படித்துப் பாருங்களேன்...

மௌனத்தின் மறுபக்கம்

இந்தியப் பிரிவினையின் குரல்களிலிருந்து

ஊர்வசி புதாலியா (2017)

The Other Side Of Silence, Voices from the Partition Of India, Urvashi Butalia (2017) Penguin Books

இந்தியாவை ஆண்ட மன்னர்கள், குறுநிலமன்னர்கள், பாளையக்காரர்கள், ஜமிந்தார்கள் எனப் பல்வேறு பெயர்களில் ஆட்சிபுரிந்த ஆட்சியாளர்களும், அவர்களை அடுத்திருந்த உயர் அதிகார வர்க்கத்தினர், அண்டிவாழ்ந்த ஜாகிர்தார்கள், பெருநிலக்கிழார்கள் ஆகியோரும் தம் ஆளுகையின் கீழ் இருந்த குடிமக்களின் மீது பல்வேறு ஒடுக்குமுறைகளை இழைத்து வந்தனர் என்பதை வரலாறு பதிவுசெய்துள்ளது. இவற்றை நிலமானியச் சமூகக் கொடுமைகள் என்ற ஒரே சொல்லில் அடக்கிவிடலாம். இக் கொடுமைகளில் ஒன்று பாலியல் வன்முறை.இதை எதிர்கொள்ள முடியாத நிலையில் இடப் பெயர்ச்சியை பெண்ணின் குடும்பத்தினரும் சாதியினரும் மேற்கொண்டனர். தற்கொலையை ஒரு வழிமுறையாகப் பெண்கள் சிலர் மேற்கொண்டு தம்மை விடுவித்துக் கொண்டுள்ளனர். சில நேரங்களில் குடும்ப அல்லது குலமானம் காத்தல் என்பதன் பெயரால் தந்தையாலும், உடன்பிறந்த அண்ணன்களாலும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான செய்திகளை இந்தியாவின் உண்மையான சமூக வரலாற்றில் பரவலாகக் காண முடியும்.

india partitionஇந்த இதழில் அறிமுகம் செய்யப்படும் இந்நூல் ஆட்சியாளர்கள் அல்லது அவர்களைச் சார்ந்தோரால் அன்றி தம்மைப் போன்ற தம்முடன் வாழ்ந்த சக மனிதர்களால் பாலியல் வன்முறைக்கும் பல நேரங்களில் கூட்டு வன்புணர்ச்சிக்கும் ஆளாக்கப்பட்ட பெண்களின் துயர வரலாற்றைப் பதிவு செய்துள்ளது. இச்செயலை மேற்கொண்டோரில் பலர் அப் பெண்கள் வாழ்ந்த ஊர் அல்லது அண்டை ஊரைச் சார்ந்தவர்கள்தாம். இவர்களை இயக்கியது முறையற்ற பாலியல் வேட்கை என்பதைவிட மதம் என்ற அபினி தந்த போதைதான். இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகளின் சமூக வரலாற்றில் ஓர் இருண்ட பக்கமாக இந் நிகழ்வுகள் இடம் பெற்றுவிட்டன. இக் கடந்தகால நிகழ்வுகளின் ஒரு பகுதியே இந்நூலில் பதிவாகியுள்ளது. இவ்வகையில் ஓர் எழுத்தாவணமாக இந் நூலைக் கொள்ளலாம். ஏன் எனில் இந் நூல் ஒரு கற்பனைப் படைப்பல்ல. அதே நேரத்தில் இதில் பதிவாகியுள்ள உண்மைகள் எழுத்தாவணமாகப் பதியப்படாதவை என்னும் போது நூலாசிரியர் இத்தரவுகளை எங்கிருந்து அல்லது யாரிடமிருந்து பெற்றார் என்ற வினா எழுவது இயற்கை.

இதற்கான விடையை நூலின் தொடக்கத்திலேயே நூலாசிரியர் விரிவாகத் தந்துள்ளார். இவர் பின்பற்றிய முறையியலாக அமைவது வாய்மொழி வரலாறு என்ற வரலாற்று வகைமையாகும் என்ற உண்மையை அவர் வெளிப்படுத்தி உள்ளார். வாய்மொழி வரலாற்றின் வெற்றிக்கு அடிப்படையாக அமைவது களத்தையும் தகவலாளரையும் சரியான முறையில் தேர்வு செய்து அவர்களிடம் நேர்காணல் நிகழ்த்துவது. இதன்வழியாகக் கிடைக்கும் செய்திகளை ஆராய்ந்து பதிவிடலே நூலின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதாக அமையும்.

இந்தியாவின் துயரமான வரலாற்று நிகழ்வாக அமைவது இந்திய விடுதலையுடன் நிகழ்ந்த நாட்டுப்பிரிவினை. இதையொட்டி நிகழ்ந்த கொடூரங்களை இன்று மீண்டும் நினைவு கூர்வதன் அவசியம் குறித்து ஒருவரின் சார்பு நிலைக்கேற்ப பலவிதமான விளக்கங்களும் விடைகளும் கிடைக்கலாம் (மதம் என்ற அபினியை உட்கொண்ட அளவிற்கேற்ப விடைகள் வேறுபடும்தான்). அத்துடன் நாம் எதிர்பார்த்திராத விடைகளும் கூடக் கிடைக்கும். சான்றாக நேர்காணல் ஒன்றின் போது இந் நூலாசிரியர் கேட்டறிந்த செய்தி ஒன்றைக் குறிப்பிடலாம்.

பஞ்சாபில் உள்ள சிறு நகரங்களில் ஒன்று தினாநகர். பஞ்சாப் மாநிலத்தில் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்நகரின் கல்லூரி ஒன்றில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றிய மாயாராணி என்பவரைச் சந்தித்து பிரிவினையின்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்துக் கூறும்படி நூலாசிரியர் கேட்டுள்ளார். அதன்படி அவர் கூறிய தன்னனுபவங்கள் வேறுபாடான ஒன்றாக இருந்தன.

இந்திய நாட்டுப் பிரிவினையின் போது எந்த நாட்டுடன் தினாநகர் இணைக்கப்படும் என்பது குறித்த உறுதியான நிலைப்பாடு எதுவும் எடுக்கப்படாதிருந்தது. எனவே, இது வதந்திகளுக்கு வித்திட்டது. இந்துக்களும் இஸ்லாமியரும் ஒருவர் மீது மற்றொருவர் கொண்ட அச்சத்தில் வீடுகளைக் கைவிட்டு வெளியேறினர். அவர்கள் வெளியேறியதும் மாயாராணியும் அவரது நண்பர்களும் ஆள் இல்லாத வீடுகளுக்குள் நுழைந்து எவற்றை எல்லாம் எடுத்து வரமுடியுமோ அவற்றை எல்லாம் எடுத்து வந்தனர். மாயாராணி அங்கிருந்த அணிகலன்கள், உணவுப் பொருட்கள், பாத்திரங்கள் ஆகியவற்றுடன் வேறு பொருட்களையும் எடுத்து வந்துள்ளார். அவளுடைய சிறிய அறையில் இருந்த பித்தளைப் பாத்திரங்களையும் தங்க வளையல்களையும் நூலாசிரியருக்குக் காட்டியுமுள்ளார். அவரும் அவரது நண்பர்களும் கும்பல் வன்முறையில் இருந்து எவ்வாறு தப்பிப் பிழைத்தார்கள் என்ற வினாவை வியப்புடன் எழுப்பிய நூலாசிரியருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அவர் இவ்வாறு விடையளித்தார்:

‘நாங்கள் இஸ்லாமியர்களும் அல்ல இந்துக்களும் அல்ல. நாங்கள் ஹரிஜனங்கள்*' (பட்டியல் சாதியினர்).

பிரிவினை தொடர்பான மக்கள் வரலாறைத் தேடிக் கொண்டிருந்த நூலாசிரியருக்கு, சாதி, வர்க்கம், வாழும் வட்டாரம், மதம், சிறுபான்மைத் தகுதி, பால்நிலை என்பனவற்றால் வரலாறு வேறுபடும் என்ற உண்மையை இவ்விடை புலப்படுத்தியுள்ளது. முன்னுரிமை பெற்றுள்ள இந்துக்களுக்கும் மற்றமையோராக விளங்கும் இந்துக்களுக்கும் இடையே வேறுபாடுண்டு. எனவே, இந்தியப் பிரிவினை வரலாற்றை சாதியக் கண்ணாடி வழியாகப் பார்ப்பது அவசியமாகிறது. இந்தியப் பிரிவினை குறித்த வரலாற்றாய்வில் இது கணக்கில் எடுத்துக் கொள்ளைப்படவில்லை. மக்கள் எதிர் கொண்ட வன்முறை, சாதி அடிப்படையில் வெவ்வேறாக இருந்துள்ளதா? எவ்வகையில் அவர்கள் குடியமர்த்தப் பட்டார்கள் என்பது குறித்தும் பெரிய அளவில் ஆராயப்படவில்லை. இந்தியப் பிரிவினை குறித்த வரலாற்றாய்வில் பாலியல் நிலையானது மறப்பதற்கு இயலாத ஒன்றாகும். அதே நேரத்தில் இதை நினைவு கூர்வது என்பது ஆபத்தானதாகவும் உள்ளது.

“இந்தியப் பிரிவினையின் வரலாறென்பது பெண்களின் உடல் மீதும் உள்ளத்தின் மீதும் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்களின் வரலாறுதான்.” வன்புணர்ச்சி, கடத்திச் செல்லுதல், கட்டாயத் திருமணம், பாலியல் தொழிலுக்கு விற்றுவிடல் என்பனவற்றை இது உள்ளடக்கியது.

கோலோ கலாசா

பாகிஸ்தானில் உள்ள ஒரு சிறிய கிராமம் கோலோ கலாசா. சீக்கியர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இங்கு வாழ்ந்து வந்தனர். இந்தியப் பிரிவினையை ஒட்டி நீண்டநாட்களாக இக் கிராமம் இஸ்லாமியர்களின் தாக்குதலுக்கு ஆளாகும் அச்சத்திற்கு ஆட்பட்டிருந்தது. அது நடந்தே தீரும் என்பது உறுதிப்பட்டவுடன் அங்கு வாழ்ந்து வந்த சீக்கியர்கள் அங்குள்ள குருத்துவாராவில் கூடி வழிபாட்டை நடத்தினார்கள். பின்னர் அங்கிருந்த முதிய ஆண்களும் பெண்களும் கூடி ஒரு முடிவெடுத்தார்கள். அயற்சமயத்தினரின் பாலியல் வன்முறைக்கு ஆளாவதைத் தவிர்க்கும் வழிமுறையாகத் தம் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்பது அம் முடிவாக இருந்தது.

இதனை அடுத்து சமய மந்திரங்களைக் கூட்டாக ஓதி முடித்தவுடன் வழிபாடு நடந்தது. வழிபாடு முடிந்ததும் இம் முடிவு அறிவிக்கப் பட்டது. எண்பது அல்லது தொண்ணூறு பெண்கள் அக் கிராமத்தின் கிணறை நோக்கி அணிவகுத்துச் சென்று அதில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியைக் கூறிய பெண்ணும் இவர்களில் ஒருவர்தான். ஆனால் கிணற்றில் குதித்த பெண்களின் எண்ணிக்கையால் கிணறு நிரம்பிவிட்டதால் இவர் உயிர் பிழைத்து விட்டார். மரியாதைக்குரிய இறப்பிலிருந்து தப்பிய குற்ற உணர்வு இவரிடம் குடிகொண்டிருந்ததாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குடும்பத்தின் சொத்தாகவும் ஒரு சமூகத்தின் சொத்தாகவும் பெண்கள் பார்க்கப்பட்டமையால் பாதுகாப்பு, பெருமிதம், புனிதம் என்ற பெயர்களால் பெண்கள் மீது இத்தகைய வன்முறைகள் மத அடிப்படை வாதிகளால் ஏவப்பட்டு இன்று பெருமிதக் கொலைகளாகப் போற்றப்படுகின்றன என்று கருத்துரைக்கும் நூலாசிரியர், பெண்களின் தற்கொலை என்பது எவ்வகையில் தன்னிச்சையான முடிவு என்ற வினாவை எழுப்பியுள்ளார். ஆம். இது ஒருவகையில் சொந்த சமூகத்தால் ஏவப்பட்ட வன்முறை.

நூலின் முன்னுரையில் இடம் பெற்றுள்ள இச் சுருக்கமான எடுத்துக்காட்டைவிட விரிவான துயர அனுபவங்கள் இரண்டாவது இயலிலும் நான்காவது இயலில் இருந்து ஏழாவது இயல்முடிய மொத்தம் ஐந்து இயல்களிலும் இடம் பெற்றுள்ளன. ‘தொடக்கத்தில்’ என்ற தலைப்பிலான முதல் இயலில் இந்தியப் பிரிவினை குறித்த சில பொதுவான செய்திகளையும், பிரிவினையின் கொடூரத்திற்கு ஆளான பெண்களிடம் நிகழ்த்திய நேர்காணல் குறித்தும் அவர்களிடம் விளக்கியுள்ளார். வாய்மொழி வரலாற்றில் ஈடுபாடு கொண்டோருக்கு உதவும் தன்மை இதில் உள்ளது. அத்துடன் விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் நிகழ்ந்த கலக நிகழ்வுகளையும் பங்களாதேஷ் மக்களின் இந்தியாவை நோக்கிய இடப் பெயர்ச்சி குறித்தும் கூறியுள்ளார்.வாய்மொழி வழக்காறுகளைச் சேகரித்தமை குறித்தும் மூன்றாவது இயலான ‘உண்மைகள்’ பல்வேறு வகையான உண்மைகளை குறிப்பாக அரசியல் சார்ந்த உண்மைகளை அம்பலப்படுத்தி உள்ளது. இந்தியப் பிரிவினை ஜூன் 1947இல் அறிவிக்கப்பட்டபோது அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஏராளமான கடிதங்கள் மக்களிடம் இருந்து சென்றன. என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் அச்சம் கலந்த வேட்கை அதில் மேலோங்கி இருந்தது.

இந்தியா பிரிக்கப்பட்டால் நாங்கள் எங்கே போவோம்? எப்படிப் போவோம்? எங்கள் வேலை என்னாகும்? புதிய தாய்நாட்டில் நாங்கள் இதுவரை பார்த்து வந்த வேலை கிடைக்குமா? நாங்கள் இடம் பெயர்ந்தால் எங்கள் வீடுகளும் நிலங்களும் என்னாகும்? என்ற வினாக்கள் எழுப்பப்பட்டன.

14 மே 1947இல் ஜே.பி.கிருபளானி எழுதிய கடிதத்தில் இதே தன்மையிலான வினாக்கள் சற்றுக் கடுமையான முறையில் இடம் பெற்றிருந்தன. அவர் எழுதிய இக் கடிதம் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

18 ஜூலை 1947இல் இந்தியா, பாகிஸ்தான் குறித்த பிரிவினைத் திட்டம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. இதில் பிரிவினை குறித்து எழும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையில் பத்து வல்லுநர் குழுக்கள் இடம் பெற்றிருந்தன. அக்குழுக்களின் பெயர்களைப் பட்டியலிட்டுக் காட்டும் ஆசிரியர் மக்களின் இடப்பெயர்ச்சி, அவர்களின் உயிரைப் பாதுகாப்பது தொடர்பான குழுக்கள் எவையும் அமைக்கப்படாததைச் சுட்டிக் காட்டுகிறார். இது ஆங்கில அரசின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.

ஸெய்னப் பூட்டாசிங்

‘பெண்கள்’ என்ற தலைப்பிலான நான்காவது இயலில் இடம் பெற்றுள்ள கதைகளில் ஒன்று ஸெய்னப் பூட்டாசிங் என்ற இருவரின் அவலம் மிகுந்த காதல் கதை.

ஸெய்னப் என்ற இஸ்லாமிய இளம் பெண் இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் இருந்து தன் குடும்பத்தாருடன் பாகிஸ்தானுக்கு இடம் பெயரும் போது கடத்திச் செல்லப்பட்டாள். அவளைக் கடத்தியவர்கள் யார் என்பதும் எத்தனை கடத்தல்காரர்களைக் கடந்து வந்தாள் என்பதும் யாருக்கும் தெரியாது. இறுதியாக அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பூட்டாசிங் என்பவரிடம் ஸெய்னப் விற்கப்பட்டார். ஜாட் சமூகத்தவரான பூட்டாசிங் திருமணம் ஆகாதவர்.

இத்திருமண உறவில் மணமகளான ஸெய்னப் விலைக்கு வாங்கப்பட்டவர் என்றாலும் இவர்கள் இருவருக்கும் இடையே அன்பான உறவு நிலவியது. இவர்களுக்கு இரு குழந்தைகளும் பிறந்தன.

the other side of silenceஸெய்னப்பின் குடும்பத்தார் ஸெய்னப்பைத் தேடிக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக அவரைக் கண்டுபிடித்து அழைத்துச் செல்ல வந்துவிட்டனர் . சட்டப்படி அவள் பாகிஸ்தான் வாசி. எனவே அவர்களுடன் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. சிறு குழந்தையாக இருந்த இரண்டாவது குழந்தையைச் சுமந்தவாறும் சிறிதளவு ஆடைகள் அடங்கிய சுமையைச் சுமந்தவாறும் ஸெய்னப் வீட்டைவிட்டு வெளியேறினார். இதைக் காண அக் கிராம மக்களும் செய்தி ஊடகத்தினரும் திரண்டு நின்றனர். வெளியில் நின்ற ஜீப்பில் ஏறி அமர்ந்ததும் பூட்டாசிங் பக்கம் திரும்பி தன் மூத்தமகளைச் சுட்டிக்காட்டி “இந்தப் பெண்பிள்ளையைக் கவனித்துக் கொள்! கவலைப்படாதே! நான் விரைவில் திரும்பிவிடுவேன்!" என்று கூறியுள்ளார்.

ஸெய்னப் பூட்டாசிங்குடன் வாழ்ந்து கொண்டிருப்பதை பூட்டாசிங்கின் தம்பி அல்லது மைத்துனர்கள்தான் ஸெய்னப்பின் குடும்பத்தினருக்குத் தெரிவித்திருக்கவேண்டும் என்ற ஐயப்பாடு இருந்துள்ளது. பூட்டாசிங்கின் குடும்பச் சொத்தைப் பகிரும் போது அவரது இரு குழந்தைகளுக்கும் பங்கு கொடுத்தாக வேண்டும். இதனால் சொத்தில் உறவினர்களது பங்கின் அளவு குறைந்துவிடும். இத்தகைய எண்ணப்போக்குடைய உறவினர்களால் சில பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்கிறார் ஆசிரியர்.

ஸெய்னப்பை பூட்டாசிங்கிடம் இருந்து பிரித்து அனுப்பியதில் சொத்தின் பங்களிப்பு இருந்ததைப் போன்றே அவளை அழைத்துச் சென்றதிலும் சொத்துரிமை வேட்கையின் பங்களிப்பு இருந்துள்ளது. கலவரத்தில் அவளது பெற்றோர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். இந்தியப் பகுதியில் அவர்கள் கைவிட்டுப் போன நிலத்திற்கு இழப்பீடாக பாகிஸ்தானில் அவர்களது குடும்பத்திற்கு நிலம் வழங்கப்பட்டிருந்தது. ஸெய்னப்பும் அவளது சகோதரியும் தந்தைக்கான நிலத்தைப் பகிர்ந்து கொண்டனர். அதன் பக்கத்திலேயே அவர்களது சித்தப்பாவிற்கும் நிலம் வழங்கப்பட்டிருந்தது. தன் மகனுக்கு ஸெய்னப்பைத் திருமணம் செய்வித்து. அவளுக்குரிய நிலத்தையும் தன் நிலத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவளது சித்தப்பாவின் திட்டமாக இருந்தது.

ஆனால், அவரது மகனுக்கு இத்திருமணத்தில் ஆர்வம் இல்லை. ஒரு சீக்கியருடன் பல வருடங்கள் வாழ்ந்த ஒரு பெண்ணை மணம் புரிந்து கொள்ள அவன் விரும்பவில்லை. சிலகாலம் கழித்து திருமணம் செய்துகொள்ளுமாறு ஸெய்னப்பிற்கு நெருக்கடி தரப்படுகிறது என்ற செய்தி பூட்டாசிங்கிற்குக் கிடைத்தது. இதன் அடிப்படையிலேயே ஸெய்னப்பை இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அழைத்துவருவதில் ஆர்வம் காட்டினார் என்ற வதந்தியும் உண்டு.

இதே நேரத்தில் இச்சிக்கலைத் தீர்க்கப் பல்வேறு வழிமுறைகளை பூட்டாசிங் மேற்கொண்டிருந்தார். இது தொடர்பாக பாகிஸ்தான் செல்வதற்கான முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.

மற்றொரு பக்கம் ஸெய்னப்பிற்குத் திருமணம் செய்விக்கும் முயற்சியும் நடந்து கொண்டிருந்தது.இதற்கு உடன்படுமாறு அவளுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

இதைத் தடுக்கும் வழிமுறையாக பூட்டாசிங் பாகிஸ்தான் செல்வது அவசியமாயிற்று. அப்படிச் செல்ல கடவுச்சீட்டும், நுழைவு இசைவுச் சீட்டும் (விசா) அவசியமாயிற்று. இந்திய நாட்டின் பிரிவினையை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் என்ற இருநாடுகளுக்கும் இடையே இணக்கமான உறவு நிலவவில்லை. ஒரு விதமான ஐயப்பாடு இருதரப்பிலும் நிலவி வந்தது.

இதனால், இவை இரண்டையும் எளிதாகப் பெறமுடியாத நிலையில் இவற்றைப் பெற அடிக்கடி தில்லி சென்று வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட செலவுகளை ஈடு செய்வதற்காக அவர் தன் நிலங்களை விற்க நேர்ந்தது. பாகிஸ்தானுக்கு எளிதில் சென்றுவர உதவும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர் இஸ்லாம் மதத்தைத் தழுவினார். இதையடுத்து பூட்டாசிங், ஜமால் அகமது ஆனார். இப் புதிய பெயரில் கடவுச் சீட்டுக்கும் பாகிஸ்தான் குடியுரிமைக்கும் பாகிஸ்தான் தூதரகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் அப்போது ஒருவகையான போர்ச் சூழல் இரு நாடுகளுக்கும் இடையே நிலவியது. இரு நாடுகளும் ஒன்றை ஒன்று ஐயப்பாட்டுடனேயே நோக்கின. இதனால் ஜமால் அகமது என்ற பூட்டாசிங் அளித்த இவ்விண்ணப்பம் தள்ளுபடியானது. (இதே காலத்தில் மீனா என்ற நடிகை பாகிஸ்தான் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோது அது உடனடியாக வழங்கப்பட்டது என்கிறார் நூலாசிரியர்)

ஆனால், பூட்டாசிங் மனங்குன்றாது முயற்சி செய்ததால் பாகிஸ்தான் செல்ல குறுகிய கால அனுமதியைப் பெற்றார். அவர் அங்கு சென்றபோது ஸெய்னப்பின் திருமணம் முடிந்துவிட்டது. ஸெய்னப்பை பார்க்கச் சென்ற அவசரத்தில் சட்டப்படி ஒரு கடமையைச் செய்ய பூட்டாசிங் மறந்துவிட்டார். பாகிஸ்தான் செல்லும் இந்தியர்களும் இந்தியா வரும் பாகிஸ்தானியர்களும் இருபத்துநான்கு மணி நேரத்திற்குள் தம் வருகையைக் காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்ய பூட்டாசிங் தவறியதால் அவர் நீதிபதியின் முன்னால் நிறுத்தப்பட்டார். அவரிடம் ஸெய்னப்பை பார்க்க வந்ததையும் மனம் உடைந்த நிலையில் பதிவு செய்யத் தவறிவிட்டதாகவும் கூறினார். நீதிமன்றத்திற்கு வரும்படி ஸெய்னப்பிற்கு நீதிபதி ஆணை பிறப்பித்தார்.அதன்படி வந்த ஸெய்னப் அளித்த வாக்குமூலம் இப்படி இருந்தது.

“நான் திருமணமான பெண். இனி இவருடன் எனக்கு எந்த உறவுமில்லை. அவருடைய வீட்டிலிருந்து எடுத்து வந்த அவரது இரண்டாவது குழந்தையை அவர் அழைத்துச் செல்லட்டும்.”

இவ் வாக்குமூலம் பூட்டாசிங்கின் நம்பிக்கையைச் சுக்கு நூறாக்கியது. உறவுக்காரப் பெண்கள் பாதுகாப்பு வளையமாகச் சுற்றி நிற்க ஒரு பெண் எப்படி உண்மையான வாக்குமூலத்தை அளிக்க முடியும்? அவளது வாக்கு மூலத்தை ஏற்றுக் கொண்டு நீதிபதி வழங்கிய தீர்ப்பு எப்படி நியாயமாக இருக்க முடியும். மனமொடிந்த நிலையில் நீதி மன்றத்தை விட்டு வெளியேறிய ஜமால் அகமது என்ற பூட்டாசிங் மறுநாள் தொடர்வண்டி முன்னால் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது இறுதி விருப்பத்தை ஒரு கடித வடிவில் எழுதியிருந்தார். தன்னுடைய உடலை ஸெய்னப்பின் ஊரில் அடக்கம் செய்யவேண்டும் என்பதே அவரது இறுதி விருப்பமாக இருந்தது. லாகூரில் உடற்கூறு ஆய்வு நடந்தபோது திரளான மக்கள் கூட்டம் மருத்துவமனைக்கு வெளியில் திரண்டு நின்றனர். சிலர் அழுது கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வைத் திரைப்படமாக எடுக்கப் போவதாக திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் அறிவித்தார். பின்னர் காவல் துறையினர் அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஸெய்னப்பின் ஊருக்கு அவரது உடலை எடுத்துச் சென்றனர். ஆனால் அவளது உறவினர்கள் அதைத் தடுத்து நிறுத்தினர். ஓர் உண்மையான காதலுக்கு நிலையான நினைவுச் சின்னம் தங்களது ஊரில் ஏற்படுவதை அவர்கள் விரும்பவில்லை. இறுதியாக அவரது உடல் லாகூரில் அடக்கம் செய்யப்பட்டது.

ஒரு கதை போன்ற இவ் உண்மை நிகழ்வு மக்களிடம் பரவி காலப் போக்கில் பழமரபுக்கதையாகிப் பல்வேறு மாற்றுவடிவங்களை பெற்று விட்டதாகக் கூறும் இந் நூலாசிரியர் ஆய்வு நோக்கிலான சில வினாக்களையும் கருத்துக்களையும் முன்வைத்துள்ளார்.

பூட்டாசிங்கின் காதல் உணர்ச்சி, நேர்மை, உறுதிப்பாடு, தான் அன்பு செலுத்திய பெண்ணுக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தமை என்பன அவள் மீது அவன் கொண்டிருந்த காதலின் வலிமையை உணர்த்தி நிற்கின்றன. ஆனால், ஒரு பலியாடாகக் காட்சி அளிக்கும் ஸெய்னப் குறித்து எதுவும் தெரியவில்லை.அவளது குரலைக் கேட்க முடியவில்லை என்று கூறிவிட்டு ஸெய்னப் என்ன நினைத்தாள்? பூட்டா சிங்கை உண்மையாகவே பொருட்படுத்தினாளா? தன் வாழ்க்கையில் குறுக்கிட்ட மனிதர்களைப் பொருட்படுத்தாது இருந்தாளா? தான் கடத்தப்பட்டது குறித்த அவளது அனுபவம் என்ன? ஸெய்னப்பும் பூட்டாசிங்கும் மகிழ்ச்சியாகவும் காதலுணர்வுடனும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஓர் உடைமைப் பொருளாக அவளை விலைக்கு வாங்கிய ஒரு மனிதனுடன் அவள் எவ்வாறு அன்பு செலுத்தியிருக்க முடியும்? என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்? அவரது கள ஆய்வில் ஸெய்னப்பைச் சந்திக்காத நிலையில் இக் கேள்விகளுக்கான விடையைக் கண்டறிய முடியவில்லை என்கிறார்.

பிரிவினை வரலாற்றாய்வில் பாலியல் வன்முறை வகிக்கும் இடத்தை இந்நூல் வாய்மொழி வரலாற்றின் துணையுடன் அறிமுகம் செய்துள்ளது. இவ் வன்முறையால் பாதிக்கப்பட்டோர் எப்படி மறக்கப்பட்டு விடுகிறார்கள் என்பது குறித்து நூலின் அறிமுக உரையில் தம் குடும்பத்தின் பெண்களாக இருந்தவர்கள் யாருக்கோ உரிமையானவர்கள் என்று அவர்களை நினைப்பதையே மறந்துவிட்டார்கள். பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் தாம் கடத்தப்படுவதற்கு முன்னர் வாழ்ந்த வாழ்க்கையைத் தம் உள்ளத்தில் இருந்து அழித்து விட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இங்கு கொடுமைகளை மறந்துவிடுதலே மருந்தாகிவிடுகிறது. மறந்துவிடுதலின் வெளிப்பாடுதான், மௌனமோ?

பிரிவினையும் தலித்துகளும்

இந்து முஸ்லிம் என்ற இரண்டு எதிர்முகாம்களுக்கு இடையிலான ஒன்றாகவே இந்தியப் பிரிவினை பார்க்கப் பட்டதால் பிற சமூகங்கள் அதிகமாகக் கண்டுகொள்ளப்படவில்லை. சீக்கியர்களும் சிந்திகளும் அடுத்த நிலையில் இருந்துள்ளனர். அதே நேரத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்ந்த தலித்துகளும் பிரிவினையின் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை' என்ற ஆங்கில நூலில் அம்பேத்கர் எழுதியுள்ளார்.(இது தமிழில் அம்பேத்கர் நூல் தொகுதி 15இல் இடம் பெற்றுள்ளது: தகவல் திரு.ஜகந்நாதன்-மதுரை) தாம் இழிவாகக் கருதும் துப்புரவுப் பணியை மேற்கொள்ள இம் மக்களின் பணி தேவை என்பதன் அடிப்படையில் இவர்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இடம் பெயர பாகிஸ்தான் அரசு இவர்களை அனுமதிக்கவில்லை.

இன்று போல் இரு நாடுகளும் தொழில்மயம் ஆகாத நிலையில் வேளாண்மையே முக்கியத் தொழிலாக இருந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்து வந்தோர் தம் நிலங்களை இழந்து வந்தனர் என்பதன் அடிப்படையில் இந்திய நாட்டில் அவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. ஆனால், வேளாண் தொழிலாளர்களாக இருந்து இடப் பெயர்ச்சிக்கு ஆளான தலித்துகளுக்கு நிலம் வழங்கப்படவில்லை. அவர்கள் விவசாயத் தொழிலாளர்களாகவே வாழ நேர்ந்தது. விடுதலை பெற்ற இந்தியாவின் பண்ணை அடிமைகளாக அவர்கள் ஆக்கப்பட்டனர். புறக்கணிப்புக்கு ஆளான இம் மக்களின் நிலை குறித்து ராமேஸ்வரி நேரு என்பவர், 3 மே 1948 இல் எழுதிய கடிதத்தை நூலாசிரியர் வெளியிட்டுள்ளார் (பக்கம்: 304-306).

இக்கடிதமும் இதை அடுத்து இடம் பெற்றுள்ள சில பதிவுகளும் வரலாற்று ஆவணங்களாக விளங்குகின்றன (பக்கம்: 316, 318-321, 324-325).

பிரிவினையின் போது நிகழ்ந்த வன்முறை நிகழ்வுகள், மனித நேயமற்ற செயல்கள் குறித்த செய்திகளின் அழுத்தத்தால் இம் மக்கள் பிரிவினர்களின் வாழ்க்கைச் சிக்கல்களும் இவர்கள் மீதான புறக்கணிப்புகளும் பிரிவினை தொடர்பான வரலாற்று வரைவிலும், ஊடகப் பதிவுகளிலும் உரிய இடத்தைப் பெறவில்லை. இந்நூலின் ஏழாவது இயல் ‘விளிம்பு நிலையினர் ‘என்ற தலைப்பில் (பக்கம்: 297-343) ஓரளவுக்கேனும் இக் குறையைப் போக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

ஒரு நூல் குறித்த அறிமுகக் கட்டுரையானது முடிவுரை என்ற ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லைதான். இருப்பினும் தன் நூல் வழியாக நூலாசிரியன் முன்வைக்கும் செய்தியை வெளிப்படுத்த இது உதவும்தானே! அச் செய்தி என்ன என்ற புரிதலில் வாசகனுக்கு வாசகன் உறுதியாக வேறுபாடு எழும் என்பதில் ஐயமில்லை.வாசிப்போனின் உலகக் கண்ணோட்டம், இணைந்துள்ள இயக்கம் ஏற்றுக்கொண்ட தத்துவம் என்பனவற்றிற்கு இதில் முக்கிய இடமுண்டு.

இந்நூலின் உள்ளடக்கம் ஒருபுறம் இருக்க, 2017 ஆவது ஆண்டில் எழுதிய இந் நூலின் அறிமுக உரையில் (பக்கம் : Xi-Xii) ஆசிரியர் குறிப்பிட்டுள்ள பின்வரும் செய்தியை முடிவுரையாகக் கொள்ளலாம்:

“இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் புத்தகத்தை நான் எழுதும்போது சக இந்தியர்களைப் போன்றே மதம் சார்ந்த அடையாளம் கொண்ட அடையாள அரசியலின் வளர்ச்சியைக் கண்டுள்ளேன். கற்பனையான அச்சத்துடன் அது செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், இன்று உயர் சாதியினருக்கான அரசியலாக பெரும்பான்மையினரின் ஆதிக்கத்திற்கான தளத்தை உருவாக்கிக் கொண்டுவிட்டது. ஓர் இந்து அரசு ஆட்சி அதிகாரத்தில் நிலை கொண்டுவிட்டது.கற்பனையான முன்னாள் பெருமையை மீட்டெடுக்க அது முனைகிறது. பிரிவினையின் ஆவிகள் மீண்டும் நம்மை வேட்டையாடத் தொடங்கிவிட்டன.வரலாற்றின் பல்வேறு கூறுகளை நாம் ஆழமாகச் சோதித்தறியும் தேவை உருவாகிவிட்டது.”

- ஆ.சிவசுப்பிரமணியன், தமிழர் சமூக வரலாற்று ஆய்வாளர், மார்க்சிய சிந்தனையாளர்

Pin It