தோழர்கள் ஆதித்தனுக்கும் ராமமூர்த்திக்கும் சீனா போவதற்கு அநுமதி தர மறுத்து விட்டார்கள், ராமராஜ்ய சர்க்கார்!

kuthoosi gurusamyநியாயந்தானே! இவர்களுக்குச் சீனாவில் என்ன வேலை? உள் நாட்டில் எவ்வளவோ புண்ணிய nக்ஷத்திரங்கள் இல்லையா? யார் அநுமதியும் கேட்காமல் போய் வரலாமே! பழனி அல்லது திருப்பதி அல்லது நாகூர் அல்லது வேளாங்கண்ணிக்குப் போய் சாமிக்கு மொட்டை (மயிர் காணிக்கை) யடித்துக் கொண்டு வரக் கூடாதா? மலையாளத்துக்குப் போய் ட்யூப்ளிகேட் அய்யப்பனை (ஒரிஜினல் அய்யப்பன் சாமி காலஞ்சென்று விட்டபடியால்) தரிசனம் செய்து விட்டு வரக்கூடாதா? அல்லது திருவண்ணாமலைக்குப் போய் பழைய கவர்னர் - ஜெனரலால் வெகு சிரமப்பட்டுத் “திறந்து” வைக்கப்பட்ட பாதாள லிங்க குகையைப் போய் பார்த்து வரக் கூடாதா? இவ்வளவு பரந்த பாரத பூமியில் மேற்படி இரண்டு ஆசாமிகளுக்கும் போவதற்கா இடமில்லை?

ஒரு வேளை வெளிநாடு போக வேண்டுமென்று விரும்பினால் அமெரிக்காவுக்குப் போகலாமே? டைரெக்டர் சுப்ரமணிய அய்யருக்குக் கிடைத்தது போல இரண்டே நாளில் பாஸ்போர்ட் கிடைக்குமே! சொந்தச் செலவு கூட இல்லையே! அமெரிக்க சர்க்கார் செலவிலேயே போய் வரலாமே! கம்யூனிச எதிரிகளுக்கெல்லாம் இப்போது ஒரு நல்ல சான்ஸ்! மாரி – காளி - சுப்பன் - ஆகிய யாராயிருந்தாலும் போகவர ஓசி சவாரி! விமானத்தில்! செலவுக்குத் தாராளமாகப் பணம்!

அல்லது இந்த இருவரும் ஜப்பானுக்கு (அமெரிக்காவின் மற்றொரு பகுதி!!!) வேண்டுமானாலும் போயிருக்கலாமே! அல்லது காமன்வெல்த் தாய் நாடாகிய இங்கிலாந்துக்குப் போயிருக்கக் கூடாதா?

உலகத்தில் எத்தனையோ நாடுகள் இருக்கும்போது சீனாவுக்குப் போவானேன்? அங்கே போகிறவர் யாராவது திரும்பி வந்து ஒரு “நல்ல” சங்கதியாவது இது வரையில் சொன்னதுண்டா? விஜயலட்சுமி பண்டிட் அம்மையார் முதல் பணிக்கர் வரையில், கரஞ்சியாமுதல் குமரப்பா வரையில், எல்லோரும் சீனாவைப் பற்றி உளறித்தானே கொட்டி யிருக்கிறார்கள்?

“நான் சீனாவில் சுற்றுப்பிரயாணஞ் செய்தேன்! அங்கு குடியாட்சி ஏற்பட்டது முதல் மக்களெல்லாம் பட்டினியால் வதைகிறார்கள். அரிசி ஒரு படி ஒன்றே கால் ரூபாய் வீதம் விற்கிறது. கடவுளை வேண்டியும், வருண ஜபம் செய்தும்கூட ஒரு சொட்ட மழைகூடக் கிடையாது! நாடெங்கும் ஒரே பஞ்சம்! கத்தாளைக் கிழங்கைத் தோண்டித் தின்கிறார்கள். குழந்தைகளை விற்கிறார்கள். தொழிலாளர்கள் மலேயாவுக்குக் கப்பல் கப்பலாய்ப் புறப்பட்டுச் செல்கிறார்கள். இன்னும் இரண்டு மாதம் வரையில் கப்பல் மேல் தளத்து டிக்கெட் கிடைக்காது, என்று சர்க்கார் அறிக்கை பிறப்பித்து விட்டார்கள். பிரிட்டிஷ்காரனும் குஜராத்தியும் சீனர்களின் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காக்காரனின் பிச்சைக் காசு இல்லாவிட்டால் இந்நேரம் அங்கே புரட்சியே ஏற்பட்டிருக்கும்! சீனாவில் குடியாட்சி ஏற்பட்ட பிறகு தேசபக்தர் சியாங்கே ஷேக் கட்சியில் அந்த நாட்டுப் பணமூட்டைகளெல்லாம் சேர்ந்து விட்டன! ஒரே கூட்டுக் கொள்ளை! தொழிலாளிகளெல்லாம் கசக்கிப் பிழியப்படுகிறார்கள்! லட்சக் கணக்கான பட்டாரிகளுக்கு வேலையே கிடைக்கவில்லை. பள்ளிகளில் படிக்க இடமில்லை. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு இடமில்லை! ஆனால் கோர்ட்டுகளும் கோவில்களும் மட்டுந்தான் ஏராளமாகப் பெருகிக் கிடக்கின்றன! மந்திரிகள் எல்லோரும் ‘கடவுள்’ - ‘கடவுள்’ என்றே சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்!”

- இந்த மாதிரி சீனாவைப் பற்றி இதுவரையில் எவராவது - எவளாவது சொன்னதுண்டா? அப்படியிருக்கும்போது எதற்காக இவர்களுக்குப் பாஸ்போர்ட் தர வேண்டும்?

போதும்! போதும்! இது வரையில் கொடுத்ததனால் வந்த வினையே போதும்!

கண்டவர்களை யெல்லாம் சீனாவுக்குச் செல்ல அநுமதிப்பதைக் காட்டிலும் ஸ்டானினை அழைத்து வந்து, 4 மாதத்துக்குப் பொதுவுடைமைப் பிரசாரஞ்செய்ய அநுமதிப்பதே சிறந்ததாகும்!

வேண்டாம், காந்தி சீடர்களே! சீனாவுக்கு யாரையும் அநுமதிக்க வேண்டாம்! உஷார்!

குத்தூசி குருசாமி (24-09-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It