“அடி! உன்னைத்தானே! அடி கமலு! இங்கே வாடி! ஓடி வாடி! கேட்டீயாடி ரேடியோவை? அவரைச் சுட்டுட்டானாம். செத்தே போய்ட்டாராம்! நான் சொன்னேனா இல்லியா?”

“யாரைச்! சுட்டுட்டா! னேக்கு ஒன்றும் புரியலையே!”

kuthoosi gurusamy“யாரையா? காந்தியைத் தாண்டி! அப்பாடி! நம்பளவாளை என்ன பாடுபடுத்தினார் இத்தனை வருஷமா? வாடி! வாடி! வாயைத் திறடீ! இந்தா, இந்த மிட்டாயை வாயில் போட்டுக்கோ!”

“ஐயையோ! மாட்டேன்! நீங்கள் சொல்றதைக் கேட்டால் உடலெல்லாம் வெலவெலக்கிறதே! அவர் மகாத்மா ஆச்சே! அவரை எந்தப் பாவி கொன்றானோ?”

“போடி மண்டு! பாவியா? நம்பளவாதாண்டி! எத்தனை சிரமப்பட்டு, வெகு நாளா ‘ப்ளான்’ போட்டு சேஞ்சிருக்கான், தெரியுமோ? அவன்தாண்டி சரியான பிராமணன்! இந்தாடீ மிட்டாய்!”

“ஐயையோ! மகா பாபம்! னேக்கு வேண்டாம்! கட்டேலே போவான்! லோக சிரேஷ்டரைக் கொலை செய்தானே! எப்படித்தான் மனம் வந்துதோ?”

“ஏண்டி, னோக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? எங்களையெல்லாம் முட்டாள் என்று நினைச்சீண்டிருக்கியோ? யாராலே நம்பளவாளுக்குச் சௌகரியம், யாராலே தொந்ரேவு என்பதெல்லாம் சரியா சலிச்சுப் பார்த்துத் தாண்டி எதையும் செய்வோம். இப்போது நம்ப சங்கராச்சாரியார் இருக்கேர்! அவரைப் பற்றி நம்பளவாளிலே ஒருத்தராவது குறை சொல்வாளோ? 'பாலிடிக்ஸ்' தெரியாத உன்னைப் போன்ற முண்டங்களுக்கு எப்படிப் புரியும்?” (என்று சொல்லிக் கொண்டே ஒரு ஜாங்கிரியைத் தன் வாய்க்குள் திணித்தார் ஹரி ஹர சர்மா!)

“நீங்கதானே மகாத்மாண்ணு சொன்னேள்? படத்திற்கு பூஜை செய்யச் சொன்னேள்! அவர் சொன்னதற்காக ஜெயிலுக்குக்கூட போனேள்! இப்போ ஏன் இப்படி புத்தி தடுமாற்றமாப் பேசறேள்?”

“ஆமா! நீ சொல்றது ரொம்ப நிஜந்தான். நம்பளவாளுக்குப் பிரயோஜனமா இருக்கிறவரையிலே ‘மகாத்மா’ தான். நம்பளவாளுக்கு இடைஞ்சலா யிருந்தா, உடனே கவிழ்க்க வேண்டியதானேடி?”

“அவர் என்ன செய்தார், பாவம்? ஏதோ தேவமேன்னு அவர் வேலையைப் பார்த்தீண்டுதானே இருந்தேர்?”

“என்ன செய்தாரா? தீண்டாதவனை யெல்லாம் கிளப்பி விட்டேர்! நாம் அஜமேத யாகம் செய்தால், அவர் அஹிம்சை, அஹிம்சை என்று சொல்லீண்டு, ஆட்டுப்பால் குடிச்சீண்டிருந்தேர்! அவராலே நமக்கிருந்த மரியாதையே போயிடுத்தே! ஓமந்தூர் ரெட்டியார் ஆட்சியிலே எங்களுக்கெல்லாம் வேலை கிடைக்கலேண்ணு தந்தியடிச்சா, ‘நீங்களெல்லாம் கடவுளைப் பற்றி ஆராய்ச்சி செய்து பிறருக்கும் சொல்லுங்கோ,’ என்று எழுதினாரே! என்ன நெஞ்சழுத்தம் பாருடீ!”

“ஆமா! ஆதுக்காக அவரை இப்படித்தான் துடிக்கத் துடிக்க கொல்றதோ? பேஷாயிருக்கே! நாளைக்கு நம்பளவா கதி என்னவாகும்? மான ஈனத்தோடே வெளியேபோக முடியுமா? கொலைகார ஜாதி என்றல்லவா கூப்பிடுவா?”

“போடீ பைத்தியக்காரி! பிராமணன்தான் கொலை செய்தான் என்ற சங்கதி வெளியே வராமலே அழுத்திப் பிடுவோண்டீ! ரேடியோவில் சொல்ல மாட்டா! எல்லோரும் நம்பளவா! பத்திரிகைக்காரர்கள் எல்லோரும் நம்பளவா! வேற்று ஆசாமிகள் இரண்டொன்று கிடக்குதுகள். அதுகள் நம்ப அடிமைகள்! அப்படியே எவனாவது நம் எதிரிகள் வெளியிட்டாலும், நம்மைத் தவிர மற்றவர்கள் 100 -க்கு 90 பேர் படிக்காத முட்டாள் ஜாதிகள்தானே! எவனுக்குத் தெரியப் போகிறது? அதெல்லாம் தந்திரமா அழுத்திப்பிடலாண்டீ! ரொம்ப மீறிப் போறது போலே தோணினால், “இதோ பார்! வகுப்புத் துவேஷத்தைக் கிளப்புகிறான்! ஒழி இவனை!” என்று கூப்பாடு போட்டால் போறாது! எல்லாம் நம்ப அடிமை சர்க்கார்தானேடீ ! உடனே உத்தரவு போட்டு அடக்கிப் பிடுவா! நம்ப பத்திரிகைகளும் கூச்சல் போடும்! அதெல்லாம் பயப்படாதேடீ!”

“அது சரி! நம்பளவாளை ஊராரெல்லாம் முறைச்சு முறைச்சு பார்ப்பாளே! என்ன செய்யறது?”

“ஓஹோ! அந்தப் பயமா னோக்கு? அது என்னடீ பிரமாதம்? மரண அநுதாபத்திலேயே நாமே முதன்மையா இருந்து நடத்த வேணும். கூட்டங்களுக்கெல்லாம் போகணும்! கண்ணீர்விட்டுக் கதறணும்! ஊர்வலம் போகணும்! பத்திரிகைக்கு விடாமே எழுதணும்! இரங்கற் பாட்டுகள் பாடணும்! அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்டீ, எந்தச் சந்தர்ப்பத்திலே எப்படி நடக்கிறதுண்ணு!”

“ஆமா, புருஷா தான் இப்படி நடிச்சுப்புடுவேள்!” நாங்கள் பொம்மனாட்டிகள் என்ன செய்ய முடியும்?”

“நீங்கள்?... அவர் படத்தைத் தூக்கீண்டு ஊர்வலம் போகணும். ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்று மூச்சுவிடாமே பாடணும். ஒரு மாசத்துக்கு பல்லைக் கடிச்சுண்டு ‘ஆக்ட்’ செய்துட்டா போதுண்டீ! அப்புறம் முட்டாள் ஜனங்கள் எல்லாத்தையும் மறந்துவிடும். பிறகு நம்ப ராஜ்யந்தாண்டீ! நீ வேணுமானா பாரேன்!"

இந்த உரையாடல் உண்மையாகவே நடந்தது! கணவனும் மனைவியும் பேசிக் கொண்டிருந்ததையே பார்த்தேன்!

“டேய் அயோக்கியா!” என்று கத்தினேன்.

“அப்பா, என்ன இது? தூக்கத்திலே உளறுகிறீர்கள்? பேப்பர் வந்துட்டுது, எழுந்திருங்கள்,” என்று எழுப்பினான், என் பையன்.

கண்ணைத் துடைத்துக் கொண்டேன்; கனவு என்பதை உணர்ந்தேன்.

(கனவுப்படியே நடந்ததா? - “கு-சி”)

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It