kuthoosi gurusamy 268ஜீவகாருண்ய சங்கத்துப் பேர்வழி யொருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் மூட்டைப் பூச்சியொன்று சவுகார்பேட்டை போன்ற என் நாற்காலி இடுக்கிலிருந்து கொண்டு, என்னைக் கடித்தது. னு. னு. கூ. என்ற விஷமருந்தை எடுத்துவந்து அதன்மீது அடித்து அதைக் கொன்றேன், என் நண்பரின் முகஞ் சுண்டியது.

“எதற்காக அதைக் கொன்றீர்கள்? பாவம்? திடீரென்று ஒரு உயிர் போய்விட்டதே!” - என்றார்!

“எனக்கும் ஜீவகாருண்யம் உண்டுதான்! அதற்காக என்னைக் கடிக்கின்ற மூட்டைப் பூச்சியையும், முட்டுகின்ற மாட்டையும், கொட்டுகின்ற தேளையும்கூட விட்டுக் கொண்டிருக்க முடியுமா?” - என்று கேட்டேன்.

“மூட்டைப் பூச்சியுடன் ஒத்துழைத்தால் அது ஒன்றுஞ் செய்யாது! நாமும் மூட்டைப் பூச்சியும் சமரசமாகப் போக வேண்டும்,” என்றார், சமரச சன்மார்க்க நண்பர்!

“பாட்டாளிகளும்! முதலாளிகளும் கருத்தொருமித்து ஒத்துழைத்தால் தான் தொழில் வளரும்,”- என்று இந்திய சர்க்கார் தொழில் மந்திரியான வி. வி. கிரி பம்பாயில் பேசியிருக்கிறார்!

இவர் மேற்படி சமரச சன்மார்க்கத்தாரின் அண்ணன் போலிருக்கிறது! முதலாளி மூட்டைப் பூச்சியுடன் ஒத்துழைக்க வேண்டும் என்கிறார்!

நானும் ஒரு தொழிலாளிதான், எழுத்துத் தொழிலாளி, என் வீட்டிலும் தொழிலாளியுண்டு. உங்கள் எல்லோருக்கும் இதேபோல் பல தொழிலாளி கள் இருக்கலாம். இதேபோல் முதலாளிக்கு முதலாளியுமுண்டு.

மூட்டைப் பூச்சியையே எடுத்துக் கொள்வோம்! (கையில் அல்ல விவாதத்துக்கு) அது நம் இரத்தத்தைக் குடிக்கிறது! அதைப் பல்லி தின்கிறது! பல்லியைத் தவளை விரட்டுகிறது; தவளையைப் பாம்பு விரட்டுகிறது; பாம்பை நோக்கி கருடன் தாவுகிறது!

இப்படியே எல்லா உயிர்களுக்கும் கூறலாம்!

மனித உயிர்களும் இப்படித்தான்! ஒருவன் உழைப்பில் மற்றொருவன் வாழ நினைக்கிறான் உழைப்பவன் விழித்துக் கொண்டால் உல்லாசவாசி மிரள்கிறான், அல்லது உறுமுகிறான்!

 அமெரிக்கா குபேர நாடு என்கிறார்கள்! அங்கு 5 பேரில் ஒருவருக்கு சொந்த மோட்டார்கள் இருக்கிறதாம்! தொழிலாளிகூட தன் சொந்த மோட்டாரில்தான் வேலைக்குச் செல்கிறானாம்! ஆனால் அப்பேர்ப்பட்ட அமெரிக்காவில் கூட மாதம் ஒரு “ஸ்ட்ரைக்” நடந்து கொண்டுதானே இருக்கிறது!

இது ஏன்? இதில்தான் பெரிய பொருளாதாரத் தத்துவம் அடங்கி யிருக்கிறது. உழைப்பாளி - முதலாளி வேற்றுமையும் சச்சரவும் ஒழிய வேண்டுமானால் தனி உடைமை இருக்கவே கூடாது.

நகர சுத்தத் தொழிலாளி எல்லாத் தெருக்களையும் ஒன்றாகக் கருதித்தான் சுத்தப்படுத்துகிறான், ஏன்? அவன் ஒரு பொதுவுடைமை ஸ்தாபனத்தின் (நகரசபை) ஊழியன்!

பொதுவுடைமையான பள்ளிக்கூடத்துக்கு வருகின்ற மாணவர்களில் மோட்டார்களில் வருபவருமுண்டு; நெடுந்தூரம் நடந்து வருபவருமுண்டு. ஆனால் பள்ளிக்குள்ளே நுழைந்ததும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான நாற்காலி அல்லது பலகைதான்! முத்தய்யா செட்டியார் பிள்ளைக்கோ, “ஹிந்து” ஆசிரியர் பிள்ளைக்கோ தனி சோஃபா கிடையாது, ஏன்? பள்ளிக் கூடம் பொதுவுடைமை!

“முதலாளிகளும் பாட்டாளிகளும் ஒத்துழைக்க வேண்டும்.”- என்கிறார், மந்திரியார்!

ஒருவர் உழைப்பில் மற்றொருவர் வாழ்கின்ற முறை உள்ள வரையில் எப்படி இருவரும் ஒத்துழைக்க முடியும்?

திருடனும் திருட்டுக் கொடுத்தவனும் எப்படி ஒத்துழைப்பது? ஆளுக்குப் பாதியாகப் பங்கு போட்டுக் கொண்டா?

கால்ராவும் மனிதனும் எப்படி ஒத்துழைப்பது? எலியும் பூனையும் எப்படி ஒத்துழைப்பது?

 மடாதிபதியும் சுயமரியாதைக்காரனும் எப்படி ஒத்துழைப்பது? கோவில்களை யெல்லாம் ஆஸ்பத்திரிகளாக்க வேண்டும் என்கின்ற என்னை, எண்டவ்மெண்ட் போர்டு ப்ரசிடெண்டாக நியமித்தால் எப்படியிருக்கும்? கோவில் பெருச்சாளிகளும் நானும் எப்படி ஒத்துழைக்க முடியும்?

தொழிலாளி வர்க்கம் என்பது ஒரு நாட்டின் ஜீவசக்தி! முதலாளி வர்க்கம் என்பது இந்த ஜீவசக்தியை உறிஞ்சி வாழ்கின்ற மூட்டைப் பூச்சி! இரண்டுக்குமிடையே சமரசமோ, ஒத்துழைப்போ வேண்டுமென்று தொழில் இலாகா மந்திரியார் கூறுவது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் படித்த புத்தகங்களிலும் இல்லை. நாம் எல்லோரும் கண்ணெதிரே காண்கின்ற காட்சிகளிலுமில்லை. மனித இயற்கையிலுமில்லை.

மந்திரியென்றால் ஏதாவது பேசித் தொலைக்க வேண்டுமே; என்ன செய்வார், பாவம்!

தொழிலாளர்களுக்கு வேப்பிலையடித்துப் பார்க்கிறார், மந்திரியார்!

- குத்தூசி குருசாமி (05-06-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It