கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

“தமிழ்நாடு இனி” (1)

1) குமுக (சமூக) வளர்ச்சிப் போக்கில் குடியாட்சியம் முன்னேறிச் செல்லும் போது மக்கள் மொழிவழித் தேசங்களாக அமைந்து, தேசங்கள் இறைமை கொண்ட அரசுகளாக அமைவதே பொது நெறியாகும். ஐரோப்பாவில் இந்தச் செயல்வழி தேச-அரச உருவாக்கம் (Nation-state formation) எனப்பட்டது. இந்தக் கட்டம் குமுக வளர்ச்சியில் தவிர்க்க முடியாத ஒன்று. இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தக் கட்டம் இன்னும் நிறைவு பெறவில்லை.

2) தொழிலாளர்களுக்கு (பாட்டாளிகளுக்கு) நாடு இல்லை என்பதன் பொருள் நாடு தேவை இல்லை என்பதன்று. பாட்டாளி வகுப்பு அந்தந்த நாட்டிலும் தலைமை வகுப்பாக உயர வேண்டும். அந்த அளவுக்கு தேசியத் தன்மை பெற வேண்டும். முதலியப் பொருளில் (முதலாளித்துவப் பொருளில்) தேசியத் தன்மை பெறுவது வேறு, பாட்டாளியப் பொருளில் அத்தன்மை பெறுவது வேறு. பாட்டாளித் தேசியம் வேறு, முதலாளித் தேசியம் வேறு.

3) கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும் பொதுமைக் கட்சியின் கொள்கையறிக்கையின் இறுதியில் ”Workers of All Countries Unite!” என்று கூறுவதை ”உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்” என்று தமிழாக்கம் செய்வது தவறான கருத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ”அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்று தமிழாக்கம் செய்வதுதான் சரியானது. பாட்டாளிகள் நாடுகளாகப் பிரிந்திருக்கும் மெய்ந்நிலையை அறிந்தேற்று, அவர்கள் அந்தந்த நாட்டிலும் நாடுகடந்தும் ஒன்றுபடும் தேவையை வலியுறுத்தும் முழக்கம் இஃதென்பதை விளங்கிக் கொள்ளவும் விளக்கப்படுத்தவும் வேண்டும்.

4) தேசியப் போராட்டமும் வகுப்புப் போராட்டமே (வர்க்கப் போராட்டமே). என இலெனின் எடுத்துக் காட்டினார். இரண்டிலுமே வகுப்பு நலன்கள் முட்டிமோதுகின்றன. இரண்டையும் ஒன்றுக்கொன்று போட்டியாகப் பார்க்காமல் துணையாகக் கொள்ள வேண்டும்.

5) சமூக வளர்ச்சி வரலாற்றில் மொழி, தேசிய இன உருவாக்கம், தேச உருவாக்கம் ஆகியவை வகித்த குறிப்பிடத்தக்க பாத்திரத்தை மார்க்சியம் உரியவாறு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது பிழையான பார்வை. மொழிவழித் தேசங்களும் தேசிய இனங்களும் காலாவதியாகி விட்டன என்ற கருத்தை கார்ல் மார்க்ஸ் மறுதலித்தார். மொழிதான் மாந்த உறவாடலின் மிக முதன்மையான கருவி என்று எடுத்துக்காட்டி மொழி வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்குமான புறஞ்சார் உறவை இலெனின் விளக்கினார்.

படிக்க வேண்டியவை:

1) கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ், பொதுமைக் கொள்கையறிக்கை (COMMUNIST MANIFESTO), அதிகாரம் 2. பாட்டளிகளும் பொதுமையரும்.
2) தியாகு: தேசியத்தின் உரையாடல், பகுதி 4, ஆய்வின் பெயரால் அவதூறு.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தமிழ்நாடு இனி (2)

1) நமக்கு அறிவியல் கண்ணோட்டம் முதல் தேவை. ஆளும் வகுப்புகளைக் கண்டு அஞ்சாமல் இருப்பது மட்டுமல்லாமல். பொதுமக்களிடம் காணப்படும் விருப்பு வெறுப்புகளுக்கும் தப்பெண்ணங்களுக்கும் கூட அஞ்சாமல் சரியான அரசியல் வழியைக் காண வேண்டும். அறிவியல் பார்வை, கொள்கைப் பற்று. உழைப்பார்வம், ஈக நெஞ்சம், கட்டுப்பாடு ஆகிய ஐங்குணங்கள் நம் ஒவ்வொருவருக்கும் தேவை.

2) குமுக அறிவியல் கற்கும் போது தொடக்கத்தில் எதிர்ப்படும் இடர்ப்பாடுகளைக் கண்டு மிரளக் கூடாது. கலைச் சொற்களை அவற்றுக்குரிய சரியான பொருளில் புரிந்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அரசியல் என்பது ஒருங்கே அறிவியலும் கலையும் ஆகும். அதாவது புறஞ்சார் குமுக நெறிகள் மட்டுமல்லாமல் அகஞ்சார் மாந்த முயற்சிகளும் சேர்ந்தே அரசியல் வழியைத் தீர்மானிக்கின்றன.

3) மாந்தக் குல வளர்ச்சி வரலாற்றில் ஆதிமனிதர்கள் முதலில் குலங்களாகக் குழுச் சேர்ந்தனர். குலங்கள் சேர்ந்து பழங்குடிகளாயின. பழங்குடி மாந்தரை இணைத்த இழை குருதியுறவும் பொது மொழியும்தான். வரலாற்றுப் போக்கில் குருதிக் கலப்பு நேரிட்டுப் பழங்குடிகள் கலைந்த போது பொது மொழியால் அவர்கள் இணைந்திருந்தார்கள். இப்படிப் பொதுமொழியால் இணைந்த ஒவ்வொரு மாந்தக் கூட்டத்துக்கும் ஒரு மொழிவழிக் குமுகாயம் என்று பெயர். மொழிவழிக் குமுகாயம் ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பில் நிலைத்து வாழும் போது அவர்களுக்கான பொதுப் பண்பாடு மலர்கிறது. அது முதல் அவர்கள் தேசிய இனம் ஆகின்றனர். வரலாற்றில் மொழி, புலம், பண்பாடு ஆகிய மூன்று பொதுத் தன்மைகளோடு மலர்ந்து நிலைத்து வாழும் மாந்தக் கூட்டம் தேசிய இனம் ஆகும். பொருளாக்க முறையின் வளர்ச்சி காரணமாக சரக்காக்கம் பரவலாகும் போது இந்தக் கூட்டத்துக்கிடையே பொருளியல் பிணைப்பு வளர்ந்து தேசிய இனம் தேசமாக வளர்கிறது. தேசத்தின் வளர்ச்சி பெறாத வடிவம் தேசிய இனம் என்றும் தேசிய இனத்தின் வளர்ந்த வடிவம் தேசம் என்றும் கொள்ளலாம்.

4) குலம், பழங்குடி, மொழிவழிக் குமுகாயம், தேசிய இனம், தேசம் இவற்றையே மக்கள் அல்லது மக்களினம் என்ற பொதுச் சொல்லால் அழைக்கிறோம். மக்கள் என்ற சொல்லை இப்போதைய வளர்ச்சிக் கட்டத்தில் தேசிய இனம் அல்லது தேசத்தையே குறிக்கும். இந்திய மக்கள் என்ற வரையறை குமுக அறிவிவியல் நோக்கில் பிழையானது. இந்தியாவின் மக்களினங்கள் பற்றிப் பேச முடியுமே தவிர இந்திய மக்கள் என்று வரையறுப்பது பிழை.

5)“தேசம் என்பது பொது மொழி, ஆட்சிப் புலம், பொருளியல் வாழ்வு, பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் உளத்தியல் அமைவு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த, வரலாற்று வழியில் உருப்பெற்ற நிலையான மக்கள் குமுகாயம் ஆகும்” என்று பொதுவாகத் தேசம் என்பதற்கு ஸ்டாலின் தரும் வரையறை சரியானது. ஒரு தேசத்தின் ஆக்கக்கூறுகளாக இருப்பவற்றைச் சுருக்கமாகச் சொன்னால் மொழி பண்பாடு, நிலம், பொருள், வரலாறு.

படிக்க வேண்டியவை:

1. ஜே.வி. ஸ்டாலின், மார்க்சியமும் தேசிய இனச் சிக்கலும்.
2. தியாகு, தேசியத்தின் உரையாடல், பகுதி 3: தேசிய இனச்சிக்கலில் ஸ்டாலின் செய்த கோட்பாட்டுப் பங்களிப்பு.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தமிழ்நாடு இனி (3)

1) மொழி என்பது என்ன? அது கருத்துப் பரிமாற்றத்துக்கான ஊடகம் மட்டுமன்று. அது சிந்தனையின் ஊடகமுமாகும். சிந்தனையின் உறுப்பு மூளை, சிந்தனையின் அடிப்படை இயற்கையும் குமுகமும் ஆகும். சிந்தனையும் சிந்தனைப் பரிமாற்றமும் குமுக வாழ்வின் தேவையும் விளைவுமாகும் என்பதால் மொழியைக் குமுக வாழ்வின் ஊடகம் என்று வரையறுப்பதே சரி. மாந்தர் ஒரு குமுக விலங்கு ஆதலால் மாந்தர் மொழியைப் படைத்தார், மொழி மாந்தரைப் படைத்தது எனலாம். மொழியே மாந்த உறவாடலின் முகன்மைக் கருவி என்றார் இலெனின்.

2) மார்க்சும் எங்கெல்சும் மொழியைச் “சிந்தனையின் உடனடி மெய்ந்நடப்பு” என்று வரையறுத்தனர். ”மொழியிலிருந்து விலகிக் கருத்துகளுக்கு வாழ்வில்லை” என்றார் மார்க்ஸ்.
மொழி என்பது போராட்டத்துக்கும் குமுக வளர்ச்சிக்குமான கருவி. அது ஒற்றுமைக்கான கருவி, விடுதலைக்கான கருவி, புரட்சிக்கான கருவி!

3) தாய்மொழி என்பது முதலில் மிகப் பெரும்பாலும் தாயினூடாக வரப்பெறுவதே தவிர தாயினாலேயே படைக்கப்படுவதன்று. தாய், தந்தை, சுற்றத்தார் அனைவரிடமிருந்தும் குழந்தைக்கு வரப்பெறும் மொழி குமுகச் சூழலால் வளர்ந்து முழுமையடைகிறது. ஒருசிலருக்கு வீட்டுத் தாய்மொழியும் குமுகத் தாய்மொழியும் வேறுபடும் சூழல் அமையலாம். வீட்டுத் தாய்மொழியை விடவும் குமுகத் தாய்மொழி வாழ்வியல் ஊடகமாக முன்னுக்கு வருவதே இயல்பான போக்கு, மொழி என்பது ஓர் உடற்கூறு அன்று. அது குமுக விளைச்சல் என்பதை மறக்கலாகாது. குருதியில் கலந்த மொழி என்பதெல்லாம் வெறும் புனைவுதான். தேசிய இனத்தைத் தீர்மானிப்பது பொது மொழிதான். அது தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை.

4) மொழி என்பது குமுகத்தின் பொருளியல் அடித்தளத்தையோ கருத்தியல் மேற்கட்டுமானத்தையோ சேர்ந்ததில்லை. குமுகத்தின் பொருளாக்க முறைதான் அடித்தளம். அரசியல், சமயம், சட்டம், கலை இலக்கியம் போன்றவை மேற்கட்டுமானம் ஆகும். மொழி இரண்டு தளங்களிலும் ஒரு கருவி போல் பயன்படுகிறது. மொழி எல்லா வகுப்புகளுக்கும் பொதுவானது. முதலாளர்க்கு ஒரு மொழி, தொழிலாளர்க்கு ஒரு மொழி என்பதில்லை.

5) மொழி என்பது இரு கூறுகளால் ஆனது. ஒன்று, அடிப்படைச் சொல்வளம், இரண்டு கட்டுமானம். சொல்வளம் மாந்த உடலின் தசை போன்றது. கட்டுமானம் அல்லது அடிப்படை இலக்கணம் எலும்புக் கூடு போன்றது. சொல்வளமும் கட்டுமானமும் நீண்ட வரலாற்றுப் போக்கில் வளர்ந்து நிலைபெறுகிறவை. புதிய சொற்களும் புதிய கட்டுமான முறைகளும் இடையில் வந்து சேரலாம் என்றாலும் அடிப்படைச் சொல்வளமும் கட்டுமானமும் மாறாது நீடிக்கிற அளவில் அதே மொழிதான் நீடிக்கிறது.

6) குலத்தின் மொழி பழங்குடி மொழி ஆவதும் பழங்குடி மொழி தேசிய இன மொழி ஆவதும் தேசிய இன மொழி தேசிய மொழி ஆவதும் என்ற பல்வேறு கட்டங்களினூடே மொழி மாந்தக் குமுகத்தை இடங்கடந்தும் காலங்கடந்தும் இணைக்கிறது. இந்த இணைப்பின் இழை கிடைக்கோடாக மட்டுமன்று, குத்துக்கோடாகவும் நீண்டு செல்கிறது. இறந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் மட்டுமின்றி, நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும் கூட இணைக்கிறது.

படிக்க வேண்டியவை:

1. ஜே.வி. ஸ்டாலின்: மார்க்சியமும் மொழியியல் சிக்கல்களும்.
2. தியாகு: தேசியத்தின் உரையாடல்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தமிழ்நாடு இனி (4)

1. தமிழ் தமிழ்த் தேசத்தின் பொதுமொழியாகும். அதாவது நம் தேசிய மொழியாகும். ஆனால் இந்திய அரசோ இந்திய அரசமைப்போ தமிழை ஒரு தேசிய மொழியாக அறிந்தேற்கவில்லை, தமிழ் மக்களை ஒரு தேசம் அல்லது தேசிய இனமாக அறிந்தேற்கவும் இல்லை. இதிலிருந்தே மொழி ஒடுக்குமுறை தொடங்கி விடுகிறது. மொழி ஒடுக்குமுறை என்பது தேசிய ஒடுக்குமுறையின் ஒரு கூறு ஆகும். இந்தியாவின் பார்வையில் தமிழர்கள் (தமிழ் மக்கள்) ஒரு தேசமாகவோ தேசிய இனமாகவோ அறிந்தேற்கப்படவில்லை; இசுரேலின் பார்வையில் பாலத்தீனர்கள் எப்படி ஒரு தேசிய இனமாக அறிந்தேற்கப்படவில்லையோ, அதேபோலத்தான் இதுவும்!

2. இந்திய அரசமைப்பின் சிற்பியாகப் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கர் இந்தியாவை ஒரு தேசம் என்று ஏற்க மறுத்தார். மாந்த நிகர்மைக்குப் பகையான சாதியம் இருக்கும் வரை இந்தியாவால் தேசமாக முடியாது என்று அறிவித்தார். ஆனால் இந்தியாவைத் தேசமாகப் படம்பிடித்துக் காட்டும் முயற்சியில் இந்திய ஆளும் வகுப்பினர் தொடர்ந்து ஈடுபட்டிருக்கக் காண்கிறோம்.

3. இந்திய அரசமைப்பு இந்தியாவைத் தேசமாக ஏற்கவில்லை என்றாலும், தேசங்களின் கூட்டமைப்பு அல்லது ஒன்றியமாகவும் ஏற்கவில்லை. பாரதம் என்கிற இந்தியாவை (அரச) மாநிலங்களின் ஒன்றியமாக மட்டுமே வரையறுக்கிறது. இந்தியாவுக்கென்று ஒரு தேசிய மொழியை அரசமைப்புச் சட்டம் குறித்துரைக்கவில்லை. இந்திக்கு அலுவல் மொழி அல்லது ஆட்சிமொழி என்ற தகுநிலை மட்டுமே உள்ளது. ஆனால் இந்தியைத் தேசிய மொழியாக வலியுறுத்தும் முயற்சியில் ஆளும் வகுப்பினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

4. இந்திய அரசமைப்பின் எட்டாம் அட்டவணை 22 மொழிகளின் பட்டியல் ஒன்றைத் தருகிறது. இந்த மொழிகளைத் தேசிய மொழிகள் என்றோ மாநில மொழிகள் என்றோ வட்டார மொழிகள் என்றோ வரையறுக்கவில்லை. இந்த மொழிகளின் பட்டியலில் இந்திக்கும் ஓர் இடம் தரப்பட்டுள்ளதே தவிர சிறப்பிடம் ஏதும் தரப்படவில்லை. ஆனால் அரசமைப்புச் சட்டத்தின் 17ஆம் பகுதி இந்தியை இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழி ஆக்கி விடுகிறது.

5. இந்திய அரசமைப்பின் எட்டாம் அட்டவணையில் ஆங்கிலத்துக்கு இடமளிக்கப்படவில்லை. ஆனால் 1965 வரை இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழியாகவும் அதன் பிறகு துணை ஆட்சிமொழியாகவும் ஆங்கிலம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆங்கிலமே இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் மொழியாகக் குறித்துரைக்கப்படுகிறது. இந்தியாவின் தேசிய ஒடுக்குமுறையில் இந்திக்கும் ஆங்கிலத்துக்கும் இடமிருக்கிறது.

6. இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியத் தேசியத்தின் உள்ளடக்கமான இந்துத்துவம் என்கிற பார்ப்பனியத்தின் மொழியாகிய வடமொழி எனப்படும் சமற்கிருதத்துக்கும் இந்திய அரசும் அரசமைப்பும் சிறப்பிடம் வழங்குகின்றன. இறுதி நோக்கில் இந்திய அரசமைப்பு மொழிகளின் நிகர்மையை மீறுகிறது. மக்களின் மொழிகளையும் உண்மையான தேசிய மொழிகளையும் புறக்கணித்து இந்தி, ஆங்கிலம், வடமொழி ஆகியவை திணிக்கப்படுவது இந்தியத் தேசிய ஒடுக்குமுறையின் முகன்மைக் கூறாக உள்ளது.

7. இந்திய அரசமைப்பில் மொழிப் பாகுபாடும், மொழி ஒடுக்குமுறையும், எனவே தேசிய ஒடுக்குமுறையும் இடம் பெற்றதற்கான விளக்கம் அண்ணல் அம்பேத்கர் அரசமைப்புப் பேரவையில் ஆற்றிய இறுதியுரையிலேயே காணக் கிடைக்கிறது. 1949 நவம்பர் 25ஆம் நாள் ஆற்றிய அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரையில் அம்பேத்கர் சொல்கிறார்: “1950 சனவரி 26ஆம் நாள் முரண்பாடுகள் நிறைந்த வாழ்வினுள் நுழையப் போகிறோம். நமக்கு அரசியலில் நிகர்மை இருக்கும், குமுகப் பொருளியல் வாழ்வில் நிகர்மை இருக்காது. அரசியலில் ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு என்ற கொள்கையை அறிந்தேற்பவர்களாக இருப்போம். நம் குமுகப் பொருளியல் கட்டமைப்பு காரணமாய் குமுகப் பொருளியல் வாழ்வில் ஒருவருக்கு ஒரு மதிப்பு என்ற கொள்கையைத் தொடர்ந்து மறுத்து வருவோம். இன்னும் எவ்வளவு காலம் முரண்பாடுகள் நிறைந்த இந்த வாழ்வைத் தொடரப் போகிறோம்?...”

8. அண்ணல் சொல்லும் குமுகப் பொருளியல் நிகரின்மை அல்லது ஏற்றத்தாழ்வு என்பது என்ன? முதலாவதாக ஏழை-பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு, இரண்டாவதாக சாதி ஏற்றத்தாழ்வு, மூன்றாவதாக ஆண்-பெண் ஏற்றத்தாழ்வு! இந்தப் பட்டியலில் மொழி ஏற்றத்தாழ்வு சேருமா? சேருதா? மொழிகளின் நிகரின்மையால் குமுகப் பொருளியல் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது கண்டு கொள்ளப்படவில்லை. மற்ற வகை ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதை ஓரளவு ஏற்றுக்கொள்ளும் இந்திய அரசமைப்பு மொழிவகை ஏற்றத்தாழ்வு என்ற ஒன்று இருப்பதை ஒப்புக்குக் கூட அறிந்தேற்கவில்லை என்பதே உண்மை!

படிக்க வேண்டியவை:

1. அண்ணல் அம்பேத்கர் அரசமைப்புப் பேர்வையில் 1949 நவம்பர் 25ஆம் நாள் ஆற்றிய இறுதியுரை;
2. இந்திய அரசமைப்புச் சட்டம், உறுப்பு 1, 2; பகுதி 17, எட்டாம் அட்டவணை.

-தியாகு