நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 2022 சூலை மாதத்தில் பணியில் சேர்க்கப்பட்ட 299 பொறியாளர்களுள் ஒருவர் கூடத் தமிழர் இல்லை என்பது தமிழ்நாட்டின் கட்சிகள் இயக்கங்களைப் பெரிய அளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பலரும் கண்டன அறிக்கை வெளியிட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்திய அரசதிகாரத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணி அமர்த்துகிற உரிமை தமிழ்நாட்டரசிடம் இல்லை என்பது மட்டுமல்ல பணி ஏற்கிற உரிமையைக் கூடத் தமிழர்கள் பெற்றிருக்கவில்லை. தமிழ்நாட்டில் இயங்குகிற நிலக்கரி தொழிற்சாலையில் பணி வாய்ப்பு தமிழர்களுக்கு இல்லை என்கிற கொடுமையைவிட நெய்வேலி ஊரோ, அங்கிருந்து கிடைக்கிற கனிம வளங்களோ தமிழ் நாட்டிற்கு இல்லை என்பதுதான் மிகப் பெரும் கொடுமை.

தன்னுடைய சொந்த நிலமான 620 குறுக்க (ஏக்கர்) நிலத்தை (மூன்றரை சதுர அயிர மாத்திரி (கிலோமீட்டர்) நிலக்கரித் தொழிற்சாலை அமைக்க இலவயமாகக் கொடுத்தார் திரு சம்புலிங்கம் என்பவர். அதன்பிறகு வெள்ளையாங்குப்பம், பெருமாத்தூர் உள்ளிட்ட ஏறத்தாழ 23 சிற்றூர்களிலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு திருமுதுகுன்றம்(விருத்தாசலம்) அருகில் உள்ள புதுக்கூரைப்பேட்டையில் குடியேற்றப்பட்டனர். அவர்களுக்கெல்லாம் தகுந்த இழப்பீடும் கொடுக்கப்படவில்லை. வேலையும் கொடுக்கப்பட வில்லை.. இந்நிலையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடலூர் மாவட்டத்தில் மேலும் 1320 மெகாவாட் உருவாக்கத் திறன் கொண்ட (2660 MW THERMAL POWER STATION II (2ND EXPANSION) அனல்மின் நிலையம் மற்றும் இந்த அனல்மின் நிலையத்திற்காக ஆண்டிற்கு 115 இலக்கம் கல்லெடை (டன்) பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கப்படும் வகையில் புதிய சுரங்கம் ஒன்றையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. உரூ. 3755, 71 கோடி செலவில் நிலக்கரி சுரங்கத் திட்டத்தையும், உரூ. 11, 189. 20 கோடி செலவில் அனல்மின் நிலையத் திட்டத்தையும் செயல்படுத்துவ­தற்கான ஒப்புதலை 21. 07. 2022 அன்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது.nlc 700இந்த நிலக்கரிச் சுரங்கத் திட்டம் ஏறத்தாழ 50 சதுர அயிரமாத்திரி(50 சதுரக் கிலோமீட்டர்) பரப்பளவில் செயல்படுத்தப்படவுள்ளது. (அதாவது 4841. 99 எக்டேர் நிலப்பரப்பு) அதன் ஒட்டுமொத்தப் பரப்பளவில் சின்ன நெற்குணம், கோ. ஆதனூர், பெருவரப்பூர் உள்ளிட்டு 30 சிற்றூர்கள் பாதிக்கப்படவுள்ளன.

இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு திசம்பர் மாதம் நடந்தபோது கடும் எதிர்ப்பையும் போராட்டத்தை யும் நெய்வேலி நிர்வாகம் சந்தித்தது. இத்திட்டத்தால் பாதிப்படைபவர்கள் குறித்த சமூக தாக்க ஆய்வொன்றை என். எல். சி. நிறுவனம் உருவாக்கிச் சுற்றுச்சூழல் இசைவுகோரி விண்ணப்பம் செய்திருந்தது. அந்த ஆய்வின் படி இச்சுரங்கத் திட்டத்தால் 11 சிற்றூர்கள் முழுமையாகவும், 19 சிற்றூர்கள் பகுதியாகவும் பாதிக்கப் படும் - என்றும், இந்தச் சுரங்கத்தால் 2, 420பேர் தங்கள் நிலத்தை இழப்பார்கள்- என்றும், 6, 331 பேர் தங்கள் நிலத்தையும் , வீடுகளையும் இழப்பார்கள்- என்றும், ஒட்டுமொத்தமாக 8, 751 குடும்பங்கள் திட்டத்தால் பாதிப்படைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளியேற்றப்படும் சட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு மற்றும் மாற்று இடம் வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்காக ஒரு குடும்பத்திற்கு 11. 13 லட்சம் வீதம் மொத்தமாக 8751 குடும்பங்களுக்கு உரு. 705 கோடி செலவிட என். எல். சி. திட்டமிட்டுள்ளதாக வும் கூறப்படுகிறது. ஆனால், ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடோ, நில உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்போ, சிற்றூர் களுக்கான கட்டமைப்பு ஏந்துகளோ எதையும் இதுவரை முறையாக என். எல். சி. நிறுவனம் வழங்கவில்லை என்பதை அறியும் போது என். எல். சி. நிறுவனத்தின் கூற்றை எவரும் நம்பமுடியாது. அதேபோல் கடந்த ஐந்­தாறு ஆண்டில் மட்டுமே நெய்வேலியில் 19 முறைகள் அளவில் நேர்ச்சிகள்(விபத்துகள்) நடந்து எண்ணற்ற ஒப்பந்தத் தொழிலாளர்கள் இறந்து போயிருக்கின்றனர். அதற்கான ஓரளவு இழப்பீடுகளைக்கூடப் போராடித் தான் பெற முடிந்திருக்கிறது. 1956ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் இன்றைய ( 2020 ஆண்டின்) சொத்து மதிப்பு 54, 488. 13 கோடி என்றும், வருமானம் உரு. 8, 672. 84 கோடி (2017) என்றும், ஆண்டு மிகை வருமானம் 2, 368. 81 கோடி (2017) என்றும் நிர்வாகமே அறிவித்துள்ளது. பணியாளர் 12874 (30. 09. 2019) என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இங்குள்ள அனல் மின் நிலையத்தின் மின் உருவாக்கத் திறன் ஏறத்தாழ 5200 மெகாவாட். ஆனால், இதில் தமிழகத்திற்கு 30 விழுக்காடு, ஆந்திராவிற்கு 19 விழுக்காடு, கர்நாடகத்திற்கு 14 விழுக்காடு, கேரளா விற்கு 10 விழுக்காடு, புதுச்சேரிக்கு 5 விழுக்காடு, இந்திய மின்தொகுப்புக்கு 15 விழுக்காடு. மொத்தத்தில், மற்ற தென்மாநிலங்களுக்கும், இந்திய அரசுக்கும் சேர்த்து மொத்தம் 63 விழுக்காடு கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்திற்கு வெறும் 30 விழுக்காடு மட்டும்­தான் கிடைக்கிறது. தமிழகம் இந்த மின்சாரத்தையும் விலைகொடுத்துத்தான் வாங்குகிறது.

இந்தக் கொடுமை இப்படி இருக்க, நெய்வேலியில் எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரிக்கான உரிமைத் தொகை (இராயல்டி)யும் சரிவர இந்திய அரசால் கொடுக்கப் படுவதில்லை. நிலக்கரியின் கல்லெடை (டன்) யின் விலை மதிப்பு உரு. 3, 655(2018) என்றிருக்க தமிழ்நாடு அரசின் தொடர்ந்த வலியுறுத்தலில் ஒரு கல்லெடைக்கு (டன்னுக்கு) 1990 ஆண்டு முதல் உரு. 2. 50 மட்டுமே உரிமைத் தொகையாக இந்திய அரசு கொடுத்தது. அதன் பிறகு 1994 ஆண்டு முதல் ஒரு கல்லெடைக்கு (டன்னுக்கு) உரு. 50 கொடுப்பதாகப் பதிவு உள்ளது. ஆனால் குசராத்திலிருந்து எடுக்கப்படும் கன்னெய்க் (பெட்ரோலுக்)கும், அசாமில் எடுக்கப்படும் கன்னெய்க் (பெட்ரோலுக்)கும் 15 விழுக்காடு உரிமைத் தொகையை (இராயல்டியை) அந்தந்த அரசுகள் பெற்றுக் கொள்கின்றன.

குசராத்து, அசாம் கன்னெய்க்கு உரிமைத் தொகை அளிக்கப்படுவது போல் தமிழ்நாட்டிலிருந்து எடுத்துச்செல்லும் நிலக்கரிக்குக் குறைந்த அளவான 15 விழுக்காடு மதிப்புத் தொகையை 1956 முதல் பெற்றாலே இந்தியச் சுரண்டல் அரசு தமிழ்நாட்டிற்குப் பல இலக்கம் கோடிகளைத் தர வேண்டியிருக்கும். ஆக, தமிழ்நாட்டின் நெய்வேலியிலிருந்து மட்டுமே இந்திய அரசு பன்னூறாயிரம் இலக்கம் கோடிகள் மதிப்பளவில் நிலக்கரியைச் சூறையாடிக் கொள்ளையடித்துச் சென்று கொண்டிருக்கிறது. யார் சொத்தை யார் கொள்ளை யடிப்பது? இந்த நிலக்கரிக் கொள்ளை நெய்வேலியோடு நின்று விடப் போவதில்லை. செயங்கொண்டம் வழியாக நீளப் போகிறது..

தமிழ்நாட்டின் கனிம வளங்களும், கடல் வளங்களும், காட்டு வளங்களும், தொழில் வளங்களும் இந்திய அரசால் சூறையாடப்படுவதிலிருந்து, வணிக உரிமைகளும், கல்வி உரிமைகளும், சாலை வழியாகச் செல்கிற உரிமைகளும் உள்ளிட்ட எண்ணற்ற உரிமைகள் பறிக்கப்படுகிற கொடுமைகளிலிருந்து மீள வேண்டுமானால் தமிழ்நாட்டளவில் அவற்றைத் தீர்மானிக்கிற உரிமையைத் தமிழ்நாடு அரசு பெற்றாக வேண்டும். இழந்திருக்கிற ஒவ்வொரு உரிமையையும் நாம் போராடிப் பெற்றாக வேண்டும். அதிகார உரிமையை இந்திய ஆட்சியர்களிடம் கொடுத்து விட்டு. தமிழர்களுக்கு வேலை கொடு, என்றளவில் மட்டும் கெஞ்சிக் கொண்டிருப்பது தமிழர்களின் உரிமையை மீட்காது. தமிழ்நாட்டிற்குள் பன்னாட்டு முதலைகளும், அம்பானி, அதானி உள்ளிட்ட பனியா கும்பல்களும் நுழைந்து தொழில் நடத்துவதும்.. அவர்களிடம் தமிழர்களுக்கு வேலை கொடு என்றளவில் மட்டும் நாம் கோரிக்கை வைப்பதும் எப்படித் தமிழர்களுக்கு, தமிழ்நாட்டிற்கு உரிமையைத் தந்துவிடாதோ, அப்படி­யே, நம் தமிழ்நாட்டிற்குச் சொந்தமான நெய்வேலியை இந்தியப் பார்ப்பனியக் கயவாளிகளிடம் இழந்துவிட்டு, அங்குப் பணியாளர்களாய்த் தமிழரை அமர்த்து என்கிற கோரிக்கை மட்டுமே தமிழர்களுக்கு உரிமைகளைத் தந்துவிடாது.. தெரிந்தோ தெரியாமலோ கடந்த காலங்களில் நாம் இழந்துவிட்ட.. . நம்மிடமிருந்து ஏமாற்றிப் பறிக்கப்பட்டுவிட்ட.. . நெய்வேலியை.. . அதன் அரசதிகார உரிமையைத் தமிழ்நாடு மீட்டாக வேண்டும்.

நெய்வேலியைத் தமிழ்நாட்டிற்கு மீட்போம் எனும் முழக்கத்தை வலுப்படுத்தவேண்டுவது காலத்தின் கடமையாகிறது. கச்சத்தீவை இலங்கை அரசிடமிருந்து திரும்பப் பெற வேண்டும் என்பதை விட இந்திய முதலை வாயில் மாட்டிக் கிடக்கிற நெய்வேலியை மீட்டாக வேண்டுவது மிகவும் கட்டாயம் என்பதை உணர வேண்டும். நெய்வேலியைக் களவாடி வைத்திருக்கும் இந்திய அதிகாரத்தை அடிசாய்க்கத் தமிழ்நாட்டின் கட்சிகள், இயக்கங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து முழங்கியாக வேண்டும். இந்தியாவுக்குத் தாரை வார்க்கப்பட்ட நெய்வேலியைத் தமிழ்நாட்டிற்கு மீட்போம்! - என்பது இன்றைய முதன்மை முழக்கமாகக் கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் போர் முழக்கமாக எழுப்பப் பட்டாக வேண்டும் என்பது அந்த மாவட்டங்களின் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்காரிய, தமிழ்த் தேசியக் கட்சிகளின், இயக்கங்களின் முதற் பெரும் கடமையாகும்.

- பொழிலன்

Pin It