நூல்களைத் தளமாகக் கொண்டு தமிழிலக்கிய வரலாற்றினை நோக்கும் இயல்பு நம்மிடையே இருந்து வந்துள்ளது. இலக்கிய வரலாறென்பது அந்த மொழியில் எழுதப்பட்ட எல்லா எழுத்துக் களினதும் வரலாறு ஆகும். கி.பி. 18ஆம் நூற்றாண்டுக்குப் பிறகான வரலாறு என்பது தமிழிலக்கிய வரலாற்றில் பல மாற்றங்களைக் கொண்டுவந்து சேர்த்தது.

காலனிய ஆட்சிக்காலத்தில் அச்சு ஊடகத்தின் வருகையால் அச்சுப் பண்பாடு உருப்பெறத் தொடங்கியது.அதாவது, தமிழில் முன்னர் நிலவாத இரு முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒன்று அனைவருக்குமான கல்வி, இரண்டாவதாகத் தொழில்முறை மாற்றங்கள். இவற்றில் கல்வி சார்ந்து உருவான எழுத்தறிவு, அது சார்ந்த வாசிப்புமுறை இவற்றின் அடிப்படையில் தமிழிலக்கிய வரலாறு பல்வேறு பரிணாமங்களை அடைந்தது. அதனூடாக எழுத்தறிவு வளர்ச்சிபெறத் தொடங்கியதுடன் இரு வாசிப்பு நிலை உருவாகியது.

காத்திரமான வாசிப்பு நிலை, ஜனரஞ்சக வாசிப்பு நிலை. இவ்விரு வாசிப்பு நிலையும் நம் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. அதன் பின்னணியில் அச்சு சார்ந்த செயல்பாடு தீவிரமடையத் தொடங்கின. பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் கிறித்துவப் பாதிரிமார்களின் பணியையும், சேவையையும் உள்வாங்குதல் அவசியம். சமயப்பணியை முதன்மையாகக் கொண்டு செயல்படத் தொடங்கிய இவர்கள் பள்ளிக்கூடங்களை உருவாக்கியதன் மூலம் ஒரு சாராரே பெற்று வந்த கல்வியை மற்ற பிரிவினரைப் பெறச்செய்ததன் மூலம் எழுத்தறிவைப் பரவலாக்கம் செய்கின்றனர். இவை ஒருபுறமிருக்க, அச்சு ஊடகத்தின் மூலம் தொடக்கக் காலகத்தில் கிறித்துவச் சமயக் கருத்துக்களும் கொள்கைகளும் சிறுபிரசுரங்களாகவும் துண்டறிக்கைகளாகவும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

இந்தப் பின்புலத்தில் தமிழில் உருவான அச்சிதழ்களின் வரலாற்றையும் அவற்றின் ஊடாகப் பெறப்படும் விடயங்களை உள்வாங்குதல் எளிது.

இதழ்களின் அடிப்படை தரவுகளைப் பட்டியலிடாமல், ஒட்டு மொத்த இதழியல் வரலாற்றை விரித்துரைக்காமல்(உலகளவில் இதழ்களின் தோற்றம்), தமிழ் இதழியல் வரலாற்றை மீள்வாசிப் பிற்கு உட்படுத்தியும், அதன்மூலம் உருபெறும் தமிழியல் வரலாறு குறித்தான நுண்ணாய்வாகவும் அமைகிறது. ‘தமிழ் இதழ்கள் தோன்றிய நாள்முதல் இன்றுவரை ஒருமித்து ஒருசேரத் தொகுத்திருக்கும் ஒரு நூல்நிலையத்திடமோ தனியார் இடமோ காணக்கிடைக்கவில்லை’ என்று மா.சு.சம்பந்தன் கூறியதற்கு எதிர்நிலையில் ரோஜா முத்தையா செட்டியாரும் அவருக்குப் பின் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் செயல்பட்டிருப்பதைப் பிரதானமாக இங்கு முன்வைக்கப்படலாம்.

ரோஜா முத்தையா சேகரித்த இதழ்களும் அவற்றின் ஊடாக பெறப்படும் தமிழியல் ஆய்விற்கான ஆதாரங்களின் மீதான கவன ஈர்ப்பாகவே இதனைக் கருதலாம். தமிழ் இதழியல் வரலாறு குறித்துக் காண்பதற்கு முன் ‘இதழ்’ என்ற சொல் செய்திப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகிய இரண்டையும் பொதுப்படக் குறிப்பதாக உள்ளது. சஞ்சிகைகளையும் நாளிதழ்களையும் மிகத் துல்லியமாகப் பிரித்து நோக்க வேண்டும். நாளிதழ்க்கும் சஞ் சிகைக்குமான தொடர்பியல் வேறுபாடுகளையும் அவதானித்துக் கொள்ளல் வேண்டும்.

தமிழ் இதழியல் வரலாறு என்பது கி.பி.19 நூற்றாண்டு முற்பகுதியில் தொடங்கி இன்றுவரை நீடித்துவந்திருப்பதைக் காணலாம். சுமார் 170 ஆண்டுகால இவ்விடைப்பட்ட காலங்களில் ஆயிரக்கணக்கான இதழ்கள் தோன்றியும் மறைந்தும் வந்து கொண்டிருக்கின்றன.

ஒரு இதழைத் தொடங்கி நடத்தி வருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அவ்வாறு வந்த இதழ்களை ஒருசேரத் தொகுத்து, பாதுகாப்பது என்பது அரசு சார்ந்த ஆவணக்காப்பகம் மட்டுமே முழுமையாகச் செய்யக்கூடிய ஒன்று. ஆனால், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அடைவில் (கணினி மூலமான பதிவில்)1842 தொடங்கி இன்று வரை சுமார் 3000த்திற்கும்(தமிழ், ஆங்கிலம் இரண்டும் சேர்த்து) மேற்பட்ட இதழ்களின் பட்டியலைப் பார்க்க முடியும்.

இதில் தமிழ் இதழ்கள் மட்டும் சுமார் 2500க்கும் மேற்பட்டவை. அவ்வெண்ணிக்கை என்பது சாதாரண விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது. தமிழ் இதழியல் வரலாற்றை மீள் கட்டமைப்பதற்கான தளமாக இந்நூலகம் விளங்கும் என்றால் அது மிகையாகாது. அவ்வனைத்து இதழ்களின் பெயர்களைப் பட்டியலிடுவது என்பதோ அல்லது அவற்றின் அடிப்படைத் தரவுகளை விவரணமுறையில் இங்கு கொடுப்பது என்பதோ சாத்தியமில்லாத ஒன்று. எனவே இந்நூலகச் சேகரிப்பின் ஊடாக இதுவரை அறியப்பட்டு வந்த இதழியல் வரலாற்றின் ஆய்வுக்கோப்புகள் குறித்தும் இனி எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டிய தமிழ் இதழியல் வரலாற்றிற்கான ஆய்வுக் களங்கள் குறித்தும் எடுத்தியம்புவது இக்கட்டுரையின் நோக்கம்.

இந்நூலகச் சேகரிப்பில் 1842இல் வெளிவந்தது முதல் இன்று வரையுள்ள அனைத்து இதழ்களையும் ஆராயவில்லை. தொடக்க கால இதழ்களின் மையப்போக்கு அக்காலக்கட்டங்களில் உருவான சமூகச் சிக்கல்கள் காலனிய ஆட்சிக்காலத்தில் இந்திய விடுதலைக்கு முன்பான காலகட்டம் எழுந்து இதழ்களின் போக்குக்குகள் மட்டுமே இங்கு முன்வைக்கப்படுகிறது.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகச் சேகரிப்பில் 1842 முதலே பதிவுகள் காணப்படுகின்றன. 1842 முதல் 1899 ஆம் ஆண்டு வரையிலான இதழ்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. இந்த ஐம்பத்தேழு ஆண்டுகளில் 14 இதழ்கள் மட்டுமே இச்சேகரிப் பில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இவை மீதான பதிவுகள் என்பது வரலாற்றில் மிகக் குறைவே. 1900 முதல் 1942 வரையிலான காலக் கட்டத்திலேயே அதிகளவில் இதழ்கள் தோற்றம் பெற்றுள்ளன. சுமார் 400க்கும் மேற்பட்ட இதழ்களின் பெயர்களைப் பட்டியலிட முடியும். ஒரு நூற்றாண்டுக் கால அளவில் இதழ்களின் போக்கைக் கீழ்க்கண்டவாறு பகுத்துக்கொள்ளலாம்.

-      கிறித்துவ சமய இதழ்கள்

--     பெண்கள் நடத்திய இதழ்கள்

--     சைவம் / வைணவம் சார்ந்த சமய இதழ்கள்

--     தமிழ்ச்சங்கங்களின் வாயி லாக வெளி வந்தவை.

--     இந்திய விடுதலையை முன்நிறுத்திய இதழ்கள்.

--     மொழி, தமிழ்தேசீயம் தனித்தமிழ் சார்ந்த இதழ்கள்

- -    பகுத்தறிவு இதழ்கள்

- -    இந்துத்துவ சாதீய இதழ்கள்

- -    விளிம்புநிலை சார்ந்த இதழ்கள்

- -    வெகுசன, அறிவியல், மருத்துவ இதழ்கள்

-      அயலக_புலம்பெயர்ந்தோர் இதழ்கள்

என இவ்வாறு சில புரிதலுக்காக 1842 முதல் 1942 வரையிலான இதழ்களின் பின்புலத்தை வகைப்படுத்தலாம். இவ்வாறான பகுப்பு முறை அவ்விதழ்களின் அரசியல் கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டும், அவை வெளிவந்த மட்டங்கள் சார்ந்த புரிதலின் அடிப்படையிலேயே பகுத்துக் கூறப்பட்டுள்ளன.

ஒரு நூற்றாண்டு கால இதழியல் வரலாற்றை ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்க்கும்போது சில வினாக்களை முன்வைக்க வேண்டியுள்ளது.

பெண் இதழியலாளர்கள் குறித்தும் காலனிய காலகட்டத்தில் பெண்களுக்கான கல்வி என்பது முன்வைக்கப்பட்டது. குறிப் பாக பெண்களுக்கான இதழ்களும் பெண்களே இதழ்களை நடத்தியும் வந்துள்ளனர். இதழி யல் வரலாற்றில் இன்று பெண்களால் நடத்தப் படும் இதழ்கள் குறைவே. பெண்ணியம் குறித்து தீவிரமாகப் பேசப்பட்டு வரும் நிலையில் பெண்கள் இதழ்களை ஏன் நடத்தவில்லை? என்பது காத்திரமாக முன்வைக்க வேண்டிய கேள்வி.

- 1900க்குப் பிறகே பெரும்பாலான இலக்கிய இதழ்களும் வெளிவரத்தொடங்கின. இவை பாடசாலையின் வருகையால் என்பது ஒருபுறமிருந்தாலும் இதழியல் தடைச்சட்டம் வந்தபிறகு பெரும்பாலான இதழ்கள் தங்களை இலக்கி யம், சமயம், சாதியம் சார்ந்து மாற்றிக்கொண்டன.

- இரண்டாம் உலகப்போர் காலக்கட்டங்களில் ஏற்பட்ட தாள் தட்டுப்பாடு களில் பெரும்பாலான இதழ்கள் நின்றுவிட்டன. இருப்பினும் ஒரு சில சமூகம் பிரித்தானிய அர சிடம் கொண்ட உறவால் தங்களின் இதழ்களைத் தடையற வெளியிட்டனர். குறிப்பாக அதில் நகரத்தார் சமூகத்தின் செயல் போக்கு ஊன்றி கவ னிக்கத் தக்கது. பார்ப்பனிய, வேளாள சமூகத்திற்குப் பிறகு தங்களை பலதுறைகளிலும் நிலை நிறுத்திக் கொண்டவர்கள். பதிப்புத் துறையிலும் இதழியல் துறையிலும் வடிவ ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தனர்.

இவ்வாறு தொடக்ககால இதழ்களின் செல்நெறிகளை மேலோட்டமாக முன்வைத்த பின்னர் தமிழ் இதழியல் வரலாற்றைக் கட்டமைப்ப தில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் எவ்வாறான செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது என்பதைக் காணலாம். ரோஜா முத்தையா செட்டியாருக்குப் பிறகான இதழ்களின் சேக ரிப்பு என்பது அந்நிறுவன செயல்பாடுகளில் அளவிடற்கரியது. ஆனால், இத்தொகுப்பில் இதழ்கள் அனைத்தும் முழுமை பெற வில்லை. அதாவது ஒரு இதழின் ஆரம்பம்முதல் இறுதிவரை முழுத் தொகுப்பும் இல்லை. இந்நூலகச் சேகரிப்பில் விடுபடல்கள் உள்ளன. 3000 இதழ்களில் ஒரு தலைப்பிலான இதழ்கள் கூட முழுமையாக இல்லை என்று உதவி நூலகர் திருமதி. மாலா அவர்கள் தெரிவித்தனர்

ஆனால், அவை எதிர்காலத்தில் அவ்வாறான சிக்கல்கள் ஏற்படாது என்பதை அந்நூலககச் செயல்பாடுகள் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக Library Survey மூலம் விடுபட்ட அனைத்து இதழ்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்தச் செயல்பாடு தமிழ் இதழியல் வரலாற்றை கட்டமைப்பதற்கான தளமாகத் திகழ்வதற்கான அவதானிப்பு ஆகும்.

மேலும், இதழ்களை அடைவுப்படுத்துவதோடு இதழ்களில் வரும் கட்டுரைகளையும் அடைவுப் படுத்தி வருகின்றனர். இவ்வாறான பணிகள் இதழியல் ஆய்வாளர்களின் ஆய்வுக் களத்தை விரிவுபடுத் துணைபுரியும்.

இதழியல் தொகுநிலை ஆய்வுகளும் நவீன தமி ழிலக்கியத்திற்கான முக்கிய ஆக்க வடிவங்களான சிறுகதை, நாவல், கவிதை, ஆகியனவற்றின் வரலாறு தொக்கி நிற்பதை இக்கூறுகள் உணர்த்துகின்றன.

வெகுசன இதழ்களின் மீதான ஆய்வுகள் என்பது கொண்டுள்ள வாசக மட்டங்களையும் உள்ளடக்கியதாகவே நிகழ்த்தப்பட வேண்டும். மேலும், அவற்றின் ஊடான விளம்பரங்கள் , குறிப்புகள் போன்ற வெகுசன மற்றும் வியாபாரம் இவ்விரண்டின் உள்ளார்ந்த விடயமாகக் கொள்ளல் வேண்டும். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், போன்ற அயல்நாடுகளில் தமிழ் இதழியல் வளர்ந்த வரலாற்றிற்கான ஆதாரங்கள் சேகரிக்கப் படவில்லை அல்லது குறைந்தளவே சேகரிக்கப்பட்டுள்ளன எனறே செல்ல வேண்டும்.

இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் காண்கையில் தனி மனித சேகரிப்பின் ஊடாக நிகழ்ந்த வரலாற்று ஆவணங்களின் மீட்டுருவாக்கத்தின் குறியீடும், நிறுவனமயமாக்கப்பட்டதன் எதிர்விளைவாகக் கணினி பயன்பாட்டின் ஊடான தமிழியல் மற்றும் இதழியல் ஆய்வுப் போக்குகளை மாற்று வழிகளை நோக்கிச் செலுத்தவும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் மீதான கவன ஈர்ப்பாக இக்கட்டுரையைக் கொள்ளலாம்.

பின்னிணைப்பு

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அடைவிலுள்ள 1842 - - 1942 வரை வெளிவந்த இதழ்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இதழ்களின் பட்டியல் மட்டுமே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  இதழ்        தொடக்க ஆண்டு

       உதயதாரகை   1841

       தத்துவபோதினி 1864

       ஜநவிநோதிநி  1869

       தத்துவவிவேசினி      1886

       மாதர் மித்திரி  1887

       விவேகச் சிந்தாமணி   1891

       மாதர் மனோரஞ்சனி   1899

       விவேகபாநு   1901

       ஞானசாகரம்   1902

       செந்தமிழ்     1902

       பிரஜாநுகூலன் 1904

       நல்லாசிரியன்  1905

       தமிழகம்       1905

       ஒரு பைசாத் தமிழன்  1907

       விவேகபோதினி       1908

       வேதாந்த தீபிகை     1911

       வைசியமித்திரன்       1911

       பெண்கல்வி    1912

       சிந்தாந்தம்            1912

       ஞானபாநு            1913

       வன்னிகுல மித்திரன்   1913

       கலைமகள்           1913

       நாட்டுக்கோட்டை வைசியம்   1914

       வைத்திய கலாநிதி     1914

       வர்த்தகமித்திரன்       1915

       சைவம்        1915

       ஆனந்தபோதினி      1915

       விவேகோதயம் 1916

       மனோரஞ்சனி  1917

       தமிழர் நேசன்  1917

       நாவல்        1917

       தருமசீலன்           1918

       பாலவிநோதினி 1918

       தமிழ்நாடு     1920

       தனவைசிய ஊழியன்  1920

       தத்துவ இஸ்லாம்      1921

       தாருல் இஸ்லாம்      1922

       குமரன் 1922

       புஸ்தக சமாச்சாரம்    1922

       செந்தமிழ்ச் செல்வி    1923

       ஆரோக்கிய தீபிகை   1924

       சிந்தாமணி           1924

       பஞ்சாமிர்தம்   1924

       பாலபாரதி            1924

       தமிழர்        1925

       குடிஅரசு             1925

       தமிழ்ப்பொழில் 1925

       கருணிகமித்திரன்      1925

       ஆனந்தவிகடன்       1926

       அருட்பிரகாசம் 1927

       சிவநேசன்            1927

       கள்வர் கோமான்      1928

       கலாநிலயம்    1928

       சுதேமித்திரன்  1929

       வீரசைவம்            1929

       யாதவமித்திரன் 1929

       விமோசனம்    1929

       செந்தமிழ்ப்பாநு       1929

       பித்தன்        1929

       தனவணிகன்   1930

       சுதந்திரச் சங்கு 1930

       ஈழகேசரி ஆண்டு மடல்      1930

       காந்தி         1931

       குலாலமித்திரன் 1931

       கலைமகள்           1931

       பிரசண்டவிகடன்      1933

       சந்ரோதயம்    1933

       நாரதர்               1933

       மணிக்கொடி   1933

       சித்தர் களஞ்சியம்     1934

       தமிழ்ப்பெருமாட்டி    1934

       கொங்குமலர்   1934

       கைத்தொழில்  1934

       புதுஉலகம்           1935

       சினிமா உலகம் 1935

       ஆடல் பாடல் 1935

       பகுத்தறிவு            1935

       ஸில்வர் ஸ்கிரீன்      1936

       பாலர் கல்வி   1936

       மாதர் மறுமணம்      1936

       சினிமா ரஸிகன்       1936

       ஜெயபாரதி    1936

       கிரஹலக்ஷ்மி   1937

       ஜோதி        1937

       குடிநூல்              1937

       வானொலி            1938

       தமிழ் விவசாய சஞ்சிகை      1938

       சக்தி          1939

       காவேரி       1941

       கல்கி         1941

       கலாமோகினி  1942

       வசந்தம்              1942

மொத்த இதழ்கள்: 92

 (கணேஷ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வில் நிறைஞர் பட்டம் பெற்றவர். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் திட்ட உதவியாளராகப் பணிபுரிகிறார்.)

Pin It