“உம்மைப் பார்த்தால் ஏதோ கொஞ்சம் படித்த மனுஷன் மாதிரியிருக்கு! ஆனால் நீர் எழுதுவதைப் பார்த்தால் வேறு மாதிரி யிருக்கே!” என்று கோபமாகக் கேட்டார், ஒரு காங்கிரஸ் திராவிடத் தோழர்.

kuthoosi gurusamy 263இப்படிக் கேட்டவர் ரொம்பப் படித்தவராகத் தானிருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுவது போலவே நானும் முடிவு செய்து கொண்டேன். “எழுதுவதைப் பார்த்தால் படிக்காதவன் மாதிரி இருக்கிறதோ? இருக்கலாம்! பூமியைப் பார்த்தால் உருண்டை மாதிரியாகவா இருக்கிறது? அது போகட்டும்! நான் எழுதுவதில் உண்மைக்கு மாறானது ஏதாவது உண்டோ?”

“உண்மைக்கு மாறானது இலலாமலிருக்கலாம். ஆனால் எழுதுகிற மாதிரி இருக்கிறதே, அது குண்டூசியினால் நகக்கண்ணில் குத்துகிற மாதிரியல்லவா இருக்கிறது? உதாரணமாக, எதற்கெடுத்தாலும் ஆரியர் - திராவிடர் என்று எழுதுகிறிர்களே! காங்கிரஸ் கட்சிக்குள் கூட இந்தப் பிளவு உண்டாகும்படியாக எழுதி வருகிறீர்களே! உலக மக்களே ஒன்றுபட வேண்டும் என்று கூறிவரும் இக்காலத்தில் இப்படியா எழுதுவது? இனிமேல் திருட்டுத் தொழிலில் கூட ஆரியர் - திராவிடர் என்று பிரித்துக் கூற ஆரம்பித்து விடுவீர்கள் போலிருக்கே! ஈரோடு விஷம் உம் இரத்தத்தில் நன்றாக கலந்து விட்டதய்யா!”

"நன்றாய்ச் சொன்னீரய்யா! உணர்ச்சியே யில்லாத இரத்தத்தைவிட விஷமேறிய இரத்தம் எவ்வளவோ நல்லது! இரண்டிலொன்றாவது தீர்ந்து போகுமே! அது கிடக்கட்டும். திருடர்களில் கூட ஆரியர்- திராவிடர் என்று கூற ஆரம்பித்து விடுவேன் போலிருக்கு என்றல்லவா சொன்னீர்? இதைத் கேளும்! திருட்டுத் தொழிலில் கூட நம் ஆள் கதியையும் அவர்கள் போக்கையும் பாருங்கள்!”

“ஓஹோ! இப்போதே கச்சேரி தொடங்கி விட்டதா? வெகு பேஷ்!”

“கேளுமய்யா! நம் ஆள் திருடப் போனால் நடு இராத்திரியில் கருப்பு லங்கோடு தரித்து, தற்காப்புக்குக் கத்தியாவது வைத்துக் கொண்டு, துணைக்கு 4-5 பேராவது அழைத்துக் கொண்டு, பூட்டு உடைக்கும் கருவியேந்தி, நல்ல இருட்டில், பாம்பு கடித்தாலும் சரி, நாய் கடித்தாலும் சரி, உயிரையே பணயமாக வைத்து, பயந்து பயந்து, பதுங்கிப் பதுங்கி, போகும் பாதையிலுள்ள பிள்ளையாரை வேண்டிக் கொண்டு, 8 அடி சுவர் மீது ஏறிக் குதித்து, தாளிட்ட கதவைத் திறந்தோ, ஓசையில்லாமல் சுவரில் ஓட்டை செய்தோ, பூனைபோல் நுழைந்து, வீட்டிற்குள் புகுந்து திருட வேண்டும். இடையில் எங்கே சிக்கினாலும் மண்டை உடையும்; உயிர் போகும்; அல்லது போலீஸ்காரரிடம் அகப்பட்டுக் கொள்ள வேண்டும். எவர் கையிலும் சிக்காமல் திருட முடியுமானால் ஒரு ட்ரங்கு, அல்லது செப்புத் தவலை, அல்லது வெள்ளித் தட்டு, அல்லது ஒரு கால் கொலுசு அல்லது ஜரிகை வேட்டி தான் கிடைக்கும்! ட்ரங்கை எடுத்து வந்து கொல்லைப்புறம் போட்டு உடைத்துப் பார்த்தால், அதில் சில சமயங்களில் (என்னைப் போன்ற ஆசாமியின் ட்ரங்காயிருந்தால்) “இராமாயண ஆபாசம்”, “பெண் ஏன் அடிமையானாள்?” போன்ற புத்தகக் கட்டுகள் தானிருக்கும்! எவ்வளவு விலை உயர்ந்த சாமான்கள் கிடைத்தாலும் 200-300 ரூபாய்க்கு மேல் பொறாது. இதை 4-5 பேர் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும். இதில் அடிதடி வந்தால் எல்லோரும் சிறை புக வேண்டி நேரும்! சாமானை விற்கப் போனால் ஆபத்து! மிகப் பெரிய பணக்காரர் வீட்டிற்குள் நுழையவே முடியாது! அப்படி நுழைந்தாலும் நகை நட்டுகள் இரும்புப் பெட்டியிலிருக்கும் ரொக்கம் முழுதும் செக் ரூபமாயிருக்கும், இது தான் நம் ஆள் திருட்டின் லட்சணம்!

ஆனால் அவர்கள் (அதுதான் பூதேவர்கள்!) விஷயம் எப்படித் தெரியுமா? எவன் எவனோ பங்கு சேர்ந்து 'பாங்க்' வைப்பான். அதில் கிருஷ்ணய்யர் 40- ரூபாய் குமாஸ்தா! பாங்க் ஆரம்பித்த ஆறாம் மாதம் 40,000 ரூபாய் திடீரென்று காணாமற் போய்விடும்! கிருஷ்ணய்யரை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள். மீறி அகப்பட்டுக் கொண்டாலும் (கிருஷ்ணன் வெண்ணெய் திருடவில்லையா?) வக்கீல் சுப்பய்யர் வாதாடுவார்! ராஜா அய்யர் தீர்ப்பளிப்பார்! அதிகக் கடுமையான தண்டனையானாலும் ஆறு மாதம் “ஏ” வகுப்புத்தான்!

கிருஷ்ணய்யர் மட்டுந்தான் இப்படி என்று நினைக்காதீர்கள்! அவர் மைத்துனன் அம்ப அய்யர் கோவில் அர்ச்சகர்! அம்பாளின் மூக்குத்தி திடீரென்று மறைந்து போகும்! அதன் விலை 8,000 - ரூபாய் என்று பத்திரிகையில் வெளிவரும்! அவ்வளவுதான்! போலீசார் புலன் விசாரித்துக் கொண்டேயிருப்பார்கள்! இன்றுங்கூடத்தான் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்! விளக்குப் போடுகிற வீராசாமிதான் அகப்படுவானே தவிர, அம்பி அய்யர் மீது அம்பாளுக்கே சந்தேகமில்லையே!

இப்போது தெரிகிறதா? திருட்டிலும்கூட ஆரியர் சொகுசும் லாபமும் நம்மவரின் தியாகமும் நஷ்டமும்?"

- குத்தூசி குருசாமி (28-10-1948)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It