பெருமைக்குரிய தலைவர் அவர்களே! பெரியோர்களே! தோழர்களே! அனைவருக்கும் என் வணக்கம். எனக்கு முன் பேசிய தலைவர் (காமராஜர்) அவர்களும் திரு. அண்ணாமலைப் பிள்ளையவர்களும் மறைந்த டாக்டர் நாயுடு அவர்களின் தொண்டைப் பற்றி விளக்கமாகச் சொன் னார்கள். அவர்கள் சொன்னது கொஞ்சம்கூட மிகைப்படுத்திக் கூறியதாகாது. முற்றிலும் சரியே. பல வருஷங்களாக அவருடன் கலந்து கூடி பழகியவன், வேலை செய்தவன், நண்பனாக இருந் தவன் என்ற முறையிலேயே நான் ஒரு சில வார்த்தைகளைக் கூறலாம் என்று முன்வந்துள்ளேன்.

எங்கள் முதல் தொடர்பு

எனக்கு மறைந்த தலைவர் நாயுடு அவர்களைச் சுமார் 40 வருஷங்களுக்கு மேலாகத் தெரியும். அதாவது 1914 முதல். அப்போது அவர் திருப்பூரில் பிரபஞ்ச மித்திரன் என்ற பத்திரிகையைத் துவக்கினார். அப்போதுதான் எனக்கும் அவருக்கும் முதல் சந்திப்பு ஏற்பட்டது. அது முதல் அடிக்கடி நாங்கள் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போதெல்லாம் காங்கிரசு பிரபலமடைய வில்லை. பிறகுதான் கொஞ்ச காலம் கழித்து காங்கிரசு பிரபலம் அடையத் துவங்கியது. காந்தியார் போன்ற தலைவர்கள் காங்கிரசுக்குள் வர ஆரம்பித்த காலமாகிய அந்நாளில்தான் கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரசு செல்வாக்கு பெறத் தொடங்கியது.

அந்தக் காலத்தில் டாக்டர் வரத ராஜூலு நாயுடு அவர்கள் மதுரை தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசிய பேச்சுக்காக ராஜதுவேஷக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது தொடரப்பட்ட வழக்கு சுமார் ஒரு வருடம் தொடர்ந்து நடைபெற்றது. அவர் சார்பில் வழக்கறிஞராக ஆச்சாரியார் அவர்கள்தான் வாதாடினார். அந்த வழக் குக்காக அடிக்கடி சென்னையில் இருந்து மதுரைக்குப் போவார்கள். ஈரோடு மத்தியில் உள்ள இடமானதால் அவர்கள் என்னைச் சந்திப்பார்கள். நானும் அவர் களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பதென்று ரயில்வே ஸ்டேஷனுக்காவது போய்ச் சந்திப்பேன். அப்போது தான் இராஜாஜி அவர்களது நட்பும் எனக்குக் கிடைத்தது. அது கிடைக்கக் காரணமானவர் டாக்டர் வரதராஜூலு நாயுடுதான். அன்பர் டாக்டர் நாயுடுதான் என்னைப் பொதுக் காரியங்களில் ஈடுபட வைத்தவர். அவர் அடிக்கடி வந்து என்னிடம் வெள்ளைக்காரர்கள் செய்யும் கொடுமைகளைப் பற்றி ஆவேசமாக எடுத்துக் கூறுவார். அந்த நேரத்தில்தான் பஞ்சாப் படுகொலை கொடுமை ஏற்பட்டது. அப்போது நாயுடு அவர்கள் வந்து அதைப் பற்றி மிகவும் ஆத்திரத்துடன் என்னிடம் கூறினார். உடனே நானும் மனம் குமுறி வருத்தப்பட்டு என்னால் ஆன தொண்டைச் செய்தேன். இது போன்ற அக்கிரமங்கள் ஒழிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதாகக் கூறி எனது வியாபாரத்தையும் விட்டு விட்டுப் பொது வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தேன். ஆச்சாரியார் அவர்கள் என்னைக் கோவை ஜில்லா செயலாளராகப் போட்டு காரியாலயச் செலவுக்காகவும் கட்சி பிரசாரத்திற்காகவும் ரூ. 600 க்கு செக் எழுதி ரிஜிஸ்டர் செய்து எனக்கு அனுப்பினார்.

என்னை காங்கிரசுக்கு இழுத்தவர் அவரே

திரு. நாயுடு அவர்கள் வற்புறுத்தியதன் பேரிலேயே நான் காங்கிரஸ் தொண் டனானேன். பொது வாழ்வைப் பொறுத்த வரை நான் அவருக்குச் சீடனானேன். 1920 லிருந்தே பாடுபட ஆரம்பித்தேன். அந்தக் காலத்தில் ஜெயில் என்றால் மக்கள் எல்லாம் பயந்தார்கள். காரணம் மிகமிக கொடுமைகள் செய்யப்பட்டன. இப்போது சிறைக்குப் போகிறவர்களில் பலர் வெளியே இருப்பதை விட வெகு வசதிகளை அனுபவிக்கிறார்கள். அப் போது அப்படியல்ல காலஞ்சென்ற வ.உ.சி. அவர்கள் சிறையிலே செக்கிழுக்கிறார் என்ற செய்தி வெளியே பரவியிருந்த காலம்.

நாயுடுவின் சிறை வாழ்க்கை

அந்தக் காலத்தில் பலமுறை சிறை சென்று ஜெயிலுக்குப் போவதைச் சுலப மாக்கிக் காட்டியவர் திரு.நாயுடு அவர்களாவார். டாக்டர் நாயுடு அவர்களுக்கும் ஜெயிலில் வேலை கொடுத்தார்கள். பட்டை தட்டுதல், கேப்பைக்களி ஆட்டும் வேலை போன்ற கடினமான வேலையே கொடுத்தார்கள். இந்தக் கொடுமைகளை மக்களிடம் எடுத்துக் கூறி மக்களைத் தட்டி எழுப்பும் ஆற்றல் வாய்ந்த பேச் சாளராகத் திகழ்ந்தார் நாயுடு அவர்கள்.

பொதுமக்களைப் பேச்சினால் கவர்ந்தவர்

அந்தக் காலத்தில் இருந்த தலைவர்களிலேயே நாயுடு பேச்சு என்றால்தான் பெருங்கூட்டம் கூடும். அது முதுபெருந் தலைவர் இராஜாஜி அவர்கள் பேசுகின்ற கூட்டமானாலும் சரி பெருங்கூட்டம் வரவேண்டுமென்றால் முதலில் டாக்டர் நாயுடு அவர்களைக் கொஞ்ச நேரமாவது பேசவிட வேண்டும் என்ற நிலை இருந்தது.

பெருந்தியாகி

தமிழ்நாடு பத்திரிகையில் யாரோ எழுதியதற்காக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு அவர் சிறை சென்றார். இது மாதிரி பொதுக் காரியங்கள் என்றால் அவர் சொந்தப் பணத்தைத் தான் செலவு செய்வார். அவர் கட்சி வேலையாக எங்கு போனாலும் கட்சிப் பணத்தைச் செலவு செய்ய மாட்டார். ஆனால் நான் கட்சி வேலையாகச் சென்றால் சொந்தப் பணத்தைச் செலவு செய்யமாட்டேன். கட்சிப் பணத்தைத் தான் செலவு செய்வேன். அப்போதெல்லாம் அவருக்கு ஏராளமான அளவில் வருமானம் வந்து கொண்டிருந்தது. திருப்பூரிலிருந்து அவர் கோவை வந்த சமயத்தில் அவருடைய மாத வருமானம் சுமார் ரூ. 2000 இருக்கலாம். சித்த வைத்தியம், மின்சார ரசம் இவை மூலம் ஏராளமாக வருவாய் கிடைத்தது. எல்லாவற்றையும் கட்சிக்கும் பொது வாழ்க்கைக்குமே தாராளமாகச் செலவு செய்துவிடுவார். எத்தனையோ முறை வரி கொடுக்க மறுத்து ஜெயிலுக்குப் போய் இருக்கிறார். அவருடைய சொத்துகளும் சாமான்களும் ஜப்தி செய்யப்பட்டு ஏலத்திற்கு வரும்.

கருத்து வேறுபடினும் உண்மை நண்பர்கள் ஆவோம்

அவருடன் நெடுநாள் உழைத்த நான் 1925 இல் எப்படியோ பிரிய நேர்ந்தது. அப்போது பெரியார் திரு.வி.க. அவர்கள் நவசக்தி பத்திரிகையின் ஆசிரியராகவும், டாக்டர் நாயுடு அவர்கள் தமிழ்நாடு பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந் தார்கள். கடுமையாகத் தாக்கி எழுதுவேன். அவர்களும் கடுமையாகத் தாக்கு வார்கள். ஆனால் நேரில் கண்டுவிட்டால் நாங்கள் எல்லோரும் உண்மையான சகோதரர்களாகத்தான் பழகுவோம். அந்தக் காலத்தில் தமிழில் பேசத் தெரிந்தவர்கள் மிகமிக அபூர்வம். அப்போது திரு.வி.க., நாயுடு இந்த இரண்டே பேர்தான். ஆச்சாரியாருக்குக் கூட அந்தக் காலத்தில் சரியாகத் தமிழில் பேசத் தெரியாது. வீடு பிரிச்சு போட்டிருக்கு என்று சொல்லத் தெரியாமல், வீடு அவுத்துப் போட்டிருக்கு என்றுதான் சொல்லுவார். சத்தியமூர்த்திக்குக் கூட அந்தக் காலத்தில் மக்களை வசப்படுத்தக்கூடிய முறையில் பேசத் தெரியாது. டாக்டர் நாயுடு அவர்களுடைய பேச்சு மக்களை வசப்படுத்தக் கூடிய, உணர்ச்சி ஊட்டக்கூடிய பேச்சாகும். உங்களுக்கெல்லாம் அதிசயமா யிருக்கும். நான் பேச அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன் என்று சொன்னால் அது உண்மை.

ஈடுசெய்ய முடியாத நஷ்டம்

அவர் இயற்கை எய்தினது உண்மையிலேயே ஒரு பரிகரிக்க முடியாத நஷ்டமாகும். ஏனென்றால் அவர் போன்ற தலைவர் இனி கிடையாது. தலைவர் (காமராஜர்) போன்றவர்கள் இந்தப் பதவி (முதலமைச்சர்) யல்லாது இனி கவர்னர் ஜெனரலாக வந்தாலும் கூட அவருடைய மதிப்பு இவருக்கு வராது - இப்படிச் சொல்லுவதால் இவருக்குத் தகுதியில்லை என்றோ, வர வாய்ப்பு இருக்காது என்றோ அர்த்தமல்ல. உலகத்தின் இன்றைய போக்கை வைத்தே இப்படிச் சொல்லுகிறேன். மக்களிடத்தில் தலைமைக்கான சன்னது பெற்றவர்கள் ஒரு சிலர்தான் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராகப் போய்க் கொண்டே இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்குப் பிறகு அந்த இடத்தில் யார் என்ற கேள்விக்குச் சரியான பதில் கிடைக்க முடிவதில்லை.

இனி, சிறந்த தலைவர் யார்?

பொதுவான நிகழ்ச்சிகள் எல்லா வற்றிற்கும் தலைமை வகிக்க என்று அவர் ஒருவர்தான் இருந்தார். இப்போது அவரும் இல்லை. அந்த இடமும் காலியாகத்தான் இருக்க வேண்டும்.

இனி நம் நாட்டுக்குத் தலைவர் கிடையாது. இனிமேல் வருகிற தலைவர்கள் எல்லாம் முனிசிபாலிட்டி, டிஸ்டிரிக்ட் போர்டுக்கு வரும் தலைவர்கள் மாதிரிதான் இருப்பார்கள். அத்தகைய தலைவர்களும் மக்களை நடத்திச் செல்லக் கூடிய முழுச் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்க முடியாது. இதற்கு என்ன காரணம் என்றே என்னால் சரியாகச் சொல்ல முடிவதில்லை. தலைவர்கள் உற்பத்தியாகாததோ அல்லது மக்கள் அவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ள முடியாத அந்த அளவுக்கு மக்கள் பண்பு உயர்ந்துவிட்டதோ என்றால் தலைவர்களுக்கோ பஞ்சமில்லை. ஏராளமாகத்தான் வருகிறார்கள். ஆனால் மக்கள்தான் அவர்களிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை. உதாரணமாக கோவையில் பிர பலஸ்தர்களாக விளங்கிய சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார், வெள்ளி யங்கிரி கவுண்டர் போன்ற அய்ந்து தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் கோவை ஜில்லாவுக்கு மாத்திரமில்லாமல் மாகாணத்திற்கே தலைவர்களாக இருந்தார்கள். அவர்கள் மறைந்த பிறகு தலைவர் யார் என்றால் யாருமே தென்படவே இல்லை. அதிகத் தலைவர்கள் உற்பத்தியாவ தனால்தான் மக்கள் அவர்களை நம்ப மறுக்கின்றார்கள். தலைவர் நாயுடு அவர்கள் இடத்தைப் பூர்த்தி செய்ய ஆள் இனி கிடையாது.

நான் சென்னைக்கு எப்போது வந்தாலும் திரு. நாயுடு அவர்கள் என்னை வந்து சந்திக்கத் தவறுவதே கிடையாது. 15 நாளைக்கு முன்பு என்னிடம் டெலிஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். இன்று காலை அவருடைய மகன் டெலி ஃபோனில் அவர் காலமான செய்தியைச் சொன்னதும் முதலில் நம்பாமல் பிறகு அதிர்ச்சி அடைந்தேன். திடீரென அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். இல்லா விட்டால் அவரது உடல் கட்டுக்கு இன்னும் பல ஆண்டுகள் இருப்பார். அவர் எப்போதெல்லாம் என்னைப் பார்க் கிறாரோ அப்போதெல்லாம் என் உடம்பைக் கவனித்துக் கொள்ளும்படி சொல்லி வற்புறுத்துவார். உணவு விஷயத்தில் எவ்வகையான உணவுகளை உண்ண வேண்டும் என்பதில் மிக கண் ணுங் கருத்துமாக இருப்பார். நானும் அப்படிப் பார்த்துதான் சத்தான உணவையே சாப்பிட வேண்டும் என்று சொல்லுவார். ஆனால் என்னால் இது முடிவதில்லை. இதற்குக் காரணம் எனக்கு ஓய்வில்லை என்பதும், நான் இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாத ஒரு சோம்பேறி என்பதும் ஆகும். என் சாப்பாடு பிச்சைக்காரன் சாப்பாடு மாதிரி. இங்கொரு நாள் அங்கொருநாள், இந்த வீட்டில் ஒரு நாள் அந்த வீட்டில் ஒரு நாள் என்று சாப்பிட்டு அலைந்து கொண்டிருப்பவன். என்னால் எப்படி உணவு விஷயத்தில் அவ்விதம் நடந்து கொள்ள முடியும்?

யாருக்கும் உதவி புரியும் பண்புள்ளவர்

டாக்டர் நாயுடு அவர்களிடத்தில் காணப்பட்ட மற்றொரு அரிய பண்பு என்ன என்றால் யார் போய் எந்தக் காரியத்தை அவரிடம் சொன்னாலும் மாட்டேன் என்று சொல்லாமல் தன்னால் முடிந்தவரை செய்து முடிப்பார். அதிலும் இப்போது தலைவர் அவர்கள் பொறுப் பான பதவிக்கு வந்த பிறகு டாக்டரிடத் தில் இன்னும் ஏராளமான அளவுக்குப் போய் செய்யச் சொல்லி தொந்தரவு கொடுத்தார்கள். அவரும் யாருக்கும் உதவி செய்யாமல் இருந்ததில்லை. அவருடைய வயது இப்போது 71. என்னை விடச் சிறியவர்தான். ஆனாலும் நல்ல அளவுக்குப் பொது வாழ்வில் இருந்து உழைத்தார்கள். தலைவர் காமராசர் அவர்களுக்குக் கிடைத்த நல்ல துணைவராக இருந்தார் டாக்டர் நாயுடு அவர்கள். பல விஷயங்களை நல்ல யோசனைகளைச் சொல்லக் கூடியவராக இருந்தார். இப்போதெல்லாம் அப்படிப்பட்ட நல்ல துணைவர்களைத் தேர்ந்தெடுப்பதே மிகமிகக் கஷ்டமான காரியமாகும்.

எப்படியோ நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார் டாக்டர் நாயுடு அவர்கள். இப் போது சும்மா அவரது ஆத்மா சாந்தி அடையவேண்டும் என்று பேசுவது வெறும் பேச்சாகும். ஆத்மா என்று ஒன்று இருந்தால் அது நாம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அது தானே சாந்தி அடையும். அதிலொன்றும் சந்தேகம் வேண்டியதில்லை.

தனக்கென வாழா பிறர்க்குரியாளர்

இப்போது நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பண்புகளைப் பற்றி நினைக்க வேண்டும். டாக்டர் அவர்களுடைய குடும்பம் சங்கடமான நிலையில் இல்லை என்றாலும் அவர் இவ்வளவு பாடுபட்டும் அவர் தனக்கென்று ஏதும் வைத்துக் கொள்ளவில்லை. பெரிய பதவி களை அவர் அனுபவித்ததும் கிடையாது. நான் தொடர்ந்து காங்கிரசில் இருந்திருப்பேனானால் நிச்சயமாக அவரை நான் மந்திரியாக்கிப் பார்த்திருப்பேன். இப்போதிருப்பவர்கள் அவருக்கு அந்த வாய்ப்பைத் தரவில்லை என்பதோ அவர் அதற்கு அனுபவமற்றவர் என்றோ அல்ல இதற்கு அர்த்தம். அதற்குக் காரணம் டாக்டர் நாயுடு அவர்களே தன்னை அப்படி ஆக்கிக் கொண்டார். முக்கியமாக குருகுலப் போராட்டத்தில் அவர் தீவிர மாக ஈடுபட்டு ஒரு சிலரின் வெறுப்புக்கு ஆளாகியது மாத்திரமல்லாமல் தன்னை யாரென்றும் காட்டிக் கொண்டார்.

திருப்தியான வாழ்க்கை நடத்தியவர்

ஆனாலும் அவர் திருப்தியோடுதான் மனக்குறை இல்லாமல் வாழ்ந்தார். அந்தத் திருப்தி உணர்ச்சியைத்தான் பொது வாழ்வில் இன்று இருப்பவர்கள் பெற வேண்டும். அதைத்தான் அவரது வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியில் உழைத்ததினால் அவர் பணமோ பதவியோ பெறவில்லை. மாறாகத் தன்னுடைய செல்வத்தை அதற்கென செலவு செய்தார். அவர் ஒன்றும் இதனால் பயன் பெறவில்லை.

கற்க வேண்டிய பாடம்

தொண்டுக்குப் பலன் அடைய வேண்டும் என்று நினைக்காமல் வாழ வேண்டும். காலஞ்சென்ற டாக்டர் நாயுடு அவர்கள் அப்படித்தான் பலன் அடையாமல் பொது வாழ்வில் உழைத்தார். அதைத்தான் பொது வாழ்வில் உள்ள அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.

இறுதி மரியாதை

இங்கு (இறுதிச்சடங்கு நடைபெறும் இடம்) வந்துள்ள பலரும் பலவித கொள்கையுடையவர்கள் என்றாலும் அவரவர் நம்புகின்ற லட்சியங்களை வைத்துப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு பலனைப் பற்றிக் கவலைப்படாமல் காரியமாற்ற வேண்டும். இதுதான் நாம் டாக்டர் அவர்களுக்குச் செய்யும் சிறந்த இறுதி மரியாதையாகும்.

---------------------------------

டாக்டர் வரதராஜூலு நாயுடு பற்றி தந்தை பெரியார் இரங்கலுரை --"விடுதலை" 24 ஜூலை 1957

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It