kuthoosi gurusamy 263ஒரு யானை கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு தெருவில் ஓடி வருகிறது! எதிரில் காண்பவர்களையெல்லாம் துதிக்கையினால் வளைத்து நிலத்திலடித்து ‘கோட்ஸே’ வேலை செய்கிறது! வண்டிகளையும், வீடுகளையும் மரங்களையும் நாசமாக்குகிறது!

இந்த யானையைக் கண்டு நாம் என்ன சொல்கிறோம்? அதற்கு “மதமப்பா, மதம்!” என்கிறோம்! யானைப்பாகனும் மற்ற அதிகாரிகளும் அதைப் பிடித்து அடக்குவதற்கு முயன்று பார்க்கிறார்கள். ஒன்றுமே முடியவில்லை யென்றால் இறுதியில் என்ன செய்கிறார்கள்? அதைக் சுட்டுக் கொன்று விடுகிறார்கள்!

சமயக் கொள்கைக்கு மதம் என்று நல்ல பெயர் வைத்தார்களய்யா! மனிதனுக்கும் திடீரென்று மதம் பிடித்து விடுகிறதே! அருமையான பெயர்!

காந்தியாரைச் சுட்டுக் கொன்றானே கோட்ஸே; அவனுக்குப் பிடித்ததும் இதே மதந்தான்!

ஆரிய சமாஜத் தலைவரான சுவாமி சிரத்தானந்தாவைக் குத்திக் கொன்றானே ஒரு முஸ்லிம்; அவனுக்குப் பிடித்திருந்ததும் இதே மதந்தான்!

கிரீஸ் நாட்டுத் தத்துவ ஞானியான சாக்ரட்டீசுக்கு விஷங் கொடுத்துக் கொன்றார்களே; அவர்களுக்குப் பிடித்திருந்ததும் இதே மதந்தான்!

மதயானை மாதிரியே மதமனிதர்களும் உண்டு; மேற்படியார்கள்!

இந்த இரண்டு பிராணிகளுக்குமுள்ள வேற்றுமை இதுதான்! ஒன்று நான்கு கால் பிராணி; துதிக்கையுடையது! மற்றொன்று இரண்டு கால் பிராணி; துதிக்கைக்குப் பதிலாக வலக்கை - இடக்கை ஆகிய இரு கைகளையுடையது.

டில்லியில் ஒரு காட்சி! இந்து மதப் பெண்ணான ராஜ சர்மாவுக்கும், முஸ்லிம் இளைஞனான சிக்கந்தர் பகத் என்பவருக்கும் கலப்புத் திருமணம் நடத்த ஏற்பாடாகி யிருந்ததாம்! இதைத் தடுப்பதற்காக பெண்ணின் தகப்பனார் நீதிபதியிடம் மனுச் செய்து கொண்டாராம்! தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டதாம்! இது தவிர இந்து மகா சபைத் தலைவர்களிற் சிலர் இத்திருமணத்தை எதிர்த்து நீதிமன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டஞ் செய்தார்களாம்! இவர்களைக் கைது செய்திருக்கிறார்களாம்! இதுவரையில் 32 பேர் கைது செய்யப் பட்டிருக்கிறார்களாம்! டில்லி நகரில் அமளிதுமளியா யிருக்கிறதாம்!

வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இரண்டு பேர் ஒருவரை யொருவர் காதலித்துத் திருமணஞ் செய்து கொள்ள முடியவில்லை, பார்த்தீர்களா! ஓ! மதவாதிகளே! அதாவது மதம் பிடித்தவர்களே! பார்த்தீர்களா, உங்கள் மதத்தை?

“எல்லா மதங்களும் ஒரே கடவுளைத்தான் காட்டுகின்றன” -  என்கிறான், ஆஸ்திக சிகாமணி!

ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறதப்பா?

ஒருவன் கடவுளுக்கு இன்னொருவன் கடவுள் நேர்விரோதியப்பா! ஒரு மதத்துக்காரரை இன்னொரு மதத்துக்காரன் தன்னோடு சேர்ந்து வணங்குவதற்கு ஒப்புக் கொள்கிறானா?

அடேயப்பா! பெட்ரோல் பக்கத்தில் தீப்பந்தத்தைப் பிடிப்பது போலத்தானே நினைக்கிறான்?

ஒரே கடவுளாம்! புடலங்காயமாம்! சர்வமத சம்மதமாம்! சுண்டைக்காய் சாம்பாராம்!

“மதமென்ற பேய் பிடியாதிருக்க வேண்டும்” - என்றாரே ஒரு தமிழர்!

அதுகூட அவ்வளவு சரியல்ல! ஏனென்றால் “பேய்” என்பது ஒரு கற்பனை.

மதம் என்ற ‘மதம்’ பிடியாதிருக்க வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும்!

டில்லியில் நடக்கின்ற அமளி பீஷ்வா ஆட்சியிலல்ல! நேரு ஆட்சியில் தான் மதச்சார்பற்ற - சோமநாதபுரம் கும்பாபிஷேக - ஹரித்வார் கும்பமேளா - போஷக ராஜ்யத்திலே தான்!

மணமக்களுக்குக் குறுக்கே மதம் என்ற மலைப் பாம்பு! பஜகோவிந்தம் பாடுவதன் பயனப்பா அது! ராமாயண - பகவத்கீதா பிராசாரத்தின் விளைவப்பா அது!

மதமப்பா அது - மதம்! திடீரென்று யானைக்கு வருகிறதே, அந்த மதமப்பா, அது!

மதம் பிடித்த யானையின் செய்கை சட்ட விரோதம்! ஆனால் மதம் பிடித்த மனிதன் மட்டும் பெரிய மனுஷன்! மந்திரி! நீதிபதி! வக்கீல்! டாக்டர்! அவர்! இவர்! சுவர்!

மதம் பிடித்த யானைக்கு மட்டும் துப்பாக்கி!

மதம் பிடித்த மனிதனுக்கு மட்டும் மாலை!

மக்களை மதம் பிடிக்கச் செய்வதற்காக எத்தனை கோவில்கள்! எத்தனை தொழுகையிடங்கள்! எத்தனை நூல்கள்! எத்தனை பண்டிகைகள்! எவ்வளவு பணம் எவ்வளவு நேரம்!

கிறுக்குப் பிடிப்பதற்காகவே ஒரு காலேஜ் நடத்துவது போல! காச நோயைப் பரப்புவதற்காகவே ஒரு உணவுச் சாலையை நடத்துவது போல! காலராவைப் பரப்புவதற்காகவே ஒரு கண்காட்சி நடத்துவதுபோல!

- குத்தூசி குருசாமி (28-05-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It