உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்கள் இப்போது பரவலாக அறியப்படுகின்றன, இந்தியாவும் கூட அதற்குள் சிக்குண்டிருக்கிறது. தொடர்ச்சியாகத் தண்ணீர்ப் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வரும் சென்னை, பல நேரங்களில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்படவும் செய்கிறது. ஏன், சவூதிப் பாலைவனங்கள் கூட திடீர் வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளன. பொறுப்பற்ற நவீனமயமாக்கல் அப்படிப்பட்ட சூழலுக்கான காரணங்களில் ஒன்றாகும். மார்க்சிய சூழலியல் உலகளாவிய இடதுசாரிப் பகுப்பாய்வின் அடித்தளத் தூண் ஆகும். முதலாளித்துவத்தின் கீழ் அதிகபட்ச இலாபத்திற்காக ஒருங்கிணைக்கப்படும் உற்பத்தி சக்திகள் உள்ளார்ந்த வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான இன்றியமையாத் தேவைக்கு எதிராக இருக்கின்றன என்பதைச் சீன அறிஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, 2000 ஆண்டு வாக்கில், ஹுவான் கிங்க்ஷி மற்றும் சீ பாவோஜுன் சூழலியல் தத்துவப் பார்வையிலிருந்து மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோரின் இயற்கை குறித்த கருத்துக்களுக்கு விளக்கமளிக்கும் படைப்புக்களை வெளியிட்டனர். இயற்கை குறித்த மார்க்சியப் பார்வை நடைமுறை சார்ந்தது, இயக்கவியல் சார்ந்தது, மற்றும் வரலாற்றுரீதியான பொருள்முதல்வாதம் சார்ந்தது, அது மனித வரலாறு மற்றும் சமூக வர்க்கப் பார்வையின் வழியாகச் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை கூர்ந்து ஆய்வு செய்கிறது என்று எடுத்துக்காட்டுவதை அவர்கள் குறிக்கோளாக் கொண்டிருந்தனர். அது சுற்றுச்சூழலையும் சமூக விடுதலையையும் ஒன்றிணைக்கிற, “சிவப்பு -- பச்சை” சிந்தனையை உள்ளடக்கியதோடு மனித நேயத்தை மையப்படுத்தி நீடித்து வளர்ச்சியைப் பரிந்துரைக்கிறது. “மூலதனத்தின் தர்க்கம் தான் சூழலியல் நெருக்கடிக்கான மூலக் காரணமாகும்” என்று அவர்கள் உறுதிபடக் கூறினார்கள்.
முற்றிலும் குறுகிய இலாப நோக்கம் பூமியின் இயற்கையான வளர்சிதை மாற்றம் மற்றும் சூழலியல் நீடித்த தன்மை ஆகியவற்றின் ஒழுங்கமைப்பை அலட்சியம் செய்கிறது. மூலதனத்தின் இலாபவேட்டையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தொலைநோக்கு அல்லது ஆழ்நோக்குக்கு இடமில்லை. செல்வம் குறித்த பயனீட்டுவாதப் பார்வையும் வாழ்க்கையின் நுகர்வோரிய முறையும் உள்ளார்ந்த வகையில் இயற்கையை, மூலதனத் திரட்சியின் ஒட்டுமொத்த நிகழ்ச்சிப் போக்குக்குள் வெறும் பயன்பாட்டுப் பொருளாகக் குறைக்கின்றன. மாறுபாட்டுக்கிடமின்றி உலகமயமாக்கப்பட்டுவிட்ட உலகில், மனித விடுதலை மற்றும் நீடித்த சூழலியல் பாதுகாப்பு ஆகிய குறிக்கோள்களுக்குப் பயன்படும் வகையில் மூலதனம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டியுள்ளது.
மார்க்சியச் சூழலியல்
மனிதத் தேவைகளுக்காக இயற்கை வழங்கும் வாய்ப்பு (வெளிப்புற மதிப்பு - extrinsic value) மற்றும் இயற்கையைச் சார்ந்திருக்கும் மனிதன் (உள்ளார்ந்த மதிப்பு - intrinsic value) ஆகியவற்றின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சூழலியல் மதிப்புக் கோட்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மார்க்சியச் சூழலியலில் அடங்கியுள்ளன.
மார்க்சிய சூழலியல் மூன்று தெளிவான அடிப்படைக் கூறுகளைக் கொண்டிருக்கிறது: (1) மனித இனம் மற்றும் இயற்கையின் ஒற்றுமையை வலியுறுத்தும் ‘மனிதமயமான இயற்கை’ (humanized nature) பற்றிய கருத்து; (2) மனித இனத்துக்கும் இயற்கைக்கும் இடையிலான அந்நியமாதல் குறித்துக் கவனம் செலுத்துகிற, முதலாளித்துவத்தின் மீதான கருத்துரை; (3) மனித இனத்துக்கும் இயற்கைக்கும் இடை- யிலான இணக்கத்தை உயர்த்திப்பிடிக்கிற கம்யூனிசப் புரட்சி குறித்த பார்வை.
“மனிதமயமான இயற்கை,” இயற்கையை மனித நடைமுறையால் வடிவமைக்கபட்ட ஓர் உற்பத்திப் பொருளாகப் பார்க்கிறது, அதன்மூலம் மனித இனம், இயற்கை சமுதாயம் ஆகிய மூன்றையும் ஒத்திசைவான ஒன்றிப்பாகக் கருதுதல். நவீன சமுதாயத்தில் சமூக உற்பத்தியை உழைப்பு மற்றும் இயற்கை மூலவளங்களின் அபகரிப்பாக மாற்றுவதே மூலதனத்தின் தர்க்கமாக உள்ளது. மார்க்சியக் கம்யூனிசப் புரட்சியின் பார்வையில், மனித இனத்துக்கும் இயற்கைக்கும் இடையிலான முரண்பாடுகளையும் மோதல்களையும் தீர்ப்பதற்காக அவற்றின் மீதான மூலதனத்தின் மேலாதிக்கத்தை ஒழிப்பதற்கு அழுத்தம் தரப்படுகிறது.
ஆகவே, ‘மார்க்சியச் சூழலியல்’, அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது: அது இயற்கை குறித்தது. இயற்கையின் விதிகளுக்கு மதிப்பளிப்பது குறித்தது. சமுதாயத்துக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான ஒத்திசைமிக்க இணக்கமான சமுதாயம் குறித்தது. சூழலியல் மற்றும் பொருளாதார நலன்களின் ஒருங்கிணைந்த மற்றும் நீடித்த வளர்ச்சியை உயர்த்திப்பிடிக்கிற பொருளாதாரம் குறித்தது. சுற்றுச்சூழல் நீதி மற்றும் மாற்றத்தில் பாட்டாளி வர்க்கத்தின் முக்கியப் பாத்திரத்துக்கு முன்னுரிமையளிக்கிற அரசியல் குறித்தது. சூழலியல் பகுத்தறிவு வளர்ச்சியையும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பகுத்தறிவை ஒழுங்குபடுத்துவதையும் குறிக்கோளாகக் கொண்ட கலாச்சாரம் குறித்த சூழலியல் பார்வையை உள்ளடக்கியதாகும். இவ்வகையில், சீனாவால் காட்சிப்படுத்தப்படுகிற மார்க்சியச் சூழலியல், உலகமயமாக்கப்பட்ட உலகின் சமகால மெய்நிலைமைகளுக்கு மிகவும் பொருந்திப் போகக்கூடியதாக இருக்கிறது. இது முதலாளித்துவத்துக்கு மாற்றாக சூழலியல் நாகரிகத்தின் மாற்றத்திற்கான உள்ளாற்றலை வலியுறுத்துகிறது, இவ்வாறாக, சோசலிச நவீனமயமாக்கல் இலக்குகளுடன் அணிசேர்கிற ஒரு கோட்பாட்டின் வளர்ச்சியைப் பரிந்துரைக்கிறது.
ஒட்டுமொத்த விமர்சனபூர்வ மார்க்சியச் சூழலியல் சட்டகத்தில் பின்வருவன உள்ளடங்கும்: (1) இயற்கைச் சூழலியல் அடிப்படைக் கூறுகள் மற்றும் சமூகப் பொருளாதார அடிப்படைக் கூறுகள் ஆகியவற்றின் இரட்டைநிலை ஒருமைக் கோட்பாடு (2) இயற்கைச் சூழலியல் உறவின் வரலாற்று விதிகளுக்கும் சமூகப் பொருளாதார இயங்காற்றலுக்கும் இடையிலான பரஸ்பரத் தொடர்பு குறித்துக் கூடுதல் அக்கறை கொள்ளும் வளர்சிதை மாற்றக் கோட்பாடு (3) சமூகப் பொருளாதார உற்பத்திக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையிலான பொருத்தப்பாட்டை வலியுறுத்தும் ஒருங்கிணைந்த உற்பத்திக் கோட்பாடு, (4) பொருளாதார உற்பத்தி சக்திகள் மற்றும் இயற்கை உற்பத்தி சக்திகளின் ஒற்றுமையை வலியுறுத்தும் பொதுவான உற்பத்தி சக்திகள் கோட்பாடு, (5) சமூகப் பொருளாதாரச் சுழற்சிகளுக்கும் இயற்கை சூழலியல் சுழற்சிகளுக்கும் இடை- யிலான பரஸ்பரத் தொடர்பை வலியுறுத்தும் பொருள் வகைச் சுழற்சிகள் (material cycles) கோட்பாடு, (6) சுற்றுச்சூழல் ரீதியாக நீடித்த வளர்ச்சியுடன் சமூகப் பொருளாதார வளர்ச்சியின் ஒன்றிணைப்பைப் பரிந்துரைக்கும் நீடித்த வளர்ச்சிக் கோட்பாடு, (7) பொருள்வகை அரசியல், பண்பாட்டு -அறநெறி, மற்றும் சூழலியல் நாகரிகங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சியை முன்னெடுக்கும் அனைத்தும் உள்ளடங்கிய நாகரிகக் கோட்பாடு.
சூழலியல் சோசலிசக் கருத்தாக்கங்கள் (எதிர்) சீனாவின் சூழலியல் மார்க்சியம்
சூழலியல் மார்க்சியத்தில் உலகளாவிய நிபுணரான மன்த்லி ரிவ்யூவின் ஆசிரியர் பேராசிரியர் பெல்லமி ஃபாஸ்டர் (socialistchina.org 18.10.2013 இல்) அதைக் குறித்து விவாதிக்கிறார். “சூழலியல் மார்க்சியம் என்ற சொல்லாக்கம் சீனாவில் பரவலாகப் பயன்படுத்தபடுகிறது, ஆனால் பிற பகுதிகளில் சூழலியல் சோசலிசம் என்ற சொல்லாக்கம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் புதிய இடதுசாரியாக உள்ள சூழலியல் சோசலிசத்தின் ஆதரவாளர்கள் 1980-&90 - களில், சோவியத் வீழ்ச்சியின் தாக்கத்தால் மார்க்ஸ் மற்றும் செவ்வியல் மார்க்சிய மரபைப் பெரிதும் விமர்சித்தனர், அவர்கள் சூழலியல் சோசலிசத்தை மைய மார்க்சிய மரபிலிருந்து விலக்கி வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.”
இருப்பினும், இப்படிப்பட்ட கருத்துக்கள் மார்க்சின் சொந்த சூழலியல் கருத்துரையைக் கண்டெடுப்பதில் ஈடுபட்டுள்ள பிற சூழலியல் சோசலிஸ்டுகளால் எதிர்க்கப்படுகின்றன. “மனிதர்களையும் விலங்குகளையும் இயந்திரகதியாகப் பிரிக்கும் கார்டீசியச் செயற்கை முறைமையை மார்க்ஸ் கடுமையாக விமர்சித்தார், மேலும் டார்வினிய பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை ஆதரித்தார். வெறுமனே நமது உற்பத்தி மூலமாக மட்டுல்ல அறிவார்ந்த வகையிலும் அழகியல் வகையிலும் கூட நாம் இயற்கையுடன் உறவுகொள்கிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்” என்று ஃபாஸ்டர் குறிப்பிடுகிறார். “பாரம்பரிய சீன நாகரிகத்துடனும் மார்க்சியத்துடனும் ஒத்திசைகிற வகையில், ‘அழகிய சீனா’ என்ற கருத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டிய தேவையை ஸி ஜின்பிங்கும் கூட உணர்ந்துள்ளார்” என்றும் ஃபாஸ்டர் கூறுகிறார்.
“ மார்க்ஸ் மற்றும் எங்கல்சைப் பொருத்தவரை, தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் வேலையிடங்களுக்குள் தொழிலாளர்களோடு மட்டும் கட்டுப்படுத்தப்படுவதில்லை, மாறாக தொழிலாளர் வர்க்கத்தின் ஒட்டுமொத்த பொருள்வகை இருத்தலின் எல்லை முழுவதுள்ளும் தெளிவாகத் தெரியக் கூடியவையாக இருக்கின்றன. வரலாற்றுப் பொருள்முதல்வாதம், பலநேரங்களில் வாழ்வின் விரிந்துபரந்த எல்லையை விட்டுவிட்டு, வரலாற்றுப் பொருளாதாரவாதம் என்று நாம் அழைப்பதற்குள் குறுக்கப்பட்டு விடுகிறது.”
வடக்கு உலகிற்கும் தெற்கு உலகிற்கும் இடையிலான முரண்பாட்டையும் கூட ஃபாஸ்டர் சேர்த்துக் கொள்கிறார். “இன்று தெற்கு உலகில் உணவும் நீரும் பற்றாக்குறையாக இருக்கிறது என்றால், இதற்கான முக்கியக் காரணி பொருளாதாரமா அல்லது சூழலியலா? உண்மை என்னவென்றால், மூலதனத்தின் கட்டமைப்பு நெருக்கடி, ஒன்றிணைந்த பொருளாதார மற்றும் சூழலியல் நெருக்கடி மற்றும் பேரழிவு ஆகியவற்றின் காரணமாக இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன.”
“சுற்றுச்சூழல் பாட்டாளி வர்க்கத்திடமிருந்து மாறுபட்ட பொருளாதாரப் பாட்டாளி வர்க்கம் பலநேரங்களில் தொழிற்சங்கங்கள் மற்றும் ஊதியங்களுக்கும் பயன்களுக்குமான போராட்டத்தின் தர்க்கத்தால் முடக்கப்படுகிறது.”
முதலாளித்துவ அமைப்பின் விளிம்பில் உள்ள தொழிலாளர்கள்தாம் ஏகாதிபத்தியத்தின் கூர்முனையை எதிர்கொண்டுள்ளார்கள்.. தெற்கு உலகில் உள்ள மிகவும் புரட்சிகரமான பாட்டாளி வர்க்கம் / விவசாய வர்க்கம்தான் தொடர்ச்சியாக வழிநடத்துகிறது. அதன் விளைவாக மிகவும் புரட்சிகரமான சுற்றுச்சூழல்- பாட்டாளி வர்க்கப் போராட்டங்களை ஒருவரால் இன்று காணமுடிகிறது.”
“தெற்கு உலகின் தொழிலாளர்களின் மிகவும் புரட்சிகரமான பண்பு குறித்த பிரச்சனையில், எந்தச் சிறிய சந்தேகமும் இருக்க முடியாது. முதலாளித்துவ அமைப்பின் விளிம்பில் உள்ள தொழிலாளர்கள் தாம் ஏகாதிபத்தியத்தின் கூர்முனையை எதிர்கொண்டுள்ளார்கள். மெய்யாகவே இந்தப் புரட்சிகள் அனைத்துமே வெற்றி பெற்றிருக்கவில்லைதான்.
சூழ்ந்துவரும் காலநிலைப் பேரழிவு அச்சுறுத்தலுக்கான வரலாற்றுப் பொறுப்பு ஏகாதிபத்திய நாடுகளிடம்தான் உள்ளது, சீனாவிடமோ அல்லது தெற்கு உலகின் பிற நாடுகளிடமோ இல்லை என்பதில் ஃபாஸ்டர் தெளிவாக இருக்கிறார். “2020 செப்டம்பரில் லான்செட் கோள்கள் நலம் வெளியிட்ட ஒரு முக்கியமான ஆய்வில், பல்வேறு நாடுகள் உண்மையில் வெளி- யிட வேண்டிய கரியமில வாயுவின் அளவிலிருந்து நடைமுறையில் அவை வெளியிட்ட பங்கினைக் கழித்துப் பார்ப்போமானால் வரலாற்று ரீதியாக எந்த நாடுகள் அதிகப்படியான அல்லது மிகையான கரியமில வாயுவை வெளியிட்டுள்ளன என்பதைத் தீர்மானிக்க முடியும் இதைச் சுட்டிக் காட்டிய நிபுணர் ஜேசன் ஹிக்கலை அவர் மேற்கோள் காட்டுகிறார்.. 2014 தரவுகளின் அடிப்படையில், வளிமண்டலத்தில் மிகுதியாக சேர்க்கப்பட்ட கரியமில வாயு முழுமையிலும் 40 விழுக்காடு அமெரிக்காவைச் சேர்ந்தது என்றும், 92 விழுக்காடு வடக்கு உலக பணக்கார நாடுகளைச் சேர்ந்தது என்றும் ஹிக்கல் எடுத்துக் காட்டியுள்ளார். இதற்கிடையில் சீனாவும் இந்தியாவும் கரியமில வாயுவை மிகையாக வெளியிடவில்லை. வடக்கு உலக நாடுகளின் கரியமில வாயு மிகை வெளியீடு, தெற்கு உலக நாடுகளுக்குக் காலநிலைக் கடனின் வடிவத்தில் மிகப்பெரிய அளவுக்கு சூழலியல் கடனாகக் கருதப்படும்.” (an enormous ecological debt in the form of a climate debt to the Global South)
“முதலாளித்துவத்திலிருந்து சோசலிசம் தோன்றுகிறது. அதனால் அதன் முரண்பாடுகள் பலவற்றாலும் உள்ளார்ந்த வகையில் பீடிக்கபட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக உலகப் பொருளாதாரம் முதலாளித்துவப் பொருளாதாரமாக இருக்கிறது, அதன் பொருள், ஏகாதிபத்தியத்தின் அனைத்து வகை நெருக்கடிகள் மட்டுமின்றி, சோசலிசநாடுகள் தம் மீது திணிக்கப்பட்டுள்ள எல்லா வகையான புறநிலை முரண்பாடுகளையும் கடந்து பயணிக்க வேண்டியுள்ளது” என்று ஃபாஸ்டர் குறிப்பிடுகிறார்.
இருந்தபோதிலும், சோசலிச (அல்லது புரட்சிக்குப் பிந்தைய) நாடுகளுக்கும் முதலாளித்துவ நாடுகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடு யாதெனில், அனைத்து வகையான புதிய வாய்ப்புக்களையும் திறந்துவிடும் உற்பத்தி குறித்த சமூக உறவுகளாகும். எடுத்துக்காட்டாக, சீனா, சூழலியல் பிரச்சனைகளால் சூழப்பட்டிருந்தாலும், வடக்கு உலகும், மேற்கு உலகும் நினைத்தும் பார்க்கவியலாத சூழலியல் மேலாண்மை மற்றும் திட்டமிடல் முறைகளை வளர்த்தெடுக்க முடிகிறது.”
ஃபாஸ்டர் மேலும் கூறுவதாவது: “சூழலியல் நாகரிகத்தைக் கட்டியமைக்கும் சீனாவின் அணுகுமுறை மேற்கு / வடக்கு உலகில் நிலவும் எந்த ஒன்றிலிருந்தும் புரட்சிகரமான முறையில் வேறுபடுகிறது. ஒட்டுமொத்த ‘வளர்ச்சி மாதிரியையும் / வாழ்க்கை முறையையும்’ மாற்றுவதுதான் இலக்கு என்பதை ஸீ (XI) தெளிவுபடுத்தியுள்ளார். இது வியக்கத்தக்க சாதனைகளை அடைந்து கொண்டிருக்கிறது.”
முன்னாள் ஐ.நா. சுற்றுச்சூழல் நிர்வாக இயக்குனர் எரிக் சோல்ஹீம் 21--/06/-2024 நாளிட்ட கட்டுரை ஒன்றில் பின்வருமாறு எழுதியுள்ளார்:
“சீனா இப்போது சுற்றுச்சூழல் பசுமைப் பிரிவுகள் அனைத்திலும் ஏறத்தாழ மேலாதிக்கத்தில் உள்ளது. சூரியஒளி, காற்று மற்றும் தொழில்நுட்பங்கள் மூலமாகவே 60 விழுக்காடு அல்லது அதற்கும் மேலாக உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சார கார்கள் மற்றும் மின்கலன்கள் கூட அவ்வாறே உற்பத்தி ஆகின்றன. பசுமைக்கு மாறிச் செல்வதில் சீனா இன்றியமையாத நாடாக உள்ளது.” பசுமைத் தொழில்நுட்பத்தில் சீனாவின் மேலாதிக்கத்துக்கு இட்டுச் சென்ற அர்ப்பணிப்பு மற்றும் முதலீடு, அளவு காலநிலை நெருக்கடியைச் சமாளிப்பதற்குத் தேவைப்படும் மிகச்சரியான அளவாக இருக்கிறது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார். (சீன நாளிதழ் 21-/06-/2024)
“தொடர்ந்து நிலக்கரியைச் சார்ந்திருக்கும் சீனாவின் தொழில்துறை வெறுமனே பொருளாதாரத்தை மட்டுமின்றி ஆற்றல் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டிருக்கிறது என்பது பெரியதோர் உண்மையாகும். சீனாவிடம் ஏராளமாக உள்ள ஒரே புதைபடிவ எரிபொருள் (Fossil fuel) நிலக்கரி ஆகும்.” “அமெரிக்கா சீனா மீது புதிய நெருக்கடிப் போரைத் தொடுத்துள்ளதன் மூலம் ஆற்றல் பாதுகாப்பு சீனாவுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக ஆகியிருக்கிறது. 2021 அக்டோபரில் ஆற்றிய உரை ஒன்றில் ஸீ குறிப்பிட்டது போல, சீனா ‘ஆற்றல் உணவுக் கொள்கலத்தைத் தனது சொந்தக் கரங்களில் வைத்திருக்க வேண்டும்.’ இந்த விடயத்தில், ஏகாதிபத்தியத்தின் ஒட்டுமொத்த வரலாற்றைக் குறித்தும் எவ்வாறு மேற்கத்திய வல்லரசுகள், மேற்கத்திய ‘பீரங்கிப்படகு’ தலையீடுகள் நடத்திய நூற்றாண்டில், சீனப் புரட்சியால் மட்டுமே முடிவுக்கு வந்த சமனற்ற உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்தி சீனா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன என்பது குறித்தும் பெய்ஜிங் மிகவும் விழிப்போடு இருக்கிறது” என்று ஃபாஸ்டர் கூறுகிறார்.
அவர் மேலும் கூறுவதாவது: “இன்னும், சீனாவில் வளர்த்தெடுக்கப்பட்ட சூழலியல் நாகரிகம் குறித்த கருத்து சீனச் சிறப்பியல்புகளுடன் கூடிய சூழலியல் மார்க்சியத்தின் ஒரு பகுதியாக வளர்தெடுக்கப்பட்டது. மேலும் சீனாவின் சொந்த வட்டார புரட்சிகர மரபிலிருந்தும் அதன் மூலம் பாரம்பரியமான சீனக் கலாச்சாரத்திலிருந்தும் வளர்தெடுக்கப்பட்டது என்றும் கூட நான் வாதிட்டேன். மாபெரும் மார்க்சிய அறிவியலாளரும் சீனவியல் வல்லுநருமான ‘சீனாவில் அறிவியலும் நாகரிகமும்’ என்ற பல்தொகுதி நூலின் ஆசிரியருமான ஜோசப் நீதாம் அவர்களின் படைப்பின் தாக்கத்துக்கு ஆட்பட்டேன்.”
சூழலியல் உலகளாவிய அரசியலிருந்து பிரிக்க முடியாததாகும்: அமெரிக்கா ஒற்றைத்துருவ உலகைக் குறித்து வலியுறுத்திக்கொண்டிருக்கிறது. சீனாவையும் இரசியாவையும் இலக்காகக் கொண்டு இராணுவ மண்டலங்களை ஊக்குவித்து வருகிறது, பிரிக்ஸ் (BRICS) மற்றும் எஸ்.சி.ஓ. (SCO) போன்ற உண்மையான பல்துருவ வளர்ச்சியை நிராகரித்து வருகிறது. இரசியா, சீனா மற்றும் அமெரிக்க மேலாதிக்கத்திற்குச் சவால் விடும் பிற அனைவர் மீதும் பொருளாதாரத் தடை விதிப்பதற்கு டாலரை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.
சூழலியல் நாகரிகம் குறித்த சீனாவின் கருத்தாக்கம்
2012 இல், சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் 18 வது பேராயம் “சூழலியல் நாகரிகம் குறித்த ஸி ஜின்பிங் சிந்தனை” கோட்பாட்டையும் நடைமுறையையும் தொகுத்தளித்தது. 2013 இல் ஸி கூறியதாவது: “தங்க மலைகளை மட்டுமல்ல பசுமை மலைகளையும் நாங்கள் பெற விரும்புகிறோம். இந்த இரண்டுக்கும் இடையில் நாங்கள் தெரிவு செய்ய வேண்டி- யிருந்தால், தங்கத்தை விட நாங்கள் பசுமையைத் தான் தெரிவு செய்வோம். எந்த நேர்விலும், பசுமை மலைகளே தங்கமலைகள்தாம்.” அது சோசலிசச் சூழலியல் நாகரிகக் கோட்பாட்டை மிகவும் பிரதிநிதித்துவப்படுத்தும் அறிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தக் கோட்பாட்டில், “தெளிவான நீர்நிலைகள் மற்றும் பசுமையான மலைகள் ஆகியன விலைமதிப்பற்ற சொத்துக்கள்” என்ற கூற்றில் மூன்று அடிப்படைக் கருத்துக்கள் அடங்கியுள்ளன. முதலாவது, மனித இனம் மற்றும் இயற்கையின் ஒத்திசைவான சகவாழ்வில் சூழலியல் முதன்மைக் கோட்பாட்டையே இந்தக் கூற்று உயர்த்திப் பிடிக்கிறது. இந்தக் கோட்பாடு மனிதச் செயல்பாடுகள், இயற்கை மூலவளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் வரம்புகளை மீறிச் செல்லக்கூடாது என்று ஆணையிடுகிறது.
அதற்குப் பதிலாக, இயற்கையை மீட்பதற்குப் போதுமான வெளியையும் காலத்தையும் மனிதர்கள் அனுமதிக்க வேண்டும், ஏனென்றால் இயற்கைக்கு இழைக்கப்படும் எந்தத் தீங்கும் இறுதியாக மனிதர்கள் மீதே திருப்பிவிடப்படும்.
இரண்டாவதாக, பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையிலான உறவைக் குறித்து அது இயக்கவியல் பார்வையைக் கடைபிடிக்கிறது. அது பொருளாதார வளர்ச்சியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒன்றையொன்று பரஸ்பரம் பலப்படுத்தி கொள்ளக்கூடிய நலமார்ந்த உறவை ஆதரிக்கிறது.
மூன்றாவது கருத்து இயற்கைச் செல்வத்தை, அறிவியல் மற்றும் பகுத்தறிவுரீதியாக பொருளாதார மற்றும் சமூக வளமையாக மாற்றியமைப்பதை வலியுறுத்துகிறது. நல்ல சூழலியல் சுற்றுச்சூழல் மனித இனத்தின் கூட்டுச் சொத்தாகும் என்பதையும், அதைப் பொருத்தமான நிலைமைகளில் மக்கள் வாழ்க்கையின் மேம்பாட்டுக்காகப் பாதுகாத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் ஒப்புக்கொள்கிறது. இயற்கை மற்றும் பொருளாதாரக் கோட்பாடுகளுடன் அணிசேர்கிற மாற்றத்திற்கான அறிவியல் பாதையை அடையாளப்படுத்த வேண்டியதே அதன் திறவுகோலாகும்.
****
பேச்சை விடச் செயலில் சீனா “அறிவியல் பூர்வமான நீடித்திருக்கக்கூடிய’ வளர்ச்சிக்கு மாறியுள்ளது. இதற்கு மேலும் அந்த வளர்ச்சி எந்த வகையிலும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்ல.
மின்சார வாகன வளர்ச்சியில் சீனாவின் வெற்றி, வெற்றிகரமான தொழில்துறைக் கொள்கையின் செவ்வியல் மாதிரியாகும் என்று மசாச்சூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அது 2001 இலேயே இந்தத் துறையில் முதலீடு செய்யத் தொடங்கியது. இதனால் மாசினைக் குறைப்பதிலும், எண்ணெய் இறக்குமதிகளைக் குறைப்பதிலும், மின்சார வாகனங்கள் பயன்மிக்க விளைவுகளைப் பெற்றிருக்கின்றன. இந்தத் தொடக்கநிலைத் தொழில்துறையில் சீனா மூல வளங்களைக் குவித்துள்ளது, குறிப்பாக, லித்தியம் அயர்ன் பாஸ்பேட் மின்கலன்களைத் தயாரிப்பது குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வகை மின்கலன்கள் லித்தியம் நிக்கல் மாங்கனீசு மின்கலன்களைவிடப் பாதுகாப்பானவை, மலிவானவையும் கூட. இரண்டிலும் ஆற்றலின் அடர்த்தியும் ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கிறது. அவர்கள் சுற்றுச்சூழலுக்கும் உதவக்கூடிய வகையில் பொதுப் போக்குவரத்துக்கு அதன் வாகனங்களை வாங்குவதன் மூலம் அந்தப் புதிய தொழில்துறைக்கான சந்தையை அமைத்துக் கொடுத்துள்ளனர்.
2023 இல், உலக அளவில் தூய தொழில்நுட்பத்துக்கு செலவழிக்கப்படும் மொத்தத் தொகையில், 676 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து, 38 விழுக்காட்டுக்கு சீனா பொறுப்பாக இருந்துள்ளது. கடந்த ஆண்டு, சீனா தூய ஆற்றல் தொழில்துறைகளில் 890 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது, மேலும் அது சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை ஆற்றல் மூலம் 300 ஜிகாவாட் மின் உற்பத்தியைச் சேர்த்துள்ளது.
சோசலிசச் சீனாவின் நண்பர்கள் இதழின் இணை ஆசிரியர் கார்லோஸ் மார்டினெஸ் 2024 நவம்பர் 14 அன்று பிரிட்டனில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய போது, ஒப்பீட்டுத் தரவுகள் குறித்த குறைபாடுகள் பற்றித் தனது பகுப்பாய்வில் குறிப்பிட்டார். மிகப்பெரிய அளவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடாக சீனா ஆகியுள்ளதன் அடிப்படையில் மேற்கில் காலநிலை நெருக்கடிக்கு சீனாவைக் குற்றம் சாட்டும் தற்போதைய போக்குக் குறித்து கார்லோஸ் விவாதிக்கிறார். சீனாவின் நபர்வாரி கரியமில வாயு வெளியேற்றம், அமெரிக்கா வெளியேற்றுவதில் பாதியளவுக்கு மட்டுமே இருக்கிறது என்றும், சீனா “உலகின் பணிமனை” என்றும், அது பெரும் கொள்ளளவிலான கரியமில வாயு வெளியற்றத்தை மேற்கிலிருந்து “இறக்குமதி” செய்துள்ளது என்றும், ஒட்டுமொத்த கரியமில வாயு வெளியேற்றத்தில் (தற்போது வளிமண்டலத்தில் உள்ள அதிகப்படியான கரியமில வாயுவை விட) மிகையான கரியமில வாயு வெளியேற்றத்துக்கு வட அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் தாம் பெரும் பங்குக்குப் பொறுப்பானவை என்றும் பல்வேறு குறைபாடுகளைக் கார்லோஸ் சுட்டிக்காட்டுகிறார்.
மேற்கின் வரலாற்று ரீதியான பொறுப்பைக் குறைத்துக் காட்டுவதற்கும், காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதற்கும் ஏழை நாடுகளுக்கு உதவும் உலக நிதிக்கு மேற்கின் அளவுக்கே வளரும் நாடான சீனாவையும் பங்களிக்கச் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதற்கும் சீனாவின் சுற்றுச்சூழல் பதிவு உள்நோக்கத்துடன் எதிர்மறையாகக் காட்டப்படுகிறது. “பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புக்கள் என்ற கோட்பாட்டுக்கு - அதாவது சர்வதேச சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள நிலைபாட்டுக்கு” இது தெளிவாகவே எதிராக இருக்கிறது.
கொள்கை வகுப்பது மற்றும் பொருளாதாரத் திட்டமிடலின் அனைத்து மட்டங்களிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, சூழலியல் நாகரிகத்தைப் பின்பற்றிச் செல்வதில் கடந்த 10-&20 ஆண்டுகளாக வியக்கத்தக்க முன்னேற்றத்தைச் சீனா அடைந்துள்ளதை கார்லோஸ் மார்டினெஸ் சிறப்பாக உயர்த்திக் காட்டுகிறார். அது ஏற்கெனவே 2030 இல் கட்டுப்படுத்தப்பட வேண்டிய கரியமில வாயு வெளியேற்ற உச்சகட்ட இலக்கை எட்டிவிட்டது என்பதை நம்பத்தகுந்த பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது. புதுப்பிக்கப்பட்ட ஆற்றல், மின்சாரப் போக்குவரத்து, பல்லுயிரினப் பாதுகாப்பு மற்றும் வனமயமாக்கல் ஆகியவற்றில் இதுவரை சீனாவே உலக அளவில் முன்னோடியாக இருக்கிறது. பசுமை ஆற்றலில் சீனாவின் புதுமைளும் முதலீடுகளும் உலக அளவிலான செலவினங்களை 80 விழுக்காடு அளவுக்கும் அதிகமாகக் குறைத்துள்ளது, மேலும் கச்சை மற்றும் சாலை (belt and road) முன்னெடுப்பு மூலமாகப் புதைபடிவ எரிபொருள் அடிப்படை- யிலான வளர்ச்சியைத் தாண்டிச் செல்வதற்குச் சீனா தெற்கு உலக நாடுகளுக்கு உதவிக்கொண்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக சீனாவில் வாழ்ந்துவருபவரும், கல்வித் துறையில் செயல்பட்டு வருபவரும், ஆங்கிலோ- சீன புரிதலுக்கான சங்கத்தின் தலைவருமான கிரிஷ் நாஷ் அவருடைய 75 ஆண்டுகள் முன்னேற்றம் (1949-2024) என்ற அண்மைக் கட்டுரையில் பின்வருமாறு எழுதுகிறார்:
பொருளாதார வளர்ச்சி, நீடித்த சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் சமநிலைப் படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நவீன காலகட்டத்தின் முக்கியப் படிப்பினைகளில் ஒன்றாகும். ஆழப்பதிந்துள்ள ‘ஒத்திசைவு’ குறித்த கலாச்சாரக் கருத்துக்களிலிருந்து எடுத்துக்கொண்டு, குணமாக்கும் மற்றும் நீடிக்கும் சூழலியல் கொள்கைகளைச் சீனா நாடு முழுவதிலும் ஆற்றல்மிக்க வகையில் பின்பற்றி வருகிறது”
“நீடித்த மற்றும் அறிவியல்பூர்வ வளர்ச்சிக்கு” மாறுதல்
2005 அக்டோபரில் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான 11 வது ஐந்தாண்டுத் திட்டத்தை நிறைவேற்றியது, அத்திட்டம், தங்குதடையற்ற மொத்த உள்நாட்டு வளர்ச்சி அடிப்படையில் (GDP) அல்லாமல், நீடித்த, அறிவியல்பூர்வ வளர்ச்சி அடிப்படையில் “ஒத்திசைவான சமுதாயத்தை” வாக்குறுதியாக அளித்தது. அதன் பொருள் நாங்கள் வளர்ச்சியின் வேகத்தைப் பற்றி மட்டுமல்லாமல், செலவினத்தையும் திறனையும் பற்றியும் பேசுகிறோம்” என்பதாகும்.
சில கவனிக்கத்தக்க நடவடிக்கைகள் பின்வருமாறு:
- கரியமில வாயு வெளியீட்டைக் குறைப்பது: சீனா அதன் கரியமில வாயு வெளியீட்டின் தீவிரத்தை 18.8 விழுக்காடு அளவுக்குக் குறைத்துள்ளது, மேலும் அதன் கரியமில வாயு வெளியீட்டு அளவை 2030 க்கு முன்னதாகவே அதிகபட்சமாகக் குறைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. மேலும் 2060 க்கு முன்னதாகக் கரியமிலவாயு சமநிலையை அடையத் திட்டமிட்டு வருகிறது.
- வனப் பகுதியை விரிவாக்குதல்: சீனா அதன் வனப்பகுதியை ஏறத்தாழ 23.4 விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளது.
- காற்றின் தரத்தை மேம்படுத்துதல்: சீனா மாசுகலந்த நீர்நிலைகளில் 98 விழுக்காடு வரை தூய்மைப்படுத்தியுள்ளது, மேலும் பல பெரிய நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்தியுள்ளது.
- தூய்மையான ஆற்றல் பயன்பாடு அதிகரித்தல்: தூய்மையான ஆற்றல் இப்போது சீனாவின் ஆற்றல் கலப்பில் 23.4 விழுக்காடாக உள்ளது.
- மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றுதலை அதிகரித்தல்: குவாங்டாங் மாகாணம் சீனாவில் மிகப்பெரிய மின்சார வாகன மின்னேற்ற வலைப்பின்னலைக் கொண்டதாக இருக்கிறது.
- கொள்கைகள் வகுத்தல்: சுற்றுச் சூழலையும் பல்லுயிரின வகைமையைப் பாதுகாப்பதற்கான கொள்கைகள், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை சீனா வகுத்துள்ளது.
- நீடித்த வளர்ச்சிக்கான ஆராய்ச்சியில் ஈடுபடுதல்: நீடித்த வளர்ச்சி குறித்த சீனாவின் ஆராய்ச்சி, மனிதன், சமுதாயம் மற்றும் இயற்கையின் கூட்டு ஆற்றலை மேம்படுத்துவது குறித்துக் கவனம் செலுத்துகிறது
- சீனாவின் நீடித்த வளர்ச்சிக்கான முயற்சிகள் 2030 க்கான ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கு ஒத்திசைவாக இருக்கின்றன.
முன்னாள் ஐ.நா. சுற்றுச்சூழல் நிர்வாக இயக்குனர் எரிக் சோல்ஹீமின் சொற்களுடன் முடித்துக் கொள்கிறோம். “பசுமைக்கு மாறிச் செல்வதில் உலகிலேயே சீனா இன்றியமையாத நாடாக இருக்கிறது” என்று அவர் சரியாகக் கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில் - இராமகிருஷ்ணன்
தமிழில்- நிழல்வண்ணன்
(இராமகிருஷ்ணன் - மார்க்சியச் செயல்பாட்டாளர்/ எழுத்தாளர். (Counter Currents இணைய இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுபவர்)