மனித சமுதாயம் வளர்ச்சி யடைந்து கொண்டிருக்கிறது; முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றெல்லாம் பல அறிஞர்கள் கூறுகிறார்களல்லவா? இதைப் பற்றி சந்தேகப்படுகிறவர்கள் தமிழ் நாட்டைப் பார்த்தாலே போதும்! ஒரே ஒரு உதாரணம் மட்டும் கூறுகிறேன்.

10-15 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் நீங்களும் நானும் எத்தனையோ பொதுக் கூட்டங்களுக்கும் மகா நாடுகளுக்கும் போயிருக்கிறோம்; அவை களில் சிலவற்றிலாவது பிரசங்கமும் - அதிக (நேரப்) பிரசங்கமும் செய்திருப்போம். அப்போதெல்லாம் எவ்வளவு தொல்லை தெரியுமா? பேசுகிறவர்களும் கேட்பவர்களும் கூட்டம் அல்லது மாநாடு முடிகின்ற வரையில் இருந்தாக வேண்டும்! இல்லா விட்டால் பேசுகிறவர்களுக்குப் அவமானமாம்! கேட்பவர்களுக்கும் அவமானமாம்! எவ்வளவு பெரிய “நியூசென்ஸ்” பார்த்தீர்களா? நமக்குப் பிரியமானது, பிரியமில்லாதது - ஆகிய இரண்டையும் கேட்டுக்கொண்டே குரங்குபோல் குந்தியிருப்ப தென்றால், எப்படி முடியும்? சுத்த கர்நாடகப் பேர்வழிகள். அந்தக் காலத்து (15 ஆண்டுகளுக்கு முந்தி!) ஆசாமிகள்! மரியாதை ஒழுங்கு! - ஆகிய மூட நம்பிக்கைகளுக்கு அடிமைப்பட்டவர்கள்!

kuthoosi gurusamy 263இப்போதெல்லாம் அப்படியல்ல! எல்லாத் துறைகளிலும் மறுமலர்ச்சி! ஒரே மறுமலர்ச்சிதான்! அதாவது முதலில் மலர்ந்து, காய்ந்து போன பிறகு, அதே பூ மீண்டும் மலர்ந்தால் எப்படியோ, அதுபோல!

பழங்காலத்துப் பேச்சாளர்கள், “கேட்பாளர்கள்” யாராவது இருந்தால் அவர்களுக்காகவே சொல்கிறேன். இனிமேலும் நீங்கள் பழைய பஞ்சாங்கமாக இருத்தல் கூடாது! பொதுக் கூட்டத்துக்கோ, மாநாட்டுக்கோ சென்றால், பிரியப்பட்டபோது கேட்கவேண்டும்; மற்ற நேரத்தில் வெளியேறிவிட வேண்டும்! மீண்டும் திரும்பி வந்துகூட உட்காரலாம்! நம்மைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்ற எவர் பேசினாலும் கூச்சலிட வேண்டும்! கலாட்டா செய்ய வேண்டும்! ஏனென்றால் நம்மைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர் யார் பேசினாலும் அதில் உண்மையிருக்காது! எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும். . .!” என்றெல்லாம் பிரசங்கயார் தங்கள் பேச்சுக்கு ஆதரவாகக் கூறிக் கொள்வார்கள்! அதைப் பொருட்படுத்தவே கூடாது! இது மட்டுமல்ல-

“கேட்பாளர்கள்” எதற்கும் பயப்படவோ, வெட்கப்படவோ கூடாது. உதாரணமாக ஒரு சமீப நிகழ்ச்சியைப் பற்றிக் கூறுகிறேன்.-

சென்னைக் கடற்கரையில் - 2-3 லட்சம் மக்களைக் கொண்ட “ரிக்கார்டு” கூட்டம் ஒன்றுக்குப் போயிருந்தேன். மேடையின் ஒரு மூலைக் கம்பத்தில் இரண்டடி நீளமும் ஒன்றரையடி அகலமும் உள்ள ஒரு படம் போடப்பட்டிருந்தது. அந்தப் படத்திலுள்ள உலகப் பெரியாரின் மரணத்துக்காக அநுதாபம் தெரிவிக்கவே, அந்த மனித வெள்ளம் அங்குக் கூடியிருந்தது. சுமார் 5-6 பேச்சாளர்கள் பேசி முடித்தபிறகு ஒரு சினிமாக்கலை இளைஞர் பேச எழுந்தார்! அவருடைய முக தரிசனத்துக்காகவும் “க்ளோசப்”புக்காகவும் வீரத் தமிழ் இளைஞர்கள் சிலர் மேடையை நெருங்கினர். இன்னும் சிலர் தாங்கள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தபடியே மேற்படியாரைச் சரியாக தரிசனம் செய்ய முடியாத காரணத்தினால் மேற்படி படத்தை அவிழ்த்துவிடச் சொல்லிக் கூச்ச லிட்டனர்! ஆனால் கூட்டத்தின் நிர்வாகிகள் காதில் போட்டுக் கொள்ள வில்லை! நான் கேட்கிறேன்! எது முக்கியம்? படம் நாளைக்கு வரும்! மேற்படியார் முக தரிசனம் அவ்வளவு எளிதில் கிட்டுமா? உயிரற்ற படம் முக்கியமா? உயிரோடு காட்சியளிக்கின்ற கலைஞர் முக்கியமா?

இந்த மாதிரித் துணிவும் வீரமும், “கேட்பாளர்களுக்கு” இருந்தா லொழிய நம்மிடையே மறுமலர்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் கூற முடியாது!

இனி, அடுத்தபடியாகப் பேச்சாளர்களுக்கும் ஒரு புத்திமதி!

உங்களிடையிலும் முதிர்ந்த மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும்! அரை குறையாக இருக்கக் கூடாது! பொதுக்கூட்டத்துக்கோ, மாநாட்டுக்கோ, ஆண்டு விழாவுக்கோ - எதற்குப் பேசச் சென்றாலும் குறித்த நேரத்தில் போகவே கூடாது! எவ்வளவுக் கெவ்வளவு நேரங்கழித்துப் போகிறீர்களோ அவ்வளவுக் கவ்வளவு மறுமலர்ச்சி! கூட்டம் 6 மணிக்குத் துவங்குவதா யிருந்தால் 7 அல்லது 7.30 அல்லது 8 மணிக்குத் தான் போக வேண்டும்! அப்போதுதான் கூட்டத்தார் கை சிவக்கும்படியாகக் கைதட்டி வாழ்த்து ஒலி கிளப்பி, வரவேற்பார்கள்! இதைவிட முக்கியம், நீங்கள் மேடைக்குச் சென்றவுடனேயே உங்கள் மேளத்தைத் தட்டி விட வேண்டும்! இரண்டொருவர் பேசுகிற வரையில் கூடக் காத்துக் கொண்டிருக்கக் கூடாது!

இதை விட மகா முக்கியமானது ஒன்றுண்டு! கவனியுங்கள்! மேலும் முடித்தவுடனேயே “மற்றொரு கூட்டத்துக்குச் செல்ல வேண்டும்”, என்று கூறிவிட்டுப் புறப்பட்டு விட வேண்டும். இதனால் “ஒரே சமயத்தில் எத்தனை அலுவல்கள் இவருக்கு இருக்கின்றன, பார்!”, என்று மகாஜனங்கள் பேசிக் கொள்வார்களல்லவா, இவ்வாறு சொல்லிவிட்டு பிரியாணி ஹோட்டலுக்கோ அல்லது சினிமாவுக்கோ, அல்லது சீட்டு விளையாடவோ, அல்லத அரட்டைக் கச்சேரிக்கோ, அல்லது நாடகம் பார்க்கவோ, - சென்றாலுங் கூடப் பரவாயில்லை! “பேசி முடித்ததும் ஓட்டமெடுப்பதே பேச்சாளர்க்கழகு”- என்று மறு மலர்ச்சிப் புதுமொழியை மறக்கவே மறக்காதீர்கள்!

பொதுவாகச் சொல்கிறேன். வெள்ளைக்காரன் கற்றுக் கொடுத்த மரியாதை - ஒழுங்கு - நேர்மை - நாணயம் ஆகிய எந்தப் பீடையும் தமிழகத்திலே இனித் தலைகாட்டக் கூடாது! இவைகளை மண்டையிலடித்துக் கொல்ல வேண்டும்!

அத்தனையும் 1953 மாடல் மறுமலர்ச்சியாக இருக்க வேண்டும்! பத்தாம் பசலி - என்ற பெயரெடுக்க வேண்டாம், உஷார்!

குத்தூசி குருசாமி (26-3-1953)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It