(எதிரிகளுக்கு ஒரு நல்ல வேட்டை)

ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்று கஷ்டப்படுகிற அதன் எதிரிகளுக்கும் ஜஸ்டிஸ் கக்ஷியைத் திட்டி கூலி வாங்கிப் பிழைப்பவர்களுக்கும் இந்த மாதம் நடந்த சென்னை சட்டசபைக் கூட்டத்தினால் ஒரு நல்ல வேட்டை கிடைத்ததென்றே சொல்லலாம்.  மலையாளக் குடிவார மசோதாவைப் பற்றி பார்ப்பனர்கள் பேரில் ஏற்பட்டிருந்த கெட்ட பெயரை மாற்றிக்கொள்ளவும், சர்.கே.வி. ரெட்டி  மலையாளக் குடிவார மசோதாவை நிறைவேற்றும் விஷயத்தில் ஆண்மையுடன் எடுத்துக்கொண்ட முயற்சியினால் ஏற்பட்டிருந்த நல்ல அபிப்பிராயத்தை மாற்றவும், நமது பார்ப்பனர்கள் ஜனாப் யாகூப் ஹாசன் சேட்டு பெயரால் தந்திரம் செய்து வெற்றிபெற்று விட்டார்கள்.  அதாவது ஜனாப் சேட் அவர்கள் சட்டசபைக்கு அபேக்ஷகராயிருக்கத் தனது சிறை வாசத்தால் ஏற்பட்டிருக்கும் தடையை நீக்கும்படி சென்னை அரசாங்கத்தாருக்கு மிதவாதிகளைப் பிடித்து ஒரு விண்ணப்பம் செய்து கொண்டார்.  அது பலிக்காமல் போகவே இந்தியா அரசாங்கத்தாருக்கு ஒரு விண்ணப்பம் செய்து மிதவாதிகளைப் பிடித்து சிபார்சு செய்யச் செய்து பார்த்தார். அதுவும் பலனற்றுப் போயிற்று.

இது தெரிந்த சுயராஜ்யக் கக்ஷியார் ஜனாப் சேட் அவர்கள் தங்கள் கக்ஷியில் சேராததாலேயே இப்படி ஏற்பட்டதென்றும், தங்கள் மூலமாய்ப் பிரயத்தனப்பட்டால் இதற்கு விமோசனம் ஏற்படும் என்றும் ஜாடை காட்டினார்கள். ஜனாப் சேட் அவர்களும் இதை நம்பி சுயராஜ்யக் கக்ஷியாரின் தயவை நாடி அவர்கள் பின்னால் திரிந்தார்.  இதன் பலனாக சுயராஜ்யக் கக்ஷியார் நமது சேட் அவர்களுக்குத் தனது தடையை நீக்கிக் கொள்ள இனிமேல் பிரயத்தனப்படவேண்டிய அவசியமே இல்லாமல் செய்துவிட்டார்கள். இம்மட்டோ?  தேச மகாஜனங்களுக்கே  சேட் அவர்களின் தடை நீங்க இஷ்டமில்லை என்கிற தீர்ப்பையும் வாங்கிக் கொடுத்து விட்டார்கள்.

ஸ்ரீமான் ஒத்தக்காசு செட்டியாரை அந்த விதத்தில் கெடுத்தார்கள். ஜனாப் சேட் அவர்களை இந்த விதத்தில் கெடுத்தார்கள். இந்த விஷயம் சட்டசபைக்குப் போனால் ஜெயிக்காது என்பது நன்றாய்த் தெரிந்திருந்தும் தங்களின் “கட்டுப்பாட்டையும்” மீறிக்கூட ஜனாப் சேட் விஷயத்தில் நல்லது செய்யப் போகிறவர்கள் போல் நடித்துப் பார்ப்பனர்களுக்கும் சேட்டுக்கும் உள்ள பழைய விரோதத்தின் பழியைத் தீர்த்துக் கொண்டார்கள். இது போலவேதான் ஸ்ரீமான் ஒத்தக்காசு செட்டியார் ஜஸ்டிஸ் கக்ஷியில் இருக்கும் போது இந்தப் பார்ப்பனர்களைத் திட்டிய பழியைத் தீர்த்துக் கொள்ளவே அவரைப் பிடித்து பனகால் ராஜா மீது பிராது கொடுக்கச் செய்து செட்டியாரவர்களுக்கு என்றென்றைக்கும் மானக்கேடு வருவதற்கில்லாமல் செய்து, அவருக்கிருந்த பட்டத்தையும் ஒழித்து தங்கள் பழியைத் தீர்த்துக் கொண்டார்கள். இதை நமது சேட்டு அவர்கள் நன்றாய்ப் பார்த்திருந்தும் அவர்கள் கையில் சிக்கி இந்தக் கதிக்கு ஆளாகிவிட்டார்.  இது உலக வழக்கம்தான்.

தாசி வீட்டுக்குப் போகும் வாலிபர்களைத் தடைசெய்து அவர்களுக்குப் புத்தி சொன்னால் அவர்கள் கேட்பதில்லை.  யாவர் வார்த்தையையும்  தட்டி அங்குப்போய் சுகம் அனுபவிப்பது போல் நினைத்துக்கொண்டு தனது பொருள்களையெல்லாம் தோற்று, ரத்தம் கெட்டு, வியாதி பெற்று வீட்டுக்குத் திரும்புகிற காலத்தில்தான் படுகிறது. அதுவும் சிலருக்குத்தான் படுகிறது.  சிலர் கடைசிவரை அதிலேயே உழன்று வருகிறார்கள். அதுபோலவே பார்ப்பனக்கக்ஷி என்றாலும் அதன் மறைபெயரான சுயராஜ்யக் கக்ஷி என் றாலும் ராஜீயத் துறையையே தங்கள் வாழ்வாய்க் கொண்டவர்களுக்கு அதனிடத்தில் பிரிய முடியாத மோகமாய்த்தான் இருக்கும். ஏனெனில் அக்கக்ஷி யார் தாசிகளை விட அதிகப் பகட்டும் போலி அன்பும் காட்டுகிறார்கள்.

இவை ஒரு புறமிருக்க, சட்டசபையில் நடந்த கதைகளைக் கவனிப்போம். ஜனாப் சேட் அவர்களின் தடையை நீக்கவேண்டிய வேலை முற்றிலும் சர்க்காரையே சேர்ந்தது. அதனால் சர்க்காருக்கு ஏதேனும் பழி ஏற்படுமானால் அது முற்றிலும் சட்ட மெம்பரையே சேர்ந்தது.  சட்ட மெம்பர்தான் சர்க்காரின் இஷ்டத்தை நிறைவேற்றி வைக்க வேண்டியவர். அப்படியிருக்க, சட்ட மெம்பர் தைரியமாய் எழுந்து ஜனாப் யாகூப் ஹாசன் சேட்டின் தடையை நீக்குவதற்குப் போதுமான காரணமில்லை என்று சொல்லித் தனது கடனைத் தீர்த்துக் கொண்டார். ஆனால் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் தங்கள் இஷ்டத் தைத் தாங்களும் அதே மாதிரியாகவே ஒரு வார்த்தையில் சொல்லி முடித்து விட்டு ஓட்டுக் கொடுக்கும் போது தங்கள் இஷ்டம் போல் நடந்து கொள்ளலாம் என்று இராமல் அனாவசியமாய் வியவகாரத்தில் தலையிட்டுக் கொண்டு தாறுமாறாய் உளறி இருக்கிறார்கள். அதில் சர்.கே.வி.ரெட்டி அவர்கள் தன் பேரில் பொதுஜனங்கள் தப்பபிப்பிராயப்படும் வண்ணம் பேசியிருப்பதைப் பார்த்தால் நாம் வருத்தப்படாமலிருக்க முடியவில்லை. ஜனாப் யாகூப் ஹாசன் சேட்டைப் பற்றி நிகழும் வியவகாரத்தில் ஜனாப் சேட் அவர்களைப் பொறுத்த மட்டிலும் பேச வேண்டுமேயல்லாமல் தேசத்தின் பெயரால் ஜெயிலுக்குப் போனவர்களெல்லாம் ‘பாப்பர்’களென்று சொல்லியிருக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. இம்மாதிரி இவர் சொன்னதால் ஜெயிலுக்குப் போன தேசப் பக்தர்களுக்குப் பெருத்த அவமானம் வந்தவிட்டதென்பதாக நாம் நினைக்கவுமில்லை.

ஆனால், ஜஸ்டிஸ் கட்சியின் எதிரிகள் சர்.கே.வி. ரெட்டியின் பேரில் பொது ஜனங்களுக்கு அதிருப்தி ஏற்படும்படி பிரசாரம் செய்ய இதை ஒரு வகையாக உண்டாக்கிக் கொண்டார் களென்றுதான் நாம் சொல்லுகிறோம். இதன் பலனாய் சர்.கே.வி. ரெட்டிக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டு விடாது என்று நினைத்தாலும், அவர் சார்ந்திருக்கும் கட்சிக்குப் பாமர ஜனங்களிடம் மரியாதையில்லாமல் போய்விடுமென்பது சர். ரெட்டி நினைக்காமல் போனது அக்கட்சியின் துர்ரதிர்ஷ்ட மென்றே சொல்ல வேண்டும்.

இதே மாதிரியாகவே பல சமயங்களில் பல பார்ப்பனர்களும் பாமர ஜனங்களிடத்தில் கவலையில்லாமல் சர்க்கார் தயவுக்காகப் பரிந்து பேசி சர்க்காரிடம் பரிசுகள் பெற்றிருக்கிறார்கள்.  உதாரணமாக, ஸ்ரீமான் பி.என். சர்மா என்னும் ஒரு பார்ப்பனர் பஞ்சாப் அட்டூழியத்தின் போது லார்டு செம்ஸ் போர்டை ஆதரித்ததினால் மாதம் 6000, 7000 ரூபாய் சம்பளம் வாங்கக் கூடிய உத்தியோகமும் சர். பட்டமும் அனுபவிக்கிறார்.  ஸ்ரீமான் வி.எஸ். சீனிவாச சாஸ்திரி என்கிற ஒரு பார்ப்பனப் பள்ளிக்கூட உபாத்தியாயர் மகாத்மா காந்தியை ராஜத்துரோகி என்றும் மற்றும் பலவாறாகவும் திட்டியதின் பலனாய் ‘மஹா மஹா கனம் பொருந்திய’ என்கிற பட்டமும், ராஜபோகமும் அனுபவிக்கிறார்.  ஸ்ரீமதி பெசண்டம்மையார் என்கிற ஆங்கில மாது, பஞ்சாப் அட்டூழியத்தில் ஜெனரல் டையர் சுட்ட குண்டுகளை ஆதரித்ததன் பலனாய் அம்மையாரின் சிஷ்ய கோஷ்டிகளான ஸ்ரீமான் சி.பி. இராமசாமி ஐயர் போன்ற பலர் 5000, 6000 ரூபாய் சம்பளமும் நிர்வாக சபை மெம்பர் போன்ற பல உத்தியோகங்களும் சர். பட்டமும் ராஜபோகமும் அனுபவித்து வருகிறார்கள்.

ஒத்துழையாமையை ஒழிப்பதற்கு நமது பார்ப்பனர்களுக்காக ஆளாயிருந்த தேசபந்துவென்று சொல்லப்படும் பார்ப்பன மாப்பிள்ளையான நமது சி.ஆர்.தாஸ் அவர்கள் நாக்பூர் தேசியக்கொடி சத்தியாக்கிரகத்தில் ஜெயிலுக்குப் போன ஆயிரக்கணக்கான தேசபக்தர்களைக் கஞ்சிக்கு வகையில்லாத ஆட்கள்தான் ஜெயிலுக்குப் போயிருக்கிறார்கள் என்று சொன்னதன் பலனாய் விபீஷணாழ்வாரைப்போல் பார்ப்பனர் பூஜிக்கும் சிலையாய் ‘சுதேசமித்திரன்’ ஆபீசிலும் பார்ப்பனர் மடங்களிலும் விளங்குகிறார்.

அதுபோலவே நமது சர்.ரெட்டியும் ஜெயிலுக்குப் போனவர்களை ‘பாப்பர்’ என்று சொல்லிவிட்டு போகபோக்கியங்கள் அடைவதில் நமக்கொன்றும் முழுகிப்போகாது.  ஆனால் முன்னவர்கள் சார்ந்ததாய்ச் சொல்லிக் கொண்ட கட்சியானது பொறுப்பற்றதாயும் தேசத்துக்கோ ஒரு சமூகத்துக்கோ எவ்வித நன்மைக்கோ அருகதையற்றதாகவும் பின்பற்று வோரில்லாததாகவும், தங்கள் தங்கள் நன்மைக்கும் தங்களைப் புகழ்வோர்களின் நன்மைக் குமே ஏற்பட்டதாயிருந்து வந்தது. ஆனால் சர்.கே.வி.ரெட்டி தன்னைப்பொறுத்த வரையில் என்று சொல்லிக் கொள்வாரேயானால் அதைப்பற்றி நாம் அவ்வளவு கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் நமது நாட்டில் ஜனத்தொகையில் 100 -க்கு 97 பேர்களாயுள்ள பெரிய சமூகமான பார்ப்பனரல்லாதார் வகுப்புக்கு பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு இம்மாதிரி  பேசியிருப்பதானது பார்ப்பனரல்லாதார் என்கிற முறையில் நாம் கண்டிக்காமலும் சர்.கே.வி. ரெட்டியின் தவறுதலுக்காக நாம்  பரிதாபப்படாமலிருக்க முடியவில்லை.  இவர் அம்மாதிரி பேசியதின் பலனாக அத்தீர்மானத்திற்கு என்ன அதிகமான ஆதரவு கிடைத்தது? அப்படிப் பேசாதிருந்திருந்தால் அத்தீர்மானத்திற்கு எவ்வித ஆதரவு குறைந்து போயிருக்கும்?

எப்பொழுது சட்ட மெம்பரான சர்.சி.பி. இராமசாமி ஐயர் அத்தீர்மானத்தை எதிர்த்தாரோ அப் பொழுதே சர்.கே. வி. ரெட்டி பேசினாலும் பேசாவிட்டாலும் அத்தீர்மானம் தோற்றுப் போய்த்தானே ஆகவேண்டும்?  ஒரு சமயம் ஜெயித்து விட்டாலும் சர்.சி.பி. அய்யர் கவர்னரைக் கொண்டு(கேன்சல்) தள்ளுபடி செய்துதானே ஆகவேண்டும்? ஆதலால் இனியாவது இப்பேர்ப்பட்ட விஷயங்களில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்களென்றே எதிர்பார்க்கிறோம்.

பொதுவாய் தேசத்திற்காகவும் மதத்திற்காகவும் ஜெயிலுக்குப் போன தேசபக்தர்கள் கூலி கேட்காமலிருந்தால்தான் அவர்கள் செய்த தியாகத்திற்குப் பலனும் மதிப்பும் ஏற்படும்.  அப்படிக்கில்லாமல் கேவலம் இந்த சட்டசபைக்குப் போக பிரயத்தனப்பட்ட நமது ஜனாப் யாகூப் ஹாசன் சேட் அவர்கள் கருத்து நமக்கு விளங்கவில்லை.  கிலாபத்துக்காகவும், சுயராஜ்ஜியத்திற்காகவும் ஜெயிலுக்குப் போன நமது ஜனாப் சேட் அவர்களுக்கு இப்பொ ழுது சட்டசபைக்குப் போக வேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது.  சட்டசபைக்குள் சென்றதும் கிலாபத்தையும் சுயராஜ்யத்தையும் எடுத்து நிறுத்தி விடலாமென்று நினைக்கிறாரா? எந்த கவர்ன்மெண்டாரை திட்டி ஜெயிலுக்குப் போனாரோ அந்த கவர்ன்மெண்டுக்கே விண்ணப்பம் போட்டு தான் சட்டசபைக்குப் போக அனுமதி கேட்பது நியாயமாகுமா?

சர்க்கார் சட்ட சபையில் ஏதாவது செய்யக்கூடுமென்கிற நம்பிக்கை இவருக்கிருக்குமானால் முதலாவது இவர் செய்ய வேண்டிய வேலை கவர்ன்மெண்டாரை அடி பணிந்து, முன் தான் நினைத்ததற்கும் நடந்து கொண்டதற்கும் நிபந்தனையில்லா மன்னிப்பு விண்ணப்பம் போட்டு மன்னிப்பைப் பெற்ற பிறகு சட்ட சபைக்கு விண்ணப்பம் போட்டிருக்க வேண்டும்.  அப்படிக்கில்லாதவரையில் ஆண்பிள்ளை சிங்கம் போல் சர்க்கார் தயவை எதிர்பாராமல் சர்க்காராகவே தன்னை விரும்பும் வரையில் தன்னாலானதைச் செய்துகொண்டிருக்க வேண்டும்.  அப்படியுமில்லாமல் இப்படியுமில்லாமல், “கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை” என்பது போல், வழ வழ வென்று நடந்து கொண்ட தானது ஜனாப் யாகூப் ஹாசன் சேட் அவர்களின் நிலைமை ஆடிப்போனதல்லாமல் நமது நாட்டு தேசபக்திக்கும் தியாகத்திற்கும் மாசை ஏற்படுத்தி வைத்து விட்டார் என்று சொல்ல நேர்ந்தது பற்றி நாம் மிகவும் வருந்துகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 25.07.1926)

Pin It