நேர்காணல் : தி.க.சி.
கடந்த முப்பது ஆண்டுகளாகக் கன்னித் தமிழுக்கு நல்ல தொண்டு ஆற்றிவரும் திரு. நா. வானமாமலை அவர்கள்
ஒரு நிறைகுடம்! ஆடம்பரமோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல், தன்னடக்கத்துடன் பணிபுரியும் தலைசிறந்த தமிழ்மகன்.
சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை ஆழ்ந்து அகன்ற தமிழ்ப் புலமையுடைய இவர், “பேராசிரியர் நா. வானமாமலை” என்று அன்புடனும், பெருமதிப்புடனும் அழைக்கப் பெறுவது பொருத்தமே. எம்.ஏ.எல்.டி. பட்டம் பெற்று, நெல்லையில் ஒரு தனிக் கல்லூரியின் முதல்வராக விளங்கும் இவர், முத்து முத்தாக முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும், நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.
1937இல் ‘மணிக்கொடி’யில் மொழிபெயர்ப்புக்களையும் கட்டுரைகளையும் படைக்கத் தொடங்கிய இவர், தமிழகத்தின் தலைசிறந்த ஆராய்ச்சி வல்லுநர்களில் ஒருவராகவும், தமிழக முற்போக்கு எழுத் தாளர்களின் பெருமதிப்பைப் பெற்றவராகவும் திகழ்கின்றார். இவர் மேனாட்டு இலக்கியங்களையும், விஞ்ஞான நூல்களையும் மிகச் சிறப்பாகத் தமிழாக்கம் செய்துள்ளார். சொந்தமாக விஞ்ஞானக் கட்டுரைகளையும் விமர்சனக் கட்டுரைகளையும் தித்திக்கும் தமிழில் எழுதியுள்ளார். தமிழிலும் விஞ்ஞானத்திலும் தனித் தேர்ச்சி யுடைய இவர், கிராமிய இலக்கியங்களைப் பிரபலப்படுத்துவதிலும், அவற்றின் சரித்திர உண்மைகளை ஆதாரப் பூர்வமாக எடுத்துக்காட்டுவதிலும் மிக வல்லவர்.
நாட்டுப் பாடல்கள், கதைகள், வரலாறுகள் இவற்றைச் சேகரிப்பதிலும், ஆராய்வதிலும், பிரசுரிப்பதிலும் இவர் அளவிறந்த ஆர்வமுடையவர். ‘நாட்டுப் பாடல் ஆராய்ச்சிக்கோர் நா. வானமாமலை’ என்று சொன்னால் அது தவறாகாது.49 வயதான நா. வானமாமலை, காட்சிக்கு எளியவர்; கருணை உள்ளம் படைத்தவர்; இளம் எழுத்தாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் வற்றாத உற்சாகமும், ஆதரவும் அளிப்பவர். அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், சமுதாயம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் தெள்ளத் தெளிந்த முற்போக்குக் கருத்துக்கள் கொண்டவர். அவற்றைப் பிறருக்கு மிக எளிதாக, நெஞ்சில் பதியும்படியாக, விளக்கும் ஆற்றல் பெற்றவர்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் துணைத் தலைவரும், புதுமைப் படைப்பாளிகள், ரசிகர்களின் தோழரும், கிராமியக் கலை இலக்கிய அறிஞரும், வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சிகளில் பெருவிருப்பம் கொண்டவரும், விஞ்ஞான சோஷலிசச் சிந்தனையாளரும், முற்போக்கு இயக்கங்களின் தலையாய ஆதரவாளரும், நாட்டுப்பற்று, மொழிப் பற்று, உலகப் பற்று ஆகியவற்றிலே நீந்தித் திளைப்பவரும் ‘தீப’த்தின் வளர்ச்சியில் ஆர்வமிக்க வருமான திரு.நா.வானமாமலை அவர்களுடன் நடைபெற்ற உரையாடலைத் ‘தீபம்’ வாசகர்களுக்குப் பணிவன்புடன் வழங்குகிறேன்.
உங்களுக்கு எழுத்தார்வம் எங்ஙனம் உண்டாயிற்று? தங்களை எழுதத் தூண்டியது யாது?
என்னுடைய பள்ளிப் பருவத்தில் அரசியல் ஆர்வமே மாணவர்களது உள்ளங்களைக் கவர்ந்தது. எனவே இலக்கியத்தில் பாரதியும், தாகூரும், பிற இந்திய எழுத்தாளர்களும் இளைஞர்களின் ஆதர்ச எழுத்தாளர்களாகப் போற்றப்பட்டனர். பிரெஞ்சுப் புரட்சியும், அமெரிக்க விடுதலை இயக்கமும், ருஷியப் புரட்சியும் விடுதலையில் ஆர்வங் கொண்டவர்களுக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தன. என்னைப் பொருத்தவரை இவை தீவிர மனிதாபி மானத்தின் முதிர்ச்சியாகவே காட்சி தந்தன. எனவே டால்ஸ்டாய், டிக்கன்ஸ், விட்மன் ஹியூகோ முதலிய ஆசிரியர்கள் தம் எழுத்துக்களின் மூலம் என் உள்ளத்தை ஆட்கொண்டனர். அவர்களின் எழுத்துக்களைத் தமிழகத்தில் பரப்ப வேண்டும்; அவர்களின் படைப்புக்களைப் போல மனிதனை உயர்த்தும் எழுத்தோவியங்கள் தமிழில் தோன்ற வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. இதன் விளைவாக டால்ஸ்டாயின் கதை களையும், குறுநாவல் நாடகம் ஒன்றையும் நான் மொழிபெயர்த்தேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவர்களது படைப்புக்களைப் பற்றி ஒன்றில் ஆராய்ச்சிக் கட்டுரையும் எழுதினேன். பொதுவாக நான் மாணவனாக இருந்த காலத்தில் எழுச்சி பெற்ற மறுமலர்ச்சி இயக்கம் என்னை எழுதத் தூண்டியது.
தங்களுடைய முதல் படைப்பு எந்தப் பத்திரிகைகளில் வெளிவந்தது?
சிறு நகைச்சுவைத் துணுக்குகள் ஆனந்த விகடனிலும் காந்தியிலும் வெளிவந்தன. நான் எழுதிய முழுக் கட்டுரையொன்று மணிக்கொடியில் வெளிவந்தது. உலகப் புகழ்பெற்ற சில நாவலாசிரியர் களைப் பற்றிப் பக்குவம் பெறாத ரசிகனது விமர்சனமே அது. தலைப்பு நினைவில் இல்லை.
தாங்கள் என்னென்ன இலக்கியத் துறையில் பணிபுரிந்து இருக்கிறீர்கள்?
என்னுடைய எழுத்துப் பணியை ஐந்து தலைப்புக்களின் கீழ் பிரிக்கலாம். 1) இலக்கிய நூல்களின் மொழிபெயர்ப்பு, 2) விஞ்ஞான நூல்களின் மொழிபெயர்ப்பு, 3) தமிழ்நாட்டு வரலாறு, பண்பாடு முதலியன பற்றி ஆராய்ச்சி 4) நாட்டுப் பாடல் தொகுப்பும் ஆராய்ச்சியும் 5) இலக்கிய விமர்சனம்.
நான் எழுதத் தொடங்கிய காலத்தில் மாபாஸான், செகாவ், கால்ஸ் வர்த்தி, டால்ஸ்டாய் ஆகியோரின் கதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். இவற்றில் சில மணிக்கொடியில் வெளிவந்தன. 1939ல் டால்ஸ்டாயின் நாடகமொன்றை ‘இருளின் வலிமை’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டேன். எனது மொழி பெயர்ப்புத் திறனைப் பத்திரிகைகள் பாராட்டியதால் நான் ஊக்கம் கொண்டு மேலும் சில நூல்களை மொழிபெயர்த்தேன். “குரூயிட்ஸர் சொனேடா”, “குடும்ப இன்பம்”, “உயிருள்ள பிணம்” ஆகிய டால்ஸ்டாயின் மூன்று குறு நாவல்களைத் தமிழாக்கம் செய்தேன். “குடும்ப இன்பம்” மட்டும் வெளியிடப்பட்டது. மற்றும் இரண்டு நாடகங் களை வெளியீட்டாளர் ஒரு நண்பரின் மூலம் பெற்றுக் கொண்டனர். அவர்கள் தொழிலை நிறுத்தி விடவே இவ்விரண்டு நாடக மொழி பெயர்ப்பு களும் வெளியிடப்படவில்லை. கையெழுத்துப் பிரதிகளும் போன இடம் தெரியவில்லை. இது போன்றே கால்ஸ்வர்த்தியின் “முதலும் முடிவும்” என்ற நாவலை நான் மொழிபெயர்த்து அதே பதிப்பகத்தாரிடம் கொடுத்தேன். அதுவும் போன இடம் தெரியவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின்னர் வேறொருவர் மொழிபெயர்ப்பாக வேறொரு பதிப்பகம் அதனை வெளியிட்டு விட்டது.
விஞ்ஞான உண்மைகளைத் தமிழில் எழுத வேண்டுமென்ற எண்ணம் எளிய முறையில் ஹால்டேன் எழுதி வந்த கட்டுரைகளைப் படித்த பொழுது எனக்குத் தோன்றியது. அவருடைய கட்டுரைகள் சிலவற்றை மொழிபெயர்த்து ‘சக்தி’யில் வெளியிட்டேன். சக்தி ஆசிரியர்தான் என் முதல் மொழி பெயர்ப்பு நூலையும் வெளியிட்டவர். பின்னர் ஐன்ஸ்டீன் தத்துவம், லைசெய்கோ தத்துவம், ரசாயன தத்துவங்கள் ஆகிய பல பொருள்கள் பற்றி சராசரித் தமிழரது விஞ்ஞான அறிவை மனதில் கொண்டு எளிய முறையில் எழுதி பல பத்திரிகைகளில் வெளியிட்டேன். நான் மொழிபெயர்த்த விஞ்ஞான நூல்களில் முக்கியமானவை, 1. உடலும் உள்ளமும் (பாவ்லாவின் கட்டுரைத் தொகுப்பு), 2. மருத்துவ இயல் விஞ்ஞான வரலாறு (பிரிட்லண்டு), 3. விண்யுகம் (ஸ்டீபன் ஹெய்ம்), 4. உயிரின் தோற்றம் ஏ.டீ. ஓபாரின் எழுதி தமிழில் விஞ்ஞானத்தைக் கற்பிக்க முடியும் என்பதை விளக்கி இரண்டு சிறு புத்தகங்கள் எழுதினேன். கல்லூரியில் தமிழைப் பயிற்சி மொழியாக்குவது சாத்தியமே என்பதை நிரூபிக்க என்னுடைய முயற்சியாலும் நியூ செஞ்சுரி வெளியீட்டாளரின் ஆதரவாலும், ‘தமிழில் முடியும்’ என்ற கட்டுரைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. அதற்கு முன்னுரையும், இரசாயனம் என்ற பகுதியையும் நான் எழுதி இருக்கிறேன். பல விஞ்ஞானத் துறைகளில் தோன்றியுள்ள புதிய கருத்துக்களைத் தமிழில் வெளியிடுவதும் நவீன விஞ்ஞானக் கருத்துக்களைத் தமிழ் நாட்டில் பரப்புவதும் விஞ்ஞானக் கண்ணோட்டத்தையும் தர்க்க முறையையும் நமது மக்களிடையே வளர்ப்பதுமே இத்துறையில் நான் செய்து வரும் பணி களின் நோக்கம். எனவேதான் பழைய கொள்கைகளைப் புரட்சிகரமாக மாற்றிய நவீன, விஞ்ஞானக் கொள்கைகளை விளக்க நான் எனது மொழிபெயர்ப்புக்கள் கட்டுரைகள், நூல்கள் மூலம் முயன்று வருகிறேன்.
முதல் இரண்டு துறைகளைப் பற்றி சொல்லி விட்டேன். அதற்குச் சிறிதும் தொடர்பில்லாத வரலாறு பண்பாடு ஆகிய துறைகளில் எனக்கு ஈடுபாடு ஏற்படக் காரணம் என்ன?
இளமையிலேயே எனக்குத் தமிழ் இலக்கியத்தின் அறிமுகம் கிட்டியது. ஆங்கில இலக்கியத்தையும், தமிழ் இலக்கியத்தையும் ஆர்வத்தோடு கற்று வந்தேன். பாரதி, வ.வே.சு. ஐயர் முதலியோரது எழுத்துக்கள் எனக்கு ஒப்புநோக்கி விமர்சன முறையைக் கற்பித்தது. பிளக்கனாவ், காட்வெல், தாம்சன் முதலியோரது விமர்சன நூல்கள் எனக்கு சமுதாய வரலாற்று முறையில் விமர்சனப் பார்வையை ஏற்படுத்தின. இக்கண்ணோட்டம் உருவாகி வரும் காலத்தில் நான் தமிழ் நாட்டு இலக்கியங்களை ஆராயத் தொடங்கினேன். முற்கால இலக்கியங் களை, அவை எழுந்த சமுதாயச் சூழ்நிலையில் அல்லாமல் கற்றுக் கொள்ள முடியாதென உணர்ந்தேன். சமுதாய மாறுதல்களை அறிய சமுதாய வரலாறு தேவை. ஆகவே ஏற்கனவே வெளிவந்திருந்த தமிழ்நாட்டு வரலாற்று நூல்களைப் படித்தேன். அவற்றில் இன மேம்பாட்டுக் கொள்கையின் அடிப்படையில் வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்தும் ஆதாரமற்ற பல கூற்றுக்களைக் காட்டியும் தமிழர் இனத்தின் தொன்மையை நிலைநாட்டும் முயற்சியைக் கண்டேன். மறுபுறம், ஆங்கில ஆசிரியர்களின் “பிரித்தாளும் சூழ்ச்சிக் கொள்கையை” கடைபிடித்து எழுதப்பட்ட வரலாறுகளையும் படித்தேன். இவற்றால் தமிழ்நாட்டு வரலாற்றை அறிந்து கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். எனவே சமுதாய வளர்ச்சியைத் தொடர்ந்து விளக்கும் முறையில், பொருள் உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியால், சமுதாய அமைப்பு மாறிவரும் முறையை விளக்க வரலாறு எழுதப்பட வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உண்டாயிற்று. இதன் விளக்கமாகத்தான் “தமிழர் வரலாறு தேவை”, “ஆரிய திராவிடர்”, “மூடு திரை” (சைவ சமணப் போராட்டம்) “சோழர் காலத்திய அறப்போர்கள்”, “வலங்கை, இடங்கைப் போராட்டம்” முதலிய கட்டுரைகளை எழுதி வெளியிட்டேன். இவ்வாறு தான் வரலாற்றிலும் பண்பாட்டிலும் எனக்கு ஈடுபாடு உண்டாயிற்று. என்னுடைய தற்காலத் திட்டம் வருமாறு:
1. “தமிழ்நாட்டுச் சமுதாய வரலாறு”, 2. “தமிழ்நாட்டில் சாதி அமைப்பின் வரலாறு” என்ற நூல்களை எழுத வேண்டும். தற்பொழுது இரண்டாவது நூலுக்கு ஆதாரங்கள் சேகரித்துக் குறித்து வைத்திருக்கிறேன்.
தற்பொழுது அதிகமாக என் மனத்தைக் கவர்ந்திருப்பது நாட்டுப்பாடல் இலக்கியம். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் என்னைத் தலைவர் பி.ஸி. ஜோஷி அவர்கள் அழைத்துப் பேசினார். “இந்திய நாட்டுப் பாடல் செல்வம்” என்ற தலைப்போடு ஒரு நூல் எழுதப் போவதாகவும் தமிழ்நாட்டு - நாட்டுப்பாடல்களில் சிலவற்றைச் சேகரித்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தர வேண்டும் என்றும் உரிமையோடு அவர் கட்டளையிட்டார். அதற்கு முன்னால் “பள்ளுப்பாட்டு”, “குறவஞ்சி” முதலிய இலக்கியங்களை நான் ரசித்து படித்ததுண்டு. அவற்றின் ஆதாரங்கள் நாட்டுப் பாடல்கள்தாம் என்று நினைத்ததும் உண்டு. ஆனால் வெளிவந்தவற்றைப் படித்ததோ, அவற்றைப் பற்றிச் சிந்தித்ததோ இல்லை. அவரைச் சந்தித்த பின் இத்துறையில் ஈடுபடுவது தமிழர் பண்பாட்டையும் வரலாற்றையும் ஆராய் பவருக்கு அவசியமான தொன்று என்று முடிவுக்கு வந்தேன். ஏனென்றால் நாட்டுப் பாடல்கள் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக எழுதப் படிக்கத் தெரியாத கிராம மக்களது கலைப் படைப்புக்கள். அவர்களது உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் இப்பாடல்கள் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளனவென்றும் வரலாற்று நிகழ்ச்சிகளைப் பற்றிய அவர்களது கண்ணோட்டம், அவர்கள் பாடும் கதைப் பாடல்கள் மூலம் வெளி யாகின்றனவென்றும் எனக்குத் தோன்றியது. எனவே இவற்றைச் சேகரித்து வெளியிடுவதும் ஆராய்வதும் தமிழிலக்கியத்தின் துறைகளில் மிக முக்கியமானதென்று நான் உணர்ந்தேன். கலை இலக்கியப் பெருமன்றம் முதன் முதலில் அமரர் ஜீவா அவர்கள் முயற்சியால் அமைக்கப்பட்ட பொழுது எனது ஆர்வத்தைச் செயல்படுத்த வாய்ப்பு ஏற்பட்டது. நாட்டுப் பாடல்களை இசை யோடு பாடக் கூடியவர்களும், பல நாட்டுப் பாடல் களைச் சேகரித்து வெளியிட வாய்ப்பில்லாமல் மூலையில் போட்டு வைத்திருந்தவர்களும் எனப் பல நண்பர்கள் கோவைக்கு வந்திருந்தார்கள். அவர்களை ஒரு குழுவாக அமைத்து நாட்டுப் பாடல்களைச் சேகரித்து வெளியிட முடிவு செய்தோம். அம்முடிவின்படி பல பாடல்கள் இக் குழுவினரால் சேகரிக்கப்பட்டன. அவற்றை இரண்டு நூல்களாக வெளியிட்டோம். அவைதான் ‘தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்’, ‘தமிழ்நாட்டுப் பாடல்கள்’ ஆகிய இரண்டு தொகுப்பு நூல்கள். இவை தவிர ஏட்டுப் பிரதியாகக் கிடைத்த கட்டபொம்மன் கதைப்பாடலையும் நான் வெளியிட்டேன். இவையனைத்தையும் லாபக் கணக்கில் பார்க்காமல் தமிழ்த் தொண்டையே முதன்மையாகக் கருதி வெளியிட்டவர்கள், நியூ செஞ்சுரி பதிப்பகத்தார்.
நாட்டுப் பாடல் இலக்கியத் துறையில் செய்ய வேண்டுவன யாவை?
இதுவரை தமிழ் நாட்டுப் பாடல் தொகுப்பு வகையில் சுமார் 17 நூல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. சுமார் 100 பக்கங்கள் கொண்ட, சிறு நூலிலிருந்து சுமார் 700 பக்கங்கள் கொண்ட தமிழர் நாட்டுப் பாடல்கள் வரை தொகுப்பு நூல்கள் கடந்த 15 ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. இது ஒரு நல்ல ஆரம்பமாகும். ஆனால் எல்லா மாவட்டங்களிலுமுள்ள பாடல்கள் தொகுக்கப்படவில்லை.
இவற்றைச் சேகரிக்க அரசாங்கத்தினரால் அமைக்கப்பட்டிருக்கும் நாட்டுக் கலைகள் - குழு முயற்சி செய்தல் வேண்டும். தற்பொழுது இம் முயற்சியில் ஈடுபட்டிருப்போரை இக்குழுவில் சேர்த்து அவர் களுக்குச் சேகரிப்பு முறைகளில் பயிற்சியளித்து நாட்டுப் பாடல்கள் சேகரிப்பில் ஈடுபடுத்த வேண்டும். சேகரித்தவற்றை நன்றாகப் பாகுபடுத்தி தொகுத்து வெளியிட வேண்டும்.
நாட்டுக் கதைப்பாடலைச் சேகரிப்பதிலும் வெளியிடுவதிலும் எவ்வித முயற்சியும் மேற் கொள்ளப் படவில்லை. அவை இன்னும் சிறிது காலத்தில் மறைந்துவிடும். ஐவர் ராஜாக்கள் கதை, பூலித்தேவன் சிந்து, மருதுபாண்டியன் போன்ற வரலாற்றுக் கதைப்பாடல்கள் ஏட்டுப் பிரதிகளாகக் கிடைக்கின்றன, அவற்றை உடனே பெயர்த்தெழுதி வெளியிட வேண்டும். சமூகக் கதைப்பாடல்களுள், முத்துப்பட்டன் கதை, சின்னத்தம்பி கதை, மதுரை வீரன் கதை முதலியன ஏட்டுப் பிரதிகளாகவும், பழைய அச்சுப் பிரதி களாகவும் கிடைக்கின்றன. அவை அச்சிடப்பட வேண்டும். அதன் பின்னர்தான் இத்துறையில் ஆராய்ச்சி தொடங்க வேண்டும். இவ்வெளியீட்டு வேலையிலும் ஆராய்ச்சிப் பணியிலும் தமிழ் நாட்டு அரசாங்கமும் பல்கலைக்கழகங்களும் ஈடுபடுதல் வேண்டும்.
இலக்கிய மொழிபெயர்ப்புத் துறையைப் பற்றித் தங்கள் கருத்துக்கள் என்ன?
மூல ஆசிரியரின் நூல்களை நன்கு ரசித்துப் படித்தவர்கள் தமிழ் நடை கைவரப் பெற்றவர் களாய் இருந்தால் தமிழாக்கம் நன்றாய் அமையும். ஒரு நூலை மொழிபெயர்ப்பவர் அதனை மட்டும் படித்தவராயிருந்தால் மூலநூல் ஆசிரியரின் உள்ளத்தை அறிந்து மொழிபெயர்க்க முடியாது. மூல நூலை எழுதிய ஆசிரியரின் பிற நூல்களையும் அவர் படித்திருக்க வேண்டும். மூலநூல் ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் வாழ்ந்த காலக் கட்டத்தின் இலக்கிய வரலாற்றையும் அறிந்திருக்க வேண்டும். ஒரு நூலை மொழிபெயர்ப்பவர் இவ்வளவு முயற்சியும் மேற்கொள்ளாவிட்டால் மொழிபெயர்ப்பின் மூலம் மூலநூல் ஆசிரியரது படைப்புத் திறனை வேற்று மொழியில் வெளிப் படுத்த முடியாது. தாகூரின் நூல்கள் தமிழில் நன்றாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அது போல மேனாட்டு ஆசிரியர்களின் நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதாகச் சொல்ல முடியாது. 25 ஆண்டுகளுக்கு முன் டால்ஸ்டாய் பெயர்ப்புக்களின் தரம் அதற்குப் பிற்பட்ட நூல்களில் மொழி பெயர்ப்புக்களில் காணப்படவில்லை. மூலநூலைச் சுருக்கி மொழிபெயர்ப்புச் செய்கிறார்கள். மூலநூலின் அடிப்படை உணர்ச்சியையும், கதைக்கருவையும் சிதையாமல் அத்தமிழாக்கம் கொண்டு வந்து விடுமானால் இம்முறையை நாம் வரவேற்கலாம். ஆனால் பெரும்பாலும் அப்படி வருவதில்லை. அதனால் மூல நூல் ஆசிரியரின் பெருமைக்கு இழுக்கு ஏற்படுகிறது. மொழிபெயர்ப்பதால் தம்மை மூலநூலாசிரியரோடு இணைத்துக் கொண்டு பெருமைப் பெறுகிறோமென்றெண்ணிக் கொண்டு பல மொழிபெயர்ப்பாளர்கள் மூல நூலாசிரியரையே சிறுமைப்படுத்தி விடுகிறார்கள். மூலநூல் எழுதப்பட்ட மொழியால் ரசித்துப் படிக்கும் திறனும் மொழிபெயர்க்க வேண்டிய மொழியால் எழுதும் திறனும் உள்ளவர்கள் மட்டுமே மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடுதல் வேண்டும். மேற்கூறிய கூற்றுக்கு உதாரணமாக இரண்டு உதாரணங்கள் சொல்ல விரும்புகிறேன். இரண்டும் தகழி சிவசங்கரன் பிள்ளையின் மலையாள நாவல்களின் மொழிபெயர்ப்புகள், ஒன்று செம்மீன். மொழிபெயர்த்தவர் சுந்தர ராமசாமி. சரளமான தமிழ் நடை, கதாபாத்திர அமைப்பையும், கதை நிகழ்ச்சிப் போக்கையும், உணர்ச்சிப் போராட்டங்களின் நுணுக்கங்களையும் தமிழில் எளிதாக வரைந்து காட்டி வருகிறார். இம்மொழி பெயர்ப்பினால் மூல நூலாசிரியர் பெருமை உயர்கிறது. மற்றொன்று ‘இரண்டிடங்கழி’ என்ற நூலின் மொழிபெயர்ப்பு. தமிழே சரியாக எழுதத் தெரியாதவர் மொழிபெயர்க்கிறார். மலையாள வாக்கியங்களைத் தமிழில் எழுதியிருக்கிறார். சில தமிழ்ச் சொற்களாகவே இருக்கும். ஆனால் பொருள் வேறு. உதாரணம் ‘பேடி’ என்ற சொல் இரு மொழிகளுக்கும் பொதுவானது. ஆனால் மலையாளத்தில் அதற்கு ‘அச்சம்’ என்றும், தமிழில் அதற்கு ‘அலி’, ‘கோழை’ என்றும் பொருள். மொழிபெயர்ப்பாளர் இத்தகையச் சொற்களை அப்படியே பயன்படுத்திப் பெருங் குழப்பம் விளைவித்துள்ளார். இதனைப் படிக்கும் பொழுது மூல நூலாசிரியரின் திறமை இவ்வளவு தானா? என்று தோன்றுகிறது. மொழிபெயர்ப் பாளர்களின் தகுதியைப் பற்றி விளக்கவே இதனைச் சொன்னேன்.
விஞ்ஞான நூல்கள் மொழிபெயர்ப்புக்களைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?
மூன்று வகைப்பட்ட விஞ்ஞான நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். 1. குழந்தை களுக்கு ஏற்ற நூல்கள், ஏராளமான அமெரிக்க ஆங்கில ரஷ்ய நூல்கள் இத்துறையில் வெளியிடப் பட்டுள்ளன. இவற்றைத் தழுவியோ, நேரடியாக மொழிபெயர்த்தோ தமிழில் நூல்கள் வெளியிடப் பட வேண்டும்.
2. வயது வந்தவர்களுக்காக வெளியிடப்படும் புதிய விஞ்ஞானக் கொள்கை விளக்க நூல்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும். 3, தொழில் நுணுக்க விஞ்ஞான நூல்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.
இம்மூன்று துறைகளிலும் சிற்சில நூல்கள் வெளிவந்துள்ளன. இம்முயற்சியை வரவேற்க வேண்டும். மேலும் நூல்கள் எழுத ஊக்கமளிக்கப் பட வேண்டும்.
விஞ்ஞானக் கலைச் சொற்களைப் பற்றிய பிரச்சினை இன்றும் தீர்ந்த பாடில்லை. விஞ்ஞான நூல்கள் எழுதிய ஆசிரியர்களை ஒன்று திரட்டி ஒரு மாநாடு நடத்தி அதில் இப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். மொழி வெறியை அகற்றி அறிவு வளர்ச்சியை மட்டும் கவனத்தில் கொண்டு இப் பிரச்சினையை விவாதித்தால் இதனை எளிதில் தீர்க்க முடியும். ‘தமிழில் முடியும்’ என்ற நூலில் பல பேராசிரியர்களும், நானும் பிரச்சினையைத் தீர்க்க வழி காட்டியுள்ளோம். மேலும் கூட்டாக முயன்றால் சீக்கிரம் சிக்கல்களைத் தீர்த்து விடலாம். இச்சிக்கல் தீர்ந்தால்தான் விஞ்ஞான அறிவு வேகமாகப் பரவ வழி பிறக்கும்.
அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் சாதனைகள் யாவை? அதன் வெற்றி தோல்விகளுக்கு அடிப்படையாக அமைந்த சக்திகள் யாவை? 1968ல் தமிழகத்தில் நடை பெறவிருக்கும் உலகத் தமிழ் மாநாடு சிறக்க என்னென்ன செய்ய வேண்டும்?
தமிழ் மொழி இலக்கியம், தமிழ்நாட்டு சமூக வரலாறு, கலைகள், நாடோடி இலக்கியம், நாடோடி கலைகள், தொல்பொருள் ஆராய்ச்சி, சாசன ஆராய்ச்சி முதலிய ஆராய்ச்சித் துறைகளில் ஈடுபட்டுள்ள வர்கள் உலகத்தின் பல பகுதிகளிலும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் இத்துறைகளில் நவீன முறையில் ஆராய்ச்சி இப்பொழுதுதான் தொடங்கியுள்ளது. ஆரம்பக் கட்டத்திலிருக்கும் ஆராய்ச்சித் துறைகளை வளர்ச்சியுறச் செய்வதற்குப் பல துறைகளிலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்போரை ஒருங்குகூட்டி வாதங்கள் நடத்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் ஒன்று தோற்றுவிக்கப் பட்டது. இது வரவேற்கத்தக்கது. இக்கழகம் ஆராய்ச்சியாளர் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது. மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒரு துறையில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுபவரை மட்டும் பிரதிநிதி களாகக் கலந்து கொள்ள அழைப்பதென முடிவு செய்யப்பட்டது. இதுவும் நல்ல முடிவே.
நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் சேகரிக்கப்பட்டன. இம் மகாநாட்டில் பங்கு கொள்ள முன்வந்தவர்கள் பல புதிய ஆராய்ச்சித் துறைகளில் கட்டுரைகள் எழுதி அனுப்பினார்கள். இவை யாவும் வெளியிடப்பட்டால் ஆராய்ச்சித் துறைகளில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.
இம்முயற்சி பெரியதோர் வெற்றியே. ஆனால் மகாநாடு ஆராய்ச்சியாளர்கள் மாநாடாக நடை பெற முடியாதபடி தமிழ்நாட்டிலுள்ள சில சக்திகளும், பிற நாடுகளிலுள்ளோர் மனப்பான்மையும் தடுத்துவிட்டன.
தமிழ்நாட்டிலிருந்து கட்டுரை எழுதியனுப்பிய ஆராய்ச்சியாளர்களில் மிகப் பலரை பிரதிநிதிகளாக அனுப்பவில்லை. அரசாங்க அலுவலர்கள், சமூக அந்தஸ்தும் சொத்துக்களும் உடைய பெரிய மனிதர்கள் அவர்களது குடும்பத்தார்கள் ஆகியோர் பெரும்பான்மையாக மகாநாட்டுக்கு அனுப்பப் பட்டனர். இவர்களால் ஆராய்ச்சியாளர் மகா நாட்டிற்கு எவ்விதப் பயனும் ஏற்பட்டிருக்க முடியாது.
தமிழ் அறிஞர்கள் சிலர் மகாநாட்டிற்குச் சென்றார்கள். அவர்களில் ஒருவரைத் தவிர பிறர் பழமைவாதிகள். நவீன ஆராய்ச்சிக் கண்ணோட்டம் இல்லாதவர்கள். தற்கால விஞ்ஞான உலகில் தமிழ் நவீன மொழியாக வளர்ச்சி பெற வேண்டும் என விரும்பாதவர்கள், தமிழைத் தங்கள் குடும்பச் சொத்தாக எண்ணுபவர்கள், புதுமைக்குக் கண்ணடைத்தவர்கள். தமிழ் வளர்ச்சியடைந்துவிட்டது, எத்துறையிலும் முன்னேற்றம் தேவையில்லை என்று கருதுபவர்கள். புதுமையான எக்கருத்தையும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென எண்ணுபவர்கள். இவர்களெல்லோரும் கலந்து கொண்டு என்ன புதிய ஆராய்ச்சியை வளர்த்தார்களோ தெரியவில்லை.
“யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்பது மாநாட்டின் கொள்கை வாசகமாகும். ஆனால் மற்ற நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நால்வருக்கு மலேசியாவில் நுழைவு - அனுமதி மறுக்கப் பட்டது. செக் நாட்டுத் தமிழறிஞர் கமில் சுவலபில் இம்மகாநாட்டில் துணைச் செயலாளர் ஆவார். அவர் தமிழ்மொழியின் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குபவர். மகாநாட்டிற்குப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியனுப்பியவர். மகாநாட்டுக் கொள்கைகளை வரையறுப்பதில் பெரும்பங்கு கொண்டவர். இவரே மகாநாட்டிற்கு வர அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இவ்வாறு பல சக்திகள் மகாநாட்டின் வெற்றிக்கு எதிராகச் செயல்பட்டன. இவற்றை மீறி மகாநாட்டில் கலந்து கொண்ட உண்மையான ஆராய்ச்சியாளர்கள் தங்கள் முயற்சியால் எத்துறைகளில் வெற்றி பெற்றார்கள் என்பது தெரியவில்லை. மகாநாட்டு நிகழ்ச்சி விவரங்கள் மகாநாட்டு அமைப் பாளர்களால் வெளியிடப்பட்டால் தான் இம் மகாநாட்டின் வெற்றி தோல்விகள் பற்றி மதிப்பீடு செய்ய முடியும். இனி அடுத்து வரும் மகாநாட்டில் புதுமையான ஆராய்ச்சிகளை நடத்தி வருவேன். பங்கு கொள்வதற்கு எவ்விதத் தடையுமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசியல், இன, ஜாதி, குரோதங்கள் தமிழாராய்ச்சி வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்பதையுணர்ந்து தமிழர்கள் அவற்றை முறியடிக்க வேண்டும். உண்மையான ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை வெளியிட்டுத் தமிழ் அன்பர் களின் ஆதரவைப் பெற வேண்டும். தமிழ் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றுகூடி தங்கள் உரிமைகளை நிலை நாட்டிக் கொள்ள வேண்டும்.
மேற்கண்டவாறு தீபத்தின் கேள்விகளுக்குத் திறனாகவும் பதிலளித்தார் திரு. வானமாமலை அவர்கள். சீரிய கல்வியும், பண்பும், அமைதியும் பொருந்திய திரு. நா. வானமாமலை அவர்கள் இன்னும் நீண்ட காலம் புதுமைத் தமிழுக்கும் விஞ்ஞானத்திற்கும், நாட்டுப் பாடல் இலக்கியத் திற்கும் பெருந் தொண்டாற்றுவார் என்று நம்பி அவரை மனப்பூர்வமாகத் தீபம் வாசகர்கள் சார்பில் வாழ்த்துவோமாக.
தீபம் - ஜூலை, 1966.