சர்விஸ் கமிஷன் என்ற பெயராலும் ஆள்பொறுக்கும் கமிட்டி என்ற பெயராலும் அந்நாட்டிலுள்ள தேர்வு குழு “நிபுணர்கள்” மனித இனத்திலேயே ஒரு தனிரகம்! இவர்கள் தங்களைச் சகலகலாவல்லவர்கள் என்றே கருதி! கொண்டிருப்பவர்கள். அதாவது அய். சி. எஸ். உத்யோகஸ்தர்களைப் போல! அரசியல் தலைவர்களைப் போல! மந்திரிகளைப் போல பத்திரிகாசிரியர்களைப் போல! தங்களுக்குத் தெரியாத சங்கதி உலகத்திலேயே இல்லையென்பது இவர்கள் கருத்து! அவ்வளவு தலைக் கனம்! ஆனால் இவர்கள் எல்லோரையும் கேள்விகேட்டு மட்டந் தட்டுவதென்றால், ஒரு பள்ளிச் சிறுவன் கூடத் தன் பாடப் புத்தகத்தி லிருந்து கேட்டு 100க்கு 5 மார்க் கூடப் பெறமுடியாதபடி செய்துவிடுவான்.

kuthoosi gurusamy 268சென்ற ஆண்டில் ஒரு கல்லூரிப் பொருளாதார தலைமைப் பேராசிரியர் வேலைக்கு, பல பொருளாதார நிபுணர்கள் விண்ணப்பஞ் செய்தனர். எனவே சர்விஸ் கமிஷன் “பேட்டி” நடைபெற்றது. பல கேள்விகள் கேட்டனர். இறுதியில் யாரோ ஒருவர் (அதாவது தகுதி யற்றவர்) பொறுக்கி!யெடுக்கப்பட்டார். கேள்வி கேட்ட நிபுணர்களுக்கும் பொருளாதாரப் படிப்பு - ஆராய்ச்சிக்கும் வானத்துக்கும் தரைக்கும் உள்ள தூரம்! அதாவது வைர வியாபாரிகளின் திறமையைப் பரிட்சை செய்வதற்கு என்னை நியமித்தால் எப்படி யிருக்குமோ அதுபோல!

ஆனால் என்னைப் போன்ற சிட்டுக்குருவிகள் தலையில் இப்பேர்ப் பட்ட சிமெண்ட் மூட்டையைத் தூக்கி வைத்தால் எப்படிச் சமாளிப்பது என்பதும் தெரியும்! அதாவது சம்பந்தமற்ற கேள்விகளைக் கேட்டு மடக்கி விடுவேனாம்! உதாரணமாக, வைர வியாபாரிகளைப் பார்த்து, “வாய்க்குள் எத்தனை பற்கள் இருக்கின்றன?” - என்று கேட்டால், அவர்களால் என்ன

பதில் சொல்ல முடியும்? தேர்வுக்காரரின் கடைவாய்ப் பல்லில் ஒன்றையோ, இரண்டையோ நீக்கியிருந்தால் அவர்களால் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?

இந்த மாதரிக் கேள்விகள் அறிவு சூன்யத்துக்கு மட்டுமல்ல; அயோக்கியத்தனத்துக்குங் கூடப் பயன் படுவதுண்டு.

உதாரணம் தருகிறேன், படித்துப் பாருங்கள்:-

பொன்மலை ரயில்வே தொழிற் சாலையில் தொழிலாளர்களை ஒரு கிரேடிலிருந்து மேல் கிரேடுக்கு உயர்த்த வேண்டிய தேர்வுப் போட்டி நடைபெற்றதாம். அவரவர் எந்தத் தொழில் செய்கிறாரோ, அதில் அல்லவோ, கேள்வி கேட்க வேண்டும்? ஆனால் மேற்படித் தேர்வுப் “பன்னாடைகள்” எந்த மாதிரிக் கேள்விகள் கேட்டார்கள் தெரியுமா?

1. “நேருவின் சொந்த ஊர் எது?”

2. “கோபால்சாமி அய்யங்காருக்கு எத்தனை புத்திரர்கள் -புத்திரிகள்?”

3. சந்திரலேகா சினிமாப்படத்தில் நடித்த முக்கிய நடிகர் -நடிகைகள் யார்?”

- நல்ல வேளையாய்ப் போச்சு!

- ரயில்வே மானேஜரின் மனைவியாருக்குள்ள மொத்த புடவைகள் எத்தனை?

- ராஜேந்திர பிரசாத்துக்குள்ள மொத்தச் செருப்பு - பூட்ஸ் ஆகியவை எத்தனை ஜோடி?

- சென்னை முதலமைச்சரின் சொந்த பாங்கிக் கணக்கில் எத்தனை லட்ச ரூபாய் இருக்கிறது?

- “சுரண்டல் வெற்றி” என்ற மறுமலர்ச்சி சினிமாப் படத்தின் மூலம் பெரும் பணக்காரர் ஆனவர் யார், யார்?

-”ஹிந்து” ஆசிரியரின் சொந்த ஊருக்குத் தபால் ஆஃபீஸ் எது?-

இப்பேர்ப்பட்ட கேள்விகளைக் கேட்காமலிருந்தவர்களே! இனி அடுத்த தேர்வின்போது இப் “பன்னாடைகள்” (அதாவது வடி கட்டுகின்ற நிபுணர்கள்) எனக்கு முன் கூட்டியே எழுதினால், எல்லாத் தொழிலாளர்களையுமே திகைக்க வைக்கக் கூடிய மாதிரியில் நூற்றுக் கணக்கான புதுக் கேள்விகளை (மேற்கண்ட மாடலில்) எழுதியனுப்பி வைக்கிறேன் - இலவசமாக!

குத்தூசி குருசாமி (6-4-1953)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It