986 தொடங்கி இன்று வரையிலும் தலித் விடுதலைக்காக எழுதி, இசையமைத்த 82 பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தலித் விடுதலைப் பாடல்கள், சமூக விடுதலைப் பாடல்கள் என இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில், 48 தலித் விடுதலைப் பாடல்கள் அணியமாகியுள்ளன. இந்து மத வேரறுப்பு, தீண்டாமை எதிர்ப்பு, கிறித்துவத்தில் சாதியம், வரலாற்று மீட்டுருவாக்கம், தலித் தலைவர் வரலாற்றில் பதிவுகள், அம்பேத்கரின் போராட்டங்கள், தமிழ் அடையாளம், வன்கொடுமை எதிர்ப்பு, தந்தை பெரியார், பண்பாட்டு மீட்டுறுவாக்கம், தலித் பெண்ணியம், பாட்டாளி வர்க்க விடுதலை, தலித் குழந்தைகள் வாழ்நிலை, சாதி ஒழிப்பு, தலித் எழுச்சி, மார்க்சிய முழக்கம், பவுத்த ஏற்பு எனப் பல தளங்களில் விடுதலைக்கான போர்ச் சூழல் பாடலாகியுள்ளன.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவர் தன்னுடைய விடுதலைக்காக மட்டும் பாடுபடாமல், சுற்றியுள்ள மற்றவர்களின் விடுதலைக்காகவும் கவலைப்படக்கூடியவராகவே இருப்பார் என்பதன் அடையாளமாக சமூக விழிப்புநிலையை உருவாக்கும் பாடல்களும் தலித்துடன் அடையாளமாகியுள்ளன. வேளாண்குடி நெல்லின் மக்கள், உழைப்பாளர்கள், பல்சமய மக்களுடனான உரையாடல்கள், உடல் நலம், இயற்கை வளப் பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு எனப் பொது நலப் போராட்ட எல்லை விரிவாகப் போய்க் கொண்டே இருக்கின்றது.

தொல்குடி மக்களிடமிருந்து ஒரு நூல் வெளிவருவது அவ்வளவு எளிதல்ல. அம்பேத்கரின் எழுத்து அனுபவங்களை இதற்கு ஒரு சான்றாகக் கொள்ளலாம். அவர் தன்னுடைய அனுபவத்தை இவ்வாறு பதிவு செய்கிறார்: ‘‘எழுதும்போது எனக்குள் ஆற்றல் எங்கிருந்து பிறக்கிறது என்பதை இனம் காண முடியாது. நேரம் போவதே தெரியாது. என்னுடைய எழுத்தின் அபார ஆற்றலை, வேகத்தை தாள்கள்தான் நிறைவு செய்ய முடியும். எழுதி முடித்ததும் எனக்குள் சோர்வு ஏற்பட்டுவிடும். அப்படியே அயர்ந்து தூங்கிவிடுவேன்... என் அனுபவப் பட்டறிவில் உதித்த சிந்தனைகளை எழுத்தாக்கி வெளியிடுவது, மிகவும் சோதனைக்குள்ளான ஒரு விசயம். அப்படியே பல தடைகளைக் கடந்து எனது முழு படைப்பாற்றலாக அது வெளியாகிறது என்றால், அதைவிட மகிழ்ச்சி எனக்கு இருக்க முடியாது. நான் எழுதியவை ஒரு நூலாக வெளிவருமேயானால், ஒரு நூல் வெளியீடு என்பது எனக்கு 4 குழந்தைகள் பெற்றதற்கு இணையானது'' (‘தலித் இலக்கியங்களின் அழகியல் நோக்கு' : சரண்குமார் லிம்பாலே 2003).

ஒவ்வொரு தலித் படைப்பாளனின் அனுபவங்கள் அனைத்தும், புரட்சியாளர் அம்பேத்கர் கூறும் அனுபவங்களைப் பின்னணியாகக் கொண்டுள்ளன. ‘இசைப்போரி'லும் நூலாசிரியரின் அனுபவங்களே பாடல்களாகப் பரிணமித்துள்ளன. இதில் அவர் போராடியிருக்கிறார்; போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். பொன்னூர் கலவரத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றுள்ளார். அவரது சேரிப் பெற்றோர்கள், இச்சமூகம் விதிக்கப்பட்ட சராசரித் தீண்டாமை அனுபவங்களோடு போராடியுள்ளதைப் பாடலாக்கியுள்ளார். இவருக்கும், இவர் சார்ந்திருக்கின்ற சுற்றத்தாருக்கும் மநுதர்மத்தின் அடி மிகப் பலமாக விழுந்திருப்பதை எழுத்தின் காற்புள்ளி, அரைநோட்டு வீதம் அப்படியே வியர்த்துக் கொட்டியிருக்கின்றார்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு படைப்பாளர், கற்பனை செய்தாலும் இப்படியான பாடல் வரிகளை இசைப்போராக உற்பத்தி செய்ய முடியாது. மக்களோடு, மக்கள்படும் பாடுகளோடு, சேரியின் சின்னாபின்னமாக்கப்பட்ட கனவுகளோடு, மூலை முடுக்குகளில் அழுகுரலோடு வாழ்ந்து கொண்டிருப்பவரால்தான் இப்படியொரு படைப்பை விடுதலைக்குக் கருவியாக வார்த்தெடுக்க முடியும். இக்கருவியேந்திய பாடல் இசை எனும் பண்பாட்டுப் போரை, ஒடுக்கப்பட்ட சமூகம்தான் செய்நேர்த்தியோடு களத்தில் வென்றெடுக்க முடியும். இதனைத் தடுக்கவோ, அழிக்கவோ, சமரசம் செய்யவோ அல்லது இதன் மீது குறுக்கீடு உண்டாக்கவோ முடியாது என்கிற நம்பிக்கைத் திமிர் இதனுள் ஆழப் புதைந்து கிடக்கிறது.

மிகச் சிறந்த வரலாற்றுப் பதிவாகவும், அனுபவ உள்ளீடாகவும் வெளியாகியுள்ள இக்கருத்துகளை சேரிக்கும் ஊருக்கும் கொண்டு செல்லக் கூடிய பொறுப்பு நமக்கென கொடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு தலித் இயக்கங்களை வலுப்படுத்தவும் வேண்டியுள்ளது.

Dalith Subbiah's book on music
நம் மக்கள் எழுதுவார்கள், ஆடுவார்கள், பாடுவார்கள், ஓவியமாக்குவார்கள், கண்ணில் பட்டதைப் படைப்பாக்குவார்கள் என்கிற அருமை, பெருமை எல்லாம் காலம் காலமாக நம் எதிராளியின் வளர்ச்சிக்கே பெரிதும் பயன்பட்டு வந்துள்ளன. இந்த மண்ணில் பொதுவுடைமை இயக்கங்களும், திராவிட இயக்கங்களும் சேரி மக்களின் பண்பாட்டுக் கருத்தியலால்தான் வளர்க்கப்பட்டன. சேரி மக்களும் இதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தார்கள் என்பதை நாடறியும். ஆனால், தலித் இயக்கங்களின் எழுச்சிக்கு தலித் கலை, இலக்கிய, பண்பாட்டு ஆயுதம் என்ன பங்களிப்புச் செய்து வருகிறது என்பதையும் விசாரணைக்குட்படுத்த வேண்டியுள்ளது. அதே சமயம், தலித் இயக்கங்களுக்கு இப்பண்பாட்டுப் போரை முன்நின்று நடத்த வேண்டிய பொறுப்பும், தேவையும் உள்ளது. அணிந்துரையில் பாவலர் இன்குலாப், ‘கழினியிலே மொளச்ச சொல்லு' என்பதில் வேர் பதிய வைக்கின்ற கருத்தும் இதுவாகவே இருக்கின்றது.

இரண்டு எதிர்பார்ப்புகளோடு நூலாசிரியர், தனது முன்னுரையை நிறைவு செய்கிறார். இந்நூலை வாங்கலாம், வாசிக்கலாம், வாய்திறந்துகூடப் பாடலாம். இந்நூலை வாங்கினாலும், படித்தாலும் இசைப்போர் அணிவகுப்பில் நாம் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும். இதில் நாம் பங்கேற்பாளராகி, பண்பாட்டுப் போருக்கான அணிவகுப்பில் இடம் பெற வேண்டும் என்றால், இசைப்போரை தலில் சேரியிலிருந்தே தொடங்கியாக வேண்டும். பட்டி தொட்டிகளில் எல்லாம் ‘பணிந்து போகமாட்டோம்' என்கிற பாடல் ஒலிக்க வேண்டும். சேரிகளின் குடும்ப விழாக்களில் இசைப்போர் சங்கமிக்க வேண்டும். விடுதலைக் குரலின் வீர முழக்கம் மேடையேற வேண்டும். தலித் விடுதலைக்குக் கலைகளையும் கருவிகளாக்குவோம் என்கிற முழக்கத்தில் நின்று இசைப்போர் முரசைப் பறையொலி முழங்க வேண்டும். குடும்ப விழாக்களில், தலித் சமயச் சடங்குகளில் பார்ப்பனியப் பண்பாட்டு ஆதிக்கத்தை வேரறுக்க, இசைப்போர் நிகழ்த்தப்பட வேண்டும் என்று ஆசிரியர் வேண்டுகோள் விடுக்கிறார்.

தமிழகச் சூழலில் சேரிகளை ஆக்கிரமித்து நிற்கின்ற அரசியல் கட்சிகளையும், ரசிகர் மன்றங்களையும், இந்துப் பார்ப்பனிய கோயில் நுழைவுகளையும் விரட்டியே ஆக வேண்டும் என்றால், இசைப்போரைத் தொடங்கியே ஆக வேண்டும். இந்து மத வேரறுப்பையும், பவுத்த ஏற்பையும் அடித்தளமாகக் கொண்டுள்ள ‘இசைப்போர்' ஒரு பண்பாட்டுப் போர். இதனை யாரும் எக்காலத்திலும் வீழ்த்த முடியாது. வேண்டுமானால் இதன் உள்ளீடுகளைக் களவாடி வியாபாரமாக்கலாம்; ‘தலித்' எனப் பிழைத்து வாழலாம். ஆனால், ஒரு போதும் இதன் கருவூலங்களை உற்பத்தி செய்ய முடியாது.

சேரியின் வீதிகளில் பொடி நடையாய் விழுந்து கிடக்கிறப் போராளிகளால் மட்டுமே கலை, இலக்கிய, பண்பாட்டு மீட்டுருவாக்கங்களை உருவாக்க முடியும். இதனை உருவாக்கி, உற்பத்தி செய்கிறவர்களால்தான் அதைப் பாதுகாக்கவும் முடியும். ‘இசைப் போர்' இரண்டையும் செய்திருக்கின்றது. இனி, யாரோ பாடுவார்கள் நாம் செவிகொடுத்துக் கேட்போம் என்றில்லாமல் நாம் பாடகராக, படைப்பாளர்களாகப் பங்கேற்க வேண்டும். தாயின் கருவில் வளரும் குழந்தைகளுக்கு இசையூட்டினால், அதன் மூலாம்பர உளவியல் மரபை அடையாளம் காண முடியும் என இன்று அறிவியல் பூர்வமான அர்த்தங்களைச் சொல்கிறார்கள். நம்டைய முன்னோர்களுடன் தொப்புள் கொடியாக வேர் பிடித்து வருகின்ற விடுதலை உணர்வை கருவிலிருந்தே நாம் கடைப்பிடிப்போம். தலித் சுப்பையாவின் விடுதலைக் குரலை காற்றில் மிதக்க விடுவோம். இன்னொரு தலைமுறை விடுதலையை அடையாளம் காணட்டும்!

நூல் : ‘இசைப் போர்'
ஆசிரியர் : தலித் சுப்பையா
வெளியீடு : தலித் ஆதார மய்யம்,
அரசரடி, மதுரை 625 016
பக்கங்கள் :164 விலை : ரூ. 60
Pin It