செப்டம்பர் 20, 2008. 15 வயதே ஆன ஹிதேந்திரன் ஹெல்மெட் அணிய மறுத்து பைக் ஓட்டப்போய் வீடு திரும்பாத நாள். செல்லும் வழியில் ஏற்பட்டவிபத்தில் சிக்குண்டு, பைக்கில் இருந்து தூக்கியெறியப்பட்டு, நினைவிழந்த ஹிதேந்திரன், பல முயற்சிகளுக்குப் பின்னும் நினைவு திரும்பமுடியாமல், மூளைச்சாவினை அவனது உடல் எதிர்ெகாண்டது. அவனது பெற்றோரான மருத்துவர் அசோகன் மற்றும் மருத்துவர் புஷ்பாஞ்சலி, இரண்டு நாட்கள் தீவிரமாய் முயன்றபின்னர், தங்களது மகனின் அந்திமம் இது தான் என்று உணர ஆரம்பித்தனர். சிறு காலதாமதம் கூட இல்லாமல், ஹிதேந்திரனின் உடலில் செயல்பட்டுக்கொண்டிருந்த இருதயம், சிறுநீரகம், விழித்திரை, கல்லீரல் மற்றும் எலும்பு மஜ்ஜையினை தானமாக கொடுத்துவிடலாமென்ற முடிவினை எடுத்தனர். அவனது உறுப்புகளைத் தானமாக அளிக்க, நடந்த அறுவை சிகிச்சையின் வழி பெறப்பட்ட இருதயமானது, சென்னை மாநகர காவல்துறையின் உதவியோடு, வெறும் 11 நிமிடங்களில், மற்றொரு மருத்துவமனைக்கு, இவ்விருதயத்தினை எதிர்நோக்கியிருந்த ஒருவருக்கு பொருத்துவதற்காக விரைந்து எடுத்துச்செல்லப்பட்டது. இந்த நிகழ்வு தான் பின்னர், ‘சென்னையில் ஓரு நாள்’ என்ற திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டது.

அன்றைய மேதகு முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள், ஹிதேந்திரனின் பெற்றோர்களின் மேன்மையான மனிதாபிமானச் செயலைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், மாநிலத்தில் உறுப்பு தானம் செய்ய முன்வருவோரை ஊக்குவிக்கவும் செய்து அதற்கான உறுதிமொழியினை பெருவாரியான மக்கள் எடுக்கவேண்டும் அன்று கூறினார். ஹிதேந்திரனின் பெற்றோர் எடுத்த இந்த முடிவு, தமிழகத்தில் ஒரு விளைவினை ஏற்படுத்தியது. பின்னாளில் 'Hithendran effect' என்று சொல்லும் அளவிற்கு, உடலுறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆதரவென்பது மக்கள் மத்தியில் பெருவாரியாக ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் அரசாங்கமும் இது குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பது நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.

போர்டிஸ் மெமோரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் படி, இந்திய அளவில், ஒவ்வொரு வருடமும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகளுக்காக சுமார் 50,000 தானமாகக் கொடுக்கப்பட்ட இருதயங்களும், 20,000 தானமாகக் கொடுக்கப்பட்ட நுரையீரல்களும் தேவைப்படுகின்றது. 2,20,000 பேருக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட சிறுநீரகங்கள் தேவைப்படும் இடத்தில், பற்றாக்குறையினால், வெறும் 12,000 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளே நடக்கின்றது. ஒவ்வொரு வருடமும் இறுதிக் கட்டத்தினை அடைந்த கல்லீரல் நோய்களினால் நோயாளிகள் இறந்துக்கொண்டிருக்க, வெறும் 2000 கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகளே நடக்கின்றது. இதற்கெல்லாம் முக்கிய காரணமாய் சொல்லப்படுவது, இந்தியாவில் உறுப்பு தானம் என்பது அரிதிலும் அரிதாய் நடப்பதினால் தான்.

இந்தியாவில் உறுப்பு தானம் என்பது எத்தனை அரிது என்றால், ஒரு கோடி பேருக்கு வெறும் 8 பேரே உறுப்பு தானம் செய்கிறார்கள். அதே ஸ்பெயின் நாட்டில், ஒரு கோடி பேருக்கு, 360 அறுபது பேர். இதற்கு காரணம், ஸ்பெயின் Opt-Out என்ற உறுப்பு தானம் என்ற கொள்கையினை செயல்படுத்துகின்றது. அதன் படி, ஒருவர் தான் உறுப்பு தானம் செய்ய விரும்பவில்லை என்று பதிவு செய்து கொள்ளவில்லை என்றால், அவர் உறுப்பு தானம் செய்வதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை ஆகவே அது சம்மதத்திற்கான அறிகுறி என்று கொள்ளப்படும். இந்த கொள்கை எத்தனை சிறப்பானது என்றால், உலகம் முழுவதும் உள்ள பல நாடுகள் இந்த கொள்கையினை பின்பற்றலாமா என்று யோசிக்கும் அளவிற்கு, காரணம் தானமாக அளிக்கப்பட உறுப்புகளின் பற்றாக்குறையினால், உலகம் முழுவதும் அத்தனைப் பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள், அல்லது உறுப்பு வேண்டி பெரும் வலியோடு தங்களது இறப்பினை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அளவில், மருத்துவ கொள்கைகளை வடிவமைப்பதில், செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக இருப்பது தமிழகம். அதன் வழி, செப்டம்பர் 16, 2008இல் தமிழக அரசே ஏற்று நடத்தும் உடலுறுப்பு தான செயல்முறைத்திட்டம் (Tamil Nadu Cadaver Transplant Programme) தொடங்கப்பட்டது. இந்த முற்போக்கான திட்டத்தினை உலக சுகாதார மையமே அன்று பாராட்டியது. 2014இல் உறுப்பு மாற்று சிகிச்சை மற்றும் தானங்களை மேற்பார்வை செய்யும் ஆணையமான Transplant Authority of Tamil Nadu (TRANSTAN) இற்கு தமிழக அரசு முழுமையான சுயாட்சி அதிகாரத்தினை அளித்தது. 2017இல், TRANSTAN, உறுப்பு தானங்களை ஊக்குவிக்கும் வகையினில் ஒரு செயலியினை (App) வெளியிட்டது, அதோடு சீரிய முறையினில் இன்று வரை உடலுறுப்பு தானம் குறித்த பதிவேட்டினை நிர்வகித்தும் வருகின்றது (https://transtan.tn.gov.in/index.php). இதில் குறிப்பிடவேண்டியது என்னவென்றால், உறுப்பு தானம் பலசமயம் தனியார் மருத்துவமனைகளில் இருந்து நடைபெறுவது தான். அரசு மற்றும் தனியாரின் கூட்டு நல்ல பலன்களைத் தரும் சில செயல்திட்டங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

நம் மாநிலத்தில் செயல்திட்டங்கள் உண்மையிலேயே இந்த நாட்டிற்கான கலங்கரை விளக்கமாக இருக்கின்றது என்ற பெருமிதம் ஒரு புறம் இருந்தாலும் இது காலத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டுமானால், இம்மாநிலத்தின் மக்களான நாமும் எதிர்காலத்தினை நோக்கிய முற்போக்குடன் செயல்படவேண்டியது அவசியம். இன்றும் பல்லாயிரம் பேர் உறுப்புகள் இல்லாமையால் இறந்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே, உறுப்பு தானம் குறித்து நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து, அதன் வழி உறுதிமொழியினை ஏற்பது நமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் கொடுக்கும் கொடையே. அதோடு, ஸ்பெயின் நாட்டில் உள்ள திட்டங்கள் போன்ற முற்போக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டால், அதனை முழுமையாக ஆதரித்து, அத்திட்டத்தின் கூறுகளை நம் நண்பர்களுக்குச் சொல்வதும் அத்தனை அவசியம். காரணம், ஒரு அறிவார்ந்த, பொதுநோக்குடனான கூட்டம் ஒரு சமூகத்தில் இயங்கினால் தான் ஜனநாயகம் மக்களுக்கானதாக இருக்கும்.

ஆகவே, உறுப்பு தானம் குறித்து உங்கள் மருத்துவரிடம் அவசியம் கேளுங்கள். நேரம் இருப்பின், உறுப்பு தானம் குறித்த சந்தேகங்களைப் படித்துத் தெரிந்துகொள்ள TRANSTAN இன் இணையதளத்தில் உள்ள விஷயங்களைப் படித்துப்பாருங்கள். ஹிதேந்திரனின் தந்தை அவர்கள் சொன்ன ஒரு வாசகம் இன்னும் என் மனதினில் அப்படியே தங்கியிருக்கிறது. மனதிற்கு நெருக்கமான உறவுகளின் இறப்பு மற்றும் அதன் வலியினை தாங்கிக்கொள்ள இருக்கும் ஒரே மருந்து நம் மனதிற்கு நெருக்கமான ஒருவரின் உடல் உறுப்புகளால் இத்தனை பேர் இவ்வுலகில் வாழ்கிறார்களே என்பது தான்.

உடலுறுப்பு தானத்தினைப் பற்றி அவசியம் நினைத்துப்பாருங்கள். சுற்றம் பயனுற வாழவேண்டும் என்பது தானே நம் மண்ணில் வாழ்விற்கான இலக்கணம்.                          

Pin It