இயற்கையோடு பின்னிப் பிணைந்த காலம் மாறி இன்று முகநூல் வாட்சப் போன்ற கருவிகளை பயன்படுத்தாத நபர்களே இல்லை என்ற நிலை உண்டாகி விட்டது. ஒரு மனிதனின் இருப்பை தெரிவிக்கும் கருவியாகவே அவை மாறிவிட்டன. ஆணாதிக்க சமூகம் பெண்களை ஒரு காட்சிப் பொருளாகவே அணுகுகிறது. அப்படியானதொரு ஆண்மை வேரூன்றிய சமூகம் தான் அவர்களால் பல இன்னல்களை சந்திக்கும் பெண்களின் நிலைக்கு காரணம்.

மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே பெண்கள் ஆண்களுக்கு சேவை செய்யும் நிலைப்பாடே தொடர்ந்து வருகிறது. இந்திய மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரம் ஊடகங்களின் தாக்கத்திற்கு உள்ளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சமூக வலைதளங்களை பெண்கள் பயன்படுத்துவதன் நோக்கம் ஆண்களுடன் நட்பு கொள்ள என நினைக்காதீர்கள். பெரும்பாலும் தனது அறிவை விசாலப் படுத்திக் கொள்ளவும் தொழிலை மேம்படுத்தவும் தான் வருகின்றனர். ஒரு ஆணுடன் பெண் சகஜமாக பேசினாலே அதன் காரணம் அவன் மீதான ஈர்ப்பு தான் என்பதல்ல. உடனே அலைபேசி எண் புகைப்படம் மற்றும் இதர விபரங்களைக் கேட்டு தொல்லை தருவது பத்தில் ஒன்பது பேருக்கு இயல்பாக நிகழ்கிறது. இதைப் போன்ற கருவிகளின் மூலம் உலகப்புகழ் அடைந்தவர்களும் உண்டு. அதே சமயம் உயிரைப் பறிகொடுக்க தற்கொலைக்கு துணிந்தவர்களும் உண்டு. தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களை எடுத்துக் கொள்வோம். அவர்கள் அனைவரும் கையாளும் உண்மை பெண்கள் அழகாக இருப்பதைத் தவிர அவர்களின பங்களிப்பு ஏதும் தேவையில்லை என்பதே ஆகும். பெண்களின் சுயம் மறுக்கப்பட்டு வரும் இக்காலத்தில் அவர்களுக்கான வெளி சமூக ஊடகங்களில் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் மட்டுமே முகநூல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பதிமூன்று கோடியை எட்டியுள்ளது.

ஆனால் இதில் இருபத்தி நான்கு விழுக்காடு மட்டுமே பெண்கள். ஆண்டு தோறும் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இருபது விழுக்காடு அதிகரித்தாலும் பெண்களின் பங்கு மிகவும் சொற்பம். இணையத்தில் பெண்களின் புகைப்படங்களைத் தவறாக பரப்புவோருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை தர வேண்டுமென சட்டம் சொல்கிறது. இது சேலத்தைச் சேர்ந்த மாணவி வினுபிரியாவின் மரணத்திற்கு பிறகு நிகழ்ந்தது. எனினும் இதைப் போன்ற அவலங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் உள்ளன. வாகனம் ஓட்டும் போது விபத்து நிகழ்கிறது என்பதால் வாகனமே ஓட்டாமல் எவரும் இருப்பதில்லை. அதுபோல படங்களைப் பகிர்ந்தால் தவறாக சித்தரிப்பார்கள் என பயந்து முழுதாக புறக்கணிக்க வேண்டாம். சற்றே குறைத்துக் கொள்ளுங்கள். இன்றைய நவீன தொழில் நுட்பங்களின் மூலம் எல்லா விதமான விபரங்களையும் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

சமூக ஊடகங்களின் மூலம் நமக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம். சமூக ஊடகங்களால் மட்டுமே தான் புகைப்படங்கள் எடுக்கப் படுகின்றன என்பதல்ல. நாம் பயன்படுத்திய தொலைபேசிகள் தொலையும் போதோ அல்லது பழுது பார்க்க கொடுக்கும் போதோ கூட இவ்வாறு நிகழலாம். நாளை நம்மில் எவருடைய புகைப்படத்தையோ காண நேரிட்டால் பயப்பட வேண்டாம். தவறான முடிவுகள் எடுப்பதை விடுத்து தக்க நேரத்தில் போராடுங்கள் ஊடகத் துறையில் இன்று பெண்களே விளம்பரப் பொருளாக மாறிவிட்ட நிலை உள்ளது. எனவே உங்களுடைய சுய விபரங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். தவறுகளை எதிர்க்கும் வல்லமையைப் பெறுங்கள். எதிர்த்து குரல் கொடுங்கள். பாரதி சித்தரித்த புதுமைப் பெண்ணாகவும் பெரியார் கூறிய புரட்சி பெண்ணாகவும் வெளி வர வேண்டும்.        

Pin It