சென்ற இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான “குடி அரசு” அதாவது 5.8.28 மலரில் பார்ப்பனீயம் என்பது பற்றி எழுதிய தலையங்கத்தில், சென்னை திருவல்லிக்கேணி உத்திராதி மடத்தில் நடந்த வைதீக பார்ப்பனர் கூட்டத்தில் தலைமை வகித்த திருவாளர் வி.வி. சீனிவாசய்யங்கார் அவர்களின் அக்கிராசன உபன்யாசத்தைப் பற்றி விரித்துவிட்டு உபன்யாசகரான திரு. என். சீனிவாசாச்சாரியாரின் உபன்யாசத்தைப் பற்றி பின்னர் எழுதுவதாக எழுதியிருந்தோம். அந்தப்படி இவ்வாரம் அதைப் பற்றி எழுதுகின்றோம்.

திரு. சீனிவாசாச்சாரியார் அவர்கள் தமது சொற்பொழிவில் சொல்லியிருக்கும் விஷயங்களைச் சுருக்கி முதல் வியாசத்திலேயே வெளியிட்டிருக்கின்றோம்.

periyar and maniamma 653அதில் திரு. ஆச்சாரியார் “பிராமண சங்கம் பல வருஷங்களாக இந்த நாட்டில் வேலை செய்து வருகின்றது” என்றும், “எவன் தன் மனதை அடக்கி ஆண்டு கொண்டு யோக்கியனாக இருக்கின்றானோ அவனே பிராமணன்” என்றும் சொல்லியிருக்கின்றார்.

அப்படியானால் இப்போது பிராமணர் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் எல்லாம் தம் மனதை அடக்கி ஆண்டு கொண்டு யோக்கியர்களாக இருக்கின்றவர்களா அல்லது பிறர் மனதை அடக்கி அவர்களை ஆண்டு கொண்டு அயோக்கியர்களாக இருக்கின்றவர்களா என்று கேட்பதுடன் வெகு நாளாக இந்த நாட்டில் நடந்து வரும் பிராமண சங்கங்கள் என்பவைகளெல்லாம் தங்கள் மனதை அடக்கி ஆண்டு யோக்கியமாய் இருந்து கொண்டு வரும் பிராமணர்களுடைய சங்கமா என்றும் கேட் கின்றோம்.

யார் பிராமணன்? என்று கேட்கும் போது மாத்திரம் “தன் மனதை அடக்கி ஆண்டு கொண்டும் யோக்கியனாக இருந்து கொண்டும் இருக்கின்றவன் பிராமணன்” என்று சொல்லுவதும், மற்ற சமயங்களில் மான ஈனமின்றி உலகிலுள்ள சகல அயோக்கியத்தனங்களையும் அதாவது கொலை, களவுகள், திருட்டு, புரட்டுகள் செய்வதும் சாமி தரிசனைக்கும், தாசி தரிசனைக்கும் தரகு பெறுவதும், போலீசு வேலை செய்வதும், வக்கீல் வேலை செய்வதும், இஷ்டமில்லாத பெண்களைக் கூட்டிக் கொடுத்தாவது உத்தியோகம் பெறுவதும், அவ்வுத்தியோகத்தில் லஞ்சம் வாங்குவதும், தங்கள் வகுப்பாரைத் தவிர மற்ற வகுப்பார் தலையெடுக்காமல் அழுத்துவதும், தங்கள் பிள்ளைகளைத் தவிர மற்ற பிள்ளைகளை படிக்க விடாமல் தடுப்பதும், தேசத்தையும், ஏழை மக்களையும் காட்டிக் கொடுத்து உயிர் வாழ்வதுமான காரியங்களையெல்லாம் செய்து கொண்டு தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக் கொண்டும், இந்தப் பிராமணத் தன்மைக்காக கள்ளுக்கடை வேசி வீடு முதல் கடவுள் சன்னிதானம் என்பது வரையில் தங்களுக்கு வேறு உரிமையும் மற்றவர்களுக்கு வேறு உரிமையும் இருக்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டு மக்களை வதைத்துக் கொண்டிருக்கின்றதுமான அக்கிரமங்களை இனியும் எத்தனை காலத்திற்கு மறைக்கலாம் என்று திரு. ஆச்சாரியார் கருதிக் கொண்டிருக்கின்றார் என்பது நமக்கு விளங்கவில்லை.

தவிர “ராஜீய விஷயத்தில் நாங்கள் (பிராமணர்கள்) தலையிடுவதே கிடையாது” என்று சொல்லி யிருக்கின்றார்.

இது உண்மையா? அப்படியானால் திருவாளர்கள் எஸ். சீனிவாசய்யங்கார், சக்கிரவர்த்தி அய்யங்கார், சத்தியமூர்த்தி, கஸ்தூரி ரங்கய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார், ராமாநுஜ ஆச்சாரியார், ராஜகோபாலாச்சாரியார், மாளவியா, நேரு, திலகர், சாஸ்திரி, சர்மா, சாப்ரூ, வி.வி.சீனிவாசய்யங்கார், மணி அய்யர், சிவசாமி அய்யர், சர்.சி.பி. ராமசாமி அய்யர், சரோஜினி தேவி, பாலாம்பாள், இதே உபன்யாசகர் திரு. என். சீனிவாசாச்சாரியார் முதலியவர்கள் அரசியல் விஷயத்தில் தலையிடவில்லை என்கின்றாரா? அல்லது இவர்களை இந்த “பிராமணர்”களோடு சேர்க்காமல் பேசுகின்றாரா? என்று திரு. ஆச்சாரியாரைக் கேட்கின்றோம்.

பிச்சைக்கும் புரோகிதத்துக்கும் வரும்போது மாத்திரம் தாங்கள் அரசியலில் பிரவேசிக்காதவர்கள் என்று சொல்லுவதும், உத்தியோகத்திற்கு வரும்போது வெள்ளைக்காரர்களிடம் பிராமணர்கள்தான் அரசியலில் தலைமை வகிக்கவும் சீர்திருத்தத்தில் பெரிய உத்தியோகம் வகிக்கவும் யோக்கியர்கள் என்றும், வெள்ளைக்காரர்களுக்கு தகுந்தபடி சகல விதத்திலும் நடந்து கொள்ளும் திறமையும், சவுகரியமும், பிராமணர்களுக்குத்தான் உண்டு என்றும் சொல்லி சகல அரசியல்களிலும் இந்த பிராமணர்களே புகுந்து கொண்டு வெள்ளைக்கார ராஜ்யத்தை நடத்துவதும் இந்த உபன்யாசகருக்கு உண்மையிலேயே தெரியாதா என்று கேட்கின்றோம்.

“பிராமணர்கள் தங்களுக்கு சட்டபூர்வமாய் எவ்வித உரிமையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை” என்கின்றனர். இது அவர் மனதாரச் சொல்லும் பேச்சா அல்லது தங்களைத் தவிர மற்றவர்கள் முட்டாள்கள் என்று கருதிக் கொண்டு சொல்லும் பேச்சா என்று கேட்கின்றோம். வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமம், புராணம், மனுதர்மம், இந்துலா, பழக்க வழக்கம் முதலியவைகளின் பேரால் தங்களுக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பதவிகளும், தனி உரிமைகளும் சட்டபூர்வமாக ஏற்படுத்திக் கொண்டதாகாதா என கேட்கின்றோம். மற்றும் கக்கூசுகளில் போர்ட் பலகை போட்டு ஆண், பெண்களுக்கு பிரித்திருப்பதுபோல் இன்றைக்கும் அனேக இடங்களில் (போர்டு) பலகை போட்டு பிராமணர்களுக்கு மாத்திரம் என்று பிரித்திருப்பது சட்டபூர்வமா அல்லது பலகைப் பூர்வமா என்று கேட்கின்றோம்.

“பிராமணரல்லாதாரியக்கம் உத்தியோகத்திற்கு ஏற்பட்டது என்று எண்ணி கவலை இல்லாமல் இருந்துவிட்டோம்; அது குடி அரசு இயக்கத்தில் சேர்ந்து கொண்டு (சுயமரியாதை) உரிமையை ஸ்தாபித்துக் கொள்வதற்கு என்று சொல்லிக் கொண்டு மத விஷயத்திலும் கோவில் விஷயத்திலும் புகுந்து நம்மை அடியோடு கவிழ்க்க ஆரம்பித்து ஆயிரக்கணக்கான வருஷங்களாய் நாம் (பிராமணர்கள்) அனுபவித்து வந்த உரிமையை இப்போது பலாத்காரமாய் பிடுங்கிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. உதாரணமாய், சுயமரியாதைக்காரர்கள் செய்து வரும் பிரசாரத்தின் கொடுமை ஊர் ஊராகச் சுற்றிப் பார்ப்பவர்களுக்குதான் தெரியும்” என்பதாகச் சொல்லி இருக்கின்றார்.

இந்த வாக்கியங்களால் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் உண்மையும், சுயமரியாதை இயக்கத்தின் தத்துவமும் விளங்காமல் போகாது. வெறும் உத்தியோகத்தைப் பற்றி பார்ப்பனரல்லாதார் இயக்கம் பாடுபடுவதாக பார்ப்பனர்கள் நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் அவர்களுக்கு இதைப் பற்றி ஒரு சிறிதும் கவலை இருக்க நியாயமில்லை. ஏனெனில் எவ்வளவு பிரயத்தனப் பட்டாலும் சர்க்கார் உத்தியோகங்களிலிருந்து பார்ப்பனர்களை சுலபத்தில் விரட்டிவிட முடியாது. ஏனெனில் வெள்ளைக்காரர்களிடமிருந்து உத்தியோகம் பெறும் யோக்கியதையும், சவுகரியமும் அவைகளுக்கேற்றபடி நடக்கும் தன்மையும் பார்ப்பனரல்லாதார்களுக்கு இல்லை என்பது பார்ப்பனர்களுக்கு நன்றாய் தெரிந்த விஷயம்.

அன்றியும் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் எதிர்ப்பிரசாரம் செய்ய பார்ப்பனரல்லாத பல கூலிகள் தங்களுக்கு சுலபமாய் கிடைப்பார்கள் என்கின்ற தைரியமும் இருந்தது. ஆதலால் அவர்கள் இதை லட்சியம் செய்யவில்லை. ஆனால் இப்போது சுயமரியாதை இயக்கமானது பார்ப்பனச் சூழ்ச்சிகள் பலிக்க விடாமல் செய்வதோடு பார்ப்பனரல்லாத கூலிகளும் பார்ப்பனர்களோடு முன் போல அவ்வளவு தாராளமாய் சேருவதற்கில்லாமல் செய்வதால் இப்போது பார்ப்பனர்கள் பயந்து தீர வேண்டியதாய் விட்டது. அன்றியும் சுயமரியாதைக் கொள்கைகள் பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஆதாரமானதும் ஆணி வேரானதுமான பார்ப்பன மதத்தையும், பார்ப்பன சாமி கோயில்களையும் கழுத்துப் பிடியாய் பிடித்துக் கொண்டதால் பார்ப்பனர்கள் திமிருவதற்கு இடமில்லாமல் கண் பிதுங்க விழிக்கின்றார்கள். மேலும் இவ்வியக்கம் வெற்றி பெற்றது என்று சொல்லுவது, பார்ப்பனர்கள் ஆயிரக்கணக்காக அனுபவித்து வந்த தனி உரிமைகளைப் பிடுங்கி எல்லா மக்களையும் சமமாக்கித் தீர வேண்டியதாதலால் சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க முயற்சிக்க வேண்டியது பிராமண மகாசபையின் கடமையாகப் போய்விட்டது என்பதில் அதிசய மொன்றுமில்லை.

“கிராமங்களில் கூட இவ்வியக்கம் பரவிவிட்டது” என்று திரு ஆச்சாரியார் சொல்லுவதிலிருந்து நாம் சந்தோஷப்பட வேண்டியதானாலும் அது பரவ வேண்டிய அளவுக்கு ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இன்னும் பரவவில்லை என்பது நமது கருத்தாகும்.

தவிர உபன்யாச முடிவில் “சுயமரியாதை இயக்கம் பிராமணத் துவேஷ இயக்கமானதால் அவ்வியக்கத்தால் பிராமணர்களுக்கு கெடுதி ஏற்படாமல் தடுப்பதற்காக சைமன் கமிஷனை தஞ்சமடைய வேண்டும்” என்பதாக சொல்லி இருக்கின்றார்.

தாங்கள் மாத்திரம் எவ்வளவு இழிவானதும் அயோக்கியத்தனமானதுமான காரியங்களைச் செய்தாலும் பிராமணர்கள் என்பதும், தங்களைத் தவிர மற்றவர்கள் எவ்வளவு யோக்கியர்களானாலும் அவர்கள் தங்களது வைப்பாட்டி மக்கள் என்றும், சூத்திரர்கள் என்றும், சண்டாளர்கள் என்றும், தொடக் கூடாதவர்கள் என்றும், தெருவில் நடக்கக் கூடாதவர்கள் என்றும் பல மாதிரியான இழிவான வார்த்தைகளால் அழைப்பதும் கொடுமைப்படுத்தி வதைப்பதும் துவேஷமாகாமல் போவதும், இம்மாதிரி செய்வது யோக்கியமானதல்ல வென்று நாம் சொல்லுவது மாத்திரம் துவேஷமாவதுமானால் இந்த துவேஷம் உலக முழுமையும் ஏற்பட வேண்டும் என்றே ஆசைப்படுவதோடு இந்த துவேஷமில்லாத தமிழ் மக்கள் சுயமரியாதை அற்றவர்கள் என்றே சொல்லுவோம்.

திரு. ஆச்சாரியார் எந்தக் காரணத்துக்காக தங்கள் மீது துவேஷம் ஏற்படுவதாக சொல்லுகின்றாரோ அல்லது சுயமரியாதைக்காரர்கள் எந்த விஷயங்களைச் சொல்லிக் கொண்டு பார்ப்பனர்கள் மீது துவேஷம் உண்டாகும்படி செய்கின்றார்களென்று நம்புகின்றாரோ அந்தக் காரணங்களைப் பற்றி ஒரு சிறிதாவது கவனித்தாரா என்றும் அல்லது அதற்கு ஒரு சிறிதாவது சமாதானம் சொல்ல முற்படுகின்றாரா என்றும் கேட்கின்றோம்.

திரு. ஆச்சாரியாரின் கூட்டம் ஆயிரக்கணக்கான வருஷங்களாய் ஒரு உரிமையை அனுபவித்துக் கொண்டு வந்ததாலேயே அவர்களுக்கு அது நிரந்தரப் பாத்தியமாய் விடுமானால் அதனால் மனிதத் தன்மையை இழந்து கஷ்டப்படுகின்ற மக்கள் அவ்வுரிமையை பலாத்காரத்தால் பிடுங்கிக் கொள்வதல்லாமல் வேறு என்ன வழி அவர்களுக்கு இருக்கின்றது என்று கேட்கின்றோம். தங்களுடைய ஆயிரக்கணக்கான அனுபோக பாத்தியதையைச் சொல்லாமல் வேறு யோக்கியமான நியாயத்தைச் சொல்லி தங்கள் உரிமையை காப்பாற்றிக் கொள்ள வந்தால் அதற்கு நாம் தாராளமாய் இடம் கொடுக்கத் தயாராயிருக்கின்றோம். அப்படிக்கில்லாமல் வெறும் அனுபோக பாத்தியம் மாத்திரம் சொல்லுவதானால் அதை யார் ஒப்புக் கொள்ள முடியும்? ஏனெனில் பார்ப்பனர்கள் மீது நாம் சொல்லும் குற்றமே அதுதானேயல்லாமல் வேறு என்ன? அதாவது இந்தப் பார்ப்பனர்கள் வேதம் என்றும், மதம் என்றும் சாமி என்றும், பூதமென்றும் புரட்டுகள் கற்பித்து அவைகளின் பேரால் நம்மை ஏமாற்றி, நம்மைத் தாழ்த்தி, நம்மீது ஆயிரக்கணக்கான வருஷங்களாய் ஆதிக்கம் செலுத்தி வருகின்றார்களாதலால் அவ்வாதிக்கத்தை ஒழித்து நாம் விடுதலை பெற வேண்டும் என்றுதான் சொல்லி வருகின்றோம். இந் நிலையில் இருக்கின்ற நாம் எப்படி காலாவதி தோஷத்தை ஒப்புக் கொள்ள முடியும்?

அன்றியும் இவ்வாதிக்கத்தையும் உரிமைகளையும் நிலைநிறுத்திக் கொள்ள சைமன் கமிஷனை தஞ்சமடைந்து விஞ்ஞாபனம் செய்து கொள்ள வேண்டும் என்கின்றார்.

இதை, தான் மாத்திரம் தனியாய் சொல்வதாக இல்லாமல் பிராமண சபை, வருணாசிரம பரிபாலன சபை, வைதீக பிராமண சபை ஆகியவைகளும் இக்கொள்கைகளை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் சொல்லுகின்றார். இதிலிருந்து சைமன் கமிஷனின் சக்தி இவ்வளவென்பது விளங்காமல் போகாது.

எனவே சுயமரியாதை இயக்கத்தை குற்றம் சொல்லுகின்றவர்களும் சைமன் கமிஷனைப் பஹிஷ்கரிக்க வேண்டும் என்று கூலிப் பிரசாரம் செய்கின்றவர்களும் இதிலிருந்தாவது பாடம் கற்றுக் கொள்ளுவார்களாக!

(குறிப்பு : 05.08.1928 குடி அரசு தலையங்கத்தின் தொடர்ச்சி.

குடி அரசு - தலையங்கம் - 26.08.1928)

Pin It