“இந்தியாவை ஜின்னா பிளந்தது போதும்! மேலும் பிளந்து தொலைக்காதே! பாபம்! பாரத மாதாவின் “வெட்டுண்ட கைகள் வேதனையாகி”த் துடிக்கின்ற காட்சி அகோரமாயிருக்கிறது! நீ அவள் காலையும் வெட்டாதே!” காங்கிரஸ் தோழர்கள் பாரத மாதாவின் மீதுள்ள அதி தீவிர பக்தியினால் திராவிட கழகத்தாரைப் பார்த்துக் கூறுவது இது!

kuthoosi gurusamy 263பிரிப்பது என்பது பிளப்பது ஆகுமா? வயலுக்கு வரப்பு இருப்பது பாபமா? அல்லது விளைவுக்கு அவசியமா? திராவிடம் தனியாகப் பிரிந்தால் ஹிந்துஸ்தானும் நன்றாயிருக்கும், திராவிடமும் செழிப்பாயிருக்குமே! வரப்பேயில்லாமல் ஒரே வெளியாயிருப்பதில் பயிர் விளையாது. அரியலூர் வட்டாரத்துக் காட்டு வெளிகளில் புல் பூண்டு கூடக் கிடையாது. பிரிவே இல்லாத பாலைவனம் ஒரே ஒற்றுமை (மணல்) மயமாகத்தானே இருக்கிறது? பயன் என்னப்பா?

இது, நாம் பாரதமாதா பக்தர்களைப் பார்த்துக் கேட்பது!

என்ன சொன்னாலும் அவர்கள் ஏற்றுக் கொள்வதேயில்லை. மருந்து சாப்பிட மறுக்கும் நோயாளிபோல. ‘தனிநாடு’ என்றதுமே முகத்தைச் சுளிக்கிறார்கள், சில தோழர்கள்! பாவம்! அவர்கள் மீது குற்றமில்லை. அதுவும் ஒரு விதமான நோய்! தேசிய கீதம்!

அடுப்பிலுள்ள அரிசி வெந்து பசி தணிய வேண்டுமென்றால், தூண் பருமன் போன்ற கட்டையைப் பிளக்காமல் முடியுமா? அடுப்புக் கொள்ளாதே, தம்பீ!

20 கெஜமுள்ள துணிக்கட்டை (பீஸ்) கிழிக்காமல் - துண்டு போடாமல் - நம் நிர்வாண நிலையைப் போக்கிக் கொள்ள முடியாதே!

உண்டியிலும் உடையிலும் மட்டுமா, இந்தப் பிளவு வேலை? ‘குடியிருப்பதில் கூட’த் தான்!

100-க்கு 40 அடியுள்ள “ஹாலி”ல் கூட்டம் போட்டுப் பேசலாமே தவிர, குடியிருக்க முடியுமா, சுவாமி? அதை அறை அறையாகத் தடுத்து - பிரித்து - பிளவு படுத்தினால்தானே மானத்தோடு வசிக்க முடியும்? இல்லாவிட்டால் குடும்பத்திலுள்ள ஆண் பெண் அத்தனை பேரும் குளியல், கடன் கழித்தல், உண்ணல், உறங்கல், உடை தரித்தல் ஆகிய இத்தனையும் ஒரே “ஹாலு”க்குள்ளே தானே நடக்க வேண்டும்?

‘பிளக்காதே! பாவம்!’ என்பவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா? ஆகா! கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்! பின்னர் ஏன், அப்படிச் சொல்கிறார்கள்? பிளப்பதற்கு வேண்டிய புதுப் புதுக் காரணங்களை நாம் எடுத்துச் சொல்ல வேண்டுமல்லவா?அதற்காகத்தான்.

நம்மை எதிர்க்கின்ற அவர்களே இந்தப் பிளவு வேலையில் நம்பிக்கை யுடையவர்கள்! எத்தனையோ உதாரணம் கூற முடியும்.

நேற்று நடந்ததை மட்டும் கூறுகிறேன். நீதியும் நிர்வாகமும் இதுவரையில் ஒன்றாகவே இருந்து வந்தன. இந்த இலாகாவை இனிமேல் இரண்டாகப் பிளந்து விடுவது என்று முடிவு செய்து விட்டார்கள், மாகாண காங்கிரஸ் சர்க்கார். ஆரம்ப வேலையாகக் செங்கற்பட்டு, வடஆற்காடு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் நேற்று இந்தப் பிளவு வேலை நடந்து விட்டது! நீதிபதிகள், மந்திரிகள் ஆகியவர்களே இந்தப் பாப (பிளவு) காரியத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! அது மட்டுமா? வடநாட்டுப் பெருந்தலைவர்கள் வாழ்த்துச் செய்தியும் அனுப்பியிருக்கிறார்கள்!

ஏன் இப்படிப் பிளந்தார்கள்?

நீதியும் நிர்வாகமும் சரியாக நடைபெறுவதற்காகத்தான். இரண்டையும் பாழாக்குவதற்காவா? அல்லவே அல்ல!

நீதி - திராவிடம்! நிர்வாகம் - டில்லி சர்க்கார்!

இரண்டையும் பிளக்க வேண்டும் என்கின்றோம், நாம்! எதற்காக?

இரண்டும் நன்றாக நடைபெறுவதற்காகவே!

ஒன்னையொன்று ஆக்கிரமிக்காமலும் சுரண்டாமலும் இருப்பதற்காக!

பிளப்பதனால் நன்மை உண்டு என்பதை மத்திய சர்க்காருக்கு மறைமுகமாக எடுத்துக் காட்டிய (இடித்துக் காட்டிய) மாகாண மந்திரிகளின் தந்திரமே தந்திரம்!

- குத்தூசி குருசாமி (03-10-1949)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It