சும்மா வந்துவிடவில்லை ஒரு நாள் வேலை நேரம் 8மணி என்பது. 1886-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வேலை நேரத்தை 8மணியாகக் குறைக்கக்கோரி தொழிலாளர்க் கூட்டம் பொங்கியெழுந்த போராட்டத்தாலும் சிந்திய குருதியாலும் உயிர் தியாகத்தாலும் வந்தது 8மணி வேலைநேரம். பிரிட்டன் முதலான ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தொடர்ச்சியாக எழுந்த போராட்டங்களால் கிடைத்தது இந்தப் பலன்.

1886 மே 1-இல் உதயமான மேதினம் முன்வைத்த கோரிக்கைகள் - 8 மணி நேரம் வேலை, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம்.

ஒரு நாளின் 24 மணிநேரத்தை இப்படி அறிவியல் பூர்வமாகப் பகுத்து நிர்ணயம் செய்தது தொழிலாளி வர்க்கம்.8 மணி நேரம் ஓய்வு என்பது சும்மா வெறுமனே பொழுதைக் கழிப்பதற்காக அல்ல. 8 மணிநேரம் அவன் உழைத்ததுபோக, அடுத்த 8மணி நேரம் உழைப்பின் களைப்பைப் போக்கவும், அவன் தனது குடும்ப வாழ்க்கையை நடத்திச் செல்லவும், கல்வி, கலை, கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவும் தேவைப்படுகிறது.அடுத்து 8மணி நேரம் இயற்கையாகவே மனிதனுக்குத் தேவைப்படும் தவிர்க்க இயலாத இரவு உறக்கம்.

இன்றும் அந்தக் கோரிக்கைகள் அப்படியேதான் உள்ளன. தகவல் - தொழில் நுட்பத் துறைகளில், தொழிற்சாலைகளில், வணிக நிறுவனங்களில்,இன்னும் வேறு பல உழைப்புக் களங்களில் 8மணி வேலை நேரம் என்பது இன்று இல்லை.

 ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் 19-ஆம் நூற்றாண்டில் ஆலை முதலாளிகள் தொழிலாளர்களின் உழைப்பை ஆலைக் கரும்பாய்ப் பிழிந்தெடுத்தனர். 12,14,16,20மணி எனப் பலவித வேலை நேரங்கள். அடிமைகளாய் உழைத்தனர் தொழிலாளர் கூட்டம். அந்தக் காலத்திலெல்லாம் சாதாரணமாக வேலை நாள் என்பது பொழுது விடிவதற்கு முன்பே அதிகாலைமுதல் அந்தி சாயும்வரை. 1806-ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத் தொழிலாளர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து பல தலைவர் கள் மீது சதிவழக்கு போடப்பட்டது. அந்த வழக்கின்போது வெளிப்பட்ட ஒரு விஷயம் முதலாளிகளால் தொழிலாளர்கள் 19 மணிநேரம் 20மணிநேரம் வேலைவாங்கப்பட்டார்கள் என்பது.

“...சிலர் 12க்கும் 15க்கும் இடைப்பட்ட வயதுள்ள 5 பையன்களை சாப்பாட்டு இடைவேளையும், நள்ளிரவில் உறக்கத்திற்காக ஒரு மணி நேரமும் தவிர இடைவேளை எதுவும்விடாமல் வெள்ளிக் கிழமை காலை 6 மணி முதல் மறுநாள் சனிக்கிழமை மாலை 4 மணி வரை வேலைவாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. கம்பளிக் கந்தல்களைப் பிய்த்துப் பிரிக்கும் வேலை நடக்கும் இடத்தில் தூசியும் பிசிறும் காற்றில் அடர்ந்திருக்கும்; வயதுவந்த தொழிலாளியும்கூட நுரையீரலைப் பாதுகாத்துக்கொள்வதற்காகக் கைக் குட்டையால் வாயை மூடிக்கொள்ள வேண்டியிருக்கும். புழுதிப் பொந்து என்று அழைக்கப்படும் பொந்து போன்ற இந்த இடத்தில் இப்படி 30 மணி நேரம் இந்தக் குழந்தைகள் ஓயாமல் உழைக்க வேண்டியிருந்தது” - என்று குறிப்பிட்டுள்ளார் மார்க்ஸ் தமது மூலதனம் நூலில்.

மார்க்ஸ் - எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கை யில் கூறியுள்ளபடி - இந்தப் பாட்டாளி வர்க்கம் பிறந்தது முதலே முதலாளி வர்க்கத்துடன் போராட் டம் தொடங்கிவிடுகிறது. அப்படித்தான், முதலாளி களுக்கு அடிமையாய் உழைத்ததொழிலாளர்கள் வேலை நேரக் குறைப்புக்கான தங்களின் முதலாவது போராட்டத்தைத் தொடங்கினர். தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தில் இன வேற்றுமை இருக்கக்கூடாது என்றார் மார்க்ஸ். கறுப்பு-வெள்ளைத் தொழிலாளர்களிடையே இருக்க வேண்டிய வர்க்க ஒற்றுமையைப் பற்றி மார்க்ஸ் இவ்வாறு கூறினார் - “அமெரிக்க ஐக்கியக் குடியர சின் ஒரு பகுதியை அடிமைத்தனம் பிடித்திருக்கும் வரையில் எந்த விதமான சுயேச்சை யான தொழிலா ளர் இயக்கமும் முடக்கப்பட்டே இருந்தது. தொழி லாளர்களில் ஒரு பகுதி கறுப்பு இனத்தவர் என்று முத்திரை குத்தப்பட்டிருக் கும்வரை வெள்ளைத் தொழிலாளர்கள் தங்க ளுக்குத் தாங்களே விடுதலை தேடிக் கொள்ள முடியாது. ஆனால், அடிமைத்தனத் தின் அழிவிலி ருந்துதான் புதிய உத்வேகமுள்ள வாழ்க்கை பிறந்தது. உள் நாட்டுப் போரின் முதல் பலனே 8 மணிநேர வேலை நாளுக்கான போராட் டமாகும். இது, ஒரு இயக்கமாக அதிவேகத்துடன் அட்லாண்டிக் முதல் பசிபிக் வரையிலும், நியூ இங்கிலாந்து முதல் கலிபோர்னியா வரையிலும் பரவியது.” (நூல்- மார்க்ஸின் மூலதனம்)

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் 1886-இல் 8 மணி வேலை நேரத்திற்காகத் தொழிலாளர்கள் போராடினார்களென்றால், இந்தியாவில் அதற்கு 24 ஆண்டுகளுக்கு முன்னர் 1862 ஏப்ரல்-மே மாதங்களில் ஹெளரா ரயில்வே தொழிலாளர்கள் 8மணி வேலை நேரக் கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர் என்பது வரலாறு. அப்படி 8 மணி வேலை நேரத்திற்காக உலகெங்கும் உழைப் பாளர்களின் எழுச்சிகள் நிகழ்ந்துள்ளன.

நவீன பெருந்தொழில்களும் நவீன பெரு முதலாளிகளும் தோன்றிய அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின் சினாட்டி, லூயிஸ்வேலி, பால்டிமோர் என அமெரிக்காவெங்கும் 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்ற மிகப் பிரம்மாண்டமான வேலை நிறுத்தம் நடைபெற்றது. சிகாகோவில் மட்டும் 75 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலா ளர்கள் பங்கேற்றனர்.

மெக்கார்மிக் ஹார்வஸ்டிங் மெஷின் நிறுவனம் வேலை நேரத்தை அதிகரித்ததோடு கூலியையும் இரக்கமின்றிக் குறைத்தது.மே 3 (1886) அன்று தொழிலாளர்க் கூட்டம் அணிதிரண்டு தொழிற் சாலை முன் கண்டனக் கூட்டம் நடத்தியது. இதன் மீது போலீஸ்படை நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் இறந்தனர். 50 க்கு மேற்பட்டோருக்குக் காயம். இச்சம்பவத்திற்கு எதிராக மறுநாள் 4-ஆம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் ஆர்த்தெழுந்தனர். ஹேமார்க்கெட் மைதானத்தில் தொழிலாளர்கள் கண்டனக்கூட்டம் நடத்துகின்றனர்.அரசாங்கத்தாலும் முதலாளிகளாலும் ஏவிவிடப்பட்ட போலீஸ்படையின் காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச்சூடு. ஏராளமான தொழிலாளர்கள் மடிந்து வீழ்ந்தனர். எவ்வளவு பேர் என்று இதுவரை கணக்கில்லை. போராட்டத்திற்குத் தலைமை வகித்த பல தலைவர் கள் கைது செய்யப்பட்டனர். ஆல்பர்ட் பார்சன்ஸ், கஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்பிஸ்ஸர், லூயிஸ் லிங் ஆகிய தலைவர்களுக்கு முதலாளித்துவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மற்ற மூன்று தலைவர்களுக்கு 15 வருட கடுங்காவல்.

இந்தச் சிகாகோ எழுச்சி நடைபெற்றது மே 4-இல். ஆனால், உலகமெங்கும் மேதினம் கொண்டாடப்படுவது மே 1-இல். காரணம், அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் கோரிக்கையான 8 மணிநேர வேலைக்காக அமெரிக்க நாடெங்கும் தொழிலாளர்கள் பெரும் போராட்டம் துவக்கிய நாள் மே 1 என்பதால் அந்த தினமே உலகத் தொழிலாளர் தினம் என்று முடிவு செய்யப்பட்டது. 1889 -இல் பாரிஸ் நகரில் சர்வதேசத் தொழிலாளர் மாநாடு நடைபெற்றது. 18 நாடுகளிலிருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில்தான் மேதினத் தேதி முடிவு செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற வர்கள் ஏங்கெல்ஸும், மற்றும் பல பிரபல சோஷலிஸ்ட் தலைவர்களும். மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை நேரப் போராட்டத்தை உலகெங்கும் முன்னெடுத்துச் செல்வதென இம் மாநாடு முடிவுசெய்தது.

உழைப்பாளி வர்க்கத்திற்கு வேலை நேரமும், ஊதிய உயர்வும் மட்டுமல்ல, அதற்கும் மேலான புரட்சிகர இலட்சியம் உண்டு - அது, முதலாளித்துச் சுரண்டலற்ற, அடிமைத்தனமற்ற சமத்துவம் நிலவும் ஒரு சோஷலிஸப் பொன்னுலகு.

மேதின விழா என்பது, தொழிலாளர்கள் இந் நாட்டின் முதுகெலும்பு என்று அவர்களை சும்மா சந்தோசப்படுத்துவதற்காக அல்ல. மேதின வரலாற்று நிகழ்வை நினைவூட்டவும், அந்த தியாகிகளுக்கு அஞ்சலியும் வீர வணக்கமும் செலுத்தவும், அவர்களின் இலட்சியங்களை முன் னெடுத்துச் செல்லவுமாகும்.

- தி.வ.

Pin It