ஷாஹின் பாக் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் போராடிய மக்கள் அமைதியாகத்தானே போராடினார்கள்! ஒரு சிறிய வன்முறை கூட அங்கு நடைபெறவில்லையே! பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்டார்களா, இந்தியாவிற்கு எதிராக ஒரு சொல்லையேனும் சொன்னார்களா? இல்லையே! பிறகு ஏன் அவர்கள் மீது ஆர். எஸ். எஸ். இயக்கத்தினரும், பாஜகவினரும் கோபப்பட்டார்கள்?

NONPr 600அதனால்தான் கோபப்பட்டார்கள்! அப்படியெல்லாம் செய்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்! "பாருங்கள் இவர்கள் தேச விரோதிகள்" என்று சொல்வது அவர்களுக்கு எளிதாக இருந்திருக்கும்.

ஆனால் அவர்கள் அப்படியெல்லாம் செய்யவில்லை. இந்தியா வாழ்க என்று முழக்கமிட்டார்கள்...இந்திய தேசியக் கொடியைக் கையில் ஏந்தினார்கள்....தினமும் இந்திய தேசிய கீதம் பாடினார்கள்! ஒரு சிறு கல்லைக் கூட எடுத்து எவர் மீதும் வீசவில்லை.

அதனால்தான் அவர்கள் மீது கோபப்பட்டார்கள்!

அவர்களின் அமைதி, பொறுமை, ஒற்றுமை, அறவழிப் போராட்டம் ஆகியவை இந்த"தேசபக்தாளை"க் கோபப்பட வைத்து விட்டது.

சரி போகட்டும், தில்லி சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெறுவதன் மூலம், இந்துக்கள் வாக்குகள் தங்கள் பக்கம்தான் என்பதை மெய்ப்பித்து விடலாம் என்று காத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் நம்பிய இந்துக்களே அவர்கள் முகத்தில் கரி பூசி விட்டார்கள். தோல்வியிலும் தோல்வி, அப்படியொரு படுதோல்வி!

இது பொறுப்பதில்லை என்று ஆயுதங்களைக் கையில் ஏந்தினார்கள். சி ஏ ஏ ஆதரவுப் போராட்டம் என்ற பெயரில், அறவழியில் போராடிய மக்களைக் காவல்துறையின் முன்னிலையில் அடித்து நொறுக்கினார்கள். பள்ளி வாசல்களில் காவிக் கொடி ஏற்றினார்கள். இஸ்லாமிய சகோதரர்களின் வீடு புகுந்து பொருள்களை நாசம் செய்தார்கள்.

வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 42 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் இருக்கிறார்கள். சாவு எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்பதே இன்றைய நிலை!

பசி அடங்கவில்லை. இப்போது சென்னை உள்பட, இந்தியாவின் பிற பகுதிகளை நோக்கியும் படை எடுக்கின்றனர்.

இடையில் நம் நடிகர் ரஜினிகாந்த், தன் வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தார். ‘‘மத்திய அரசைக் கண்டிக்கிறேன், வன்மையாகக் கண்டிக்கிறேன்’’ என்றார். எதற்குத் தெரியுமா? ‘‘வன்முறையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கத் தவறியமைக்குக் கண்டிக்கிறேன்’’ என்றார். நல்லது. ஆனால், வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார், அதனைத் தூண்டி விட்டவர்கள் யார் என்பன பற்றி அவர் வாயைத் திறக்கவே இல்லை. அங்குதான் இருக்கிறது எஜமான விசுவாசம்!

உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா, நேற்று மிக நிதானமாக ஒரு கருத்தைக் கூறியுள்ளார். "பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர்கள் நாட்டை ஆள்வது ஜனநாயகத்தின் ஒரு கூறு என்பதை மறுக்க முடியாது. ஆனால் பெரும்பான்மைவாதம் (majoritarianism) நாட்டை ஆள்வது ஜனநாயகத்திற்கு எதிரானது" என்று குறிப்பிட்டுள்ளார். (இன்றோ, நாளையோ அவர் ஏதேனும் ஒரு மூலைக்கு மாற்றல் செய்யப்படலாம்).

‘குஜராத் மாடல்' தொடங்கிவிட்டது. நாம் என்ன செய்ய வேண்டும்? அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் அறவழியில் போராட வேண்டும். அதனைவிட முதன்மையானது, இஸ்லாமியர்கள் தனித்து விடப்படாமல், மதம், மொழி கடந்து அனைவரும் ஓரணியில் நின்று போராட வேண்டும்! இது இஸ்லாமியர்களின் போராட்டமில்லை, ஜனநாயகத்தைக் காக்க நடைபெறும் போராட்டம்!!

வன்முறையாளர்களுக்கு ஒன்று சொல்வோம்!

"இன்றைக்கு ராஜா நீங்கள்!

என்றைக்கும் ராஜா இல்லை.....

காலங்கள் மாறும்

காலத்தின் கூண்டில் நீங்கள்

கைகட்டி நிற்க நேரும்!"

Pin It